வேதம் இங்கே... யாக்கோபு எங்கே?

வியாழக் கிழமை (நவம்பர் 29, 2012); எனது அலுவலகத்தில் ஜெம்ஸ்-ன் மாதாந்திர தமிழ் பத்திரிக்கையான 'யுத்தசத்தம்' வேலையினைச் சீக்கிரம் முடிக்கவேண்டியிருந்ததால், விரைவாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். இறுதி கட்ட வேலையில் நான் இருந்த அன்று மாலை சுமார் 4.10 மணி அளவில், ஜெம்ஸ்-ன் மத்திய மண்டல இயக்குநர் சகோ.எமர்சன் எனது அலுவலகத்தின் வாசலுக்கு வெளியே நின்றவாறு, தலையினை மட்டும் உள்ளே காட்டி, அன்று நடைபெறவிருந்த ஜெம்ஸ் தலைவர்களுக்கான வாராந்திர மாலை ஜெபக்கூடுகைக்காக அழைப்பு விடுத்தார்.

அது வழக்கமாக நடைபெறும் ஓர் ஜெபக்கூடுகையே; எனினும், பல வாரங்கள் மறந்துவிட்டதினிமித்தமும், அலுவல்களினிமித்தமும் நான் பங்குபெறாதிருந்தேன். அன்று, அந்த அழைப்பினைக் கேட்டதும், பங்கு கொள்ள ஆவல் கொண்டு, விறு விறுவென அப்போதிருந்த சில வேளைகளைச் செய்துவிட்டு, மற்றவைகளை வந்து பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டு புறப்பட ஆயத்தமானேன். எனது தமிழ் வேதாகமம் வீட்டில் இருந்ததினால், அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்த புத்தக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பல வேதாகமங்களுள், 'யுஅpடகைநைன எநசளழn' வேதம் என்னின் கண்ணில் பட, அதனை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

எனது அலுவலகத்திற்கு கீழ் தளத்திலிருந்த, அறையில் நான் நுழைந்தபோது, கூடுகை தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு சில தலைவர்கள் அமர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். கையில் வேதத்தோடு, ஓர் இருக்கையில் அமர்ந்தேன். எனது அருகில் இருந்த சகோ.ஜோயல் மெர்சன் என்னிடத்தில் பாடல் புத்தகம் இல்லாததைக் கண்டு, தன்னிடமிருந்த ஹிந்தி பாடல் புத்தகத்தினைக் கொடுத்தார்; பாடல் வேளை முடிந்தபோது, சகோ.பால் சுந்தர் 'யாக்கோபு' நிருபத்திலிருந்து சில வசனங்ளை தியானத்திற்காக முன்றிறுத்தத் தொடங்கியபோது, எனது கையிலிருந்த வேதத்தில் 'யாக்கோபு' நிருபத்தினைத் தேடினேன், அவசர அவசரமாக அவர் சொன்ன வசனங்கைளப் பார்க்க விழைந்தேன்.

ஆனால், நிருபத்தினை அத்தனை சீக்கிரமாய் எடுத்துவிட முடியாது வேதத்தில், புதிய ஏற்பாட்டின் கடைசி நிருபங்களினூடே இங்கும் அங்கும் பக்கங்களைப் புரட்டித் தேடிக்கொண்டிருந்தேன். பின்னர், சற்று நேரத்தில், நான் தேடிக் கண்டுபிடிக்காதது, மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே என நினைத்து, எடுத்துவிட்டதைப் போல, ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக்கொண்டு, அவரது வாயிலிருந்து புறப்படும் செய்திக்குச் செவி சாய்க்கலானேன். இப்படி 'யாக்கோபு' நிருபத்தைக் கூட நம்மால் எடுக்க முடியவில்லையே என இதயம் கொஞ்சம் பதைத்துக்கொண்டிருந்தது. செய்திக்கு இடையில், வேதாகமத்தின் முன் பக்கத்தினைத் திருப்பி, ;'யாக்கோபு' நிருபம் எங்கே இருக்கிறது என சாதுரியமாகப் பார்த்தேன். ஆனாலும், பக்க எண்ணைப் பாராது விட்டுவிட்டு, 'யாக்கோபு' என எழுதியிருப்பதை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் புதிய ஏற்பாட்டில் தேடத் தொடங்கினேன். அவரது செய்திக்கு ஒத்த வசனங்களை நான் வேதத்தில் தேடிக்கொண்டிருப்பதாக மற்றவர்கள் நினைப்பதற்கு ஒத்ததைப் போன்ற தேடல் அது.

