வேலியும், போலியும்

 

'வேலியும், போலியும்' என்ற இச்செய்தி, தேவ எல்லைக்குள்ளேயே உங்களை வைத்துக்கொள்ள உதவியாயிருக்கும் என நம்புகிறேன். தேவப் பிள்ளைகளாகிய நாம், தேவன் நமக்கு வரையறுத்த எல்லையை விட்டுத் தாண்டிச் சென்றுவிடக்கூடாது, அதே நேரத்தில், எல்லையினை விட்டுத் தாண்டிப் போகும்படி தேவன் அனுமதித்த இடங்களுக்கும் நாம் போகாமல்; இருந்துவிடக்கூடாது. என்ன? இவ்விரண்டு வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தென்பட்டாலும், சத்தியத்தை நாம் அறிந்துகொள்வோமென்றால், இவைகளில் முரண்பாடில்லை என்பது நமக்கு விளங்கும். சாலமோனின் ஓர் ஆலோசனை நமக்கு இதனை விளக்கப் போதுமானது. மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய் என்றும், மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான் (நீதி 26:5) என்றும் சாலமோன் எழுதியனின் அர்த்தம் என்ன? மதியீனமாய் பேசுவதைப் போல நாமும் மதியீனமாய் பேசக்கூடாது; ஆனால், அவன் மதியீனத்தை உணர்த்தும்படியாக ஞானமாய் பேசவேண்டும் என்பதே. எப்படி பேசக்கூடாது என்பதையும், எப்படி பேசவேண்டும் என்பதையும் நாம் அறிந்திருந்தால் மாத்திரமே தேவன் விரும்பும் வண்ணம் நமது வார்த்தைகள் அமையும். அப்படியே, எல்லைக்கடுத்த காரியங்களையும் நாம் புரிந்தவர்களாகச் செயல்படவேண்டும் என்றே தேவன் விரும்புகின்றார்.

வேலியைத் தாண்ட நினைத்த ரெகொபெயாம் : சாலமோன் ராஜாவின் நாட்களுக்குப் பின், இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சாலமோனின் குமாரனான ரெகொபெயாமின் கையில் ராஜ்யம் முழுமையாக வந்துசேர்ந்தபோதிலும், தீர்க்கதரிசியாகிய அகியாவைக் கொண்டு கர்த்தர் உரைத்திருந்தபடியே, 'யூதா' என்றும் ஒரே ஒரு கோத்திரத்தார் மட்டுமே ரெகொபெயாமுடன் இருந்தனர்; பிற இஸ்ரவேலர் அவனை விட்டுப் பிரிந்து சென்று யெரொபெயாமை தங்களுக்கு ராஜாவாக்கிக்கொண்டனர்; இது தேவன் உரைத்தபடியே நடந்தேறிய ஒன்று.

ராஜ்யத்தை இரண்டாக கர்த்தர் பிரித்துக்கொடுத்தபோதிலும், பிரித்துக் கொடுத்த கர்த்தரைப் புரிந்துகொள்ளவோ இரண்டு ராஜாக்களுக்கும் நேரம் பிடித்தது. சாலமோனின் குமாரனான ரெகொபெயாம், பிரிந்துபோன இஸ்ரவேலரை மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையோடு இருந்தான். எகிப்திலிருந்து விடுதலையாகிச் சென்ற இஸ்ரவேல் மக்களை, தொடர்ந்து சென்று பிடித்து, மீண்டும் தன்னுடைய எகிப்தின் ராஜ்யத்தில் அடிமைகளாக வைத்துக்கொள்ளவேண்டுமென்று பார்வோன் பின்தொடர்ந்ததுபோல, ரெகொபெயாமும் பிரிந்துபோன இஸ்ரவேலரை பின் தொடர புறப்பட்டான். தனது புத்தியீனத்தினால், தவறவிட்ட இஸ்ரவேலரை யுத்தத்தினால் மீட்டுக்கொள்ள ஆசைப்பட்டான். யூதா கோத்திரம் மாத்திரமே இனி தனக்கு, என்பதில் அப்போது அவன் திருப்தியாயிருக்கவில்லை. இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான் ரெகொபெயாம் (1இரா 12:21). ஆனால், கர்த்தரோ சேமாயா தீர்க்கதரிசியின் மூலமாக செய்தி அனுப்பி அவனைத் தடுத்தார். 'நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது' என்று கர்த்தர் சொன்னபோது, கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள் (1இராஜா. 12:24). சகோதரர்களுக்கு விரோதமாக சகோதரர்கள் யுத்தம் செய்யாமலும், தன்னுடைய ஜனங்களை ஆளும் இரண்டு இராஜாக்களும் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளாமலும் இருக்கும்படி தேவன் தடுத்து நிறுத்தினார்.

