காதல் காற்று

 


குறிப்பு: இந்தக் கட்டுரையை பொறுமையுடன் முழுவதும் வாசிக்கும்படி வேண்டுகின்றேன். பாதியில் நிறுத்திவிட்டால், எனது முழு கருத்தும் உங்களுக்குப் புரியாமல், ஒரு பக்கமாக நீங்கள் சிந்திக்கும் வாய்ப்பு உண்டு.

வாலிபப் பருவத்தில் அடியெடுத்து வைக்கின்ற சகோதர, சகோதரர்களாகிய உங்கள் மேல் காதல் காற்று வீசுவது தற்போது வழக்கமாகிப்போனது. காதலியின் பெயரை நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதிலும், காதலிக்காவிட்டால் மனது வெறுமையாயிருக்குமே என பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் காலம் இது. காதலிப்பது தவறா? நான் வாழப்போகும் பெண்னை அல்லது வாலிபனை நான் ஏன் தெரிந்தெடுக்கக்கூடாது? என்ற பல தரப்பட்ட கேள்விகள் வாலிபப் பருவத்தில் உங்களுக்கு உண்டாகலாம். வாலிப வயதினை அடையும்போது எதிர்பாலரின் மேலான ஈர்ப்பு தவறல்ல, அந்த உணர்வு இறைவனின் படைப்பு; ஆனால், அதனை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளப் பழகவேண்டும். அழகினாலோ, அணிந்துவரும் ஆடைகளினாலோ நீ ஈர்க்கப்பட்டுவிடக்கூடாது. அவள் அல்லது அவன் யார்? என்பதை அழகிலோ, ஆடைகளிலோ அல்லது ஒருசில நடக்கைகளினாலோ, வார்த்தைகளினாலோ மாத்திரம் நீ அறிந்துகொள்ளமுடியாது.

தெரிந்தெடுப்பது எப்படி?

 

வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுப்பது எப்படி? என்ற கேள்வியினை மூன்று பிரிவுகளாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். 1.நாமாகத் தெரிந்தெடுப்பது 2. பெற்றோர்கள் தெரிந்தெடுப்பது 3. தேவன் தெரிந்தெடுப்பது. இம்மூவரின் துணையும் இன்றியமையாதது.

வாலிபப் பருவத்தை அடைந்த சகோதர, சகோதரிகளுக்குத் தங்கள் துணையைத் தெரிந்தெடுப்பது எப்படி என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தை விட்டுப் பிரியாதது. திருமண வயதை அடைந்ததும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கான துணையைத் தேடத் தொடங்கினாலும், இவர்களின் மனது யாராயிருக்குமோ, யாராயிருக்குமோ எனத் துடித்துக்கொண்டேதானிருக்கும். யாரையாவது பார்க்கும்போது இவனாக அல்லது இவளாக இருக்குமோ என்ற விடையறியாத கேள்விகளுக்குப் பதில் பெறத் தெரியாது திணறிக்கொண்டிருக்கும் நெஞ்சம். யாரையாவது கண்டவுடன் அவனது வெளித்தோற்றத்தைப் பார்த்து, பேச்சினை ரசித்து ரசிகையாகி ரசிகனாகி துணையாக்கத் துடிப்பது வெளிப்புற உணர்வுகளின் அடிப்படையினாலானதாகவே இருக்கும்.

தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியாத சவுலை ராஜ பதவியிலிருந்து தேவன் தள்ளிய பின்பு, தனது ஜனத்தின் மேல் ராஜாவாகும்படி தாவீதைத் தெரிந்துகொண்டார். ஆனால், அதனை சாமுவேலினிடத்தில் அவர் அறிவிக்கவில்லை. தேவன் சாமுவேலை நோக்கி, 'நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன்' (1சாமு 16:1) என்றே சொல்லுகின்றார்; ஈசாயின் குமாரரில் யாரை ராஜாவாக அபிஷேகிக்கவேண்டும் என்று சாமுவேலினிடத்தில் சொல்லவில்லை. தான் தெரிந்தெடுத்த மனிதனையே சாமுவேலும் தெரிந்தெடுக்கின்றானா என சாமுவேலை தேவன் சோதித்தார்; ஆனால், அந்த சோதனையில் சாமுவேல் தோற்றுவிட்டான். தேவன் தெரிந்துகொண்ட மனிதனை சாமுவேல் தெரிந்துகொள்ளாமல், தனது கண்களுக்கு இதமானவனை, பெலமானவனை, தகுதியாகத் தெரிந்தவனை ராஜாவாக அபிசேஷம் பண்ண எத்தனிக்கின்றான். 'என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல' (ஏசா 55:8) என்ற தேவ வார்த்தை சாமுவேலின் வாழ்க்கையில் எத்தனை உண்மையாயிற்து. தேவன் சவுலை ராஜாவாகத் தெரிந்தெடுத்தபோது, 'இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்' (1சாமு 9:2) என்று சவுலின் தகுதியைக் குறித்து வேதம் சொல்லுகின்றது. இதனைக் கண்டிருந்த சாமுவேல், சவுலைப்போல உயரமான வாட்டசாட்டமான மனிதனையே ராஜாவாக கர்த்தர் தெரிந்தெடுப்பார் என்று மனதிலே எண்ணங்கொண்டிருந்தான்; ஆனால், தேவனின் தெரிந்தெடுப்போ வித்தியாசமாயிருந்தது; உடலைப் பார்த்து அல்ல உள்ளத்தைப் பார்த்து தெரிந்தெடுப்பவர் நமது தேவன்.

ஈசாயின் வீட்டில் சாமுவேல் திகைத்து நிற்கின்றான், யாரை அபிஷேகம் செய்யவேண்டும் என குழம்பி நிற்கின்றான். சாமுவேல் தெரிந்துகொண்டவனை கர்த்தர் புறக்கணிக்கின்றார். 'கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார் (1சாமு 16:7) என்று தான் வேதம் சொல்லுகின்றது.

தேவன் புறக்கணித்த மனிதனை ராஜாவாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்? அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையிலும் திருமண நேரங்களில் இப்படியே நடக்கின்றது. தேவன் தெரிந்தெடுத்ததை நாம் தெரிந்தெடுக்கத் தவறிவிடுகின்றோம். நம்முடைய மாம்சமும் மனதும் இச்சித்து விரும்புபவனை(ளை) தேவன் வெறுத்துத் தள்ளி உனக்குரியவ(ன்) அல்ல என்று சொல்லும்போது, தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியத் தடுமாறுகின்றோம். தேவன் புறக்கணித்துத் தள்ளியவனை(ள) புறக்கணியாமல், தேவனைப் புறக்கணித்துத் தள்ளிவிடுகின்றோம். தேவன் தெரிந்தெடுத்தவனை(ள) நாம் தெரிந்தெடுக்கவேண்டும்.

மனிதனின் இருதயத்தைக் காணும் சக்தி உலகத்தில் எவருக்கும் இல்லை. அழகையும், ஆடைகளையும் கண்டு மசிந்து காதலில் விழும் பலரால் திருமண வாழ்க்கையினை மகிழ்ச்சியாகத் தொடர இயலவில்லை; காரணம், இதயத்தை அறியாமல் அவர்கள் இடறிவிழுந்ததே. எந்த ஒரு வாலிபனும், வாலிபப் பெண்ணும் தன்னிடத்திலுள்ள கெட்ட பழக்க வழக்கங்களையும், தோல்விகளையும், பெலவீனங்களையும் வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதில்லை; காதலிக்கும்போது அவைகள் கண்ணில் படுவதும் இல்லை. 'தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவர்' (1இராஜா 8:40) என்று வேதத்தில் வாசிக்கின்றோம். எனவே அவரது சிந்தையை அறிந்துகொள்ள அவரது பாதத்தில் அமர்ந்திருப்பதே சிறந்தது.

ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.(ஆதி 26:34,35) பெற்றோரின் விருப்பம் இல்லாமல், தானாகவே தெரிந்தெடுத்து திருமணம் செய்துகொண்டதால், ஏசாவின் மனைவிகள் பெற்றோருக்கு மனநோவாயிருந்தார்கள்.

காதலியின் நினைவினால் தன்னை மறந்து படிப்பினை இழந்து அவனையே நினைத்து வாழ்க்கையினை அழித்து எப்படி வாழ்வது? என்று கேள்விக்குறியோடு நீ உனது எதிர்காலத்தில் நின்றுவிடக்கூடாது. எந்த வயதில் எதைச் செய்யவேண்டும் என்று சரியாகப் பகுத்து ஆராய்ந்து செயல்படாவிட்டால் உனது வாழ்க்கை சிதைந்துபோய்விடும். படிக்கின்ற வயதில் காதலித்து படிப்பின் மேல் கவனம் செலுத்த இயலாமல் போவதினால்,எதிர்காலத்தில் உண்டாகப்போகும் நஷ்டத்தை நீ ஈடுகட்ட முடியாது. அப்பொழுது நீ எத்தனை கண்ணீர் வடித்தாலும் நஷ்டத்தை நிவிர்த்தி செய்யும் சந்தர்ப்பும் உனக்குக் கிடைக்காது. பெண் முழு உலகமல்ல, நீ வாழும உலகத்தில் அவள் ஒருத்தி. காதலிக்கும் வாலிபர்களில் பலர் தங்களுக்கு வரும் ஆலோசனைகளின் கருத்தை அறிந்துகொள்ளக் கூட முயற்சிப்பது இல்லை. எங்கே நாம் காதலிப்பதை இவர் வேண்டாம் என்று சொல்லி தடுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே அவர்கள் பேச்சு காணப்படும். அதிகமாய்ப் போனால் ஆலோசனை கொடுப்பவர்களைக் கண்டு விலகிக்கொள்ளுவார்கள். காதலிக்கும் நண்பர்களும், காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களும் உனக்கிருந்தால் நீ கவனமாயிருக்கவேண்டும்; அவர்களுடைய செயல் உன்னையும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களை, குடும்பங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். உனக்கும், அவளுக்கும் இடையில் தரகர்களைப் போல செயல்படுவது, நல்லதைச் செய்வது போல தோன்றலாம். யாரையோ நம்பி ஆழம் தெரியாமல் காலை விடுவது நல்லதன்று; நண்பர்களின் தூண்டுதலினால் நீ தொடங்கினாலும், தூண்டிலில் மாட்டிக்கொள்ளப்போவது நீதான்; எச்சரிக்கை.

