சுகவீனத்திலும் சுகம்

 

சில வருடங்களுக்கு முன்னர், ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சுகவீனமடைந்திருந்த நேரத்தில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். அச்சமயத்தில், சகோதரரைச் சந்திக்கும்படியாக அவரது இல்லத்திற்கு உடன் ஊழியர்களுடன் சென்றிருந்தேன் நான். வீட்டில், சகோதரர் படுக்கை அறையில் இருப்பதை அறிந்து உள்ளே நுழைந்தோம்; படுக்கை அறையிலோ, சகோதரர் சென்னை செல்லப் புறப்பட்ட நிலையில், படுக்கையில்; குப்புறப் படுத்த வண்ணமாக, நெஞ்சுப் பகுதியில் தலையணை ஒன்றை வைத்து கைகளால் அதனைப் பிடித்துக்கொண்டிருந்தவாறு படுத்திருந்தார். வழக்கமாக ஜெம்ஸ் வளாகத்தில் சுறுசுறுப்பாகக் காணப்பட்டுக்கொண்டிருந்த சகோதரரை அந்நிலையில் காண்பது எனக்குச் சற்று கடினமாகவே இருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்ததும், அவரைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அமைதியாக நின்றுகொண்டிருந்தோம். அப்போது, சகோதரர் மெல்ல கண் திறந்து எங்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். சகோதரர் மூச்சு விடச் சற்று சிரமப்பட்டுக்கொண்டிருந்தது பேச்சின் போது எங்களுக்குத் தெரிந்தது. அவரிடம் அதிகம் பேச்சுக் கொடுப்பது இந்நிலையில் நல்லதல்ல என்ற எண்ணத்தோடு மௌனமாக நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். சகோதரரின் சுகவீனத்தை அறிந்த ஊழியர்கள், பங்காளர்கள் ஜெபிக்கும் செய்தி அவ்வப்போது எங்கள் காதுகளை வந்து எட்டியவாறு இருந்தது. அப்போது நான் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து, தமிழ்நாட்டின் ஜெம்ஸ் முன்னேற்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஆசீர்வாதம் அவர்களுடன் தொலைபேசியில் பேசிவிட்டு மீண்டும் சகோதரரைக் காண உள்ளே நுழைந்தேன். சகோதரரை சுகவீனமான நிலையில் கண்ட நான், 'அண்ணன், உங்கள் சுகவீனத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டு கூட்டங்களைத் தள்ளிப் போடலாமே' என்று சொன்னேன். அதற்கு சகோதரர், 'சுகவீனம் என்பது உண்மைதான், ஆனால் நான் வருவேன் என்று அநேகர் காத்துக்கொண்டிருப்பார்களே, அவர்களை நான் ஏமாற்றக்கூடாதல்லவா' என்று சொன்னார். சுகவீனத்தின் மத்தியிலும், சுவிசேஷம் அறிவிப்பதே சுவிசேஷகனுக்குச் சுகம் என்ற செய்தி அப்போது படுக்கை அறையில் சகோதரர் எனக்கு மறைமுகமாகச் செய்த பிரசங்கம்.