ஈச்சமரம்

ஜெம்ஸ் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களை நேரில் காணவும், பங்குபெறவும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். ஒரு நாள் காலைப் பொழுதில், பணித்தளங்களைச் சுற்றிப் பார்க்க அவர்கள் புறப்படுவதற்கு முன், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது வீட்டின் முற்புறத்தில் சகோதரருடன் குழுவாக நின்றவாறு உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது, நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வழியில் குழுவுடன் நின்றுகொண்டிருந்த சகோதரரைக் கண்டதும், காலை வணக்கம் சொல்லிவிட்டு தொடர்ந்து நடக்க முற்பட்ட என்னை, சகோதரர் 'கிருபா இங்க வாங்க' என்று அழைத்தார். உடனே நான் அங்கு விரைந்து சென்று, அக்குழுவினருடன் நின்றுகொண்டு, சகோதரர் பேசுவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது சகோதரர் சிங்கப்பூர் ஜெபப் பங்காளர்களை நோக்கி, 'பனையில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?, ஈச்ச மரத்தில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். எல்லாரும் மௌனமாய் நின்றுகொண்டிருந்தோம். அப்போது சகோதரர், பனை மரத்தில் கள் எடுப்பவர்கள் அதில் கலையத்தைத் தொங்கவிட்டுவிடுவார்கள் தானாக வடியும் பதனீரை எடுத்துக்கொண்டு வருவார்கள்;ஆனால், ஈச்சமரத்தில் கள் எடுப்பவர்கள் சிலர் மரத்தையே அறுத்து அறுத்து கள் எடுப்பார்கள்;கிருபாகரன் ஈச்சமரத்தில் கள் எடுக்கிற ஆள். அநேக காரியங்களை தன்னார்வமாக என்னிடம் கேட்டு கேட்டு அறிந்துகொள்பவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். ஆம், உயர்ந்து நிற்போரின் தனி வாழ்வின் ஆத்மீக வாழ்வின் ரகசியத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவன் நான். வெட்டியதில் குடிப்பவனல்ல, வெட்டியும் குடிப்பேன் நான் என்று அன்று எனக்குத் தெளிவாயிற்று. உங்கள் தாகம் தீர, தரட்டும் நீர் மற்றவரென காத்திருக்கவேண்டாம், மனமிருந்தால் மார்க்கமுண்டு. தண்ணீர் இறைக்கத்தான் நமக்குத் திறன் வேண்டும்.