பெற்றோர்கள் தெரிந்தெடுக்கும்போது, தேவ சித்தத்திற்கு விரோதமாக, தேவன் குறிக்காததைத் தெரிந்தெடுத்துவிடுவார்களோ என்ற ஐயம், நீ கிறிஸ்துவுக்குள் ஸ்திரமாய் இருப்பாய் என்றால் உண்டாகவேண்டிய அவசியமில்லை. யோனாவை நோக்கி தேவன் : நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார் (யோனா 1:2); ஆனால், யோனாவுக்கோ நினிவேக்குப் போக மனதில்லை, அவன் தர்சீசுக்குப் போக கப்பலேறினான் ஆனாலும், தேவன் அவனை தர்சீசுக்கு போய்ச் சேரவிடவில்லை; தனது திட்டத்திற்கு நேராக அவனைத் திருப்பினார். அப்படியே, பிலேயாம் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படியாக கூலிக்காகச் சென்றபோதிலும், தேவன் பிலேயாமின் மேல் ஆளுகை செய்து அவனை அவனது இஷ்டத்திற்கு விடாமல்; தனது ஜனத்தை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற தனது விருப்பத்தையே நிறைவேற்றினார். பவுல் கப்பலில் கைதியாய் கொண்டுபோகப்படும்போது, யூரோக்கிலிதோன் என்றும் காற்றினால் கப்பலைக் கர்த்தர் நொறுக்கி பவுலை தேவனுடைய ஊழியக்காரன் என நிரூபித்தார். நம்முடைய வாழ்க்கையிலும், தேவ சித்தத்திற்கு விரோhமாக நாமும் சென்றுவிடாதபடி, மற்றவர்களும் நம்மை நடத்திவிடாதபடி கர்த்தர் நிச்சயம் காப்பார் கலங்கவேண்டாம்.

விருப்பம்

காதல் என்ற வார்த்தையினை உபயோகிப்பதைக் காட்டிலும் 'விருப்பம்' (னநளசைந) என்ற வார்த்தையே அதற்குப் பொருத்தமானது. கடையில் காணும் எந்த ஒரு பொருளின் மேலும் விருப்பம் கொள்வது தவறல்ல. ஆனால், அதனை வாங்கும் தகுதி நமக்கு இல்லாதிருக்கும்போது, அதனையே நினைத்து நினைத்து ஏங்குவது தவறல்லவா? அதிக விலையுடைய ஒரு கைக்கடிகாரத்தைக் கடையில் நீங்கள் காணுகின்றீர்கள், அது உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை உண்டாகின்றது, வாங்கவேண்டும் என்ற விருப்பமும் உங்கள் மனதில் ஏற்படுகின்றது; ஆனால், கையிலோ பணம் இல்லை; அதற்காக அதனைத் திருடிவிடமுடியுமா? அப்படித் திருடினால் அது சரியாகுமா? அப்படித் திருடி அகப்பட்டுக்கொண்டால் அதற்குரிய தண்டணையை அனுபவிக்கவேண்டியதிருக்கும் அல்லவா. அப்படித்தான் இன்று பல காதலர்கள் மாட்டிக்கொண்டார்கள். தன்னுடையதல்லாத வாலிபனின் மேல் அல்லது வாலிப சகோதரியின் மேல் ஆசை வைத்து அவர்களைத்தான் கட்டாயம் திருமணம் செய்துகொள்ளுவேன் என அடம்பிடித்து, இறைவன் வேறொருவனுக்காக நியமித்ததை அறியாது கண்களினால் இச்சித்து மாம்சத்தின்படி முடிவெடுத்து, ஆசை வைத்து வசப்படுத்திக்கொண்டு, திருமண வாழ்க்கைக்குப் பின்னர் திருடியதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். வழியில் நிற்கும் யாரோ ஒருவருடைய அழகான காரை பார்ப்பது தவறல்ல ஆனால், அந்த கார் என்னுடையது என்று உரிமையாளரிடம் பிடிவாதம் பிடித்தால், வாதிட்டால் அது தவறுதானே. கல்லூரியில், வெளியில் காணும் வாலிப சகோதரிகளை காண்பதோடு நிறுத்தாமல், அவர்களை ருசிக்கும் மனதுடன் செயல்படுவது தவறுதானே. எல்லாவற்றிற்கும் சரியான வழி ஒன்று உண்டல்லவா.

கீழ்க்கண்ட காரியங்களில் ஏதாவது ஒன்றினால் எதிர்பாலரின் மேல் விருப்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

1. வயது வரும்போது உடல் ரீதியாக உண்டாகும் மாற்றங்களினால் எதிர்பாலரின் மேல் ஈர்ப்பு ஏற்படும்.
2. உடல் அழகையோ, உடை அழகையோ காணும்போது விருப்பம் உண்டாகலாம்.
3. அன்பாய் பேசுகிறவர்களைக் காணும்போது விருப்பம் உண்டாகலாம்.
4. அவர்களது பழக்கவழக்கங்களைக் கண்டு விருப்பம் உண்டாகலாம்.
5. காதலிக்கும் மற்றவர்களைக் கண்டு உனது மனதிலும் காதலிக்கும் விருப்பம் ஏற்படலாம்
6. சினிமாவைச் சார்ந்திருப்பதும் காதலைத் தூண்டுவதற்கு ஒரு காரணம் என்பதை மறக்கவேண்டாம்.
7. தேவைக்கு அதிகமாக எதிர்பாலருடன் பேசுவதால் விருப்பம் உண்டாகலாம்.

ஆனால், மேற்கண்டவைகளைக் கொண்டு உனது துணையை உடனே நீ நிர்ணயித்துவிடமுடியாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
விருப்பம் வந்தவுடன் வேலியைத் தாண்டிவிடக்கூடாது, இரண்டு பேரும் பெற்றோர் என்ற வேலிக்குள் இருக்கிறீர்கள் என்பதனை மறக்கவேண்டாம். பெற்றோரின் ஒப்புதல் கிடைத்தாலும், காதலர்களாக வாழத் துணியவேண்டாம், நீங்கள் ஒப்புதல் பெற்ற காதலர்கள் என்பது உலகத்திற்குத் தெரியாதே. உலகத்தின் ஒப்புதல் திருமணத்தன்றுதான் கிடைக்கும்; அதுவரை காதலர்களாக வாழ்ந்து மற்றோரின் மனங்களை கறைப்படுத்தவேண்டாம்; காத்திருப்பது உச்சிதமானது. தொலைபேசி உரையாடல்கள், தொட்டுப் பேசும் சூழ்நிலைகள், பரிசளிக்கும் சந்தர்ப்பங்கள் போன்றவைகளைத் தவிர்க்கவேண்டும்; இவைகள் அனைத்தும் எல்லையைத் தாண்டும் எட்டுக்கள்.

முதல் தகவல் அறிக்கை

ஒரு வாலிப சகோதரி அல்லது சகோதரனின் மேல் விருப்பம் உண்டானால், முதலில் அதனை பெற்றோரிடத்தில் தெரிவிக்கவேண்டும். உன்னைப் பெற்ற பெற்றோர், உன்னை வளர்த்த பெற்றோர் உனது வாழ்க்கைக்கு நல்லவைகளையே நினைப்பவர்கள் என்ற நம்பிக்கை உனக்கு மனதில் உண்டாகவேண்டும். 'பொல்லாதவர்களாகிய நீங்கள் (பெற்றோர்கள்) உங்கள் (அவர்கள்) பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது' (லூக்கா 11:13) என பெற்றோரின் மேலான நம்பிக்கையை இயேசு எத்தனையாய் உறுதிப்படுத்துகின்றார். மற்றவர்களைப் பகைப்பது போல பெற்றவர்களையும் பகைத்து அவர்களை எதிரியாகப் பார்க்கும் போக்கினின்று வாலிபர்கள் விடுபடவேண்டும். அவர்கள் ஒருபோதும் உனக்கு எதிரானவர்கள் அல்ல. சிம்சோன் ஒரு பெண்னை விரும்பியபோது அவன் முதலில் வந்து அந்த விருப்பத்தை தனது பெற்றோரிடத்தில் தெரிவித்தான் (நியாயாதிபதிகள் 14:2); இது சரியான வழி.

ஆனால், யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாளை சீகேம் கண்டு அவளைக் கொண்டுபோய் அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தி (ஆதியாகமம் 34:2), பின்னர் தன் தகப்பனிடத்தில் 'இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும்' (ஆதியாகமம் 34:40 என்று சொல்லுகின்றான். இதுதான் இன்றைய காதல் உலகின் நிலை. ஒரு பெண்ணின் மேல் விருப்பம் ஏற்படும்போது எதனை முதலில் செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற காரியங்களிலேயே இன்றைய இளைய தலைமுறை திணறுகிறது, தவறுகிறது. பெண்ணின் மேல் விருப்பம் ஏற்பட்டதும், அவளுடன் பேசி நேரம் செலவழித்து, உல்லாசமாய்ச் சுற்றி, இன்பமாய் நாட்களைப் போக்கி, எல்லைகளையும் மீறி திருமணத்திற்கு பின்னர் அனுபவிக்கவேண்டியவைகளுக்காகக் காத்திராமல் உடலுறவு கொண்டு, இத்தனையையும் பெற்றோர்க்குத் தெரியாமல் செய்துவிட்டு, பின்னர் அதனை அறிவிப்பது எத்தனை தவறானது. திருமணத்திற்கு முன் உன்னை அனுபவிக்க நினைப்பவன் திருடன். ஜாமத்தில் வந்து காமத்தைத் தின்றுவிட்டு மோகத்தில் போய்விடுவான். இன்பத்தில் லயித்திருக்கும்போது இதெல்லாம் ஞாபகத்தில் வருவதில்லை. யாரோ ஒரு வாலிபனுக்கு உடலைக் கொடுத்துவிட்டு பின்னர் அவனது அன்பிற்காக வாலிப சகோதரியே நீ ஏங்கி அலையாதே. காமத்தை நிறைவேற்றிய உடன் சில காதலர்கள் காணாமல் போய்விடுவதுண்டு; அவன் வேறெங்கும் போயிருக்கமாட்டான்; உன்னைப் போல ஏமாறும் வேறு பெண் அகப்படமாட்டாளா என சுற்றித் திரிந்துகொண்டிருப்பான். அவன் உன்னைக் காதலித்தது அந்தத் தேவைக்குத்தான் என்பது அப்போது உனக்குப் புரியும்; என்றாலும், கற்பை இழந்தது இழந்ததுதானே; கருப்பை இருக்கும் ஆனால் கற்பு இருக்காது. வாலிபப் பெண்னே வாலிபனிடம் நீ நெருங்கிப் பழகினால், உனது கற்பு நொறுங்கிப்போகும் என்பதை மறந்துவிடாதே. செய்வதெல்லாவற்றையும் மறைமுகமாகச் செய்துவிட்டு, பின்னர் பெற்றோரின் அங்கீகாரத்தைத் தேடுவது முறையாகுமா? பெற்றோர்கள் உங்கள் இன்பத்திற்கு எதிரிகள் அல்ல, அவர்கள் உங்களை இன்பமாக வைக்க விரும்புபவர்களே.