அடுத்த வேலிக்குள் இருக்கும் ஆத்துமாக்களை வசப்படுத்தி, தங்கள் வேலிக்குள் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்துடன் அநேகர் தங்கள் வேலியை விட்டு வெளியே செல்கின்றனர்; அதற்காக பல போராட்டங்களையும் (கூட்டங்களை) நடத்துகின்றனர். அவர்களது அந்த தவறான விருப்பம், தேவனுக்கு வெறுப்பானதே. எனினும், காணாமல்போனவர்களை, பாவத்தில் சிக்கிக்கிடக்கிறவர்களை, இரட்சிக்கப்படாதவர்களை சந்திப்பதற்காக, ஆண்டவருக்காக அந்த ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்காக வேலியை விட்டு வெளியே போவோரின் எண்ணிக்கை சொற்பமே. 'நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு, கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்' (ரோமர் 15:21) என்கிறார் பவுல். பவுல் தனது வேலியிலிருந்து வெளியே எதற்காக செல்கிறார்? என்பதையும், எங்கு செல்கிறார்? என்பதையும் இந்த வார்த்தைகள் நமக்கு தெளிவாக்குகிறதே. தற்காலத்தில், 'ஆவிக்குரிய சபைகள்' என்ற பெயரிலும், பல்வேறு தனித்துவங்களைக் கொண்ட சபைகள் என்ற பெயரிலும் தங்களைப் பிரித்துக் காட்டி, மற்ற சபைகளிலிருந்து ஆத்துமாக்களை பிரிக்கும் நோக்குடன் தங்கள் வலைகளை உயர்த்திப்பிடிக்கும் கூட்டத்தினரும் உண்டு.

வேலியைத் தாண்டவிடாத யெரொபெயாம் : ரெகொபெயாம், தன்னிடத்திலிருந்து பிரிந்துபோனவர்களை மீண்டும் கொண்டுவர விரும்பினான்; ஆனால், யெரொபெயாமோ தன்னிடத்தில் இருக்கிறவர்களை இழந்துவிடக்கூடாது என்று பயந்துகொண்டிருந்தான்; தன்னுடைய ஆதிக்கத்துக்குட்பட்ட ஜனங்களை ரெகொபெயமுக்குப் பறிகொடுத்துவிடக்கூடாது என்று பயந்தான். ராஜ்யங்கள் பிரிக்கப்பட்டபோதிலும், யெரொபெயாமின் ஆட்சிக்குட்பட்ட ஜனங்கள் ரெகொபெயமின் ஆட்சிக்குட்பட்ட எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலேயே பலிகளைச் செலுத்தச் சென்றுகொண்டிருந்தார்கள் (1இராஜா. 12:27). இதனால், தன்னுடைய ஜனங்களை இழந்துவிடுவோமோ என்றும், தன்னுடைய ஜனங்கள் ரெகொபெயாமின் வசமாய்த் திரும்பிவிடுவார்களோ என்றும் பயப்படத்தொடங்கினான் யெரொபெயம். ஜனங்கள் (எருசலேமிலுள்ள) கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய்விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான் யெரொபெயாம் (1 இராஜா. 12:27). தனது வசமாய் இஸ்ரவேலர் இருந்தபோதிலும், 'அவர்கள் தங்கள் ஆண்டவன் (ரெகொபெயாம்) வசமாய் திரும்பி' என்று, இன்னும் அவர்களது ஆண்டவன் ரெகொபெயாமே என்பதைப் போல பயந்து பேசுகிறான் யெரொபெயாம். ரெகொபெயாமாகிய தங்கள் ஆண்டவனிடமிருந்து பிரிந்து வந்து யெரொபெயாமாகிய தன்னை ஆண்டவனாக ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலரின் மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லாதிருந்தது. அரசனாக இருக்கவேண்டுமென்றால், அவர்களை அடைத்துவைக்கவேண்டும் என்று எண்ணினான். அவர்கள் வேலியைத் தாண்டிச் சென்றால், தனது தேசமும், பதவியும் காலியாகிவிடும் என்று அச்சப்பட்டான் யெரொபெயாம்.

