பிராந்திக் கட எங்க இருக்கு? 

 

2011ம் ஆண்டு மே 5, இரவு 8:35 மணி; அலுவலகப் பணியினிமித்தம் சிவகாசி வந்திருந்த நான், நாள் முழுக்க பணியினை முடித்து, தங்கியிருந்த விடுதி நோக்கி நடந்துகொண்டிருந்தேன். சிறிது தூரம் வந்ததும்? சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னை நோக்கி கையசைப்பது தெரிந்தது? ஏறிட்டுப் பார்த்தேன், என்றபோதிலும் நான் அறியாத நபர் அவர்; யாரையோ அழைக்கிறார், என்னை அல்ல என முன்னேறினேன். கடந்து செல்ல முயற்சித்த என்னை மீண்டும் கை அசைத்து; 'தம்பி கொஞ்சம் வாங்க' என்றார். மேலாடை இல்லாத அறையாடை, இடுப்பிலே இறுக்கிக்கட்டிய சாரம், கையிலே தொங்கும் சுருட்டப்பட்டிருந்த துணிப்பை அதன் உள்ளே சில்லறைகள் சிணுங்கும் சத்தம், பாதத்தில் பழமையான செருப்பு, அவர் உழைத்து வந்த மனிதன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். நானா! என்ன வேண்டும்? என கேட்க, அவர் என் அருகிலே வந்து காதருகே 'பிராந்திக் கட எங்க இருக்கு' என கேட்டார். இறைத் தொண்டன் என்னிடத்தில், கறை படிய வழி கேட்டும் மனிதனை நினைத்து நொந்துகொண்டேன். 'நான் சிவகாசிக்குப் புதுசு, பிராந்தி கட தெரியாது, நான் குடிக்கிறவனுமல்ல, நீங்க குடிக்காதீங்க ஐயா' என்ற எனது வார்த்தைகளைக் கேட்டபோது, அவரது இமைகள் சுருங்கின வெட்கமாய்ச் சிரித்தார், அப்போது முன்னிரண்டு உடைந்த பற்களுக்கு இடையே வெளியே வந்தது அவரது நாக்கு. அவர் என்னை மதிப்பதை உணர்ந்தேன், ஆனாலும் அவரை மறித்து நிற்க முடியாது என்பதையும் புரிந்துகொண்டேன். இரண்டடி முன்னேறினேன் அதற்குள் அவர் இன்னொருவரிடம் 'பிராந்திக் கட எங்க இருக்கு?' என்ற அதே கேட்வியைத் தான் மீண்டும் கேட்டார் என்பதை, அந்த மனிதன் கைகாட்டி வழிகாட்டி அனுப்பிவைத்ததைக் கண்டு புரிந்துகொண்டேன். அத்தனை நெருக்கமான மக்கள் கூட்டம், அங்கும் இங்கும் அவசர அவசரமாய் போய்க்கொண்டிருக்க, என்னைப் பார்த்து ஏன் இப்படி?... என்ற கேள்வி ஒருபுறம் மனதில் எழும்ப. அலுவலக வேலையினால் அலுத்து, தள்ளாடி நடந்திருப்பேனோ, நான் எப்படி அவரது பார்வையில்.... குழப்பமான உணர்வு எனக்கு உண்டாக விடுதி நோக்கி நடந்தேன்; அவர் வீடு சேர்ந்திருப்பாரா அல்லது வீதியில் கிடப்பாரா? என்ற கேள்விக்கு விடை இல்லை என்னிடத்தில்......