வாக்குத்தத்தமான வாக்கு

 

ஒருமுறை சென்னையில் ஜெம்ஸ் மீடியா துறையின் ஆலோசனைக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஜெம்ஸ் தலைவர்கள் சிலரும், முன்னேற்றப் பணித் தலைவர்களும்; அக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்தனர். பீஹார் ஜெம்ஸ் மீடியா துறையின் சார்பாக நான் அக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றிருந்தேன். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஜெம்ஸ் அலுவலகத்தில் ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின்போது, ஜெம்ஸ் மீடியா துறையின் பல்வேறு காரியங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பங்கேற்றவர்களின் ஆலோசனைக்கு முன் வைக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டன. பீஹார் மீடியா துறையின் அலுவலகக் காரியங்களையும், அலுவலகக் கணக்குகளையும் அப்போது நான் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆண்டில், மீடியா துறை பட்ஜெட்டினை தயாரித்து அளித்திருந்த நான், அதில் வரவேண்டிய மீதமுள்ள தொகையினை மனதில் கொண்டவாறு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பணம் விரைவில் கிடைத்துவிட்டால், குறிப்பிட்ட சில காரியங்களை விரைவில் செய்துமுடித்துவிடலாமே என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். முக்கியமான பல காரியங்கள் விறுவிறுப்பாகப் பேசி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பீஹார் மீடியாவைப் பற்றிப் பேச எனக்குத் தருணம் கிட்டியபோது, பட்ஜெட் தொகையில் மீந்திருக்கும் பணத்தைக் குறித்து எடுத்துச் சொன்னேன். அப்போது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னை நோக்கி, 'நாளைக்கே யாராவது வந்து கொடுத்தா, உடனே உங்ககிட்ட கொடுத்துவிடுகிறேன், என்னை ஆண்டவர் கடன்காரனாக வைக்கமாட்டார்' என்று சிரித்த முகத்தோடு சொன்னார். கூட்டம் முடிந்து பீஹார் வந்து சேர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் பட்ஜெட் பணத்தைக் குறித்துப் பேசியதைத் தவிற்திருக்கலாமோ என்ற சிந்தனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. எங்கிருந்தாவது வரும் என்று விசுவாசத்தில் நிற்கிற ஒரு தேவ ஊழியனிடம், 'வேண்டும்' என்று வலுமையாகக் கேட்டுவிட்டதைப் போன்ற அழுத்தம் எனது மனதில் உண்டாயிருந்தது. எனினும், சகோதரரின் வார்த்தையினைக் கனம் பண்ணிய தேவன், ஒரு சில மாதங்களுக்குள், குறிப்பிட்ட அந்தத் தொகையினை சந்தித்தார். ஜெம்ஸ் அலுவலகத்தினிடமிருந்து மீடியா துறையின் அலுவலக வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்ட நான், சகோதரரை சிரித்த முகத்தோடு சந்தித்தேன், 'கடவுள் என்னை யாருக்கும் கடனாளியா வைக்கல' என்றார் சகோதரர். அவர் வாயிலிருந்த வந்த வார்த்தையினை, வாக்குத்தத்தமாக நிறைவேற்றிய தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.