ராஜ்யத்தை கர்த்தர் பிரித்துக்கொடுத்திருந்தார் கர்த்தர்; ஆனால், தேவாலயமோ ஒன்றாகவே இருந்தது. ரெகொபெயாமை விட்டு இஸ்ரவேலர்கள் பிரிந்து சென்றிருந்தாலும், தேவனைத் தேடியும், தேவாலயத்திற்காகவும், அதில் நடைபெறும் பண்டிகைகளுக்காகவும் எருசலேமையே தேடிச் சென்றுகொண்டிருந்தனர். யெரொபெயாமின் ஆட்சிக்குட்பட்ட ஜனங்கள், ரெகொபெயாமை விட்டுப் பிரிந்து வந்தபோது, 'தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்' என்று சொன்னவர்களாக பிரிந்துவந்தனர் (1இராஜா. 12:17). எனினும், தேவாலயத்திற்காக எருசலேம் செல்லவேண்டிய நிலை அவர்களுக்கு உண்டாயிருந்தது. தேவாலயத்திற்காக மாத்திரம் அவர்கள் எருசலேம் சென்றுவந்துகொண்டிருந்தபோது, பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்தித்திருக்கலாம். யூதா கோத்திரத்தினர் அவர்களை ஏளமாகப் பேசியிருக்கலாம், தேவாலயத்திற்கு வரும் அவர்களை சரியாக உபசரியாமலிருந்திருக்கலாம், அந்நியரைப் போல அவர்களை நடத்தியிருக்கலாம். எனவே, யெரொபெயாமின் ஆட்சிக்குட்பட்டிருந்த ஜனங்கள், ரெகொபெயாமின் ஆட்சிக்குட்பட்ட ஜனங்களால் பல்வேறு சங்கோஷத்துக்குட்பட்டிருக்கலாம். ஏலியின் நாட்களில் அவனது குமாரர்களின் அட்டகாசத்தினால், பாவத்தினால், தேவாலயத்திற்குச் சென்றுவந்த மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாக எண்ணியதுபோல (1சாமு. 2:17), இஸ்ரவேல் ஜனங்கள், யூதா கோத்திரத்தாரால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்றாலும், எத்தனை துன்பங்களின் மத்தியிலும், தேவனைத் தேடியும், தேவாலயத்திற்கும் விடாமல் சென்றுகொண்டிருந்தார்கள் அவர்கள்.

ஒருபுறம், யெரொபெயாமின் பயம், மற்றொருபுறம் ஜனங்களின் நிலை இவ்விரண்டையும் சாதகமாக்கிக்கொண்ட யெரொபெயாம் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள் (1இரா 12:28-30)

ஜனங்களுக்கு சாதகமாக, ஜனங்களுக்கு ஆதரவாக, ஜனங்களுடைய நலனில் அக்கரைகொண்டவனாகவே இந்தக் காரியத்தைச் செய்வதைப்போன்ற வார்த்தைகளைச் ஜனங்களிடத்தில் சொன்னான் யெரொபெயாம். ஆனால், உள்ளத்திலோ அவனுக்குள் இருந்த பயமே அவனை அப்படிச் செய்யவைத்தது. ஜனங்கள் ரெகொபெயாமின் வசமாய்த் திரும்பிவிடக்கூடாது, ஜனங்கள் தன்னைக் கொன்றுபோட்டுவிடக்கூடாது, தன்னுடைய அரசாட்சியை தான் இழந்துவிடக்கூடாது என்பதே அவனுக்குள் இருந்த அடிப்படையான பயம். இந்த பயமே அவனை ஆண்டுகொண்டிருந்தது, ஆண்டவரை விட்டும் அவனை திசை திருப்பிவிட்டது. தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற முயற்சியில் யெரொபெயாம் இறங்கியதினால்தான் அவனது பயணம் திசைமாறிப்போனது. யூதா கோத்திரத்தாருக்கும், இஸ்ரவேல் ஜனத்தாருக்கும் பாலமாயிருந்த எருசலேம் தேவாலயத்தினின்று ஜனத்தைப் பிரித்துவிட முயற்சித்தான். ஒரே ஆலயம் என்ற கோட்பாட்டினை அவனுடைய மனம் ஒத்துக்கொள்ளவில்லை. ஜனங்களைத் தன்னிடமாய் வைத்துக்கொள்வும், ராஜ்யத்தை தக்கவைத்துக்கொள்ளவும் அவன் எடுத்து நிலைப்பாடு அது.

