டிராபிக் போலீசுக்கு டாட்டா

 

 

11 டிசம்பர் 2011. அலுவலக வேலையாக சிவகாசி சென்றிருந்த நான், அங்கு பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஸ்ரீநிவாசா லாட்ஜ்-ல் தங்கியிருந்தேன். அன்று மாலை என்னைக் காண வந்திருந்த, சிவகாசியைச் சேர்ந்த தம்பி கிங்ஸ்லி உடன் எனது அலுவலகப் பணியினைத் தொடர இரு சக்கர வாகனத்தில் லாட்ஜ்-ல் இருந்து சென்றுகொண்டிருந்தேன். சற்று தூரம் சென்றதும் மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு இடம். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் ஒருவர் வாகனப் போக்கு வரத்தினை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நாங்கள் சென்ற சாலைக்கு 'நில்' என்ற உத்தரவு கிடைக்க, நாங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்துக்கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு சிறுவன், தவறுதலாக சற்று முன்னே சென்று வாகனத்தை நிறுத்தினான். அவனிடம் ஓட்டுநர் உரிமம் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனைக் கண்ட காவலர் அவனது தவற்றிற்காக, அவனது பைக் சாவியை எடுத்துவைத்துக்கொண்டு, சற்று ஒரமாக நிற்கும்படி அவனைச் சொல்லிவிட்டு, மீண்டும் தனது போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அந்த சிறுவன் தான் ஓட்டிச் சென்ற பைக்-ஐ ஏறக்குறைய பத்து அடி தூரத்திற்கு உருட்டிச் சென்று, ஓரத்தில் நின்று தனது பேன்ட் பாக்கெட்-ல் அவன் வைத்திருந்த பைக்கின் மற்றொரு சாவியினை எடுத்து, ஸ்டார்ட் செய்து சென்றுவிட்டான்; எத்தனை புத்திசாலிச் சிறுவன். இதற்குத்தான் மாற்றுச் சாவியினை எப்போதும் தனது பையில் வைத்திருந்தானோ. திரும்பிப் பார்த்த காவலருக்கு அதிர்ச்சிதான், ஆனாலும் தான் ஏமாந்துவிட்டதை அவர் காட்டிக்கொள்ளவில்லை.