முரண்பாடுகள்

 

தேவனுடைய விருப்பத்திற்கு விரோதமாக நம்முடைய வாழ்க்கையின் செயல்கள் காணப்படுமாயின், அது நம்முடைய வீழ்ச்சிக்கு அடையாளம் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். எச்சமயத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என்று தேவன் நமது காலத்தின் கிரியைகளை முன்குறித்திருக்கின்றாரோ, அதனை அறியாமல், அதற்கு முன்னுரிமை தராமல், தேவ திட்டங்களையும், நோக்கங்களையும் தவிர்த்து தடம்புரண்டு முரண்பாடான ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிடக்கூடாது. எதற்காக தேவன் என்னை அழைத்தார்? எதற்காக முன் குறித்தார்? என்னிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது என்ன? அவருக்காக நான் என்ன செய்யவேண்டும்? என்னுடைய இலக்கு என்ன? போன்ற கேள்விகளுக்கு சரியான, தெளிவான பதிலை அறியாமல், எதையோ, ஏதேதோ செய்துகொண்டு, காலத்தினை நாம் கடத்திக்கொண்டிருக்கக்கூடாது. தேவன் நேரடியாக நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை, உடனடியாக செய்யக் கற்றுக்கொள்வோம், காலதாமதம் நம் கால்களைத் திசை திருப்பி, தவறான பாதைக்கு நம்மைக் கொண்டுசென்றுவிடும்.


கெத்சமெனே தோட்டத்திற்கு இயேசு சீஷர்களை அழைத்துக்கொண்டு ஜெபிக்கச் சென்றார் (மத். 26:36). அப்பொழுது, பேதுரு மற்றும் செபதேயுவின் குமாரர்கள் இருவரையும் தாம் துக்கமடையும் இடத்திற்கும், வியாகுலப்பட்டு ஜெபிக்கும் இடத்திற்கும் அழைத்துச் சென்றார் (மத். 26:37). என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொன்னார் (மத். 26:38). தனக்கு முன்னே வைக்கப்பட்டிருக்கும் பாடுகளுக்காக, பிதாவை நோக்கி இயேசு வேண்டிக்கொள்ளும் வேளை அது. என் சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இயேசு பிதாவின் சித்தத்திற்குத் தன்னைத் தத்தம் செய்தவராக ஜெபித்துக்கொண்டிருந்தார் (மத். 26:39). தன்னோடு கூட ஜெபத்தில் தரித்திருக்கவே சீஷர்களை கெத்சமெனேக்கு இயேசு அழைத்துச் சென்றிருந்தார். பாடுகளைச் சந்திக்க இருக்கும் இயேசுவுக்குத் தூக்கம் வருமோ? ஆனால், இயேசுவின் பாடுகளை பார்வையாளர்களாகப் பார்க்கவிருந்த சீஷர்களோ கெத்சமெனேயில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இயேசு பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத் 26:40) என்று கேட்டார். ஜெபித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் தூங்கிக்கொண்டிருக்கும் முரண்பாடு பேதுருவினிடத்திலும் மற்ற இரு சீஷர்களிடத்திலும் காணப்பட்டது. ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்று (மத் 26:41) மாம்சத்தின் பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துவிட்டதை இயேசு சுட்டிக்காட்டினார்.


