உங்களுக்கு ஒன்னும் ஆகலியே!

 

2009-ம் ஆண்டு, பீஹாரில் ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது, ஜெம்ஸ் வாகனத்துறையினையின் சில பொறுப்புகளும் எனது கையில் கொடுக்கப்பட்டிருந்தன. புதிய வாகனங்களை வாங்குவது, வாகனங்களுக்கு பதிவு செய்வது, காப்பீடு மற்றும் சாலை வரி உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்துவது போன்ற பொறுப்புகளையும் நான் கவனித்துக்கொண்டிருந்தேன். புதிய நான்கு சக்கர இலகுரக வாகனங்களை, பீஹாரின் தலைநகர் பாட்னாவில் உள்ள மஹேந்திரா கம்பெனியில் வாங்கிக்கொண்டிருந்தோம். புதிய வாகனங்களை வாங்கும்போது அதனை பாட்னாவிலிருந்து டெஹ்ரி ஆன் சோனுக்கு ஓட்டி வருவர டிரைவர்கள் சிலரை நான் உடன் அழைத்துச் செல்வது எனது வழக்கம். டிரைவர்கள் கிடைக்காத வேளையில் நானே வாகனத்தை ஓட்டிக்கொண்டுவருவேன். 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Bolero SLX வாகனம் ஒன்றை ஸ்தாபனத்திற்கு வாங்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொன்னபோது, வாகனத்தை பதிவுசெய்து, சில நாட்களுக்குப் பின்னர் வாகனத்தை எடுத்துவரும்படியாக பாட்னாவிற்குச் சென்றேன். நிறுவனத்திலிருந்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வதில் நேரமாகிவிட்டபடியினால், இரவு சுமார் 9 மணிக்கு மேலாகவே பாட்னாவிலிருந்து புறப்படும் சூழ்நிலை உண்டானது.

எப்போதும் பாட்னாவிலிருந்து புதிய வாகனத்துடன் புறப்படும்போது, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜெபிக்கும்படியாகவும் கேட்டுக்கொண்டு, பின்னரே புறப்படுவது எனது வழக்கமாயிருந்தது. அன்றும், இரவு நேரத்தில் சகோதரரிடம் தெரிவித்துவிட்டு, புறப்பட்டேன்; வாகனத்தில் நான் வந்துகொண்டிருக்கும்போது, மொகனியா என்ற ஊர் அருகே சாலையின் ஓரத்தில் எவ்வித விளக்குகள் இல்லாமல், நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் எனது கண்ணுக்குத் தென்படவில்லை. அருகில் வந்த பின்னரே நான் அதனைக் கவனித்தபடியினால், வாகனத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. டிராக்டரின் பின் பகுதியில் நான் ஓட்டி வந்த வாகனம் வேகமாக மோதியது. எனக்கோ, பெரிய அதிர்ச்சி; நான்கு சக்கர வாகனத்தில் நான் சந்தித்த முதல் விபத்து இது. புதிதாக வாங்கிக்கொண்டுவந்த வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டதே என்று செய்வதென்னவென்று அறியாதவனாக, வாகனத்திலிருந்து வெளியே வந்து பார்த்தேன்; வாகனத்தின் முன்பகுதியோ சேதமடைந்திருந்தது; எனினும், வாகனம் ஓட்டிச் செல்லும் நிலையில் இருந்தது. அங்கிருந்து சகோதரருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'அண்ணன், வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டது' என்று நான் பதற்றத்துடன் தெரிவித்தபோது, 'மெதுவாக வந்திருக்கலாமே' 'பார்த்து வந்திருக்கலாமே' 'எப்படி முட்டியது?' என எதையும் வினவாமல், விபத்தைக் குறித்து விபரமாக எதுவும் பேசாமல், 'உங்களுக்கு ஒன்னும் ஆகலியே' என்று கேட்டார்; இல்லை என்று பதில் சொன்னேன். 'வாகனத்தை பழுது பார்த்துக்கொள்ளலாம்' என்று சாந்தமாகச் சொன்னார். விலைகொடுத்து வாங்கிய வாகனத்தை விட, விலைமதிப்பானவன் நான் என்பது அவரது உரையாடலில் தெரிந்தது.