வேதத்தை முறைப்படி வாசிப்பது,
புரிந்துகொள்வது எப்படி? - 1


சகோ. கிருபாகரன்


வேதம் என்பது நமது கையில் கொடுக்கப்பட்ட இறைவனின் பாடப்புத்தகம். தேவன் மனிதனைப் படைத்த நாட்களில் தேவனே அவனுக்கு எல்லாமாயிருந்தார், மனிதன் பாதை மாறியபோது நியாயப் பிரமாணங்களைக் கொடுத்து, மனிதனுக்கு பாதையைக் காட்டிக்கொடுத்தார். நியாப்பிரமாணங்கள் கட்டளைகளாகவே பாவிக்கப்பட்டன. நியாப்பிரமாணத்தின் அந்நாட்களில், சட்டத்தை மீறுபவனுக்கு சட்டென தண்டை கிடைக்கும். அவ்வகை நியாயப்பிரமாணங்களில் மனிதர்கள் கட்டுண்டவர்களாயிருந்தார்கள். பிரமாணத்திற்கு பலர் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும், சட்டத்திற்கு மறைவாய் தவறு செய்யும் அளவிற்கு மனிதனின் மனநிலையை பாவம் சுருட்டி வைத்திருந்தது.

கொலை செய்தாலோ, திருடினாலோ, விபச்சாரம் செய்தாலோ அது தெரியவந்தால் மாத்திரமே அவன் தண்டிக்கப்படுவான். தெரியவில்லையென்றால், மறைத்து தப்பித்துக்கொள்ளுவான், ஆனால், தண்டனையை நேரடியாக தேவனிடமிருந்து பெறும் நிலைக்குத் தன்னைத் தள்ளிக்கொள்ளுவான். நியாயப்பிரமாணங்களுக்கும், கட்டளைகளுக்கும் கட்டுப்படாத மனிதனிடத்தில் அநேக தாசர்களைக் கொண்டு தேவன் பேசினார், எழுதிக்கொடுத்தார், அப்படியே, ஆவியானவரின் துணையோடு நமது மனம் திரும்புதலுக்காகவும், நமது இரட்சிப்பிற்காகவும், தேவனை நாம் அறிந்துகொள்வதற்காகவும், அநேகருக்கு தேவனை அறிவிப்பதற்காகவும் எழுதப்பட்டு இன்று நமது கையில் இருப்பதே வேத புத்தகம். தேவன் பேசியவைகள், மனிதன் பேசியவைகள், தூதன் பேசியவைகள், ஆவியானவரின் ஆளுகைகள், இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், அவரின் அற்புதங்கள், உவமைகள், பல்வேறு தீர்க்கதரிசனங்கள், வாக்குத்தத்தங்கள், போதனைகள், அப்போஸ்தலர்களின் ஊழியங்கள் மற்றும் பிசாசின் தந்திரங்கள் உட்பட பலவற்றை நாம் அறிந்துகொள்ளும் நோக்கத்துடனும், தேவனண்டை சேர்க்கப்படும் நோக்கத்துடனும் இவ்வேதம் எழுதப்பட்டிருக்கிறது.

வேத புத்தகம், நாம் இந்த உலக கல்லூரிகளில் பயிலும் புத்தகங்கள் போன்றதல்ல. உலகக் கல்வியில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு புத்தகங்கள் கொடுக்கப்படும். கல்லூரியில் முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டிற்கு முன்னேறும்போது, முதலாம் ஆண்டு பாடப்புத்தகங்களைக் காட்டிலும் மேன்மையான பாடங்களை உள்ளடக்கிய பாடப்புத்தகங்கள் கொடுக்கப்படும். ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தையின் கையில் இருக்கிற புத்தகங்களை, கல்லூரி பயிலும் மாணவர்கள் கையில் கொடுப்பதில்லை இது உலகக் கல்வி.

ஆனால், தேவனாலும் அவரது ஆவியானவரின் துணையோடும், பல பரிசுத்தவான்களோடும் எழுதப்பட்ட வேதமாகிய பாடப்புத்தகம் இவ்வுலகக் கல்வியின் புத்தகங்களோடு ஒப்பிடத்தக்கதல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும், அதாவது இரட்சிக்கப்படவும் (இறைவனின் பள்ளியில் சேரவும்) அழைப்பிதழாக அந்த பாட புத்தகம்தான் கொடுக்கப்படுகிறது, இரட்சிக்கப்பட்டு ஆலயத்திற்கோ, ஜெபக்குழுவிற்கோ முதன் நாள் வருபவருக்கும் அதே வேதபுத்தகம்தான் கொடுக்கப்படுகிறது. இரட்சிக்கப்பட்டு, பலகோடி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்படும் ஊழியர்கள் கையிலும் அதே புத்தகம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறியோர், வாலிபர், பெரியோர், ஊழியர் என அனைவரும் கையில் வைத்திருப்பது ஒன்றே. அது பரிசுத்த வேதமே. பாடப்புத்தகம் ஒன்றே, எனினும் அவரவர் நிலையின்படி, வளர்ச்சியின்படி, புரிந்துகொள்ளுதலின்படி தேவன் கற்றுக்கொடுக்கும் விதங்களில்தான் வித்தியாசங்கள்.

