சொன்னதைச் செய்துவிட்டீர்களா?

 

நம்முடைய தேவனின் குணத்தை, வேதத்தின் வாயிலாக நாம் அறிந்திருக்கிறோம்; அவர் சொன்னதைச் செய்கிற தேவன். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி. 28:15) என்று யாக்கோபுக்கு தேவன் வாக்கு கொடுத்தார். யாக்கோபின் வாழ்க்கையில் அவரே உடனிருந்து அந்த வாக்கினை நிறைவேற்றவும் செய்தார். அண்டசராசரத்தையும், அதில் அடங்கியிருக்கும் நாம் வாழும் முழு உலகத்தையும் படைத்து இப்பிரபஞ்சத்தின் பிரபுவாயிருக்கிற அவர் ஒரு மனிதனுக்குக் கொடுத்த வாக்கினை மறந்துபோகிறவரல்லவே; எத்தனை அற்புதமான தெய்வம் அவர். அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன் (ஏசா 46:11) என்று, அவரின் மேல் நாம் நம்பிக்கை கொள்ளும்படியான வலுவாக அறிக்கையிடுகிறார் கர்த்தர். சாலமோன் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை (1இராஜா. 8:56) என்று சொல்லுகின்றான். பலவிதமாக நாம் தேவனால் புடமிடப்பட்டாலும், தேவன் நமக்குச் சொன்ன வார்த்தை, வாக்குத்தத்தங்கள், தரிசனங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பதை நினைப்பூட்டும்படியாகவே சங்கீதக்காரனும் பாடுகின்றான் (சங். 105:19). பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? (எண்; 23:19) என்று நமது பிதாவின் குணத்தை பிலேயாம் தீர்க்கதரிசி உரக்க உரைத்தான். மேலும், ஆபிரகாமின் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டு, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர் (நெகே. 9:8) என்று லேவியர்கள் சொன்னார்களே.

தேவன் சொன்னதைச் செய்துவிட்டோமா?
ஆலயத்திற்குச் செல்லும்போதும், அனுதினம் வேதத்தை தியானிக்கும்போதும் தேவன் நம்மோடு பேசும் காரியங்கள் பல உண்டு. உயிரோடு இருக்கும் நாட்களில் இந்த உலகத்தில் நாம் செய்யவேண்டியவைகளை செய்யும்படியாக ஒவ்வொரு நாளும் அவர் பேசும் வார்த்தைகளை அறிந்து நடக்கும் உணர்வுள்ள இருதயம் நமக்கு வேண்டும். தேவன் சொன்னதைக் கவனிக்கத் தவறிவிட்டால், தேவன் சொன்னவைகளை செய்யாமற்போய்விட்டால், நாம் தவறி வாழ்வோமென்றால், வாழ்க்கையின் ஓட்டத்தின் இறுதியில், நமது வாழ்க்கைக்காக வைத்திருந்தவைகளை நாம் கோட்டைவிட்டுவிடுவோம். 'இன்று அவர் என்ன சொல்கிறார்?' என்பதை நின்று கேட்கவேண்டும், அவர் பேசிக்கொண்டேயிருக்க நாம் ஓடிக்கொண்டேயிருக்கக்கூடாது. நாம் ஒரு நபரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த நபர் நமது பேச்சைக் கவனிக்காமல், நடந்து சென்றுகொண்டிருந்தால், நமக்கு எத்தனை கோபம் வரும்? நான் பேசிக்கொண்டேயிருக்கிறேன், அவரென்ன? போய்க்கொண்டேயிருக்கிறார் என்று அவரைக் குறித்து நமது மனம் தாங்கலடைந்துவிடும். அப்படித்தான் சிலவேளைகளில் தேவனுக்கும் நமக்கும் இடையிலான சந்திப்பின்போது நாம் நடந்துகொள்கிறோம். காலையில் ஏதோ ஒரு அதிகாரம் வேதத்தில் வாசிக்கவேண்டும் என்ற நிர்ணயத்துடன் வேதத்தைக் கையிலெடுத்து, வாசிக்கத் தொடங்குகிறோம்; தேவன் நம்மோடு பேசிக்கொண்டேயிருக்கும்போதும், பேசியது போதும் என்று காட்டுவதைப் போன்று, நாம் நினைத்த அதிகாரத்தை வாசித்து முடித்தவுடன் வேதத்தை மூடிவைத்துவிடுகின்றோம். நாம் வாசிக்கும் வசனத்திற்கு ஒத்ததாக அங்கும் இங்கும் சம்பவங்களை தேவன் வெளிக்காட்டி விளக்கி வேத தியானத்தை ஒரு பிரசங்கமாக மாற்றுவதற்கு முன்னதாக, அறையை விட்டு வெளியேறிவிடுகின்றோம். இதனால், தேவன் சொல்வதைக் கூட கேட்கும் சந்தர்ப்பம் பலருக்குக் கிடைப்பதில்லை. ஆலயத்தில் பிரசங்கம் நடந்துகொண்டிருக்கும்போது, எழுந்து சென்றுவிடுவதும், தாமதமாக ஆலயத்திற்கு வருவதும் இந்த வகையிலேயே அடங்கும். 'ஒரு அதிகாரம்' 'இரண்டு அதிகாரம்' 'ஒரு மணிநேரம்' 'இரண்டு மணிநேரம்' என்று வரையறைக்குள் தேவனுடைய சந்திப்பை வைக்க முற்படவேண்டாம். அவர் சந்தோஷமாயிருக்கவேண்டுமென்றால், அவரது சந்திப்பு முடியும்வரை நீங்கள் காத்திருங்கள். அவ்வாறு கர்த்தருக்குக் கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசா 40:31). இப்படி, சந்திப்பின்போது காத்திருக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா? அல்லது அவசரப்பட்டு எழுந்து ஓடுகின்றோமா? பெலனடையவேண்டுமென்றால், அவர் பேசிமுடியும்வரை காத்திருங்கள்.