இந்நிலைக்கு வந்துவிட்ட வாலிபர்கள் பெற்றோரை தங்கள் வழிக்குள் எப்படியாவது இழுத்து அவர்களைச் சம்மதிக்கப்பண்ணவேண்டும் என்றே செயல்படுவார்கள். இப்படியானால், பெற்றோரின் விருப்பத்திற்கு இடமில்லையே! அவர்கள் செய்யவேண்டியது என்ன இருக்கிறது? அவளைத்தான் திருமணம் முடிப்பேன் என்று தீர்க்கமான முடிவினை எடுத்துவிட்டு பெற்றோரிடம் செல்வது தவறான ஒன்று; இது உனது திருமணத்திற்கு பெற்றோருக்கே அழைப்பிதல் கொடுக்கும் நிலை. இச்சூழ்நிலையில், பெற்றோர் மறுத்தாலோ அல்லது எதிராகப் பேசினாலோ என்னவாகும்? அவர்களைத்தான் வெறுக்கத் தோன்றும் உன் மனம். பெற்றோரது பதிலைச் சகித்துக்கொள்ளாமல் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நீங்களே உங்களைத் தள்ளிவிடுவீர்கள். பெற்றேர்ருக்கு இத்தகைய செயல் எத்தகைய மனமடிவை உண்டாக்கும். கட்டாயமாக அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று பெற்றோரின் ஆசியைத் தூசியைப் போல உதறிவிடும் வாலிபர்களும் ஏராளம்.

பெற்றோரிடம் ஒரு பெண்ணைக் குறித்ததான உனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது, பெற்றோரின் பதிலுக்கேற்ப உனது முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையுடன் நீ காணப்படவேண்டும். அவர்கள் சாதகமாகப் பேசினாலோ அல்லது பாதகமாகப் பேசினாலோ அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உனக்கு வேண்டும்; இதுவே பெற்றோருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

ஒருவேளை நீ தெரிந்தெடுத்த, விரும்பிய பெண்ணை மணமுடிக்க உனது பெற்றோரின் மனது சம்மதிக்குமென்றால், அது திருமணத்திற்கான சம்மதம், காதலுக்காக அல்ல. பெற்றோர் ஒத்துக்கொண்டார்கள் என்பதற்காக திருமணம் முடிக்கப்போகும் நாள் வரை காதலர்களாக வாழலாம், இஷ்டம் போல சுற்றித் திரியலாம், விரும்பியவைகளை இணைந்து செய்யலாம், பெற்றோரின் ஒப்புதல் கிடைத்துவிட்டது இனி யார் என்ன நினைத்தால் எனக்கென்ன எண எண்ணி உங்களை நீங்களே மண்ணில் புதைத்துக்கொள்ளாதிருங்கள். பெற்றோர்களின் ஒப்புதல் திருமணத்திற்கானது, காதலுக்கானது அல்ல. பெற்றோர்களின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு மற்றோர்க்கு முன் காதலர்களாக வாழ்ந்தால், அது 'அங்கீகரிக்கப்பட்ட காதல்' ஆனால் 'அசிங்கப்படுத்தப்பட்ட வாழ்தல்'. 'பெற்றோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட காதல்' என அதற்கு தனி மதிப்பு கொடுத்து அகந்தை கொள்ளாதிருங்கள். பெற்றோர்கள் ஒத்துக்கொண்டது நீங்கள் இருவரும் திருமணம் செய்ய நாங்கள் சம்மதிக்கிறோம் என்பதே, மாறாக திருமணம் வரை எப்படி வேண்டுமென்றாலும் காதலர்களாக வாழ்ந்துகொள்ளுங்கள் என்பதற்கு அல்ல. திருமணம் செய்யும் வரை காதலியுங்கள் என்றல்ல காத்திருங்கள் என்பதே பெற்றோர்களின் ஒப்புதல்.

'பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாதிருப்பாயாக' (உபா 5:21) என்கிறது வேதம். மற்றொருவருடையதை விரும்புவதே இச்சை. மனைவி மற்றொருவனுடையவளானால், மகளும் பெற்றவனுடையவளே. உரிய முறையில் அவளது பெற்றோரிடத்தில் கேட்டு, அவர்களும் இசைந்துவந்தால் திருமணம்வரை காத்திருந்து (காதலித்து அல்ல) மணமுடிக்கலாம், இது இச்சை அல்ல தெரிந்தெடுத்தல், கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால், அவள்தான் வேண்டும் என்றால் அது இச்சை. யாரோ ஒருவருடைய மகளை அல்லது மகனை எப்படியாவது என்னுடையவளாக்கிக்கொள்ளவேண்டும் என்ற மாறாத நோக்கம் இச்சைதானே. உடiலைப் பார்த்து, அழகைப் பார்த்து இச்சிப்பது மாத்திரமல்ல பெற்றோரின் அனுமதி இன்றி தான் பார்க்கும் ஒருவள் தனக்கு வேண்டும் என்ற வேட்கை. தனக்குப் பிடித்துவிட்ட அவள் வேண்டும் என்ற விருப்பத்தை, முறைப்படி கொண்டு செல்லாமல், விருப்பத்தை இச்சையாக்கி, இச்சையை காதலாக்கிவிடுகிறார்கள். அழகை அல்ல அவளையே இச்சிப்பது இச்சைதானே. 'ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று' (மத் 5:28) என்ற வசனத்தின்படி, எந்த ஒரு வாலிபப் பெண்ணையும் இச்சித்தாலே, அவளோடு விபச்சாரம் செய்துவிட்டாய் என்பதே வேதத்தின், தேவ குமாரனாகிய இயேசுவின் போதனை. அவளது உடலோடு உனது கண் உறவு கொண்டுவிட்டதால், அது விபச்சாரம்; எனினும், உடலோடு உடவு கொள்ளும் வரை அவளை விபச்சாரி எனக் கூறலாகாது. அவளல்ல, நீதானே உனது கண்களினால் தவறு செய்கிறாய், எனவே அத்தகைய விபச்சார கண் பார்வைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு வாழ்வது சிறந்தது. எனவே, விருப்பத்தை இச்சையாக்கியபோதே விபச்சாரம் நடந்துவிட்டது. அவளையோ, அழகையோ இச்சித்து காதலித்து திருமணம் செய்தால், இருதயத்தில் விபச்சாரம் செய்து விவாகம் செய்கிறீர்கள் என்பதனை மறந்துவிடவேண்டாம். கடினமான வாக்கியம் இது என்றாலும், கண்ணியமான போதனைதான், ஒத்துக்கொள்ளக் கஷ்டமாக இருக்கிறதே என ஓலமிடவேண்டாம்.

அவனுடன் உடலுறவு கொண்டுவிட்டேன், எனவே வேறொருவனைத் திருமணம் செய்ய மனமில்லை எனச் சொல்லும் வாலிப சகோதரிகள் உண்டு. அவனுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் எனச் சொல்வதைவிட விபச்சாரம் செய்துவிட்டேன் என்ற வார்த்தைதான் சரியானது. வேலியைத் தாண்டினாலே விபச்சாரம்தான்; விவாகத்திற்கு முன்னான உறவை பின்னர் என்ன என்று சொல்லுவது.

உடலுறவு

திருமணத்திற்கு முன் ஏன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது? நான் அவளைத்தானே திருணம் செய்துகொள்ளப்போகின்றேன், இதில் எந்த மாற்றமும் இல்லையே; அப்படியிருக்க அவளோடு திருமணத்திற்கு முன் நான் உடல் உறவு வைத்துக்கொள்ளவதில் என்ன தவறு? ஒருத்தியோடு உறவு வைத்து அவளை ஏமாற்றி மற்றவளைத் திருமணம் செய்தால்தானே தவறு என்று மனதிலேயே கேள்விகளோடு தவறு செய்பவர்கள் உண்டு. அப்படி திருமணத்திற்கு முன் உடலுறவு வைத்துக்கொண்டால், நீ காதலுக்கு அல்ல காமத்திற்கே முதலிடம் கொடுப்பவன் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். காமப் பசி வயிற்றைப் பிசையும்போது அதற்காகக் காத்திருக்க மனமில்லாத மனிதன் விபச்சாரத்திலும் விழுவான். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதினால், அவள் அல்லது அவன் மேல் இருக்கும் ஆசை குறைந்துபோகத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. மறுபடி அவளைத் தேடினாலும் உடலுறவுக்காகவே தேடுவாய், திருமண உறவின் பந்தம் அர்த்தமற்றதாகிவிடும். நீ காதலித்தால் உனது காதலியை மட்டும் அல்ல அவளது கற்பையும் திருமணம் வரை பாதுகாக்கும் பொறுப்பு உனக்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கற்பை அழித்துவிட்டு கன்னியைக் காப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

2சாமுவேல் 13ம் அதிகாரத்தில் காமப் பசி கொண்ட அம்னோன் அழகாயிருந்த தாமாரை அடையவேண்டும் என்று எண்ணினான். அதனால் அவன் தனது தகப்பனிடத்தில் ஒரு நாடகமே நடத்தினான். தகப்பனாகிய தாவீதும் அம்னோனின் நாடகத்தில் ஏமாந்துவிட்டான். அவன் ஆசைவைத்த தாமாரை அவன் அடைந்த பின்பு, அவளுடன் உடலுறவு கொண்ட பின்பு, அவளை அவன் தள்ளிவிட்டான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான் (2சாமுவேல் 13:15) என்று வேதத்தில் காண்கின்றோம். கற்பைத் தின்றுவிட்டு உடலை வீசிவிடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்துவிடாதிருங்கள்.