கையில் வேதப்புத்தகம் இருக்கிறது என்பதனால், எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என எவரும் சொல்லிவிடமுடியாது. வேதத்தில் தேவன் எழுதி வைத்திருப்பவைகளின் அதிசயமான பல காரியங்கள் தேவனை அறியாத, தேவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காத மனிதனால் புரிந்துகொள்ள இயலாதவை. அப்படிப்பட்டோர், தங்கள் கையில் உள்ள வேதபுத்தகத்தை ஒரு கதைப் புத்தகம் போலத்தான் வாசிப்பார்கள். புரிந்துகொள்ள ஒரு மனிதன் விரும்புவான் என்றால், வேதம் பிரதானமாய் சொல்லும் இயேசுவையும், அவர் சிலுவையில் சம்பாதித்து மனுக்குலத்திற்குக் கொடுத்த இரட்சிப்பையும் அடையும்படி, எளிய நடையில் எழுதப்பட்ட சுவிசேஷத்திற்கே முதலில் செவிமடுக்கவேண்டும். முதலில் அவன் தன்னை பாவி என அறிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்ற இயேசுவுக்கு தனது வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கவேண்டும். இதுவே, கல்லூரிக்குள் நுழையும் கதவு, பாடசாலையின் முதல் படிப்பினை.

இறைவனின் இதயத்துடிப்புகள் அடங்கிய பாடப்புத்தகமே இந்த வேதப் புத்தகம். இதனை மரணத்திற்கு முன் படித்து, புரிந்துகொண்டு பரலோகத்தில் நுழையத் தடுக்கும் பாவங்களைக் களைந்தெறிந்துவிட்டு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, நித்திய ஜீவனைப் பெற்று அவரோடு வாழும் அளவிற்கு தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வோர். மரணத்திற்குப் பின் நடக்கவிருக்கும் நியாயத்தீர்ப்பு என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்று பரலோகில் நுழைவார்கள்.

முதல்வர்

வேதத்தை வாசிக்கத் தொடங்கும்போது, அவருக்கு உடன் நின்று உதவி செய்பவர் ஆவியானவரே, ஆரம்பம் முதல் வாழ்வின் இறுதிவரை ஆசிரியரும் அவரே. பாடப் புத்தகமும் மாறப்போவதில்லை, பாடத்தைச் சொல்லிக்கொடுப்பவரும் மாறப்போவதில்லை. ஆவியானவரின் துணையின்றி, அவரால் எழுதப்பட்ட இந்த வேத வசனத்தின் சில ஆழமான அணுக்களை அடைய முடியாது, அஸ்திபாரங்ளைத் தொட முடியாது. இன்றைய காலத்தில் இருக்கிற வீடியோ சி.டி நல்லதோர் உதாரணம். வீடியோ சி.டி யினைப் கையில் எடுத்துப் பார்க்கும்போது, அதில் பதிந்திருக்கும் மூன்று மணி நேர படங்கள் அப்படியே கண்ணில் தெரிந்துவிடுவதில்லை. அதனை நம் கையில் வைத்திருக்கும்போது, அந்த சி.டியில் என்ன படம் இருக்கிறது? யார் இந்த சி.டியினை வெளியிட்டது? அவரைத் தொடர்பு கொள்ளும் முகவரி என்ன? அந்த சி.டி எங்கு தயாரிக்கப்பட்டது? என்பது போன்ற விபரங்கள் அடங்கிய வெளி வாசகங்கள் மட்டுமே நமது கண்களில் தென்படும். ஆனால், அதில் உள்ள படத்தை வெளிக்காட்டும் சி.டி பிளையரினுள் அதனை நுழைத்துவிட்டால், அந்த சி.டி பிளையர் அதிலுள்ள படத்தை நமக்கு வெளிக்காட்டும்.

அப்படியே வேதமும், கையில் வைத்திருக்கும்போதும், ஏனோ தானோ என்று வாசிக்கும்போதும், எப்போதாவது கையில் தூக்கிக்கொண்டு ஆலயம் செல்லும்போதும் ஏதோ ஒரு சில தகவல்களை மாத்திரமே தரும். போதகரோ அல்லது வேறெந்த ஊழியரோ அதனை விளக்கிச் சொல்லும்போது, பிரசங்கிக்கும்போது சில அந்தரங்க பொக்கிஷங்கள் தென்படும். நம்மையும் வேதத்தையும் இணைக்கும் சி.டி பிளையரைப் போன்ற ஆவியானவரின் துணை நமக்குத் தேவை. ஏனேனில், 'அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்' (யோவா 16:14) என்பது இயேசுவே ஆவியானவரைக் குறித்துச் சொன்ன செய்தி. தனது ஞானத்தினால் எல்லா வேத வசனங்களையும் உலக மனிதன் எடைபோட்டுவிடமுடியாது. வேத வாக்கியங்கள் ஆவியானவரின் துணைகொண்டே எழுதப்பட்டவை, எனவே மேலும் அதன் இரகசியங்களை அறிய ஆவியானவரின் துணை தேவை. இல்லையென்றால் கற்றுக்கொள்ள முடியாது, கையில்தான் வைத்திருக்கவேண்டும்.