ஓர் கூட்டம் கடைமுறைக்காக கர்த்தரோடு ஓடிக்கொண்டிருக்க, ஒரு கூட்டத்தினரோ, கர்த்தரின் சத்தத்தை தெளிவாகக் கேட்டுக்கொண்டேயிருக்கின்றனர். எத்தனை பெரிய பூமி அதிர்ச்சியைப் போன்ற காரியங்களோ, அக்கினியைப் போன்ற நிகழ்வுகளோ நிகழ்ந்துகொண்டிருந்தாலும், அவைகள் எல்லாவற்றையும் கண்டு பூலோகம் பயந்து பூரித்துப்போயிருக்கும் நேரத்தில், அவைகள் அத்தனைக்குப் பின்னும் அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்கும் கூட்டம் உண்டு (1இராஜா. 19:12). இந்த உலகத்தின் நிகழ்வுகளுக்குப் பின்னால், தொனிக்கும் தேவ சத்தம் உண்டு. இன்றைய நாட்களில், இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும், விஞ்ஞானிகளின் ஞானத்தினால் வானத்தில் நாம் காணும் காரியங்களையும் உற்று நோக்குங்கால், அவை எல்லாவற்றிற்குப் பின்னால், தேவன் நம்மோடு பேசுகிற அவைகளுக்கான காரணங்களைக் குறித்த மெல்லிய சத்தத்தை நாம் கேட்க முடியும். இவையெல்லாம் ஏன் நடக்கிறது? வானிலே இவைகள் ஏன் நிகழுகின்றது? என்றெல்லாம் உலகத்தார் கலங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கர்த்தரின் சத்தத்தைக் கேட்டால் நமது கண்கள் திறக்கப்படும். இப்படி தேவ சத்தத்தைக் கேட்கும் நாம், ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒரு காரியம், 'தேவன் சொன்னபடி நாம் செய்துகொண்டிருக்கிறோமா?' என்பதுதான்.

