இன்றைக்கு என்ன பிரசங்கம்?

29 March 2014

 

சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலைப்பில் இன்று பிரசங்கம் என்று சொன்னேன். பாடல் மற்றும் ஆராதனை வேளை நிறைவுற்றது, பிரசங்கத்தைத் தொடங்கினார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். குடும்ப வாழ்வின் காரியங்களைக் குறித்து வேதத்தின் அடிப்படையில் ஆலோசனைகள் பல பிரசங்கமாக வெளிவந்தது. கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது; எனக்கோ ஒரே குழப்பம், 'பரிசுத்தத்தைக் குறித்துதானே பேசுவேன் என்று சொன்னார்; ஆனால், குடும்ப வாழ்க்கையின் அஸ்திபாரங்களைக் குறித்து பேசியது ஏன்? எப்போது பிரசங்கத்தை மாற்றினார் என்று அவரிடமே கேட்டுவிடத் துடித்துக்கொண்டிருந்தேன். கூட்டம் முடிந்ததும் தங்குமிடம் நோக்கிச் சென்ற சகோதரருடன் வாகனத்தில் நானும் ஏறிக்கொண்டேன். வாகனத்திலேயே, அண்ணன், பரிசுத்தத்தைக் குறித்துதானே பேசுவேன் என்றீர்கள்.... என வார்த்தைகளை இழுத்தேன். அப்போது அவர், ஆம், 'நான் காலையில் நினைத்தது அதுதான், ஆனால் மேடையில் நினைத்தது அவர்தான்' என்று பதிலுரைத்தார். 'பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்' (மத் 10:20) என்ற வசனம் அப்போது எனக்குப் பிரசங்கமாயிற்று.