கல்லெடுத்த சிறு கைகள்

 

23 ஜுலை 2014 அன்று காலை சுமார் 11.10 மணி, செப்டம்பர் 2014 மாதத்தின் ஜெம்ஸ் சத்தம் பத்திரிக்கையில் வெளிவரவிருக்கும் சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் எழுதிய 'திருப்தியான வாழ்வு' என்ற செய்தியினைக் காட்டுவதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். அதனைக் கையில் வாங்கிக்கொண்ட அவர், திடீரென, அன்று காலை ஜெம்ஸ் வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் தான் பகிர்ந்துகொண்ட தியானச் செய்தியை என்னுடன் பகிர்ந்துகொள்ளத்தொடங்கினார். 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்' என்று இயேசு சொன்னது எப்போது? என்று என்னிடத்தில் சகோதரர் கேட்டபோது, பதில் ஏதும் நான் சொல்லாமல், அத்தனையும் அவரிடமிருந்தே வெளிவரட்டும் எனக் காத்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லப்போகும் வேத தியானத்தைக் கேட்க ஆயத்தமானேன். அப்போது அவர்: விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் கல்லெறியும்படி இயேசுவினிடத்தில் கொண்டுவந்த சம்பவத்தைக் குறித்து (யோவான் 8:3-9) பேசிக்கொண்டிருந்தார். ஸ்திரீயை இயேசுவுக்கு முன்பாக நிறுத்தி, நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறியப்படவேண்டும் என்று மோசேயின் வார்த்தைகளை அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, இயேசுவோ, 'உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்' என்று சொல்லி, குனிந்து தரையிலே எழுதினார். அப்போது, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள் (யோவா 8:9) என்று வேதத்தில் போடப்பட்டிருக்கின்றதே. ஒருவேளை, பெரியோர் தங்கள் பாவங்களை உணர்ந்து போயிருக்கலாம்; ஆனால், சிறியவர்களும் அங்கு கல்லெறிய வந்திருந்தார்களே; சிறியவர்கள் அங்கு வந்ததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியை முன் வைத்தார். பெரியவர்கள் என்ன செய்கின்றார்களோ அதையே செய்யும் சிறுவர்கள் இவர்கள் என்று சொன்னார். என்னவென்றும், எதற்கென்றும் தெரியாது ஆனால், பெரியவர்களின் செய்கைகளைப் பார்த்து அப்படியே செய்பவர்கள் அவர்கள் என்று சொன்னர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், நாம் என்ன செய்கின்றோமோ அதைத்தான் நம்மைத் தொடருவோரும் செய்வார்கள்; எனவே, நாம் நமது செய்கைகளில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தார். நாம் பாதையில் நடப்பவர்கள் மாத்திரமல்ல, பாதை காட்டுபவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சகோதரரின் சந்திப்பு நினைப்பூட்டியது.

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் (1கொரி. 11:1,2) என்ற பவுலின் வார்த்தைகளை நானும் சொல்லத் தகுதியாகவேண்டுமே என அப்போது நினைத்தேன்.