தனிப்பட்ட, குடும்ப, அலுவலக, ஊழிய மற்றும் அன்றாட அனுதின வாழ்க்கையின் காரியங்களில் தேவன் சொன்னவைகளுக்கொப்பவும், இயேசுவின் போதனைகளுக்கொப்பவும் நாம் செய்துகொண்டிருக்கிறோமா? நம்முடைய கைகளில் எழுதிக்கொடுக்கப்பட்ட, கடைப்பிடிக்கப்படவேண்டிய காரியங்களை நாம் கடைப்பிடித்திருக்கிறோமா என்ற அனுதின ஆராய்ச்சி நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவை. நமது மனந்திரும்புதல் வரையில் நம்மை நடத்தும் காரியங்களை மாத்திரம் செய்துவிட்டு நின்றுவிடக்கூடாது, மற்றோரை மனந்திரும்புதலுக்குள் நடத்தும்படி இயேசு சொன்ன காரியங்களுக்குள்ளும் நாம் நடந்துசெல்லவேண்டும். ஆசீர்வாதத்தை பெறுபவர்களாக மாத்திரமல்ல, ஆசீர்வாதத்தை மற்றவர்களுக்கும் பகிரும் மக்களாகவும் நாம் மாறவேண்டும்.

'போதகரே நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?' (லூக். 18:18) என்ற கேள்வியோடு வந்தான் தலைவன் ஒருவன். இயேசுவைச் சந்தித்துவிட்டால், தனது கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும் என்று நினைத்தான் அவன்; அவனது எதிர்பார்ப்பு சரியே. எனினும், இயேசுவைச் சந்தித்த பின்னர் அதனைச் சுதந்தரிக்கத் தகுதியற்றவனாக அவன் திரும்பிப்போனான். உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்' (லூக். 18:22) என்றார் இயேசு. என்றாலும், சொன்னதைச் செய்ய அவனால் கூடாமற்போயிற்று. இயேசுவைச் சந்தித்த பின்னரும், தனது வாழ்க்கையின் கேள்விக்கு தீர்வு காண இயலாதவனாகிவிட்டான். அவனது சந்திப்பு வீணே! தேவனிடத்திலிருந்து ஐசுவரியங்களைப் பெற்றுக்கொண்ட பலருக்கு, அதனைப் பகிர்ந்துகொடுக்கத் தெரியவில்லை. பூலோகத்தில் தங்களிடமிருக்கும் பொக்கிஷத்தை பரலோகத்தில் சேர்ப்பது எப்படி என்பது புரியவில்லை. இயேசுவின் வழியாக வந்த ஆசீர்வாதம், தரித்திரரின் வழியாக பரலோகம் செல்லும் வழியை அறிந்துகொள்வதோ கடினமாயிருக்கிறது.

இயேசுவை ஏற்றுக்கொண்ட நான், இப்படியிருக்கவேண்டும், அப்படி வாழவேண்டும், ஆலயத்திற்குச் செல்லவேண்டும், ஆராதனையில் பங்கெடுக்கவேண்டும், ஆண்டவருக்காகக் கொடுக்கவேண்டும் என்பதோடு மாத்திரம் நமது வாழ்க்கையை நிறுத்திக்கொள்ளக்கூடாது. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் (லூக். 18:12) என்று எழுதப்பட்டதை மாத்திரம் நிறைவேற்றிவருகிறேன் என்ற வாழ்க்கை போதுமானது அல்ல. நம்மைக் குறித்த தனிப்பட்ட நோக்கம் தேவனுக்கு உண்டு, நம்மைக் குறித்த தனிப்பட்ட திட்டம் தேவனுக்கு உண்டு; அதனை நாம் அறிந்திருக்கிறோமா? அதைக் குறித்து தேவன் நம்மிடத்தில் சொன்னது என்ன?

இயேசு அவனை நோக்கி: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே (லூக் 18:20) என்று சொன்னபோது, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் (லூக் 18:21) அவன். அவனது பதில், இயேசுவின் கேள்விக்கு ஒருபடி மேலான உத்தரவாகவே இருந்தது. அவ்வளவுதான், அதற்கு மேல் ஒன்றுமில்லை என நினைத்தான் அவன். இயேசுவோ அவனை நோக்கி: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா (லூக் 18:22) என்றார். சந்திப்பின்போதுதான் இந்தக் காரியம் அவனுக்குத் தென்பட்டது.

