ஞாயிறு ஆராதனை, 8 மணிக்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்ற வேகம் எனக்குள். நேரத்தை எட்டிப் பிடிப்பதற்குள், தொடர்ந்து வந்த சில பொறுப்புகளால் தொய்ந்து, குடும்பத்துடன் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாகச் சென்றேன். ஆலயத்தின் உள்ளே நுழையும்போது, பாடல் வேளை முடிந்து, ஆராதனையின் முதற்பகுதியில் ஆண்டவரின் குணங்களை தியானிக்கும் வேளை ஆரம்பித்திருந்தது. இருக்கையில் அமர்ந்தேன், வழக்கமான தலை குனிந்து ஓர் சிறு ஜெபம்; பின்னர் செய்தி கொடுக்கும் நபரை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். சகோ.பால்சுந்தர் ஆண்டவரின் குணங்களில் ஒன்றினை விவரித்துக்கொண்டிருந்தார்.

'உள்ளங்கைகளில் நம்மை வரைந்திருக்கும் ஆண்டவர்' என்ற கர்த்தரின் குணத்தினை, சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்; இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்' (ஏசாயா 49:14,15) என்ற வசனங்களிலிருந்து பிரசங்கித்துக்கொண்டிருந்தார். வசனம் இருந்த வேதத்தின் பக்கத்தைப் புரட்டிவைத்துக்கொண்டு அவரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்; சில குறிப்பெடுத்துக்கொண்டேன். ஆராதனையைத் தொடர்ந்து செய்தியும் முடிந்து, ஆசீர்வாத ஜெபத்துடன் ஆலயத்தை விட்டு வெளியேறினேன்.

ஆலயம் முடிந்ததும், அருகாமையிலுள்ள ஜெம்ஸ் சிற்றுண்டியில் தேனீர் அருந்துவது வழக்கம். அன்று, அதனையும் தவிர்த்து, குடும்பத்துடன் வீடு நோக்கி நடந்தேன். இனம் காண இயலாத ஏதோ ஒரு சூழ்நிலைக்குள் நான் நிலை தடுமாறுவது போன்ற உணர்வு ஆலயத்திலிருந்து, வீடு வந்து சேருமுன் பாதி வழியில் எனக்குள் உண்டானது. அதனை அத்தனையாய், கரிசனையாய் கவனிக்க மனதற்றவனாக வீடு வந்து சேர்ந்தேன். பின்னர், சற்ற நேரத்திற்குள் வெளியேறி, இயற்கைச் சூழலில் நடந்து, அக்கம் பக்கத்தினரோடு உலாவிவரச் சென்றேன். அதனைத் தொடர்ந்து, மனைவி மற்றும் மனனோடு மீண்டும் வீடுவந்தடைந்தேன். வீடு வந்தடைந்தும், முன் நிற்கும் நிலையில் இன்னும் தளராத தடுமாற்றத்தினை உணர்ந்தேன்; என்றாலும், ஏன், எதற்கு? என்ற கேள்வியும் தெரியவில்லை, விடையும் புரியவில்லை.

மனதளவில் நெருக்கம் உண்டாகும்போது, பெரியவர்களைத் தவிர்த்து குழந்தைகளுடன் விளையாடுவது எனது வழக்கம். அப்படியே, அன்று கம்ப்யூட்டர், லேப்டாப் அனைத்தையும் மூடிவிட்டு எனது மகன் ஜான் சாமுவேல் உடன் விளையாடத் தொடங்கினேன். அவனுக்கென்று வாங்கியிருந்த, சிலர் அன்பளிப்பாய்க் கொடுத்திருந்த நல்ல நிலையில் இருந்த சில விளையாட்டுப் பொருட்கள் வீட்டின் ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அவைகள் மேல் எனது கண்கள் போகவில்லை. சில வாரங்களுக்கு முன், ஜெம்ஸ் ஆலயத்தில் சகோ.ராஜேஸ் டத்தி அவர்கள் செய்தி அளிக்கும்போது, உடைந்த பழைய விளையாட்டுப் பொருட்களைச் சேர்த்து ஒட்டிவைத்து, தனது மகன் ஆசேர் உடன் இணைந்து வீடு செய்து விளையாடியதைப் பகிர்ந்துகொண்டது அப்போது நினைவிற்கு வந்தது.

எனது வீட்டில், 'fevi kwik'' (பொருட்களை ஒட்ட பயன்படுத்தும் பசை) இருக்கிறதா? எனத் தேடினேன்; கிடைத்தது. பின்னர். எனது மகன் சிறுவனாக, சுமார் இரண்டு வயது இருக்கும்போது வாங்கி, அவன் உடைத்தெறிந்திருந்த பழைய விளையாட்டுப் பொருட்களைத் தேடினேன்; அது வீட்டில் ஓர் மூலையில் பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்துவந்த கீழே கொட்டி, அவைகளில் சிலவற்றை எடுத்து, உடைந்த அப்பொருட்களைக் கொண்டு வீடு கட்டும் வேலையைத் தொடங்கினேன்; ஒட்டுவதற்காக கநஎi மறமை ஐ திறந்தபோது, உள்ளே இருந்து பசை வராமற் போகவே, என்னவென்று உற்றுப்பார்க்க, அதுவோ உறைந்திருந்தது; ஆம், அது வாங்கி பல மாதங்கள் ஆனது.