ஆலயத்தில் இருக்கவேண்டிய நேரங்களில், நாம் வீட்டிலிருக்கின்றோமா? ஆராதனையில் பங்கேற்கவேண்டிய நேரத்தில் நாம் அந்நிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா? ஒருமணி நேர ஆலய ஆராதனை இன்று பலருக்கு கடினமான ஒன்றாக மாறிவிட்டது, ஆராதனையிலேயே தூங்கும் அளவிக்கும் சிலரது மாம்சம் அவர்களை மேற்கொண்டுவிட்டது. கிறிஸ்துவுடனே கூட இருப்பதினாலேயே நாம் கிறிஸ்தவர்கள் என்று அமழைக்கப்படுகின்றோம். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோ 3:2). தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான் (நீதி 27:8). இயேசுவுக்கென்று நாம் நம்மை அர்ப்பணித்திருந்தால், அவர் நம்மை வைத்திருக்கும் ஸ்தானத்தை அடையாளம் கண்டுகொண்வோம். தன்னுடன் நம்மை அழைத்துச் செல்வதின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவோம். இல்லையெனில், அவர் எதையோ செய்துகொண்டிருக்க, நாம் எதையோ செய்துகொண்டிருப்போம். ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, மாணவன் வேறெதையோ கவனித்துக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிரே நிற்பவர் அவரது பேச்சைக் கவனிக்காமல், வேறெங்கோ கவனத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? இப்படியே முன் நிற்பவரைப் புரிந்துகொள்ளாமல், முரண்பட்ட வாழ்க்கையாக நம்முடைய வாழ்க்கை மாறிவிடும்.


குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.(யோவா 18:18)
கெத்சமெனேயில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தபோது, பேதுரு தூங்கிக்கொண்டிருந்தான். தொடர்ந்து, இயேசு பாடுபட்டுக்கொண்டிருந்தபோது, பேதுருவோ குளிர்காய்ந்துகொண்டிருந்தான். இயேசுவின் உடல் வாரினால் அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, பேதுருவின் உடலோ சுகத்தை விரும்பியது. எத்தனை முரண்பாடான செய்கை. இயேசு போதித்த போதனைகளும் இதனையே நமக்கு விளக்குகின்றது. ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான் (லூக் 14:16-20). இவர்கள் விருந்து வீட்டில் இருப்பதை விட்டுவிட்டு, சாக்குப்போக்குகளைச் சொல்லி முரண்பட்டவர்களாய் வீட்டிலேயே அமர்ந்துகொண்டவர்கள். இன்றும், அழைப்பைப் பெற்றவர்கள் பலரின் நிலை இதுவே. பல்வேறு காரணங்கள், சூழ்நிலைகளை முன் நிறுத்தி தேவனின் அழைப்பை பின்னுக்குத் தள்ளிவிடுகின்றனர். தங்கள் வாழ்க்கையில் முரண்பாடாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டிய காலத்தில் சுகமாக வாழ்வதைத் தெரிந்கொண்டால், பேதுரு குளிர்காய்ந்துகொண்டிருந்தது போலவே நாமும் காணப்படுவோம்.


இயேசு மரணத்தை நெருங்கிக்கொண்டிருந்தார், ஆனால், பேதுருவோ 'அவனை அறியேன்' என்று மறுதலித்துக்கொண்டிருந்தான்
(லூக் 22:57). நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் (மத் 26:35) என்ற பேதுருவின் வாழ்க்கை முரண்பட்டு முடங்கிவிட்டது. கிறிஸ்துவினிமித்தம் பாடுகளைச் சகிக்கும் நேரம் நமது வாழ்க்கையில் நெருங்கும்போது, நமது நிலை என்ன? பாடுகளைக் கண்டு பதுங்கிக்கொள்ள நினைக்கின்றோமா? யாராவது பாடுபடட்டும் நாம் ஒதுங்கிக்கொள்வோம் என்ற எண்ணம் கொண்டவர்களா? பாடுபடும் மற்றவர்களுடன் நம்மை அடையாளம் காட்ட அஞ்சுகிறோமா? அவர்களுடைய ஊழியத்திற்கும், அந்த ஊழியருக்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று அடுத்தவரைச் சிக்கவைத்து, நாம் தப்பித்துக்கொள்ள எத்தனிக்கின்றோமா? எச்சரிக்கையாயிருப்போம். நாம் மரணத்தைச் சந்திக்கும் வேளையில், மறுதலித்து தப்பிப் பிழைப்பதில் பிரயோஜனம் இல்லை. மரணம் நம்மை நெருங்கும்போது, மறுதலித்து மாற்றுப் பாதையினைத் தேடாதிருப்போம். நாம் கிறிஸ்துவுக்காக மரிக்கும் நிலை உருவானால், நமது பெயர் இரத்தசாட்சிகளின் பட்டியலில் எழுதப்படும்.