அப்போது, திடீரென ஜெம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பணிக்காக வந்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஸ்டீபன் அவர்கள் தற்செயலாக என்னருகே வந்தமர்ந்தார். அவர் வந்த பின்னரும், சில நிமிடங்கள் எனது தேடலைத் தொடர்ந்தேன். செய்தியாளர் வசனத்தை ஆங்கிலத்தில் ஒருவர் வாசியுங்கள் என்று சொல்லிவிடக்கூடாதே என்ற அச்சத்தில் முயற்சியை எனது விரல்கள் தொடர, கண்கள் செய்தியாளரையும் கிடைத்துவிட்டதா என வேதத்தையும் பார்த்துக்கொண்டிருந்தன. எனதருகில் வந்து அமர்ந்த மருத்துவர் நான் தேடுவதைப் பார்த்தபோது, எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்று இன்னும் சற்று விரைவாய் தேடினேன். அவருக்கும் வசனத்தைக் காட்டவேண்டுமே என நினைத்தேன். எனது தேடுதலை அந்த மருத்துவர் பார்த்துவிட்டார் என்பதை அறிந்த நான், முயற்சியை நிறுத்திவிட்டு, 'எங்க போச்சி' என வாய்க்குள் முணங்கிக்கொண்டு வேதத்தை மூடிவிட்டேன்; செய்தி வேளை முடிந்த ஜெப வேளை ஆரம்பமாகியது. பல ஜெபக்குறிப்புகளுக்காக நாங்கள் ஜெபித்து முடித்ததும், தேனீர் கொடுக்கப்பட்டது. தேனீரை வாங்கிய நான் அதனை அங்கேயே அமர்ந்து அருந்தாமல், கையில் எடுத்துக்கொண்டே எனது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தேன். ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் என வேதத்தின் புத்தகங்களை மனப்பாடமாகச் சொல்லத் தெரிந்த எனக்கு அது ஒரு சவாலாகிவிட்டது.

மனதிற்குள்ளே ஒரே வெட்கம், இத்தனை ஆண்டுகள் வேதத்தை சுமந்திருக்கிறேன், கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்க்கப்பட்டவன், ஆனால் இன்று நிலமை இப்படியாகிவிட்டதே என அந்த வேதத்தை எனது அலுவலக மேஜையில் விரித்து யாக்கோபு நிருபத்தைத் தேடலானேன். அப்போதுதான், எனது வியர்வைக்கு விடை கிடைத்தது. அந்த வேதத்தில், யாக்கோபு நிருபம் இல்லாதிருந்தது. அவசரத்தில், கூடுகையில் பங்கேற்கவேண்டும் என, கடமுறைக்கு ஏனோ தானே என வேதத்தை அலமாரியிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றதால் வந்த விளைவு என்று. ஆம், அந்த ஆங்கில வேதாகமத்தை நான் ஒரு முறைகூட புரட்டிப் பார்த்ததில்லை. அதனால் வந்த விளைவுதான் இத்தனையும். வேதத்தின் உள்ளே இருப்பதை அறிந்து ஆராதனையில் பங்கேற்றால் பங்கம் வராது.

ஒர் முறை, ஜெம்ஸ் ஆலயத்தின் ஆராதனையில் பங்கேற்க நுழைந்து, ஆலயத்தின் முதல் மாடியில் அமர்ந்திருந்தேன், ஆராதனை முடிந்த உடன் எல்லாரும் வெளியேறிக்கொண்டிருந்தனர்; நானும் வெளியேற முற்பட்டபோது, என்னருகே ஓர் வாலிபன் வெளியே வர நின்றுகொண்டிருந்தான். அவனது கையில் இருந்த வேதத்தைப் பார்த்தபோது, கைக்குள் அடக்கமாய் அவன் வைத்திருந்த அந்த வேதத்தைப் பார்க்க முற்பட்டேன். 'வேண்டாண்ணே' என்றான் அவன்; அது நல்ல கை;கடக்கமான வேதமாக இருந்தால், அதுபோன்ற ஆங்கில வேதத்தை ஜெம்ஸ் புத்தக சாலையில் வைக்கலாம் என நினைத்து அதனை அவன் கையிலிருந்து வாங்கிய எனக்கு அதிர்ச்சி; 'அது ஓர் ஆங்கில அகராதி' (னுiஉவழையெசல). அண்ணே, சர்ச்க்கு கிளம்பும் அவசரத்தில எடுத்துட்டு வந்துட்னே; என்றான்.

ஒருமுறை எனது கிராமத்திற்கு சற்று தொலைவிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள ஒருவரின் வீட்டிற்குச் கிறிஸ்தவரின் வீடுதான். உள்ளே நுழையும் வாசலை ஒட்டி, மின்சார மீட்டர் பொருத்தப்பட்ட பெட்டி. எட்டி உள்ளே பார்த்தபோது, ஓர் வேதாகமம் மின்சாரத்தால் தாக்கப்பட்டதுபோல, அட்டையின்றி, ஆதியாகமத்தில் வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு என்பது அடங்கிய பல பக்கங்களின்றி இருந்தது. அதிலிருந்துதான் வீடு முழுவதிற்கும் மின்சாரம் செல்வது போன்ற உணர்வும், 'உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது' என்ற வசனமும்தான் நினைவில் வந்தது. அது அந்த வீட்டில் உள்ளோரின் ஆவிக்குரியத் தன்மையை கேட்காமல் அறிந்துகொள்ளச் செய்தது. உடன் வந்த சகோதரர்கள் பேசிக்கொள்ளத் தொடங்கும் முன், 'உள்ளே வாங்க' என்ற வீட்டுக்காரரின் அழைப்பு கேட்டது.

கையிலிருக்கும் வேதத்தின் வசனத்தை அறிந்துகொள்வோம், அனுதினம் அதனைத் தியானிப்போம். நம்மைக் கரை சேர்க்கும் கப்பல் மாலுமியின் கட்டளைகளும், ஆலோசனைகளும் அதிலேயே அடங்கியிருக்கின்றன.வேதத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கூட அறியாது ஆராதனைக்கு அதனைக் கொண்டு சென்று வாழ்க்கையில் வெட்கம் சூழ வாழும் மனிதர்களுக்கு எனது இந்த அனுபவம் ஓர் முன்னுதாரனம்.