ஒன்றுமில்லாதவனுக்கு ஒன்று

 

2005-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று இரவு பத்து மணிக்கு பீஹார், சிக்காரியாவிலுள்ள ஜெம்ஸ் சபையில் புது வருட ஆராதனை தொடங்கியது; ஊழியர்கள் தங்களது அனுபவ சாட்சிகளைப் பகிர்ந்துகொண்டு, வாயாற கர்த்தரைப் புகழ்ந்து துதிக்க, 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் ஆராதனை நிறைவுற்றது. கடந்த ஆண்டின் ஆண்டவரது செயல்களை நினைத்து நன்றி செலுத்தியும், புத்தாண்டினை தேவ பாதத்தில் அமர்ந்து பெற்றவர்களாகவும் ஜனங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஆராதனை முடிந்ததும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சிறியோர், பெரியோர் என அனைவரையும் சந்தித்து கரம் குலக்கினவராக புது வருட வாழ்த்தினைச் சொல்லிக்;கொண்டிருந்தார்; பரஸ்பரம் ஜனங்களும் சகோதரருடன் வாழ்த்துக்களைப் பரிமாரிக்கொண்டிருந்தனர். ஆராதனை முடிந்ததும் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. ஜனங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்திக்கொண்டிருந்தனர். ஜனவரி 1 அன்று காலை சுமார் 7 மணிக்கு ஜெம்ஸ் வளாகத்தில் இருந்த ஊழியர்கள் சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவர குடும்பமாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். ஜனங்கள் ஜெபிக்கச் செல்வதைக் கண்ட நானும் எனது மனைவியும் சகோதரரைச் சந்திக்க ஆயத்தமானோம். சகோதரரின் இல்லத்தின் முன் அறையில் ஜனங்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள், அங்கிருந்து வரிசையாக சகோதரரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தனர்; சகோதரர் வீட்டின் அறை ஒன்றின் அமர்ந்து ஒவ்வொருவருக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார். ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் இயக்குநரைச் சந்திக்கப் போகிறோம், அவருக்கு எப்படி கையில் பணத்தைக் கொடுப்பது என்ற எண்ணத்தில் வெறுங்கையாகவே நாங்கள் சென்றிருந்தோம்; பணப்பையைக் கூட நான் உடன் எடுத்துச் சென்றிருக்கவில்லை. நானும் எனது மனைவியும் வரிசையில் எழுந்து நின்றோம். அறை கதவினை நெருங்கினோம், எங்களுக்கு முன்னர் நின்றுகொண்டிருந்த ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் சர்ச்சில் கையில் காணிக்கையினை வைத்த வண்ணம் நின்றுகொண்டிருப்பதைக் கணட்ட நான் எனது மனைவியை நோக்கி, 'எல்லாரும் காணிக்கை கொண்டு போகிறார்கள், நாம் ஒன்றும் கொண்டுவரவில்லையே, நான் போய் எடுத்து வரட்டுமா?' என்று கேட்டேன். வரிசை நெருங்கிவிட்டபடியினால், இறுதியில் இருவரும் ஒருமித்து முடிவெடுத்து காணிக்கையின்றி சகோதரரைச் சந்திக்க அறையின் உள்ளே நுழைந்தோம். சகோதரரோ ஜனங்களுக்காக ஜெபிப்பதிலேயே கருத்தாயிருந்தார். சகோதரரைக் கண்டதும் முன்னே முழங்கால் படியிட்ட எங்களது தலையில் கைவைத்து 'ஆண்டவரே, இல்லறத்து ஆசீர்வாதங்களால் இவர்களை ஆசீர்வதியும்' என்று ஜெபித்தார். அவரது ஜெபத்தைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு கருவுற்ற எனது மனைவி, 2007 ஜுலை 5 அன்று ஆண் குழந்தையினைப் பெற்றெடுத்தாள். ஒன்றுமில்லாமல் அவரைச் சந்தித்து ஜெபித்த எங்களுக்கு ஒன்று கிடைத்தது. 'சமாதானத்துடனே போளூ நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக' (1சாமு 1:17) என்று தேவ ஊழியனான ஏலி அன்னாளை நோக்கி அந்நாளில் சொன்ன வாக்கைப் போலவே, எங்கள் வாழ்க்கையிலும் வந்து பலித்தது.