திருமணத்திற்கு முன் தவறான உடலுறவினால் கரு உண்டாகிவிட்டால் என்ன செய்வது? கலைத்துவிடவேண்டியதுதானே என்பதுதான் பலரது கருத்தாக இருக்கும். கருவும் ஒரு உயிர் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். கருக்கலைப்பு ஒரு கொலை என்பதை மறந்துவிடக்கூடாது. கருவைக் கலைத்துவிட்டு கனவிலும், நினைவிலும் துன்பப்படுவோர் அநேகர். உனது தவறான உறவினை மறைக்க ஒரு உயிரைப் பலி கொடுப்பது நியாயமாகுமா? அந்த நரபலியினை இறைவன் அங்கீகரிப்பாரா? அதற்குப் பதில் செய்யப்படாமல் போகுமா? தவற்றிற்கு உடனடி நிவாரணம் தேடும்போது இவைகள் நினைவில் வருவதில்லை. ஒரு தவற்றை மறைக்க மற்றொரு தவறு செய்வதுதானே மனித இயல்பு. நான் நம்பிய வாலிபன் என்னோடு உடலுறவு கொண்டுவிட்டு ஓடிவிட்டான். நான் கருவுடன் இருக்கிறேன் இப்போது என்ன செய்வது? அதனை எனது பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் எப்படி மறைப்பது என்ற கேள்விக்கு கருவைக் கலைத்துவிடு என்பது சாதகமானப் பதிலாக இருந்தாலும், அதினால் உண்டாகும் பாதகத்திற்கும், சாபத்திற்கும் அவள் தப்ப இயலாது. செய்த தவற்றினை இறைவன் மன்னித்துவிடலாம், அதற்காக அந்த சிசுவின் கொலையை அவர் அங்கீகரிப்பாரோ? நிச்சயம் மாட்டார். இறைவன் தீமைக்கு விரோதமானவர். உனது தவற்றிற்காக அடுத்தவனைக் கொன்றுவிடு என்று இறைவன் ஒருபோதும் ஆலோசனை சொல்லுவதில்லை. அந்த சிசு நிச்சயம் வளர்க்கப்படவேண்டும்; அதினிமித்தம் உண்டாகும் பிரச்சனைகளுக்குத்தான் தீர்வு காணப்படவேண்டுமே ஒழிய அதனைக் கொன்றுவிடுவது ஒருபோதும் தீர்வாகாது.

வேதத்தில் காணப்படும் ஒரு சம்பவம் நல்லதோர் உதாரணம். உரியாவின் மனைவியாகிய பச்சேபாள் குளித்துக்கொண்டிருக்கும்போது, தாவீது தனது மாளிகையின் மேலிருந்து அவளைப் பார்த்து அவள் மேல் மோகம் கொண்டான். அவன் அரசனாக இருந்தபடியினால் அதனை நிறைவேற்றுவது அவனுக்கு எளிதாக இருந்தது. பச்சேபாளை அழைத்துவந்து அவளை கெடுத்துப்போட்டான். அதனால் அவள் கற்பவதியுமானாள். அந்த கருவுக்கு உரியாவை காரணம் காட்டிவிடலாம் என்ற நோக்கில் தேசத்திற்காகப் படையிலிருந்து யுத்தம் செய்துகொண்டிருந்த உரியாவை தாவீது அழைத்து அவனை அவனது வீட்டிற்கு அனுப்ப முயன்றான்; உரியாவோ யுத்தம் நடக்கும்போது நான் வீட்டிலிருப்பது எப்படி என்று வீடு செல்ல மறுத்தவிட்டான். அவனது பதில் தாவீதுக்கு நல்லதோர் சவுக்கடியாயிருந்தது. தாவீது யுத்தத்தின்போது வீட்டில் இருந்ததினால்தானே இந்த பாவத்தில் விழுந்தான். உரியா வீடு செல்ல மறுத்ததினால் தாவீது அவனை போர்முனையில் முன் நிறுத்தும்படி அவனது கைகளிலேயே கடிதம் கொடுத்தனுப்பி அவனைக் கொலை செய்தான். அவன் மரணமடைந்தபோது உரியாவின் மனைவியை தனது மனைவியாக்கிக்கொண்டான் தாவீது. மோகத்தினால் நடந்த சோகமான சம்பவம் இது.

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்பவர்கள், அதனால் கரு உண்டானால், அதனை அழிக்காமல் அதே பெண்ணுடன் அந்த குழந்தையையும் வைத்துக்கொண்டே திருமணம் செய்துகொள்ளும் தைரியம் உண்டாகவேண்டும். இது யாருடைய குழந்தை என்று யாராவது கேட்டால், எங்களுடையதுதான் என்று சொல்வதில் எதற்கு வெட்கம்? அது உங்கள் இருவருக்கும் பிறந்ததுதானே. நடைமுறையில் இதெல்லாம் சாத்தியப்படாது என்று கருதினால் திருமணம் வரைக் காத்திருங்கள் அடிக்கடி பாலுறவும், கருக்கலைப்பும் சிசுவை மாத்திரமல்ல உங்களையும் அழித்துவிடும் ஜாக்கிரதை.

என்னோடு உடலுறவு கொண்டவன் ஓடிப்போய்விட்டான்; கருக்கலைப்பு செய்யக்கூடாது என்றால் என் வயிற்றில் வளரும் குழந்தையை நான் என்ன செய்வது? என்று கேட்டால், நீங்கள் அதனை ஊராருக்கோ, உறவுக்கோ அறியாது பெற்றெடுத்து அதனை ஆநாதை இல்லங்களிலோ, பிள்ளை இல்லாத தம்பதியினரிடத்திலோ கொடுத்துவிடலாம். என்றபோதிலும், உங்கள் மனசாட்சியிலிருந்து நீங்கள் வெளியே வருவது கடினம். வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டாலும், இந்த நினைவுகள் உங்களை வாட்டி வதைக்கத் தொடங்கும். இறைவனை அண்டிக்கொள்வதால் மட்டுமே நீங்கள் இத்தகையவைகளிலிருந்து விடுதலை பெற இயலும், தயவு செய்து சிசுக் கொலை வேண்டாம்.


கருக்கலைப்பு தவறென்றால், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாமா? என்ற கேள்வி உருவாகலாம். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது முற்றிலும் தவறு, பின்னர் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உடலுறவு கொள்வது எப்படி சரியாகும்? இது தவற்றை மறைக்கப் போடும் தப்புக் கணக்கு. குழந்தை உருவாவதைத் தடுத்துவிடலாம், ஆனால் அது கற்பழிப்புதானே. உலுறவினால் கன்னி என்ற அந்தத் தன்மை அழிந்துவிடுமல்லவா. வாலிபனிடத்தில் பாலுறவு கொள்ளுவதினால் பெண் மாத்திரம் கற்பழிக்கப்படுவதில்லை; உடலுறவு கொண்ட அந்த வாலிபனும் கற்பழிக்கப்படுகின்றான். விபச்சாரிகள் மட்டும் உலகத்தில் இல்லை, விபச்சாரன்களும் உண்டு. சட்டங்களை மனிதன் தனக்கு சாதகமாக வளைத்துக்கொண்டதால் விபச்சாரன்கள் என்ற பதம் உபயோகத்தில் இல்லாமற்போய்விட்டது. திருமண வாழ்க்கையில் இணையவிருக்கும் மனைவிக்காக சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியவைகளை அசுத்தப்படுத்துவது நியாயமாகுமா?

திருமணம் முடிக்கும் எண்ணமில்லாமல் காமத்திற்காகவே இணைந்து வாழும் வாலிப ஜோடிகளும் இந்நாட்களில் பெருகிவருகின்றன. கட்டுக்கடங்காத உடலுறவுக்கு இவர்ள் தயங்குவதில்லை. இவர்கள் திருமணம் முடிக்கும் நோக்கத்தில் அல்ல, தங்கள் காமப் பசியினை நிறைவேற்றும் ஒப்பந்தத்துடன் இணைந்துகொண்டவர்கள். திருமணம் வரும்போது அவரவர் வேறு நபருடன் திருமணம் செய்துகொள்ளும் மனமுடையவர்கள். இப்படி நடந்தாலும் அவர்களது பழைய வாழ்க்கையின் பாவங்கள் அவர்களைத் தொடராமல் விடுவதில்லை. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் (எண்ணாகமம் 32:23) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே. இப்படிப்பட்ட பாவத்தினைச் செய்துவிட்டு திருமண வாழ்க்கையினை சந்தோஷமாகத் தொடர மனசாட்சி எப்படி இடம் கொடுக்கும். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுவிப்படாததாயுமிருப்பதாக (எபிரேயர் 13:4). புசைட கசநைனெ வைத்துக்கொள்வோரின் நிலையும் இந்த ஆபத்திற்குத் தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. மறைமுக உறவு என்றும்உனக்கு மன நோவுதான்.

