விருந்துக்கு விருந்து

 

2009-ம் ஆண்டு புத்தாண்டு பீஹார் ஜெம்ஸ் ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனையின்போது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்கும் விடுத்த அறிவிப்பு அனைத்து ஊழியர்களையும் மகிழச்செய்தது. ஜெம்ஸ் வளாகத்தில் இருந்த ஊழியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று அவர்களைச் சந்தித்துப் பேசி, ஐக்கியம் கொண்டு, உணவருந்த அந்த ஆண்டு முழுவதும் சகோதரர் தீர்மானித்திருந்தார். அறிவிப்பினைத் தொடர்ந்து, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது துணைவியார் சகோதரி ரூபலேகா ஜெபக்குமாருடன், ஒவ்வொரு குடும்பத்தினரையும் முன்னறிவிப்புடன் சென்று சந்திக்கத் தொடங்கினார். ஒவ்வொருவர் வீட்டிற்கும் சகோதரர் வருவது அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, 'நமது வீட்டிற்கு அண்ணன் எப்போது வருவார் என்று ஆவலுடன் நாங்களும் காத்துக்கொண்டிருந்தோம். சகோதரரின் சந்திப்பில் ஊழியர்களின் குடும்பங்கள் உற்சாகமடைந்துகொண்டிருந்தன. அன்று அலுவலகத்தின் வளாகத்தில் சகோதரி ரூபலேகா ஜெபக்குமாரை நான் சந்தித்தபோது, 'இந்த வாரம் நாங்கள் உங்கள் வீட்டிற்கு வரவிருக்கிறோம்' என்று என்னிடத்தில் அறிவித்தார். அதனைக் கேட்டதும் எனக்கோ மிகுந்த சந்தோஷம். நம்முடைய வீட்டிற்கு எப்போது வருவார்களோ என்று பேசிக்கொண்டிருந்த எனக்கும் என் மனைவிக்கும் அன்று இன்ப அதிர்ச்சி. சகோதரர் வரும் அந்த நாளுக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அன்று காலையிலிருந்தே வீட்டை ஆயத்தம் செய்தோம், என்ன சமைப்பது என்று கலந்து பேசி நாங்கள் முடிவெடுக்கவே நேரம் பிடித்தது. ஒரு வழியாக சாதம், சாம்பார், பொறியல், கூட்டு என சில விதங்களைச் சமைத்து, சகோதரர் வரும்போது சமையலறையில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் முன்னரே ஆயத்தமாயிருந்தோம். அவ்வப்போது, வீட்டிற்கு வெளியே சந்திலே நின்று எட்டி எட்டிப் பார்த்தவனாக நான் மனைவியினிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். சகோதரர் வந்து தட்டும் நிலையினைத் தவிற்க, கதவினைத் திறந்தே வைத்திருந்தோம். அன்று எங்கள் வீட்டிற்கு சகோதரர் வருகிறார் என்பதை அக்கம் பக்கத்தினரும் அறிந்திருந்தபடியினால், அங்கு அமைதியான சூழல் நிலவியது.

எதிர்பார்த்துக் காத்திருந்த எங்கள் இல்லத்திற்குள் சகோதரரும் சகோதரியும் நுழைந்தனர். இது எங்கள் வீட்டிற்கு சகோதரர் வரும் இரண்டாம் முறை. நாற்காலியில் அமர்ந்தவண்ணம் எங்களோடு குடும்பத்தில் ஒருவராக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, எனது மகன் ஜான் சாமுவேல் சகோதரரின் சட்டைப் பையில் இருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்தான். இதைக் கண்ட நான், 'டேய், ஜான், அது உடைந்துவிடும், தாத்தாகிட்ட கொடுத்துவிடு' என்று சொன்னேன். ஆனால், அவனோ அதைக் கையில் எடுத்தவாறு நடந்தான். எனது கண்ணெல்லாம், மகன் அந்தக் கண்ணாடியை உடைத்துவிடக்கூடாது என்பதிலேயே குறியாயிருந்தது. அவனை சகோதரரிடத்தில் விட்டது தப்பாகிவிட்டதே! என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நிலையைக் கண்ட சகோதரர் என்னிடத்தில், 'கிருபா, அவன் என்ன செய்கிறான் என்று பாருங்கள், எடுத்ததுமே உடைத்துவிடுவான் என்ற எண்ணம் உங்களுக்குள் உண்டாகின்றது. இப்படித்தான் அநேகர் பிள்ளைகளைத் தட்டி தட்டி அவர்களது அத்தனை செயல்களையும் முடக்கி, அவர்களை ஒன்றும் செய்யாதவர்களாக மாற்றிவிடுகின்றனர். துரு, துரு என இவனைப் போல இருக்கும் பிள்ளைகளை வெளி நாட்டினர் பல துறைகளில் பயிற்றுவிப்பார்கள்' என்று சொன்னார். சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மத் 19:14) என்று இயேசு சொன்ன வார்த்தைகளும், ஒரு பிள்ளையை அழைத்து, நிறுத்தி, அவர்களைக் கொண்டு சீஷர்களுக்குப் இயேசு பாடம் கற்றுக்கொடுத்ததும் என் நினைவில் ஓடியது. பேசி முடிந்ததும், உணவருந்தும் வேளை; சமைத்தவற்றைக் கொண்டுவந்தோம்; சாம்பார், ரசம், பொறியல், கூட்டு என எங்கள் ரகத்தை அடுக்கியிருந்தோம். அதனைக் கண்ட சகோதரர், 'நான் வழக்கமாக இரவு நேரங்களில் சப்பாத்தி சாப்பிடுவேன்' என்று சொல்லியவாறே நாங்கள் சமைத்தவற்றை விரும்பி சாப்பிட்டார். உணவு வேளை முடிந்ததும் சற்றமர்ந்தவராக, ஜெபித்துவிட்டுச் சென்றார். சகோதரருக்கு சமைத்தது விருந்து, எங்களுக்கோ சகோதரர் வந்தது விருந்து.