குஷ்டரோகியாயிருந்த நாகமான், எலிசாவைச் சந்திக்கச் சென்றான்; எலிசா நாகமானை நோக்கி: நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொன்னான் (2இராஜா. 5:10). ஆனால், நாகமானோ கடுங்கோபம் கொண்டான் (வச. 11). எனினும், அவனுடைய ஊழியக்காரரின் வார்த்தைகளுக்கு இணங்கி, யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி அவன் சுத்தமானான் (வச. 14); சொன்னதைச் செய்யாதிருந்தால், வியாதியுள்ளவனாகத்தான் இறுதிவரை வாழ்ந்திருப்பான்.

பிரியமானவர்களே! இந்த உலகத்தில் நாம் வாழும்போது, ஒவ்வொரு நாளும் அவரைச் சந்திக்கும்போது அவர் கற்றுத்தரும் காரியங்களுக்குக் கீழ்ப்படிய நம்மை ஒப்புக்கொடுப்போம். பூமியில் இருக்கும்போது சந்திக்கும் வேளையை தள்ளிவிட்டால், நியாயத்தீர்ப்பின்போது அவரைச் சந்திக்கும் வேளையில் பரிதபிக்கவேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அவரைச் சந்தித்து, குறைகளை நீக்கிக்கொள்ளுங்கள், நித்திய ஜீவனுக்கு வழிகாணுங்கள், பரலோகத்தை விட்டுவிடாதிருங்கள். மருத்துவமனைக்கு செல்லாத வரையில் நமது வியாதி என்ன என்று நம்மால் அறிந்துகொள்ள இயலுமோ?

ஐசுவரியவானின் தன் வியாதிக்கு விலைக்கிரயம் செலுத்த ஆயத்தமாக இல்லை. பெரும்பாடுள்ள ஸ்திரீ தன் ஆஸ்தியை எல்லாம் செலவழித்தது போல, இவன் தனது ஆஸ்தியைக் கொடுத்து நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு ஆயத்தமாக இல்லை. அவன் கண்ணில் இருந்த உத்திரம் அதுதான் (மத். 7:5). தன்னிடமிருந்த நிறைவுகளையே பார்த்துக்கொண்டிருந்த அவனால், தனது வாழ்க்கையில் இருந்த குறைவினை நிவிர்த்தி செய்யமுடியவில்லை. செய்வதையே செய்துகொண்டிருக்கும் பலரால், இயேசு சொன்னதைச் செய்ய முடிவதில்லை. 'தாங்கள் செய்துகொண்டிருப்பது என்ன? தங்களுக்கு சொல்லப்பட்டது என்ன?' என்று தங்கள் வாழ்க்கையை வேறுபிரித்துப் பார்த்து திருத்திக்கொண்டால் மாத்திரமே தேவ திட்டம் நமது வாழ்க்கையில் நிறைவேறும். என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? (லூக் 6:46) என்ற வட்டத்திற்குள் நாம் வாழாதிருப்போம்.

