கொடுத்ததைக் கொட்டிவிடு

 

செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், அனுபவங்கள், ஆலோசனைகள் மற்றும் கேள்வி பதில்கள் போன்றவைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டுவந்த நான், அதனை முழு உலகத்தினருக்கும் கொண்டுசெல்வது எப்படி என்ற கேள்வியுடன் ஒரு நாள் காலையில் அமர்ந்திருந்தேன்? அப்போது YOUTHLINE என்ற வார்த்தை எனது நினைவில் வந்தது. அதனைத் தொடந்து youthline என்ற பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் என் மனதில் உண்டானது. அடுத்தநாள் காலையில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரும்படியாக, சகோதரர் ராஜதுரை அவர்களுடன் வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோனிலிருந்து வாரனாசி நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, ஹைதராபாத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணிசெய்யும் சகோதரர் சுதர்சன்பால் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, youthline என்ற பெயரில் இணைதளம் உருவாக்குவதைக் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். youthline என்ற பெயர் கிடைக்கவில்லை எனவே வேறொரு பெயரை வைக்கலாமா? என்று சகோதரன் கேட்டபோது, இல்லை, youthline என்ற பெயர்தான் வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன் நான். எப்படியோ, நாங்கள் வாரனாசி சென்று சேருவதற்கு முன்னர், youthline.in என்ற இணையதளத்தை வாங்க கர்த்தர் கிருபை செய்தார். அதனைத் தொடர்ந்து, ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜேஷ் டத்தி அவர்களிடம் ஆலோசனை கேட்டபோது, அவருடைய வார்த்தைகளும் என்னை உற்சாகப்படுத்துவதாகவே அமைந்தன. இணையதளத்தைத் தொடங்கி தொடர்ந்து அதில் எழுதிக்கொண்டுவந்தேன். நான் செய்யும் இக்காரியம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுக்கும் தெரியும்படியாக, ஒரு நாள் சகோதரரைச் சந்தித்து youthline.in இணையதளத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். இணையதளத்தில் நான் எழுதிய சில செய்திகளையும் சகோதரரிடத்தில் கொடுத்தேன். அப்போது சகோதரர், நல்லது, தேவன் உங்களுக்குக் கொடுத்ததை உங்களோடு அடக்கிவைத்துவிடாமல் உலக்திற்குக் கொட்டிவிடுகிறீர்கள்; இதுதான் நாம் செய்யவேண்டியது என்றார். சகோதரரின் இந்த வார்த்தை என்னை மேலும் செயல்படும்படி உந்தியது. உடனிருப்போருக்குக் கொடுக்கப்பட்ட கிருபைகளை அறிந்து, உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை உதிர்க்கும் தலைவர்களாலேயே, தலைமுறையினர் தடங்களை உருவாக்குகின்றனர்.

உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். (2தீமோ 1:6)

எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். (லூக். 12:48)