வெடிகுண்டு, வெடிகுண்டு

3 April 2014

 

தமிழ்நாட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் மேடையில் முழங்கும் செய்திகளுடன், அவர் மற்றோரை எச்சரிக்கும் காரியங்களையும் குறித்து அறிந்த நான், அது குறித்து விளக்கமாக அவரிடத்தில் விடை பெற விரும்பினேன். ஒரு முறை தமிழ்நாட்டில் கூட்டங்களை முடித்துவிட்டு பீஹார் வந்து சேர்ந்தார் சகோதரர். அது ஓர் காலை நேரம், மீடியா துறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வந்து அமர்ந்தார். அவரது அறையிலிருந்து சுமார் இருபது அடி தூரத்திலேயே இருந்த எனது அலுவலக இருக்கையில் அமர்ந்திருந்த நான், எவரும் அவரைச் சந்திக்கக் காத்திருக்கின்றனரா? அல்லது அவர் ஏதாவது அத்தியாவசியமான வேலையைச் சகோதரர் செய்துகொண்டிருக்கின்றாரா என்று என்னுடைய இருக்கையிலிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன். அவரைச் சந்திக்க இது சரியான நேரம் என்பதை உணர்ந்த நான், அவரது அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். 'Praise the Lord' என்றவாறு, 'அண்ணன் உங்களிடத்தில் ஒரு சந்தேகம் கேட்கவேண்டும்' என்று சொன்னேன்; தராளமாக என்று எதிர் இருக்கையில் அமரும்படி வலது கரத்தை இருக்கையை நோக்கி நீட்டினார். இருக்கையில் அமர்ந்த நான், 'அண்ணன், ஆசீர்வாத செங்கல்கள் விற்பனை, தங்கச் சாவி விற்பனை, பங்காளர் திட்டம் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் ஏமாற்றப்படுவதைக் குறித்து திறந்த வெளி மைதானத்தில் நீங்கள் பேசியதாகக் கேள்விப்பட்டேன்; அப்படிச் செய்பவர்களிடம் நீங்கள் தனியாக சொல்லலாமே, ஏன் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும்? என்ற கேள்வியை முன்வைத்தேன். அதற்கு சகோதரர், தம்பி, யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று எனக்குச் சரியாகத் தெரியாது, ஆனால், கிறிஸ்தவ மக்களிடையே தவறாகக் காணப்படும் காரியங்களை நான் அறிந்திருக்கிறேன், சாலையில வெடிகுண்டு இருந்தா நீங்க என்ன செய்வீங்க? வெடிகுண்டு வச்சது யாருன்னு தேடுவீங்களா? அல்லது அது வெடித்து யாரும் இறந்துவிடக்கூடாது என்று அவ்வழியே வருவோரை வெடிகுண்டு, வெடிகுண்டு என்று எச்சரிப்பீர்களா? என்று கேட்டார்; எச்சரிப்பதுதான் என் முதல் வேலையாயிருக்கும் என்றேன் நான்; சரியாகச் சொன்னீர்கள்; அதைத்தானே நானும் செய்துவிட்டு வருகிறேன் என்றார். குண்டு வைத்தவர்களை நாம் தேடிக்கொண்டிருந்தால், குண்டு வெடித்து இறப்போரின் எண்ணிக்கைக்கு நாம் பொறுப்பாகிவிடுவோமே என்றார். ஆம், ஊரைக் காப்பதுதான் ஊழியரின் வேலை.

காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.(எசே 33:6)