ஒருதலைக் காதல்

எனது விருப்பம் நிறைவேறவேண்டும் என பைத்தியமாய் அலையும் மனதுடையவர்களுக்கு வைத்தியம் செய்வது கடினமானது. எனக்கு வேண்டும் என்ற குணமே மனிதனிடத்தில் எப்பொழுதும் மேலோங்கி நிற்கின்றது. எனக்கு அவள் வேண்டும் என்ற விருப்பத்துடன் அவளுக்கு நான் வேண்டுமா என்ற அவளது விருப்பத்தையும் அறிந்துகொள்வது அவசியமல்லவா. ஒரு பெண்ணை விரும்புகின்றாய், அந்தப் பெண்ணுக்கு உன்மேல் விருப்பமில்லை, ஆனால் அவளது அழகையும் மற்றவைகளையும் பார்த்து அவளை விட்டுவிட உனக்கு மனதில்லை, எப்படியாகிலும் அவளைத் திருமணம் செய்துகொள்ளவே;ணடும் என்ற எண்ணம் உனக்குள் உருவாகின்றது; இது எத்தனை கொடுமையானது; இதுவே ஒருதலை விருப்பம். இப்படிப்பட்ட நிலை உருவாகும்போது அதனை விட்டுவிடுவதே உச்சிதமானது. அவளுக்கு விருப்பம் இல்லாதபோது அவளது வீட்டாரைக்கொண்டோ மற்றவர்களைக் கொண்டோ அவளை திருமணத்திற்குக் கட்டாயப்படுத்துவது தவறானது. அப்படிச் செய்தால் உனது திருமண வாழ்க்கை சந்தோஷமாயிராது என்பது நிச்சயம். இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் இருந்தால்தான் நல்ல இல்லறம் அமையும். தான் விரும்பும் பெண் தன்னை விரும்பவில்லை என்பதை அறிந்தால் அப்பெண்ணுக்கு எதிரியாக அவளை அழித்துவிடவேண்டும் என்ற வெறியுடன் அலையும் வாலிபர்களும் சமுதாயத்தில் உண்டு.

உன்னைக் கட்டாவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்வேன் என்றால் பரவாயில்லை தற்கொலை செய்துகொள்ளட்டும் (தற்கொலையை ஆதரித்து அல்ல அது தவறானது) அதற்காக, அவனை விவாகம் செய்து நீ தற்கொலை செய்துகொள்ளவேண்டாம்.

சிலர் தான் விரும்பம் நபர் தன்னை விரும்பாததால் உலகமே இருண்டு விட்டதைப் போல உணர்வுக்குள்ளாகிவிடுவார்கள். தான் விரும்பிய பெண் தன்னை விரும்பாததால் துக்கமடைந்து மதுபானத்தினால் தனது உடலைக் கெடுத்துக்கொள்ளும் வாலிபர்களும் உண்டு. யாருக்காவோ நீ உன்னை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்? அவளை நினைத்து நினைத்து ஏங்கி உன்னை அழித்துக்கொள்வதினால் உனக்குக் கிடைக்கும் பலன் என்ன? வரப்போகின்ற நல்ல வாழ்க்கையைக் கூட அனுபவிக்க இயலாத வருத்தம்தான் உன்னை கவ்விப்பிடிக்கும். தாடி வளர்த்துக்கொண்டும், சோகப்பாடல் பாடிக்கொண்டும் இருக்க அவசியமில்லை; உனக்குரியது உனக்கு உண்டு.

வேதாகமத்தில் ஆபிரகாம் தனது குமாரனாகிய ஈசாக்கு;ககு பெண் பார்க்க தனது வேலைக்காரனை அனுப்பினான். நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார். பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான் (ஆதி 24:8). பெண் நமது பின்னே வர மனதில்லாவிட்டால், நாம் அதற்குப் பின்னால் செல்லவேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். இந்நிலை ஏற்படும்போது நமது மனப்பாங்கை மாற்றிக்கொள்ள நமக்குப் பெலன் வேண்டும்.

ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குக்கு பெண் பார்க்கச் சென்ற வேலைக்காரன், இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையில் நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் (ஆதியாகமம் 24:13,14) என்று ஜெபித்துவிட்டு அந்த வேலைக்காரன் பெண் தேட புறப்பட்டான். அவன் ஜெபித்தது போலவே அங்கே நடைபெற்றது; ரெபேக்காள் என்ற பெயருடைய பெண் அந்த வேலைக்காரனிடத்தில் அப்படியே சொன்னாள். ஆனால், அந்த வேலைக்காரன் உடனே கர்த்தர் பெண்ணைக் காட்டிவிட்டார் என்று ரெபேக்காளைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போகவில்லை, வீட்டிற்குப் போய் பெண் கேட்டால் தருவார்களோ இல்லையோ என்ற சந்தேகம் அவனுக்குள் இருந்தது. பெற்றோரின் விருப்பம், அனுமதி பிரதானமானது என எண்ணியவன் அவன்; எனவே, ரெபேக்காளின் பெற்றோரின் அனுமதிக்காக அவளது வீட்டிற்குச் சென்றான். கர்த்தர் காட்டிவிட்டார் என்று கிணத்தண்டையிலிருந்து அப்படியே கூட்டிக்கொண்டு ஓடிப்போகவில்லை, கடத்திச் செல்லவில்லை. ரெபேக்காளின் வீட்டிற்குச் சென்ற பின்னர் ரெபேக்காளின் பெற்றோரைப் பார்த்து, 'இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான் (ஆதியாகமம் 24:49). தேவனிடத்தில் அவன் வேண்டிக்கொண்டதுபோலவே நடந்தாலும், ரெபேக்காளின் பெற்றோரின் அனுமதி கிடைக்காவிட்டால் வேறு பெண்ணைப் பார்க்க அவன் ஆயத்தமாயிருந்தான். கர்த்தரிடத்தில் அவன் வேண்டிக்கொண்டதுபோலச் செய்ய, ரெபேக்காள் என்ற ஒரே பெண் மாத்திரமா உண்டு; இன்னும் அநேகம்பேர் இருப்பார்கள்; அப்படிச் சொல்லும் பெண்ணும் மேலும், அவளின் பெற்றோரும் சம்மதிக்கும் பெண் வேண்டும் என்பதே அவனது நோக்கமாயிருந்தது. பெண்ணை மாத்திரம் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது பிடித்திருக்கிறது என அடம்பிடித்து, அவளது பெற்றோரின் சம்மதமின்றி மனைவியாகக் கொள்ள நினைப்பது தவறு.

பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், கர்த்தர் எனக்குக் காட்டிவிட்டார்; நான் அந்தப் பெண்ணை தரிசனத்தில் பார்த்தேன் அவள் எனக்குரியவள் என்று கூட்டிக்கொண்டு ஓட நினைப்பவர்கள் மேற்கண்ட இந்த வேதாகமத்தின் சம்பவத்தை நினைவில் கொள்ளவேண்டும். கர்த்தரே காட்டியிருந்தாலும், அந்தப் பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லையென்றால், வேறு திசையில் பயணிக்க நீ ஆயத்தமாயிருக்கவேண்டும்; அதற்கு உனது மனது ஒத்துக்கொள்ளவில்லையென்றால் நீ அடிமையாகிவிட்டாய் என்றுதானே அர்த்தம்.

வாலிபர்கள் திருமணத்திற்காக ஜெபிப்பது நல்லது, ஆனால் குறிப்பிட்ட ஒரு பெண்ணுக்காக ஜெபத்தில் பெயரைச் சொல்லி தொடர்ந்து ஜெபிப்பது அத்தனை சரியானதன்று. தொடர்ந்து அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லிச் சொல்லிச் ஜெபிக்க ஜெபிக்க அவளது பெயர் உனது நினைவிலும், உணர்விலும் கலந்துவிடும் ஆபத்து உண்டாகும். ஆண்டவரே உமக்குச் சித்தமானால் நடக்கட்டும் என்றுதான் ஜெபிப்பாய், ஆனால் எப்படியும் அது நடக்கவேண்டும் என்ற உனது ஜெபத்தில் ஆண்டவரை நிர்ப்பந்திக்கும் நிலைக்கு அவரைத் தள்ள முயற்சிப்பாய்; தேவனை உன்னால் மாற்ற முடியுமா? யாராவது ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுக்கும் வாலிபனின் மனது இறைவனால் பறிக்கப்பட்டது என்பதை நம்புவது சந்தேகத்திற்குறியது. திருமண வயதினை எட்டும்போது முறையாக பெரியவர்களின் துணையோடு அவர்களிடத்தில் தான் எப்படிப்பட்ட பெண்ணை எதிர்பார்க்கிறேன் என்பதைச் சொல்லி, தேவனின் துணையோடு தேடிக் கண்டுபிடிப்பதே சரியான வழி.
காதலித்து சந்தோஷமாய் வாழுபவர்களும் உண்டு, வாழ்க்கையை அழித்துக்கொண்டவர்களும் உண்டு. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டும் சந்தோஷமாய் வாழுபவர்களும் உண்டு வாழ்க்கையில் துன்பத்தைச் சகிப்பவர்களும் உண்டு. இருபுறமும் குறைகள் இருக்கின்றதே, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டாலும் சிலரது வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே என்று நீங்கள் எண்ணலாம். நான் இப்பதில்களை நியாயந்தீர்க்க அல்ல சரியான முறை பெற்றோர்களால் தீர்மாணிக்கப்படுவதே என்பதை வலியுறுத்தி, அவர்கள் உங்கள் துணையைத் தேடும்போது நீங்களும் ஒருவராய் பெற்றோருடன் இணைந்துகொள்ளவேண்டும் என்பதையே நினைப்பூட்ட விரும்புகின்றேன். பெற்றோர் பெண் தேடும்போது சில வாலிபர்கள் எதுவுமே பேசுவதில்லை; ஊமையாகவே இருந்துவிடுவார்கள். அவர்களுக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவைப் பொறுத்தே இந்த நிலை ஏற்படுகின்றது. திருமணம் முடிந்த பின்னர் நான் அப்படி படித்த, வேலை பார்க்கின்ற, கலரான, அழகான பெண்ணைக் கட்ட நினைத்தேன் என்று பெற்றோரை நொந்துகொள்ளுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கான வாழ்க்கைத் துணைத் தேடலில் பெற்றோருடன் நீங்கள் ஏன் இணைந்து செயல்படக்கூடாது? அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.