கர்த்தருடைய ஆலயத்தைப் போல கர்த்தருக்காக ஆலயத்தைக் கட்டாமல், கன்றுக்குட்டியை செய்வித்தான். யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகைகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்தான் (1இரா 12:32). தன் மனதிலே தானே நியமித்துக்கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான் (1இரா 12:33). யூதாவில் இருக்கும் தேவ ஆலயத்திற்கு விரோதமாகவும், யூதாவில் ஆசரிக்கப்படும் கர்த்தருடைய பண்டிகைக்கு ஒப்பாகவும் யெரொபெயாம் இவைகளைச் செய்தபோது, தேவனுடைய மனுஷனை தேவன் யூதேயாவிலிருந்து பெத்தேலுக்கு அனுப்பினார். யெரொபெயாம் கட்டியிருந்த பலிபீடத்தை தகர்த்தெறிந்தார் (1இராஜா. 13:5). யெரொபெயாமுடைய ஜனங்களைத் தொடாதபடிக்கு கர்த்தர் ரெகொபெயாமை சேமாயா தீர்க்கதரிசியைக் கொண்டு தடுத்து நிறுத்தினார் தேவன்; ஆனால், யெரொபெயாமோ தன்னுடையது போய்விடுமோ என்று பயந்து தேவனை விட்டு விலகிச் சென்றுகொண்டிருந்ததினால், மற்றொரு தேவ மனுஷனைக் கொண்டு யெரொபெயாமின் போலிகளைத் தகர்த்து எறிந்தார் தேவன். ஜனங்கள் போய்விடக்கூடாது என்று நினைத்தவன் போலியான பல காரியங்களைச் செய்யத்தொடங்கினான்.

யெரோபெயாமைப் போல பயந்துகொண்டிருக்கும் சபைகள், ஊழியங்கள், ஊழியர்கள் இன்றைய நாட்களில் ஏராளம் ஏராளம். தன்னுடைய சபையில் இருக்கும் விசுவாசிகள் அடுத்த சபைக்குச் சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் ஆடிக்கொண்டிருக்கும் போதகர்கள் ஏராளம். இவர்கள் தங்கள் சபை மக்களை, மற்றெந்த ஊழியர்கள், ஊழியங்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க உற்சாகப்படுத்துவதில்லை. சில சபைப் போதகர்கள், மற்ற ஊழியர்களை தங்கள் சபைக்கு உள்ளேயே விடுவதில்லை; காரணம், தங்கள் சபையில் உள்ள ஆத்துமாக்கள் கொள்ளை போய்விடுமோ என்ற பயம்தான். இதனாலேயே, ஒவ்வொரு ஊழியத்தினரும் தனித்தனியாக, எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கின்றனர். எங்கள் சபையில் இது இல்லையே என்று வேறெங்கும் விசுவாசிகள் சென்றுவிடக்கூடாது என்று யெரொபெயாமைப்போல பயந்து நிற்கும் போதகர்களை என்னவென்று சொல்வது. இத்தகையோர் கிறிஸ்துவின் அடிப்படை போதனையான ஒற்றுமையில் தேறுவது எப்போது.

