சுஜி என்றால் ரவ்வை

4 April 2014

 

நான் பீஹாருக்கு வந்திருந்த தொடக்க நாட்கள் அவை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை; பீஹார், சிக்கரியாவிலுள்ள ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை காலை 8 மணிக்குத் தொடங்கியது. நானும் குடும்பத்துடன் ஆராதனைக்குச் சென்றிருந்தேன். பாடல்வேளை முடிந்து, ஆராதனை வேளையும் முடிவுற்றது; காணிக்கை வேளையைத் தொடர்ந்து, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அளிக்கவிருக்கும் செய்திக்குக் காத்திருந்தேன் நான். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியினைப் பகிர்ந்துகொள்ள ஆயத்தமானார். சிக்கரியாவில் ஹிந்தி மொழி பேசுவோருடன், தமிழ் மொழி பேசுவோரும் அதிகம் இருப்பதினால், அங்கு நடைபெறும் எல்லா கூட்டங்களிலும் தமிழில் வழங்கப்படும் செய்திகள் ஹிந்தியிலும், அப்படியே ஹிந்தியில் வழங்கப்படும் செய்திகள் தமிழிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்படும். அந்த ஞாயிற்றுக் கிழமையில், வழக்கமாக சகோதரருக்கு மொழிபெயர்ப்பு செய்யும் சகோதரர் பாபு ராஜரீகன் இல்லாததினால், யாரைக் கூப்பிடலாம் என்று தேடிய சகோதரரின் கண்கள் என்னைப் பிடித்தது. 'கிருபா வாங்க' என்று மேடையிலிருந்து என்னை அழைத்தார் சகோதரர். எனக்கோ நடுக்கம் தலைக்கு ஏறியது. இப்போதுதான் பீஹாருக்கு வந்திருக்கிறேன், ஹிந்தி மொழியை இன்னும் சரிவரக் கற்றுக்கொள்ளவில்லையே, இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் சகோதரர் என்னை அழைக்கிறார் என்று எனக்குள்ளே கேள்வி எழும்பியபோதிலும், இருந்த இடத்திலிருந்து எழும்பி மேடைக்குச் சென்றேன். 'அண்ணன்.... நான் எப்படி மொழிபெயர்க்கப்போகிறேனோ....' என்று சந்தேகத்தில் முன் ஜாமீன் வாங்கிக்கொண்டேன். அதற்கு பிரசங்க பீடத்திலேயே அவர் கொடுத்த பதில், 'தண்ணிக்குள்ள தள்ளிவிட்டாத்தான் நீச்சல் கத்துக்க முடியும்' என்பதே. சகோதரர் ஹிந்தி மொழியில் பிரசங்கத்தைத் தொடங்கினார், எனக்கோ வார்த்தைகள் நடுங்கியது. அகத்தில் ஏற்படும் நடுக்கத்தை முகத்தில் காட்டாதவாறு மொழிபெயர்ப்பைத் தொடர்ந்தேன். தீடீரென்று 'சுஜி' என்றார் சகோதரர், சிக்கிக்கொண்டேன். அவரது முகத்தைப் பார்த்தேன், அவர் என்முகத்தைப் பார்த்தவாறு, 'நீர் வீட்ல சரியா சமைக்கலன்னு நினைக்கிறேன், அதனாலதான் சுஜி தெரியல, 'சுஜி' என்றால் ரவ்வை என்று மேடையிலேயே கற்றுக்கொடுத்தார். குழுமியிருந்த மக்கள் மக்கள் முகத்தில் என் நிமித்தம் உண்டான சிரிப்பைக் கண்டு நானும் சிரித்துக்கொண்டேன். பிரசங்கம் தொடர்ந்தது, சற்றுநேரத்தில் 'சந்த்' என்றார், நான் 'சந்ததி' என்று மொழிபெயர்த்தேன்; அவரோ சந்த் என்றால் சந்ததி இல்லை நீதிமான் என்று சொன்னார். பிரசங்கம் சீக்கிரத்தில் முடிந்துவிடாதா என்று தொடக்கத்தில் பயந்த என்னை அவரே உதவிக்கரம் நீட்டி இறுதிவரை இழுத்துச் சென்றார். வளரும் தலைமுறையை உருவாக்க, வேண்டும் இத்தகைய தலைவர்கள்.