தேவனிடத்தில் சொன்னதைச் செய்துவிடடோமா?
தேவன் நம்மிடத்தில் சொன்ன காரியங்களை எப்படி நமக்குச் செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோமா, அப்படியே, நாம் அவரிடத்தில் ஜெபத்தின்போது சொன்ன காரியங்களையும் செய்யவேண்டும் என்றும் தேவன் எதிர்பார்க்கிறார். அவர் தான் சொன்னதை மாத்திரமல்ல, நாம் சொன்ன காரியங்களையும் அவர் நினைவில் வைத்திருக்கிறவர். தேவனிடத்தில் நாம் சொன்ன காரியங்களை செய்துமுடித்திருக்கிறோமா? என்பதில் கவனம் தேவை. வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில், தேவனோடு ஜெபிக்கும் நேரங்களில், நாம் பேசும் வார்த்தைகளைக் குறித்து நாம் கவனமாயிருக்கவேண்டும். 'உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்' (உபா. 23:23). நமது அர்ப்பணிப்பினை விட்டு நாம் அகன்றுபோகக்கூடாது. என்ன விலைக்கிரயம் செலுத்த நேரிட்டாலும், அதனைச் செய்யவேண்டிய தைரியம் நமக்கு உண்டாகவேண்டும். பல்வேறு காரியங்களை தேவனிடத்தில் சொல்லிவிட்டு, எதுவுமே தெரியாதவர்கள் போல அத்தனையையும் மறந்துவிட்டு வாழும் மனிதர்கள் அநேகர். ஆண்டவரே, எனக்கு குழந்தை கிடைத்தால் இதைச் செய்கிறேன், ஊழியத்திற்குப் போகிறேன், உமக்கு இதைக் கொடுக்கிறேன் என்றெல்லாம் பலவிதமாக பொருத்தனைகளைச் செய்துவிட்டு, அவைகளை நிறைவேற்றாமல் அவரை ஏமாற்றுவதோ, அதற்குப் பிரதிபலனாக வேறெதையோ செய்வதோ, நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அழித்துவிடும். வழியில் இருக்கும்போதே நல்மனம் பொருந்து என்று காணிக்கை விஷயத்தில் இயேசு போதித்தது போல, வாழ்ந்துகொண்டிருக்கும்போது மாத்திரமே நாம் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்ற முடியும்.

ஜெம்ஸ் மிஷனரி ஒருவர் வேதாகமக் கல்வி பயில குடும்பமாகச் சென்றபோது, அவருக்காக ஜெபித்த நான் அவருக்கு ஒரு வேதாகமத்தை அன்பளிப்பாக வழங்குவேன் என்றும் தீர்மானம் எடுத்திருந்தேன். அவர் புறப்பட்டுச் செல்லும் நேரத்தில் அந்த வேதாகமத்தை அவரது கரத்தில் கொடுக்கவேண்டும் என்ற மனம் இருந்தது, ஆனால், அதற்கான பணமோ என்னிடம் இல்லாதிருந்தது. வேதாகமக் கல்லூரியில் இணைந்து, படிப்பினையும் நிறைவு செய்து மீண்டும் ஜெம்ஸ் வந்து சேர்ந்தார் அந்த மிஷனரி. அந்த நேரத்தில், ஒருமுறை ராஞ்சி பட்டணத்திற்குச் சென்றிருந்த நான் அங்கிருந்த கிறிஸ்தவ புத்தக நிலையம் ஒன்றில், னுயமநள டீiடிடந ஒன்றை வாங்கிவந்தேன். வீட்டிற்கு வந்ததும், அந்த வேதாகமத்தை அப்படியே வைத்துவிட்டவனாக, இன்னொரு வேதாகமம் வாங்கினால் அதனை அந்த மிஷனரியிடம் கொடுத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நாளாக, நாளாக அவருக்குக் கொடுக்கவேண்டும் என்ற நினைவே என்னைவிட்டு அகன்றுபோனது; எனினும், வேதாகமம் வீட்டில்தான் இருந்தது. நாட்கள் கடந்தோடி பல வருடங்களைத் தாண்டியது. 'சொன்னதைச் செய்துவிட்டீர்களா?' என்ற இந்தச் செய்தியை நான் எழுதத் தொடங்கினேன். அப்போது, அலுவலகப் பணியின் நிமித்தமாக தற்செயலாக அந்த மிஷனரியின் இல்லத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோதிலும், வீட்டில் இருக்கும் அவருக்கென்று வாங்கப்பட்ட வேதாகமம் மீண்டும் என் நினைவில் வந்தது. அதிலிருந்து விடுபடுபடாமல் இச்செய்தியினை எழுதி முடிப்பது முடியாதது என்பதை உணர்ந்த நான். இன்று காலை (18 நவம்பர் 2014), அந்த வேதாகமத்தை எடுத்துக்கொண்டவனாக அவரது இல்லத்தைத் தேடிச் சென்று அவரிடத்தில் அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவரது வேதத்தை இத்தனை ஆண்டுகள் எனது வீட்டில் வைத்திருந்ததினால், வேதாகமத்தின் அட்டைகளில் உண்டான சிறு சிறு கிழிசல்களைக் காணும்போது எனது கண்களுக்கு கஷ்டமாயிருந்தது. எனினும், வேறு வழியின்றி, அதை அவரது கரத்தில் கொடுத்துவிட்டு சந்தோஷமாக வீடு திரும்பினேன். அவரிடம் நான் சொல்லாதிருந்தாலும், தேவனிடமோ நான் சொல்லியிருந்த அக்காரியத்தை நிறைவேற்றித் தீர கர்த்தர் உதவி செய்தார்.