வீடு கட்டும் வேலையை இனி தொடர முடியாது, மகனுடன் இணைந்து சில விளையாட்டுப் பொருட்களை உடைத்து, உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் படலம் தொடர்ந்தது. மகனுக்கு அதில் அதிக இஷ்டமாகிவிட்டதினால், மனம் ஒன்றி ஒவ்வொன்றாக உடைத்துக்கொண்டிருந்தான். கார் ஒன்றை உடைத்தபோது, ஒரு சிறிய மோட்டார் அவன் கையில் கிடைத்தது, 'அப்பா இது என்னது?' எனக் கேட்டான், விளக்கம் சொன்னேன். பின்னர் மற்றொன்றை எடுத்துக்காட்டினான், அப்போது, எனது நினைவு 2002-க்கு பயணமானது. பீஹாருக்கு மிஷனரியாக என்னை அர்ப்பணித்து 2002-ம் ஆண்டு ஊழியத்தில் இணைந்தபின்னர், 2003-ம் ஆண்டு கருவந்தியா பணித்தளத்தில் ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது வாங்கிய டேப் ரிக்கார்டர் அது. மின்சாரம் அதிகமில்லாத அவ்விடத்தில், அதனை பேட்டரியால் இயக்கி பாடல்களைக் கேட்ட ஞாபகம். அதற்கு அப்போது நான் செலுத்திய விலை ரூபாய் 1800. சாயர்புரத்திலுள்ள சகோ.ஜேக்கப் ராஜன் அவர்களிடம் பீஹாரிலிருந்து நான் தொலைபேசியில் சொல்ல, அவர் தூத்துக்குடி பள்ளிவாசல் அருகிலுள்ள 'Blue Diamont' என்ற கடையில் அதனை வாங்கித்திருந்தார்.

அத்தனைப் பொருட்களையும் அள்ளிக் கொட்டி, உடைத்துப் பார்த்து, ஏறக்குறைய விளையாடும் வேளை முடிவுறும் நேரத்தில், எனது கண்ணில் பட்டது சிறியதோர் பொருள்; அதனைக் கண்டபோது, அது சில வருடங்களுக்கு முன்னர் திருமண நாள் வாழ்த்துதலாக சகோ.பிராங்ளின் குடும்பத்தினர் அளித்தது நினைவில் வந்தது. அந்நாட்களில், அதனை அனுதினமும் பார்ப்பதற்கு ஏதுவாக, சுவிட்ச் போர்டின் மேல் வைத்திருந்தேன். வீடு மாறியபோது, அது மூடையில் ஏறி பழைய சாமான்களோடு, முடக்கப்பட்டிருந்தது, என்னால் மறக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டபோது, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கூட நினைவில் கொண்டுவர இயலாதவனாயிருந்தேன். கண்ணாடி அணியாதிருந்ததால் அதில் எழுதப்பட்டிருந்ததை தெளிவாக வாசிக்க இயலாது, பழைய நினைவோடு கையில் அதனை வைத்துக்கொண்டிருந்தபோது, மேலும் ஓர் அதிர்வு எனக்குள்; அதில் எழுதியிருக்கும் வாசகத்தைப் படிக்கவேண்டும் என்று. மூக்குக் கண்ணாடியினை எடுத்துவந்து எழுதப்பட்டிருந்த வாசகத்தைப் வாசிக்கத் தொடங்கினேன்; ஆம், உடைந்துபோனது என்று நான் வீசியிருந்த அந்தப் பொருளில் இருந்த வார்த்தை என் மனதை உடைக்கத் தொடங்கியது. ஆம்; அது அன்று ஆலயத்தில் நான் கேட்டிருந்த அதே வசனமே. வீடு கட்டுகிற என்னால் ஆகாது என்று தள்ளின அது, அன்று என் மூளைக்குத்; தலைக்கல்லானது. அதனை என் மனைவியிடம் காட்டினேன், 'பார் கர்த்தர் என்னை மறக்கவில்லை' என்று சொன்னேன். அவள் பதிலுக்கு, 'ஆம், என்னையும் தான் அவர் மறக்கவில்லை என்றாள்.

'See! I will not forget you... I have carved you on the palm of my hand' (Isaiah 49:15)
carved you (செதுக்கியிருக்கிறேன்) என்ற வார்த்தை, சிந்திய இரத்தத்தை நினைவுபடுத்தி சிந்தையை விடுவித்தது.

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.(ஏசா 49:15) இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.(ஏசா 49:16)

ஏசாயா 49:15 என்ற வசனம் மட்டுமே, அந்த அன்பளிப்பின் பொருளில் குறிக்கப்பட்டிருந்தாலும், 'என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்' என்ற அடுத்த வசனமும் எனக்காக அதில் தொடர்ந்திருந்தது. உலகப் பிரகாரமான கட்டிடமான ஆலயத்தை விட்டு நாம் வெளியே வந்தாலும், தன்னையே இடித்து ஆலயமாகிய நம்மைக் கட்டிய ஆண்டவர் நம்மோடு வருபவர். நாமே அவரது ஆலயம்.

ஆலயத்தை விட்டு வெளியே வந்தாலும்
ஆலயத்தோடு வருபவர் ஆண்டவர்
ஆராதனையை நீ முடித்தாலும்
ஆராதனை தொடரும்
ஆலயம் நீதானே!