டிப்ஸ் :

வாலிப வயதினை அடைந்தவர்கள் எதிர்பாலருடன் வைத்துக்கொள்ளும் உறவிலும், பேச்சிலும் அதிக எச்சரிக்கை தேவை. வீட்டிலேயெ முடங்கிக்கிடக்கவேண்டும் என்பதில்லை, கவனமாயிருக்கவேண்டும். தனது வயதுள்ளவர்களுடனானாலும், தன்னைவிட வயதில் குறைவாகவே, அதிகமாகவோ உள்ள எதிர்பால் நபரிடம் கவனமாகவே நடந்துகொள்ளவேண்டும். நீங்கள் நல்ல மனநிலையுடன் காணப்பட்டாலும், அவர்கள் உங்களை இழுத்துவிடும் ஆபத்து உண்டு.
பேசவேண்டியவைகளைத் தவிர்த்து தேவையில்லாத உறையாடல்கள் அவசியமற்றவைகளைத் தள்ளிவிடவேண்டும். பெரியவர்கள் முன்னிலையில் எதிர்பாலருடன் பேசுவது முற்போக்கான பாங்கு; தவறான எண்ணமில்லையென்றால் பயம் எதற்கு? எதிர்முனையிலிருந்து 'ஐ டுழஎந லுழர' வந்தால் அதனை அங்கீகரிக்காமல் விலகிவிடுவது நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை. யோசிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது.
பெற்றோருடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். பெற்றோருடன் நேரம் செலவழிக்கப் பழகுங்கள்; எப்பொழுதும் உங்கள் நண்பர்களே தஞ்சம் என்று கிடக்காதிருங்கள். உங்களது வாலிபத்தின் கேள்விகளை தயங்காமல் பெற்றோரிடத்தில் கேட்க முற்படுங்கள்; உங்களுக்கான பதில் அவர்களிடத்தில் உண்டு; இதில் வெட்கம் எதற்கு?
காதலையும், காம உணர்வுகளையும் தூண்டும் புத்தகங்களையும், சினிமாக்களையும் விட்டு விலகுங்கள்; இவைகள் உங்கள் மனதை தீமைக்கு நேராக இழுத்துச் செல்லும் சக்தி கொண்டவைகள்.
பெற்றோரின் ஆலோசனைக்கோ, அறிவுரைக்கோ சட்டென கோபப்படாதிருங்கள்; கண்டிக்கப்படும்போது மௌனம் தேவை; ஐயங்களை வெறுக்காமல் அவர்களிடமே கேளுங்கள். பெற்றோரை உங்கள் எதிரியாக நினைக்காதிருங்கள். பெற்றோரைப் பற்றி குறை பேசுவதை விட்டுவிடுங்கள். இந்தக் குடும்பத்தில் ஏன் பிறந்தோம் என்று மற்ற குடும்பத்தோடு மற்ற பெற்றோரோடு உங்கள் குடும்பத்தை ஒப்பிட்டு உங்களுக்கான தனித்தன்மையை இழந்துவிடாதிருங்கள். பெற்றோரை பாராட்டுவது நல்லது; அவர்களது திருமண நாட்கள், பிறந்த நாட்களை உங்கள் நினைவில் வைத்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் எடுத்துத்தரும் உடைகளைக் குறித்தோ, உணவினைக் குறித்தோ குறைவாக மதிப்பிடாதிருங்கள். அவர்களது பிள்ளை என்ற ஸ்தானத்தை அவர்கள் மரித்தாலும் நீங்கள் மரிக்கும்வரை மாற்ற இயலாது என்பதை மறந்துவிடவேண்டாம்.

பெற்றோரின் பங்கு

ஒரு பெண்ணையோ அல்லது வாலிபனையோ விரும்பும் பிள்ளைகள் கொண்ட பெற்றோர் என்ன செய்யவேண்டும்? பிள்ளைகள் தங்களிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது உடனே கோபப்படாமல் சாந்தமாக, அமைதியாக அவர்களது வார்த்தைகளைக் கேட்கவேண்டும். அவர்களது வார்த்தையினாலேயே அவர்கள் விருப்பத்தின் நிலை எத்தனை உறுதியானது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். பிள்ளைகள் பேசத் தொடங்கிய உடன் கோபப்பட்டு பேசி பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. பிள்ளைகள் உடனே உங்கள் பதிலை எதிர்பார்த்தாலும், நீங்கள் சரி என்றோ அல்லது வேண்டாம் என்றோ சொல்லிவிடாமல் ஓரிரு நாட்கள் யோசித்து அந்த பெண்ணைக் குறித்து விசாரித்து நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தகுந்தவளா, அந்த வீட்டில் கேட்டால் கொடுப்பார்களா அல்லது பிரச்சனை ஏதும் உண்டா போன்ற காரியங்களை மறைமுகமாக நம்பிக்கைக்குறிய சில நபர்களின் துணையோடு செய்யவேண்டும். தகுந்தது அல்ல என்று அறிந்த பட்சத்தில் அதனை கோபத்துடன் சொல்லாமல் மெதுவாக அவர்களை அழைத்து சாந்தமான முகத்துடன் அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். உங்களது எதிர்மறையான பதிலுக்கு அவர்களது நிலை என்ன? என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இச்சமயத்தில் அவர்கள் உங்கள் பதிலை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கின்றீர்களா இல்லையா என்பது தெளிவாகிவிடும். ஆயத்தமாயிருப்பதாகத் தெரிந்தால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளைக் கொடுத்து பின் வரும் நாட்களில் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் செலவிட்டு அவர்களது மனதை பெற்றோர்கள் தங்கள் வசம் இழுத்துக்கொள்ளவேண்டும். பிள்ளைகள் உங்கள் பதிலை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிராவிட்டால், அவர்களை அவர்கள் பாதையில் விட்டுவிடுவது நல்லது. அவர்களுக்கு விரோதியாக அவர்கள் மாறி அவர்கள் தங்களை அழித்துக்கொள்ளும் மனநிலைக்கு பிள்ளைகளைத் தள்ளிவிடக்கூடாது. பட்டு திருந்தும்போது பெற்றோரின் நினைவு வருவது நிச்சயம். பிள்ளைகளின் விரோதமான போக்கு உங்களுக்கு மனநோவைக் கொடுப்பது தவிற்க்கமுடியாதது. காலம் செல்லச் செல்ல நிகழ்ந்தவை சாதகமாக கைகூடிவரும்போது அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கவேண்டாம். வீட்டை விட்டு வேறொருவருடன் ஓடிவிட்டாள், இனி நான் உனக்குத் தாய் அல்ல தந்தையும் அல்ல என்று நீங்ள் சொன்னாலும் அந்த ஸ்தானத்தை மாற்ற உங்களால் கூடாது. பல வருடங்களுக்குப் பின்னர் உங்களைத் தேடி வந்தால் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாயிருங்கள்; நடந்ததை நினையாதிருங்கள்.

டிப்ஸ் : குழந்தையாய் இருக்கும்போது பெற்றோர்கள் மடியிலுமு; தொட்டிலிலும் வைத்து தாலாட்டி பாட்டுபாடுவது அவர்களுடன் நேரம் செலவிடுவது இயல்பான ஒன்று; என்றபோதிலும் பிள்ளைகள் வளர வளர வாலிபப் பருவத்தை அடையும்போது இது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டே போய்விட வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் உலகத்தில் அவர்கள் வாழும்போது குடும்ப உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் மறப்பது இயல்பானது. இதனைப் பக்குவமாக கையாளவேண்டும். வாலிப வயதிலான பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கவேண்டும். அவர்களுடன் அமர்ந்து உணவருந்துவது, தேனீர் அருந்துவது, சுற்றுலா செல்வது போன்ற காரியங்களை நீங்கள் செய்யலாம். அவர்கள் உங்களை விட்டு விலகி வேறெங்கும் ஒட்டிக்கொள்ளுவதற்கு முன்னர் நீங்கள் அவர்களுடன் ஒட்டிக்கொள்ளவேண்டும். திறந்த மனதுடன் பேசவும், அவர்களுடன் சிரித்து விளையாடவும் வேண்டும். குடும்பத்தில் நீங்கள் மாதிரியாக வாழ்வது மிக மிக முக்கியமான ஒன்று. கணவன் மனைவி இடையிலான உறவில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முன்னோடியாக இருக்கவேண்டும். பிள்ளைகளை கண்டிப்பது தவறல்ல, ஆனால் எதற்காகக் கண்டிக்கின்றோம், தண்டித்தோம் என்பதை அவர்களுக்குச் சொல்லாமல் இருப்பதும், ஒருமுறை தண்டித்துவிட்டு பின்னர் அதையே நினைவில் கொண்டு அவர்களை எப்போதும் கோபத்துடன் பார்ப்பதும் பெற்றோர் பிள்ளைகள் இடையிலான உறவுகளின் விரிசலை பெரிதாக்கிவிடும். அவர்களது செயல்களைப் பாராட்டவும், பிள்ளைகளது பிறந்த நாட்களை கொண்டாவும் பழகவேண்டும். தங்கள் பிள்ளைகளின் குறைவுகளை வெளியில் மற்றவர்களிடத்தில் பேசுவதைத் தவிற்கவேண்டும். பெற்றோர்கள் தங்ள் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களையே கொடுக்க விரும்புகின்றனர் (லூக்கா 11:13); என்றபோதிலும், தங்கள் பிள்ளைகள் யாரையாவது திருமணம் முடித்தக்கொள்ள விரும்பினால், அந்த விருப்பத்தை பிள்ளைகள் பெற்றோரிடம் சொல்லும்போது, அதனை லாவகமாக கையாளும் தன்மை வேண்டும். எதையும் குறித்து விசாரிக்காமல் உடனே தங்கள் பிள்ளைகள் மேல் மூர்க்க கோபமடையக் கூடாது. தீர விசாரித்த பின்னர் நிறைவுகiயும் குறைவுகளையும் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். நல்ல பெண் அல்லது வாலிபன் என்று பெற்றோருக்கு தெரியவந்தால் அதனை அங்கீகரிப்பது தவறல்ல. ஜாதியைக் காட்டி அதனைத் தடுத்து நிறுத்தும் போக்கு காணப்படக்கூடாது. பிள்ளைகளுக்குத் திருமண துணை தேடும்போது பெற்றோர்கள் அதனை அவர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். நாங்கள் பார்ப்பதை நீ கட்டித்தான் ஆகவேண்டும் என வற்புறுத்தக்கூடாது. அவர்களின் விருப்பங்களைத் தள்ளிவிடாமல் அதற்கும் இடமமளிக்கவேண்டும்.

