எதிரியின் கையில் இயேசு

 

நமக்கு விரோதமாக நம்மையே தூண்டிவிடுவது சத்துருவின் திட்டம். நம்மைக் கொண்டு நம்மை அழிக்கவே சத்துரு பல வழிகளில் தனது தந்திரங்களை உபயோகிக்கின்றான். இதனைப் புரிந்துகொள்ளாத பலர் உடன் சகோதரர்களுக்கும், ஊழியர்களுக்கும் விரோதமாக நின்று அவர்களை சத்துருவுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்து, சத்துருவின் சதிகளில் சிக்கவைத்துவிடுகின்றனர். இயேசு சிலுவை சிலுவையில் அறையும்படி பிரதான ஆசாரியரும், மூப்பரும், பிற யூதரும் வைராக்கியம் கொண்டு, சத்தியத்தை அறியாத பிலாத்துவினிடத்தில் கொண்டுசென்றபோது, பிலாத்துவின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள், இன்றைய நாட்களில் யூதர்களைப் போல நாமும் தவறு செய்துவிடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளும்படியாக எழுதப்பட்டுள்ள திருஷ்டாந்தமான பாடங்கள்.


முதலாவதாக, பிலாத்து இயேசுவை நோக்கி: 'உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்' (யோவா 18:35) என்றான்.
நான் உன்னைப் பிடிக்கவில்லை, உன் ஜனங்கள்தான் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்; இதுவே பிலாத்துவின் முதல் வார்த்தை. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1பேது 5:8) என்று பேதுரு நம்மை எச்சரிக்கின்றார். ஆனால், எதிராளி நம்முடைய சகோதரர்களைப் பிடிக்கும் முன்னர், நாமே நம்முடைய சகோதரனைப் பிடித்து எதிராளியினிடத்தில் ஒப்புக்கொடுத்துவிடுகின்றோம். நமக்குள் இருக்கும் சின்னச் சின்னப் பிரச்சனைகளையும் சத்துருவுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்து, சத்துருக்கள் நம்மை ஆளும் நிலையை நாமே உருவாக்கிவிடுகின்றோம். இயேசுவை காட்டிக்கொடுத்தான் யூதாஸ், இயேசுவை பிடித்துக்கொண்டு சென்றனர் யூதர்கள். யூதர்கள் இயேசுவை பிலாத்துவினிடத்தில் கொண்டு சென்றபோது, 'உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்' என்றான் பிலாத்து. யூதனுக்கு விரோதமாக யுதர்களே விரோதங்கொண்டு எழும்பி நின்றார்கள்; விளைவு, இயேசுவை அவரை அறியாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கும் நிலை உண்டானது. உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? (1கொரி 6:1) என்று சபைக்கு எழுதினார் பவுல். இன்றைய நாட்களிலும், பல கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை பிலாத்துவின் கைகளில் ஒப்புக்கொடுத்துவிடுகின்றனர். இரட்சிக்கப்படாதவர்கள், போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள், கொள்ளையிலும், கொலையிலும் உள்ளோரின் பட்டியலில் இடம்பெற்றவர்கள், சபையிலும் முக்கிப் பொறுப்பினை வகிக்கத் தேடுகின்றனர். ஐசுவரியவான்கள் என்ற போர்வையில் இயேசுவை அறியாமல் சபைகளில் ஆட்சியைப் பிடித்திருக்கும் இவர்கள் பிலாத்துக்களே. 'சபை ஜனங்கள் சபையை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்' என்று அவர்கள் சொல்லுமளவிற்கு, தவறான தெரிந்தெடுத்தலும், சகோதர விரோதமும் சபைகளுக்குள்ளும், ஊழியங்களுக்குள்ளும், விசுவாசிகள் என்று அழைக்கப்படுவோருக்குள்ளும் பெருகிக்கிடக்கின்றன. கிறிஸ்துவை அறிந்த நாம் சபைகளில், ஸ்தாபனங்களில், ஊழியங்களில் எச்சரிக்கையோடு வாழக் கற்றுக்கொள்ளுவோம். இல்லையெனில், கிறிஸ்தவத்தை சிலுவையில் அறைவதற்கு நாமே காரணமாகிவிடுவோம்.


