0.00000000001%

 

தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தில் ஒருமுறை மிஷனரி தரிசனக் கூட்டம் நடைபெற்றது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். கோடைகால விடுமுறைக்காக பீஹாரிலிருந்து சாயர்புரம் வந்திருந்த நான் அக்கூட்டங்களில் பங்கேற்றேன். பீஹாரிலிருந்து வருகைதந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், திரு.அல்பர்ட் பால் ஆசிரியர் அவர்களின் வீட்டில் தங்கியிருந்தார். சகோதரரை அவ்வப்போது சென்று சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒவ்வொரு நாள் மாலைக் கூட்டத்திற்கு சகோதரர் புறப்படும்போதும், வீட்டிலிருந்து சகோதரரை மைதானத்திற்கு அழைத்துவரும் பொறுப்பும், பிரசங்கத்தின்போது மேடையில்அமர்ந்து வேதவசனம் வாசிக்கும் பொறுப்பும் என்னுடையதாயிருந்தது. அந்நாட்களில், சாயர்புரத்திலுள்ள நண்பர்கள் ஜெப ஐக்கியத்தையும் அதன் வாலிபர்களைக் குறித்தும் சகேதாதரரிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன்; வாலிபர்களை சகோதரருக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் விரும்பினேன். ஒருநாள், மாலையில் திரு.அல்பட் பால் ஆசிரியர் அவர்களின் வீட்டில் நண்பர்களைச் சந்திக்க விருப்பம் கொண்ட சகோதரரைத் தேடி நண்பர்கள் வந்து சேர்ந்தனர். வாலிபர்களால் உயர்ந்தவராக மதிக்கப்படுபவராயிருந்தபோதிலும், 'உங்களில் ஒருவன்' என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள, கட்டிய லுங்கியுடன் வந்து அமர்ந்தார் சகோதரர். ஆவலுடன் எதிரே அமர்ந்திருந்த வாலிபர்களைப் பார்த்து, 'எனக்கு வேதத்தில், 0.00000000001% தான் தெரியும், தேவன் கற்றுக்கொடுக்கக் கற்றுக்கொடுக்கக் கற்றுக்கொள்கிறேன்; எனக்குத் தெரிந்ததிலிருந்து உங்களுக்குப் பதில் சொல்லுகிறேன் என்று ஆரம்பித்த சகோதரர், வாலிபர்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தார்; அப்போது, அவர் தேவனிடம் கற்றுக்கொண்டதின் பெலன் எங்களுக்குத் தெரிந்தது.

உரையாடலுக்குப் பின்னர் சகோதரர் என்னை நோக்கி, 'கிருபா, இந்த வாலிபர்கள் எங்கே கூடுகிறார்கள்?' என்று கேட்டார்; சாயர்புரத்தை ஒட்டிய, செந்தியம்பலத்திற்கு (எனது சொந்த ஊர்) வடக்கே உள்ள 'தேரியில்' (ஊருக்கு வெளிப்புறத்தில் காட்டுப்பகுதியில்) என்று பதில் சொன்னேன்; ஏதாவது அலுவலகம் இல்லையா? என்று கேட்டார்; 'இல்லை' என்று பதில் சொன்னேன். 'ஏதாவது ஒரு இடம் இவர்களுக்கென்று இருந்தால் நன்றாயிருக்கும்' என்று ஆலோசனை கூறினார். கூட்டங்கள் முடிந்து சில நாட்கள் கழிந்தது, நான் பீஹார் புறப்படவிருந்தேன், எனது மனதிலோ சகோதரர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தன. சகோதரர் சொன்ன வார்த்தையில் ஏதோ காரணம் இருக்கிறது, அப்படியென்றால் கர்த்தரே அந்த அலுவலகத்திற்கான ஆயத்தத்தைச் செய்யட்டும் என்று ஜெபித்தவாறு, சாயர்புரத்தில் உள்ள ஓர் வீட்டை அலுவலகத்திற்காக வாடைக்கு எடுக்க முயன்றேன்; அதற்கான முன்பணமான ரூ.500 அப்போது என்னிடம் இல்லை. நான் பீஹாருக்குப் புறப்படும் முந்தைய நாள் இரவில் செபத்தையாபுரத்தைச் சேர்ந்த சகோதரர் ஜெயப்பிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து என்னை ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்; சென்று ஜெபித்துவிட்டு, சகோதரர் கொடுத்த காணிக்கையினையும் பெற்றுக்கொண்டு, இரவில் வீடு திரும்பினேன். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதில் ரூபாய் 500 இருந்தது. அதுவே கர்த்தர் கொடுத்த அலுவலகத்திற்கான முன்பணம் என்பதை அறிந்துகொண்டேன். அடுத்த நாள் காலையில் பீஹார் புறப்படும்போது, நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் சகோதரர் காந்தியிடம் அதைக் கொடுத்தேன். அதுவே நண்பர்கள் ஜெப ஐக்கியத்தின் முதல் அலுவலகம்.

வாலிபர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடமிருந்து பதில் வந்தது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வாலிபர்களைப் பார்த்து கேட்ட கேள்விக்கு கர்த்தரிடமிருந்து பதில் வந்தது.