எனக்குத் திருமண வயது வந்தபோது, எனது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்கினர். அப்போது எனது தந்தை அநேக பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தார். யு - யுபநஇ டீ - டீநயரவலஇ ஊ - ஊhயசயஉவநச இ னு - னுழறசலஇ நு - நுனரஉயவழைnஇ கு - குயஅடைல என்ற இந்த ஆறு காரியங்களில் உனக்கு எது தேவை என்று எனது தந்தை என் முன் வைத்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் நான் மௌனமாக இருந்தேன். அப்போது என் தந்தை இவைகளில் முக்கியமானது குணமே அதற்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்று கற்றுத்தந்தார். தந்தை எனக்குக் பாடிக்காட்டிய பாடல் ஒன்று இன்றும் எனது நினைவில் நிற்கிறது.

நல்ல பெண்ணைப் பாரு என் தூதா
நல்ல பெண்ணைப் பாரு

அழகு குணமுள்ளவள்(ன்) அவள் நல்ல ஜோடி
அழகில்லையானாலும் குணத்தையே தேடி
பழகு நற்குணமில்லா அழகியின் வீடு
பாம்பு புலி கரடி வாழ்ந்திடும் காடு

நல்லவள்(ன்) ஏழையானாலும் தள்ளாதே
நானூறு போனாலும் நீயும் விடாதே
பொல்லாதவள் கையில் சிக்கிவிடாதே
புலியைக் கொண்டுவந்து தெருவில் விடாதே

நகைகள் தந்து மஞ்சள் ஆடைகள் பூசி
நாடெங்கும் தெரியாத நகைத்து கை வீசி
கொகுசுடன் நடப்பவள் ஆயிரம் தாசி
சும்மா வந்தாலும் அவள் வேண்டாம் சீ சீ

சரியான நேரத்தில் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட துணையை பெற்றோர் தேடித்தர, உங்கள் திருமண வாழ்க்கை இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்

கேள்விகள்

 

கீழே உள்ள கேள்விகள் அனைத்தும் நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் என்னிடத்தில் வாலிபர்கள் கேட்டவை; அவர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும் உங்களுக்கும் பதிலாகக்கூடும் என்ற நோக்கத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

நான் பார்த்த பெண்ணின் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது; ஆனால் எனது பெற்றோர் அவளை ஏற்க மறுக்கின்றனர்; என்ன செய்வது?

முழு நம்பிக்கை என்று எதைச் சொல்கிறாய் என எனக்குப் புரியவில்லை. அவள் மேல் உள்ள ஆசையினால் வருகின்ற வார்த்தைகள் இவை. பெற்றோருடைய பந்தம் எல்லா சொந்தங்களைக் காட்டிலும் பிரதானமானது, முக்கியமானது என்பதை அறிந்துகொள். உனக்கு மட்டுமல்ல நீ மணமுடிக்கும் பெண் உனது குடும்பத்துடன் இசைந்து வாழவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. திருமணம் முடித்து பெற்றோரைப் பிரிந்து சென்று தனியாக வாழ்க்கை நடத்தும் (வேலையின் நிமித்தம் செல்வோரை அல்ல, பெற்றோரை வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு போவோர்) நிலை இன்று தேசமெங்கும் பெருகி வருகின்றது. இதற்குக் காரணம், மணமுடித்த பெண் குடும்பத்துடன் ஒத்துப்போகாததே. பெண்ணுக்காக பெற்றோரையே ஒதுக்கும் நிலை உருவாகிவிடுகின்றது. பெற்றோர் எந்த காரியத்தைக் காட்டி வேண்டாம் என்று சொல்லுகின்றனர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அது சரியானது என்று அறிந்தால் அவர்களுக்கு கீழ்ப்படிவதுதானே நல்லது. ஒரு பெண்ணுக்காக பெற்றோரை விலைகொடுப்பது நியாயமானதன்று. எப்போதும் பெற்றோருடன் இணைந்துகொண்டால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.

வேதத்தில் ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம் பண்ணினான், அவர்கள் ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதியாகமம் 26: 34,35) என்று வாசிக்கின்றோம். பெற்றோரை மனமடிவாக்கும் குணமுடைய பெண் தேவையா? அவளால் ஒரு நாள் உனக்கும் மனமடிவு உண்டாகும்.

முதன் முதல் ஒரு வாலிபன் தனது காதலை என்னிடம் வெளிக்காட்டும்போது நான் என்ன செய்யவேண்டும்?

விலகிச் செல்வதுதான் உகந்தது, வலையில் மாட்டிக்கொண்டு சேலையை ஏன் கிழித்துக்கொள்ளவேண்டும். நீ அவனோடு ஏதாகிலும் சந்தர்ப்பங்களில் நெருங்கிப் பேசியிருந்தால் அவனுக்கு இந்த காதல் எண்ணம் வந்திருக்க வாய்ப்பு உண்டு. அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட பின்னர் நீ அவனிடமிருந்து உன்தை; தூரப்படுத்திக்கொள். நீ விலகிச் சென்றாலும் அவன் உன்னைத் தொடர்ந்து வந்தால் பெற்றோரிடமோ, பெரியவர்களிடமோ எடுத்துச் சொல்லி மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கன்னியே நீ கண்ணாடி காதலிக்கும் வாலிபன் உன்னைத் துண்டாடவிடாதே.

நான் ஒரு வாலிபனை சகோதரனாகத் தான் எண்ணிப் பழகினேன், ஆனால், அவன் இப்போது என்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான், சகோதரனைப் போலப் பாவித்து பழகிய எனக்கு இது பெரிய அதிர்ச்சியாயிருக்கிறது.

இத்தகைய நிலை இன்றைய நாட்களில் பலருக்கு உண்டாகின்றது. உனது நிலையைக் குறித்து முதலில் நீ திட்டமாயிருக்கவேண்டும். நீ நண்பனாகத்தானே எண்ணி பழகியிருக்கின்றாய், எனவே நண்பனிடம் சொல்வதுபோலவே பொறுமையாய், மெதுவாய், நான் காதலிக்கும் நோக்கத்தோடு பழகவில்லை, நீ என்றும் எனக்கு நண்பன்தான் என்று உனது நிலையை அவனு;ககுப் புரிய வை. புரிந்துகொண்டால் தொடரட்டும் நட்பு, இல்லையென்றால் தொலை நிங்க அவன் எல்லைக்குள் நுழையாதிருப்பது உத்தமம். என்றபோதிலும், நண்பர்கள் பிரிவதால் உண்டாகும் வருத்தம் உனக்கும் உண்டாகும், அது நட்பினால் உண்டான வலிமை, அதனைத் தாங்கிக்கொண்டு மறந்துவிடும் தன்மை உனக்கு வரவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்பாலரை நண்பர்களாகக் கொள்ளாதிருப்பது சாலச்சிறந்தது. முற்றிலும் தவறு என்று சொல்லவில்லை, அதில் ஆபத்து அதிகம் என்பதை சுட்டிக்காட்டவே இப்படிச் சொல்கின்றேன்.

ஒரு வாலிபனுடன் தவறான உடலுறவு கொண்டுவிட்டேன்; இப்போது அதனை விட்டுவிட்டேன்; தவறென்று எண்ணுகின்றேன்; அதுபோன்ற காரியங்களை இனி செய்யமாட்டேன் என்று முடிவெடுத்துள்ளேன். ஆனாலும் எனது மனதில் அந்த வடு அவ்வப்போது வந்து என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது; நான் என்ன செய்யவேண்டும்?

தவறு என்று நினைத்துவிட்டால், திருந்திவிட்டால் எந்த மனிதனுக்கும் மறுவாழ்வு உண்டு; கவலைப்படாதே. விழுந்ததையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிராமல், வரும் வாழ்க்கையை வடிவமைக்கப் பிரயாசப்படு. வேதத்தில் உள்ள ஒரு வசனத்தை உனக்கு ஞாபகமூட்டுகின்றேன். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம் (எபிரேயர் 9:14). இயேசுவை அண்டிக்கொண்டால் அந்த மனநிலையிலிருந்து உங்களை விடுவிக்க அவர் போதுமானவர். அவர் மன்னித்ததையும், மறந்துவிட்டதையும் நீங்கள் நினைத்து நிளைத்து கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

எனது காதலைக் குறித்து பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கிறது? ஏதாவது வழி உண்டா?

பெற்றோரிடம் சொல்ல பயமாயிருக்கிறது என்று நினைத்து அவர்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய்விடாதிருங்கள். ஓடிப்போவது கோழையான முடிவு. உங்களது பெற்றோருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவோ, உங்கள் உறவினர்களில் உங்களை நன்றாகப் புரிந்துகொண்டவர்கள் மூலமாகவோ தெரிவிக்க முற்படலாம். உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் வரும் நபர் இறை பக்தி உள்ளவராயிருப்பாரென்றால் நலமாயிருக்கும். என்னைப் பொருத்தவரையில் பெற்றோருக்கு இடையே பேசுவதற்கு தரகர்கள் தேவையில்லை. நல்ல நபர்கள் நடுவாக செயல்படுவார்களென்றால் அவர்கள் பெற்றோருக்கும் உங்களுக்கும் சரியான ஆலோசனை கொடுக்கமுடியும். ஆனால், நடுவாக செயல்படும் அந்த நபரின் சரியான தீர்வுகளுக்கு கீழ்ப்படிய நீங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும்.

எனது காதலிக்கு மற்ற வாலிபனுடன் தொடர்பு இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகின்றேன்; என்ன செய்வது?

உடனே காதலை மறந்துவிட்டு, காதலியை விட்டுவிடுவது நல்லது. காதலித்தால் காதலியை நம்பினால்தான் அது காதல், நம்பாவிட்டால் மோதல் நிச்சயம் உண்டாகும் எச்சரிக்கை. சந்தேகம் என்ற வேர் உள்ளத்தில் உண்டாகிவிட்டால், அது வளர்ந்து வளர்ந்து வாழ்க்கையை நிச்சயம் அழித்துவிடும். உனக்கு சந்தேகம் உண்டானால் முதலில் உனது மனநிலையை சோதித்து அறிவது நல்லது. என்னை நேசிக்கும் நபர் யாரிடமும் பேசக்கூடாது என்ற மனநிலை இருந்தாலேயே இந்நிலை உண்டாகும். சாதாரணமாக யாரிடமும் பேசுவதைக் கூட மனம் சகித்துக்கொள்ளாது. இந்த சந்தேகத்துடன் அவளை திருமணம் முடித்தால், நீ வெளியே செல்லும்போது வீட்டில் மனைவியை உள்ளே வைத்துவிட்டு வெளியே பூட்டிவிட்டுச் செல்லும் கீழ்த்தரமான நிலையைக் கூட நீ கையிலெடுக்கும் சூழல் உண்டாகும்.