ஒரு மளிகைக் கடைக்குச் சென்றிருந்தேன், நான் கேட்ட பொருள் அந்த மளிகைக் கடையில் இல்லாதிருந்தது. உடனே, மற்றொரு கடைக்குச் சென்று அதனை வாங்கிக்கொள்ள நான் முற்பட்டேன். அப்போது, அந்தக் கடைக்காரர்: சார், நீங்க உட்காருங்க, என்று தனது கடைக்கு முன்னால் என்னை உட்காரச் சொல்லிவிட்டு, தனது கடையில் உள்ள ஒரு வேலைக்காரரை அனுப்பி அந்த பொருளை அடுத்த கடையில் வாங்கி எனது கரத்தில் கொடுத்தார். இதன் அர்த்தம் என்ன? நான் அடுத்த கடைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதுதான்; ஒருநாள் நான் சென்று பழகிவிடுவேனென்றால், பின்பு தொடர்ந்து செல்லும் வழக்கம் எனக்கு வந்துவிடுமே என்ற பயமே அந்தக் கடைக்காரர் அப்படிச் செய்ததற்கான காரணம். ஜனங்கள் மேல் அக்கரை உள்ளவர்கள் போலவே இத்தகைய போதகர்கள் பேசுவார்கள், அவர்களது ஆவிக்குரிய வாழ்க்கை மற்றவர்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதைப் போலவே அறிவுரை சொல்லுவார்கள்; ஆனால், அதன் அடிப்படை ரகசியமோ, தன்னை விட்டு அவர்கள் போய்விடக்கூடாது என்பதே. போதகர்களே, மேய்ப்பர்களே, ஊழியத் தலைவர்களே உங்களிடத்தில் உள்ளவர்களைக் குறித்து உங்களுக்கு இப்படிப்பட்ட பயம் உண்டோ? அவர்கள் நடத்தும் ஜெபக்குழுவுக்குச் செல்லவேண்டாம், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்கவேண்டாம் என்பதை மையப்படுத்தி உங்கள் ஐயத்தைத் தீர்த்துக்கொள்கிறீர்களோ?

எனது சொந்த கிராமத்தில், எனது வீடு இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் இருக்கும் ஆலயத்திற்கு எனது குடும்பமும் நானும் தொடர்ந்து சென்றுவருகிறோம். ஆனால், என்னுடைய வீடு இருக்கும் அதே தெருவிலும் ஓர் ஆலயம் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது தெருவில் இருக்கும் ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்று பெரியவர்கள் பலர் என்னிடத்தில் சொன்னதுண்டு. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனவர்கள், எனவே அந்த ஆலயத்துக்குச் செல்லக்கூடாது என்று ஆலோசனையும் சொல்லியிருக்கிறார்கள். பல நாட்கள், எனது தெருவில் உள்ள அந்த ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தூரத்தில் இருந்துதான் நான் பார்த்திருக்கிறேன். அந்த ஆலயத்தில் உள்ள பெரியவர்களின் மனநிலையும் அப்படித்தான் இருந்தது. ஆனால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட வாலிப தலைமுறையினரால் அந்த பிரிவினையின் கோட்டை தகர்க்கப்பட்டது. அவர்கள் இந்த ஆலயத்திற்கும், இவர்கள் அந்த ஆலயத்திற்கும் பிரவேசிக்க வழி உண்டானது.

வேலிக்கு வெளியே தேவனுக்காக நாம் செய்யவேண்டியவைகள் எத்தனையோ இருக்க, வேலிக்குள்ளேயே இருந்துகொண்டிருந்தால், நம்மால் தேவனுக்குப் பிரயோஜனம் ஒன்றுமிராது, உலகம் நம்மைக் கேலியாகத்தான் பார்க்கும்.

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்று சொன்னபோது, (யாத் 32:1) ஆரோன், அவர்களிடத்திலிருந்த பொன்னணிகளை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: 'இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே' என்றார்கள் (யாத். 32:4). மலையின் மேலோ, எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுவந்த தலைவனான மோசே தேவனோடு பேசிக்கொண்டிருக்கிறான்; தலைவனுக்கும், தேவனுக்கும் சந்திப்பு நடந்துகொண்டிருக்கிறது; ஆனால் மலையின் கீழோ கன்றுக்குட்டி உருவாகிவிட்டது.

எருசலேமுக்கு தேவனைத் தொழுதுகொள்ளச் செல்லாதபடி ஜனங்களைத் தடுத்ததும் கன்றுகுட்டிகளே, அதுபோல், எகிப்திலிருந்து வெளியேறியபோது தேவனைத் தொழுதுகொள்ளச் செய்யாமலிருந்தவைகளும் கன்றுகுட்டிகளே. பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட தேவ ஜனமே, பிரித்தெடுக்கப்பட்ட தேவ ஜனமே, எகிப்திலிருந்து வெளியே வந்த உங்கள் வாழ்க்கையில் தேவனை விட்டுப் பிரிக்கும் கன்றுக் குட்டிகள் உண்டாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அப்படியே, தேவாலயத்திற்குச் செல்லாதபடியும், தேவனைத் தேட இயலாதபடியும் உங்களைத் தடுக்கும் கன்றுகுட்டிகளைக் குறித்தும் அவைகளை உருவாக்கும் ராஜாக்களைக் குறித்தும், ஆரோன்களைக் குறித்தும் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.