'பலா மரத்துக்குக் கீழ ஆபீஸ் இல்ல'

 

2011-ம் ஆண்டு, GEMS மிஷனரி ஸ்தாபனத்தின் பொதுக்குழு கூடுகை டெஹ்ராடூனில் நடைபெற்றது. பீஹாரின் ஜெம்ஸ் பணித்தளங்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் குடும்பமாக அக்கூடுகைக்கு வருகை தந்திருந்தனர். ஜெம்ஸ் பள்ளியில் அலுவல்கள் இருந்தபடியினால் மனைவியையும், மகன் ஜான் சாமுவேலையும் நான் விட்டுச் சென்றிருந்தேன். பொதுக்குழு கூடுகை தொடங்கியது, சகோ.அன்பு தேவ செய்தியளித்தார்; தொடர்ந்து, ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் பல்வேறு திட்டங்களைக் குறித்து உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்தனர்.இறுதி நாளன்று, மசௌடி சுற்றுலா ஸ்தலத்தை பார்வையிட பேருந்தில் புறப்பட்டுச் சென்றோம். இமயத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள டெஹ்ராடூனின் இயற்கை அழகு உடலுக்கு இதமாகவும், கண்களுக்கு மிதமாகவும் இருந்தது. அருவி ஒன்றை பார்வையிடச் சென்றிருந்தோம், பார்வையிட்ட பின்னர் எல்லாரும் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கீழே நின்றுகொண்டிருந்தார், அவருக்கே அருகே நான் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, பேருந்தில் இருந்த சகோதரி விஜி சுந்தர்ஜார்ஜ் அவர்கள்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரை நோக்கி, 'அண்ணன், கிருபா இன்னும் பாட்டுப் புத்தகம் அச்சடிக்கவே இல்லை' என்று சொல்ல, இடைமறித்த நான், அண்ணனது அலுவலகம் சிக்காரியாவில் இருக்கிறது, இங்கு இல்லை என்றவாறு, சகோதரரின் முகத்தை நோக்கிப் பார்த்தேன். பதிலாய் அவர் முகத்தில் எஞ்சியது சிரிப்புதான். எனவே, தொடர்ந்து நான், 'அண்ணன், நீங்க ஒருமுறை உங்களது அலுவலகத்தை விட்டு வெளியே நிற்கும்போது, அலுவலக விஷயமாக வந்த ஒருவரிடம், 'பலா மரத்துக்குக் கீழயெல்லாம் என்னை ஆபீஸ் போட வைக்காதீங்கய்யா, ஆபீஸ் வேலைய ஆபீஸ்லேயே முடித்துவிடுங்கள்' (சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரது அலுவலகத்திற்கு வெளியே ஒரு பலா மரம் இருக்கிறது) என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா? அதனை மனதில் கொண்டுதான் இப்படிச் சொன்னேன் என்றேன். அப்பொழுதும் அவர் முகத்தில் மிஞ்சியது சிரிப்புதான். 'ஆனந்தமாயிருக்கும் நேரத்தில் அலுவல்களைச் சற்று அகற்றிவையுங்கள்' என்பதுதான் அவரது சிரிப்பின் பதில் எனப் புரிந்துகொண்டேன்.