என்னைக் காதலித்தவன் திடீரென இப்பொழுது நீ வேண்டாம் என்று சொல்லுகின்றான்; என்ன செய்வது?

எனது கட்டுரையில் குறிப்பிட்டதுபோல அவன் காமத்திற்காக உன்னிடத்தில் பழகினவனாக இருக்கலாம். அப்படி நாங்கள் தவறாக நடந்துகொள்ளவில்லை என்று சொன்னால், அவனிடம் காரணத்தை அறிந்துகொள்ள முற்படலாம். நேரடியாகப் பேச வாய்ப்பு கிடைக்காவிட்டால், நம்பகமான நடுநிலை மனிதரின் துணையைத் தேடலாம். வீட்டில் எதிர்ப்பு, ஜாதி, மதம் போன்ற ஏதாவது பிரச்சனைகள் காதலனின் வீட்டில் உண்டாகி அதற்கு உனது காதலன் சம்மதித்து பெற்றோர் சொல்வது சரியே என்று நினைத்திருந்தால், விலகிக்கொள்; வேறு வழி இல்லை. நான் அவனைக் காதலித்தது ஊருக்கெல்லாம் தெரியுமே என்னை திருமணம் முடிக்க யார் வருவார் என்று நினைப்பதெல்லாம் மெல்ல மெல்ல மறைந்துபோகும். காதலில் தோற்றவளாக அல்ல மனந்திருந்தி நற்பெயரெடுக்க முற்படு.

என்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என்று என்னை மிரட்டுகின்றான் என்ன வழி?

இப்படிச் சொல்லும் சிலர் சாவதுண்டு, சிலர் அப்படியாவது மிரட்டிப் பார்ப்போம் என்று காய் நகர்த்துவதுமுண்டு. உன் பக்கம் தவறு இல்லை என்றால் அந்த சாவுக்கு நீ பொறுப்பல்ல; அது தற்கொலை, நீ கொலையாளியாகமாட்டாய். அவனது வாழ்க்கையில் அவன் எடுத்த முடிவு அது. அவன் செத்துவிடுவேன் என்று சொல்வதால் அவனைத் திருமணம் மடித்து நீ வாழ்க்கையில் செத்துவிடாதே. ஒருதலைக் காதல் கொள்ளும் வாலிபர்கள் இம்முறையைக் கையில் எடுப்பதுண்டு. காதலிக்கும்போது, புகைப்படங்கள், கடிதங்கள் சில அடையாளங்களைக் கொடுத்திருந்தால்தான் பயம் உண்டாகும். இந்தக் காதலில் உனக்கு எந்த பங்கும் இல்லை என்றால் கவலைப்படாதே.

காதலிக்கிறேன் எப்பொழுது பார்த்தாலும் எனக்கு எனது காதலியின் ஞாபகமே வருகின்றது; படிக்க முடியவில்லை. அவளைக் காணாவிட்டால் தலையே பித்துபிடித்ததுபோல இருக்கின்றது.

நன்றாகப் புரிந்துகொள்; நீ காதலிக்கவில்லை கன்னி என்னும கண்ணியில் மாட்டிக்கொண்டாய் என்பதை உனது வார்த்தைகளே வெளிப்படுத்துகின்றன. உன்னை நீயே விடுவித்துக்கொள் தண்ணீரின் கீழே ஆழமாய் மூழ்கிவிட்டு திரும்பி சுவாசிக்கக் கூட மேலே வர முடியாத நிலையைப் போல இருக்கிறது உனது நிலை. நீ இப்போது என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள். அதற்காகச் செயல்படத் தொடங்கு. உனது வாழ்க்கையின் இலட்சியம் உனது கண்களுக்கு முன் வரட்டும். அவளைச் சிறியதாக்கவேண்டும் என்றால், இறைவனை உனது வாழ்க்கையில் பெரியவராக மாற்றிக்கொள். இறைவனின் அன்பை நீ உணர்ந்துகொண்டால் அது எல்லாவற்றிற்கும் மருந்து.

காதலிக்கும் நாங்கள் உடலுறவு கொள்ளவில்லை, தொட்டுப் பழகுகிறோம்; அவ்வப்போது முத்தங்களைப் பறிமாறிக்கொள்கின்றோம்; இது தவறா?

உனது கேள்விக்கு ஒரே வார்த்தையில் தவறு என்று பதில் கொடுத்துவிடலாம். கண்பட்டு காதல் மலர்வதுண்டு, கைபட்டு கற்பு அழிந்துபோவதுண்டு. அழிவை ஏன் ஆரம்பித்துவைக்கவேண்டும். நெருப்பும் பஞ்சும் நெருங்கியிருப்பது தவறுதான்; எப்பொழுதுவேண்டுமென்றாலும் தீ பற்றிக்கொள்ளும் ஆபத்து உண்டு தூரமாயிருங்கள், கைகூடி வந்தால் திருமணத்திற்குப் பின்னர் கைகோர்த்துப் போகலாமே.

காதல் தோற்றுப் போனதால் தற்கொலை செய்யும் உணர்வு எப்பொழுதும் எனது மனதில் உண்டாகின்றது என்ன செய்வது?

காதலையெ நீ இன்னும் நினைத்துக்கொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்து இது. காதலின் தோல்வியைக் குறித்து எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடு. நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் கொடுக்கும் நண்பர்களுடன் உன்னை இணைத்தக்கொள். அவள் மட்டும்தான் உலகில் பெண் அல்ல, இன்னும் கோடிகள் உண்டு; கோழைத்தனமான முடிவு வேண்டாம். நீ இன்னும் வாழவேண்டிய வசந்தமான வாழ்க்கை ஏராளம் உண்டு; இந்த ஒன்றைக் காரணம் காட்டி அவை அனைத்தையும் அழித்துவிடாதே. இடறிய கல்லுக்காக ஏன் காலை வெட்டிக்கொள்ளவேண்டும். தற்கொலை உணர்வு மேலோங்கியே நின்றால், தேவ ஊழியர்களிடம் சென்று ஜெபித்து ஆலோசனை பெற்றுக்கொள். எது எப்படியானாலும், நீ உனது மனநிலையை மாற்றி இறைவனண்டை சேர்ந்தால் அத்தனையம் மாறிவிடும்; கவலைப்படாதே.

நான் காதலித்த பெண்ணை வேறொருவன் திருமணம் செய்துவிட்டான்; அதனால் அவனை அழித்துவிடவேண்டும் அல்லது அந்த குடும்பத்தை இன்பமாக வாழவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் உண்டாகிறது என்ன செய்வது?

முடிந்துபோனவைகளை முடிச்சு போட்டு தொடர்வது சரியானதல்ல. நடந்தது நடந்ததுதான் நீ மறக்கக் கற்றுக்கொள். அவள் காதலியாக இன்னும் உனது நினைவில் இருந்தால், இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். அவர்களை வாழவிடு, நீ வேறொரு வாழ்க்கையைத் தேடு. அவள் உனக்கு ஏதாவது ஞாபகப் பரிசுகளை, வாழ்த்து அட்டைகளை அனுப்பியிருந்தால் அவைகளை இன்னமும் பத்தரப்படுத்தி வைத்திராமல் அவைகளை வீசிவிடுவது நல்லது.

நான் காதலிக்கின்ற வாலிபனோடு ஒருமுறை உடலுறவு கொண்டேன்; அதற்குப் பின்னர் அவன் என்னை நேசிக்காததைப் போலவே உணருகின்றேன்; இது எனது மனதின் பிரம்மையா; பயமாயிருக்கிறது?

கன்னியாக இருந்த நீ காலியாகிவிட்டாய் என்பதை முதலில் உனக்கு நினைப்பூட்ட விரும்புகின்றேன். கற்பு காலியாகிவிட்டதால் உனது மனதில் எழும் உணர்வுகளின் ஒரு பரிமாணம் தான் இந்த நிலை. மேலும், இனிமேல் என்னை விட்டுவிடுவானோ, வேறொருத்தியை திருமணம் செய்துகொள்ளுவானோ என்ற பயம் உனது நெஞ்சில் நிறைந்திருந்தாலும் இந்த நிலை உருவாகும். உன்னைச் சுற்றி வந்தவனை நீ இனி அவனைச் சுற்றிவரும் நிலைக்கு உன்னைத் தள்ளிவிட்டாய். உடலைக் கொடுத்துவிட்டு புலம்புவதைக் காட்டிலும், ஞானமாய் விலகியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதல்லவா. பூவில் தேன் அருந்திவிட்டு தேனீ பறந்து செல்வதுமுண்டு, மீண்டும் தேடிவருவதுமுண்டு. தேனை இழந்த மலர் நீ தேனீயைத் தேடிச் செல்வது இயலுமா? மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு உன்னை அவன் அழைத்தால் அதற்கு விலகி இருந்து அவனது பாசத்தைத் தக்கவைத்துக்கொள்ப்பார்; அதற்கு நீ விலகுவதால் அவன் பறந்து சென்றால் மறந்துவிடு; கற்பை இழந்துவிட்டால் நீ கழித்துப்போடப்பட்டுவிடுவாய். எச்சில் இலையாய் நீ எறியப்படுவதைக் காட்டிலும், சரீரமாகிய உனது இலையில் கற்பாகிய சோற்ளை திருமணம் வரை காதலனுக்கு பரிமாறாமல் இருப்பது நல்லது.

நான் காதலித்த வாலிபன் என்னை விட்டுவிட்டதால் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன் இது சரியா?

உன்னைக் காதலித்த வாலிபன் அந்த முடிவை எடுக்காதபோது, நீ மட்டும் ஏன் இந்த முடிவை எடுக்கவேண்டும்? வேறொருவனுடன் வாழுவதை என்னால் நினைத்தக்கூடப் பார்க்கமுடியவில்லை என்று சொல்லாதே, நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கவும் தெரியவேண்டும். உன்னை மறக்கிறவனை நீ நினைத்திருக்கிறாய், இனி உன்னை நினைக்கிறவனை மணக்கப்பார், வாழ்க்கை மணக்கும்.