எங்க ஊரு

 

ஒருமுறை ஜெம்ஸ் பணித்தளம் ஒன்றில் நடைபெறவிருந்த படைமுயற்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். பயணத்தின்போது வழக்கமாக நான் சகோதரரிடம் பேசிக்கொள்வதைப் போன்றே, அன்றும் சகோதரரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தின் வேலைகள் பலவற்றைத் தாண்டி, அழைக்கப்பட்டவனின் குணாதிசயங்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கிடைத்த வேளை அது. பல்வேறு காரியங்களைப் பேசிக்கொண்டிருந்த சகோதரர், திடீரென்று என்னை நோக்கி: ஒருமுறை ஜெம்ஸ் மிஷனரி ஒருவர் தமிழ்நாட்டிற்குச் சென்று மீண்டும் பீஹார் வந்தார். பணித்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் திரும்பி வந்ததை சொல்லியவாறும், என்னை நலம் விசாரித்தவாறும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று, 'எங்க ஊர்ல நல்ல வெயில்' என்று என்னிடத்தில் சொன்னார். 'எங்க ஊர்ல' என்று அவர் சொன்ன வார்த்தைகள் என்னைப் பாதித்தது. இத்தனை ஆண்டுகளாக பீஹாரில் மிஷனரியாக, சுவிசேஷத்தை அறிவிப்பராக பணிசெய்துகொண்டிருந்தபோதிலும், என்னுடன் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை 'எங்க ஊர்ல, எங்க ஊர்ல' என்று தமிழ்நாட்டில் உள்ள தனது பிறந்த ஊரையே இன்னும் அவர் தனது ஊர் என்று அடையாளப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, எனக்கோ வித்தியாசமாக இருந்தது. நானோ பீஹாரைத்தான் எனது ஊர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளுவேன். கர்த்தர் அழைத்த இடம்தான் எனது சொந்த ஊர். ஒரு மிஷனரி தான் இருக்கும் பணித்தளத்தைத்தான் தனது ஊராகப் பேசப் பழகவேண்டும்' என்று என்னிடத்தில் சொன்னார். பீஹாரில் பணித்தளத்திற்கு பார்வையிடவரும் ஜெபப்பங்காளர்கள் பலர், உங்களுக்கு எந்த ஊர்? என்று கேட்பார்கள்; தூத்துக்குடி என்று பதில் சொல்லுவேன், தூத்துக்குடியில எந்த பக்கம் என்று கேட்பார்கள்; சாயர்புரம் என்று பதில் சொல்லுவேன், சாயர்புரத்தில எந்தப் பக்கம் என்று கேட்கும்போது குறிப்பாக அருகிலுள்ள சிறிய கிராமம் செந்தியம்பலம் என்று பதில சொல்லும் மிஷனரியாகத்தான் நானும் இருக்கிறேன். ஆனால், சகோதரரின் மனநிலைக்கு இன்னும் நான் மனந்திரும்பவில்லை; காரணம், எந்த ஊரென்று என்னிடத்தில் யாராவது கேட்கும்போது, 'பீஹார்' என்று பதில் சொன்னால், அது சரியான உத்தரவல்ல என்றுதான் இன்றும் எனது சிந்தையில் நின்றுகொண்டிருக்கிறது. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்றாரே. அழைக்கப்பட்ட இடமே அழைக்கப்பட்டவனின் இல்லம் என்பது அப்போது என் உள்ளத்தில் பதிந்தது.