இரண்டாவதாக, பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். (யோவா 18:31)
நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் என்ற ஆலோசனை பிலாத்துவினிடத்திலிருந்து பிறந்தபோதிலும், யூதர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிலாத்து இயேசுவை மரணத்திற்குள்ளாகத் தீர்க்கவேண்டும் என்ற வைராக்கியத்துடன் யூதர்கள் கூச்சலிட்டனர். கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே உண்டாகும் சிற்சில பிரச்சினைகளையும், தவறுகளையும் எப்படித் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்ற சத்தியங்கள் அடங்கிய பரிசுத்த வேதாகமத்தையே நாம் நமது கைகளில் வைத்திருக்கின்றோம். என்றாலும், அதன்படி நியாயம் தீர்க்க கிறிஸ்தவர்கள் பலர் விரும்புவதில்லை. பிலாத்துவின் தீர்ப்பையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கணவனும், மனைவியும் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார் (மத் 19:6) என்ற சத்தியத்தை வேதத்தில் கொண்டிருந்தபோதிலும், விவாகரத்து என்ற பிலாத்துவின் தீர்ப்பையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர் பலர்ளூ இவர்களால் இயேசு சிலுவையில் அடிக்கப்படுகின்றாரே.
இயேசு சிலுவையில் அடிக்கப்படும் நாளில், முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள் (லூக் 23:12). ஆம், இன்றும்இத்தகைய நிலை நம்மிடத்தில் காணப்படவில்லையோ. சகோதரனை வீழ்த்தும்படியாக, பழிவாங்கும்படியாக எதிரியின் மடியில் படுத்துக்கொள்ளும் மனிதர்கள் எத்தனை பேர். நாம் பகைவர்களின் பெலத்தையே பெருகப்பண்ணுகின்றோம். எதிரியின் ஆணைக்குக் காத்திருந்து, கர்த்தரின் கட்டளைகளுக்கு நாம் கை கழுவிவிடுகிறோமே. நம் கரங்களில் உள்ள வேத வசனத்திற்கு நாம் விலகி வாழ்வோமென்றால், நாமும் நீதியை எதிரியினிடத்திலிருந்தே எதிர்பார்க்கிறவர்களாக மாறிவிடுவோம். நான் யூதனா? (யோவான் 18:35) என்றும், 'சத்தியமாவது என்ன' (யோவான் 18:38) என்றும் இயேசுவினிடத்தில் கேட்டவன் பிலாத்து, ஆனால், யூதர்களோ சத்தியத்தை அறியாத அந்தப் பிலாத்துவினிடத்திலிருந்துதான் நியாயங்கேட்டு வந்திருந்தனர்ளூ எத்தனை கேவலமான நிலை.


மூன்றாவதாக, பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.(யோவா 19:6)
இயேசு குற்றமற்றவர் என்றும், நீதிமான் என்றும் பிலாத்து கண்டபோதிலும், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைத் தப்புவிக்காமல், நீங்களே சிலுவையில் அறையுங்கள், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் (மத். 27:24) என்று கூச்சலிடுவோரின் கையில் இயேசுவை ஒப்புக்கொடுத்தான். சத்துரு செய்யும் தந்திரத்தின் உச்ச நிலை இது. 'சிலுவையில் அறையுங்கள்' என்று தீர்ப்பு செய்தான் பிலாத்து, ஆனால், அதனை 'நீங்களே செய்துகொள்ளுங்கள்' என்று யூதர்களையே அதற்குக் காரணமாக மாற்றிவிட்டான். நம்மை நாமே அழித்துக்கொள்ளும் நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுவது. இயேசுவை அறியாதவரிடத்தில் நியாயத்திற்காகப் போராடினால் இப்படிப்பட்ட நிலையே நமக்கும் உண்டாகும். 'உங்களை நீங்களே அழித்துக்கொள்ஞங்கள்' என்ற எதிரியின் ஆணையைப் பெற்ற பலர் இன்றும் சகோதரர்களுக்கு விரோதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று யூதர்கள் சத்தமிட்டுக்கொண்டிருநதபோது, பிலாத்து பிரதியுத்திரமாக: 'உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா' என்று அவர்களையே அறையும்படித் தூண்டிவிட்டான். இயேசுவை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்திலேயே ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள் (யோவா 19:16). எத்தனை பரிதாபமான நிலை. இயேசு யார் என்றும், சத்தியத்தை அறியாமலும் இருக்கும் மனிதனிடத்திலிருந்து பிறக்கும் நியாயம், உங்களை நீங்களே அழித்துக்கொள்ளுங்கள் என்பதாகத்தான் இருக்கும்.