'நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்க'

 

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் எது மீடியா துறையின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கிருந்தவாறு என்னை அழைக்க, அவரது அறைக்குள் சென்றேன். அலுவலகப் பணி ஒன்றைச் செய்யும்படி என்னிடம் கொடுத்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். சகோதரரிடமிருந்து பெற்ற அப்பணியினை தேவ ஒத்தாசையுடன் செய்து முடித்தேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர், வழக்கம் போல, காலையில் அலுவலகத்திற்கு வந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்; தனது அலுவலகத்தில் பணியினைத் தொடர்ந்தார். நான் எனது இருக்கையில் அமர்ந்திருந்தவாறு அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். மதிய உணவிற்குச் செல்லும் நேரத்தில், சகோதரர் தனது அறையிலிருந்து எழும்பி, எனது இருக்கையை நோக்கி நவந்தார். ஏதோ அலுவலகப் பணியினிமித்தம் வந்திருக்கிறார் என்று நான் எண்ணி, அவரைக் கண்டதும், உடனே எழுந்து நின்றேன். சகோதரர் என்னை நோக்கி, 'கிருபா, நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்கன்னு நினைக்கிறேன்' என்றார். அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, இரண்டு மூன்று விநாடிகள் ஒன்றும் புரியாதவனைப் போல அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நான், 'எப்படி அண்ணன்' என்றேன் நான், அவரோ 'It seems like that'என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு தனது அறையை நோக்கித் திரும்பிச் சென்றார். அவர் கொடுத்த பணியினைச் சிறப்பாக, தேவ ஒத்தாசையுடன் நான் செய்து முடித்ததை மனதில் கொண்டே அப்படி அவர் சொன்னார் என்று அப்போது நான் புரிந்துகொண்டேன். தன்னுடன் பணிசெய்வோரும், தன்னைப் போன்று மாறவேண்டும் என்ற விருப்பம் கொண்ட தலைவர் அவர் என்பதை அவரது முகத்தின் மலர்ச்சி வெளிக்காட்டியது. கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே (எண்; 11:29) என்ற மோசேயின் வார்த்தைகள் அப்போது என் நினைவைத் தொட்டது.