கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

 

வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை. கிறிஸ்துவுக்குள் வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் (எபே. 1:3), பாவமன்னிப்பாகிய மீட்பு (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பிரதான நோக்கமே நம்மில் முதலில் நிறைவேறட்டும். அதனைத் தொடர்ந்து, ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையை நிரப்பட்டும். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்று இயேசு கற்றுக்கொடுத்தாரே. பாவமன்னிப்பையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நாம் நாடும்போது, உலக ஆசீர்வாதங்கள் அனுதினமும் அவரால் கொடுக்கப்படும், இதில் நமக்கு சந்தேகம் எழவேண்டிய அவசியமில்லை.


அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவா 1:12). இப்படிப் பிள்ளைகளானவர்களே, அவருடைய சுதந்திரத்தில் பங்கடையப் பாத்திரவான்களானவர்கள். இவர்களே ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கேட்டுப் பெற உரிமையுடையவர்கள். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே (ரோம 8:17). தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?(ரோம 8:32). நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது (பிலி. 3:20), எனவே பரலோகக் குடியிருப்பில் வாழ்வதற்கு ஏதுவாக நமது வாழ்க்கையை ஆயத்தப்படுத்துவோம். வாழ்க்கையில் வேதம் இல்லாமல், வாழ்வில் தேவன் இல்லாமல், தேவைகள் மட்டும் தேவனால் சந்திக்கப்படவேண்டும் என்ற சந்ததியாராய் நாம் வாழவேண்டாம். தேவன் நம்மைத் தேடும்போது, கிறிஸ்துவுக்குள் நம்மைக் கண்டுபிடிக்கட்டும். கிறிஸ்துவை விட்டு வெளியே கிடந்தால், நாம் அவருடைய பிள்ளைகளாக அல்ல அந்நியர்களாகவே காணப்படுவோம். முதலில் அவருக்குள் முத்திரை போடப்படுவோம், இத்தரையில் நம்மை அவருக்கு வீடாக்குவோம். ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2கொரி 5:17). என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் (பிலி 4:19).பாவமன்னிப்பைப் பெறாதவன் கிறிஸ்தவன் என்று அழைக்கப்படத் தகுதியற்றவன். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று (அப் 11:26). மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே(ரோம. 2:21-24). பாவமன்னிப்பைப் பெறாமல், கிறிஸ்தவன் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் மனிதர்களால், கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் தூஷிக்கப்படுகின்றது.

பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத்தான் சிலுவையிலே இரத்தம் சிந்திவிட்டார்