நான்கு பக்க மத்தளம்

 

ஜெம்ஸ் ஊழியத்துடன் 2002-ம் ஆண்டு நான் இணைந்தேன். தொடக்க நாட்களில் கருவந்தியா பணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியினைச் செய்துவந்தேன். தொழிற்பயிற்சி மையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கும் சில உதவிகளையும் செய்துகொண்டிருந்தேன். 2004-ம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியா பணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் முழுநேரமாக எனது பணியினைத் தொடரும்படி நான் பணியமர்த்தப்பட்டிருந்தேன். அத்துடன், ஜெம்ஸ் வாகனத் துறையிலும் உதவி செய்யும்படி சகோதரரால் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அந்நாட்களில், சகோதரர் ராஜதுரை ஜெம்ஸ் வானகத் துறையின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்தார். சகோதரர் ராஜதுரை அவர்களுக்கு உதவியாக இருக்கும்படியும், வாகனங்களின் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னைக் கேட்டுக்கொண்டபோது, வாகனங்கள் துறையிலும் சகோதரர் ராஜதுரை அவர்களது தலைமையின் கீழ் சில பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு சகோதரரின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஜெம்ஸ் ஆங்கிலப்பள்ளியின் அப்போதைய முதல்வர் சகோ.ஆஸ்வின், ஜெம்ஸ் வாகனப் பிரிவின் பொறுப்பாளர் சகோ.ராஜதுரை உட்பட மேலும் சிலர் அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பல அலுவல்களைப் பற்றிய காரியங்கள் அப்போது முன் வைக்கப்பட்டு பேசப்பட்டுக்கொண்டிருந்தன. நானோ, கூட்டத்தில் பேசப்படும் அத்தனை காரியங்களையும் உற்றுக் கவனித்தவனாக, அமைதியாகவே அங்கு அமர்ந்திருந்தேன். என்னிடத்தில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு மாத்திரம் உத்தரவு சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னை நோக்கி, 'மத்தளத்துக்கு இரண்டு பக்கம் தான் அடி, கிருபாகரனுக்கு நான்கு பக்கமும் அடி, ஆனால் சத்தம் மட்டும் வருவதே இல்லை' என்று சொன்னார். என்னைப் பற்றி சகோதரர் சொன்ன இந்த வாக்கியத்தின் விளக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்றேன். குறைகள் என்றோ, பிரச்சனைகள் என்றோ நான் சகோதரரை சந்திப்பதில்லை; அவைகளையெல்லாம் எனது வாழ்க்கைக்குள்ளாகவே அடக்கிக்கொள்ளும் மனம் கொண்டிருந்தேன். சகோதரரைச் சந்தித்து தீர்த்துக்கொள்ளவேண்டிய சில காரியங்களுக்கும் எனக்குள்ளேயே அமைதியாயிருந்து தீர்வுகண்டிருக்கின்றேன். இதனைக் குறிப்பிட்டே சகோதரர் அப்படிச் சொன்னார் என்று அப்போது புரிந்துகொண்டேன். அத்தகுதியினை தொடர்ந்து வாழ்க்கையில் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்; எனினும், சில முறை நான் சறுக்கி சத்தமிடும் நிலை உண்டானது. ஒவ்வொரு முறை எனது சத்தத்தை உயர்த்தும்போதும், சகோதரர் என்னைக் குறித்து சொன்ன இந்த வாக்கியத்தை நினைவுகூறுவேன். இதனை எழுதும் இன்று மீண்டும் ஓசை வராத மத்தளமாய் வாழ ஓர் அற்பணிப்பு எனக்குள்ளே உண்டாகிறது. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார் (1பேது 2:23) என்ற வசனத்தினை உறுதியாய் நினைவில் நிறுத்த ஒப்புக்கொடுக்கிறேன்.