என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை உன் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும் (யோபு 33:3) என்று சொல்லுகிறான் யோபு. நம்முடைய வார்த்தைகள் வீணாகிவிடக்கூடாது, வீணான வார்த்தைகளை நாம் பேசிவிடவும் கூடாது; இதுவே தேவன் தன்னுடைய பிள்ளைகளைக் குறித்து வைத்திருக்கிற விருப்பம்.

அன்னாள் சாமுவேலைப் பெற்றெடுத்த பின்னர், தான் செய்துகொண்ட பொருத்தனையின் நிமித்தம், தனது கணவனை நோக்கி: பிள்ளை பால்மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று சொன்னாள் (1சாமு. 1:22). அப்படியே, அவள் பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள் (1சாமு. 1:25). குழந்தையை விட்டு தாய் பிரிந்திருப்பது எத்தனை கடினமான காரியம் என்பது நமக்குத் தெரியும். என்றாலும், கர்த்தருக்காக அந்தப் பிரிவை தாங்கிக்கொண்டு, தனது வார்த்தையை, பொருத்தனையை நிறைவேற்றினாள். அவள் பொருத்தனையை நிறைவேற்றியதினாலேயே அவன் தீர்க்கதரிசியானான். எனக்கு அருமையான பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளைக் குறித்து நீங்கள் சொன்ன பொருத்தனைகளை நிறைவேற்றியிருக்கிறீர்களா? குழந்தை பிறந்தபோது, அல்லது வளரும்போது, தேவனிடத்தில் உங்கள் பிள்ளையைக் குறித்து பேசிய வார்த்தைகளை நிறைவேற்றியிருக்கிறீர்களா? அப்படிச் செய்தால் மாத்திரமே சாமுவேலோடு இருந்த தேவன் உங்கள் பிள்ளைகளோடும் கூட இருப்பார். ஊழியத்திற்கு அவனை அனுப்புவேன் என்று சொல்லிவிட்டு, மருத்துவராகவோ, எஞ்சினியராகவோ கனவு கண்டுகொண்டிருக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கண்ணியானவர்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது கணக்கில் உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம்.

அதுமாத்திரமல்ல, மனுஷர்களுக்கு நாம் போதிப்பதையும் நாம் கடைப்பிடித்திருக்கவேண்டும், எனவே, இயேசு அக்காலத்தின் போதகர்களைக் குறித்து, நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் (மத் 23:3) என்று ஜனங்களிடம் சொன்னார். பிரசங்கிப்பது எளிது, வேதத்தை அறிவிப்பதும் எளிதே, ஆனால், அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாவிடில், நாம் செய்வது அத்தனையும் வீணாகிவிடும். நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக (லேவி. 11:45) என்று நம்மை பரிசுத்தமாயிருக்கும்படி சொல்கிற தேவன் தானும் பரிசுத்தமாயிருக்கிறார். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் (யோவான் 13:34) என்று சொல்கிற தேவன் அன்பாயிருக்கிறார்.

இயேசுவைச் சந்தித்திருக்கும் சகோதரர்களே, சகோதரிகளே, அவர் செய்யச் சொன்னதைச் செய்துவிட்டீர்களா? அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் (யோவான் 2:5). அப்பொழுதுதான், நாம் அவரைத் தேடியதின் பலனைப் பரிபூரணமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அவர் சொல்வதைச் செய்யாமல், தொடர்ந்து அவரைச் சந்தித்துக்கொண்டிருப்பதினால் என்ன பயன்?