வேறே ஆடுகள் வேண்டும்

 

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர்தான், பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி, பிறந்தார் பிறந்தார் போன்ற பாடல்கள் சபைகளெங்கும் தொனிக்க, வீடுகளெல்லாம் நட்சத்திர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க கிறிஸ்து பிறப்பின் தினத்தையே தினம் தினம் மனமதில் சுமக்கும் மாதம் இது. விசேஷ நிகழ்ச்சிகள், பாடல் ஆராதனைகள், கீத பவனிகள், அதிகாலை ஆராதனை, புத்தாடை, விதவிதமான உணவு வகைகள், வெடிகள் என பல்வேறு வழிகளில் கிறிஸ்தவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொண்டாலும், வெளியிலிருக்கும் அவரை அறியாத ஜனங்களையும் அவருக்குள் கொண்டுவருவதே நம்முடைய பண்டிகை நாட்களின் ஆனந்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும், பண்டிகை கால நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஆண்டவரை அறிவிப்பதாகவே அமைந்துவிட்டால், அறிவிக்கப்படாத ஒரு கூட்டத்தினருக்காவது இந்நாட்களில் கிறிஸ்துவின் அன்பினை அறிவித்துவிடமுடியும்.

இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும் (யோவா 10:16) என்றார் இயேசு. 'வேறே ஆடுகள் வேண்டும்' என்பதே இயேசுவின் தாகம்; அதுவே மனந்திரும்புதலின் செய்தியை அறிவிக்கும் அவரது வேகத்தை அதிகரித்தது. ஓரிடத்தில் தங்கிவிட விரும்பாமல், ஊர் ஊராக ஆத்துமாக்களைத் தேடவைத்தது; இதுவே ஆத்தும பாரம். அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்ளுவார் (ஏசா. 53:11) என்பதே அவரைக்குறித்து முன்னுரைக்கப்பட்ட வாக்கு. இழந்துபோன ஆடுகள், தொலைந்துபோன ஆடுகள், திருடப்பட்டுப்போன ஆடுகள், விலகி ஓடும் ஆடுகள் மற்றும் தன்னை இன்னும் அறிந்துகொள்ளாத ஆடுகளை தன்பக்கம் கொண்டுவரவேண்டும் என்பதே அவரது பிரதான பணியாயிருந்தது.

'வேறே ஆடுகள் உண்டு' என்ற இயேசுவின் வார்த்தைகள், ஆத்தும ஆதாயப் பணியினைச் செய்ய நம்மையும் ஊக்கப்படுத்துகின்றன. நாம் வாழுகின்ற, பயிலுகின்ற, பணி செய்கின்ற இடங்கள் அனைத்திலும் 'ஆண்டவருக்கு ஆடுகள் உண்டு' என்பதை அறிந்தவர்களாக நாம் நடந்துகொள்ளுவோமாகில், செயல்படுவோமாகில் அந்த ஆடுகளை நித்திய ஜீவனுக்குள் வழிநடத்தி, மந்தைக்குள் நாம் சேர்த்துவிடமுடியும். இந்த கிராமத்தில் யார் மனந்திரும்புவார்கள்? யார் சுவிசேஷத்தைஏற்றுக்கொள்ளுவார்கள்? என்று ஐயப்படுவோராக இல்லாமல், 'உண்டு' என்ற விசுவாசத்தோடு முன்னேறுவோம். 'உண்டு' என்ற தரிசனம் நம்மில் உண்டாயிருந்தால் மாத்திரமே 'வேண்டும்' என்ற வாஞ்சையும் விருப்பமும் நமக்குள் உருவாகும். 'நினிவே அழியப்போகிறது, ஒருவரும் மனந்திரும்பமாட்டார்கள்' என்ற எண்ணத்துடனேயே இருந்தான் யோனா; ஆனால், அங்கோ ஆண்டவருக்கு அனைத்தும் கிடைத்தது. கொரிந்து பட்டணத்தில் பவுல் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, அநேகர் அவனுக்கு எதிர்த்து நின்று தூஷித்தார்கள். அதனைக் கண்ட பவுல், தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று சொன்னான் (அப். 18:6). தூஷிக்கிறவர்களைக் கண்டு சோர்ந்துபோனான், வெறுத்துப்போனான் பவுல்; அவர்களை விட்டும், அந்தப் பட்டணத்தை விட்டும் வெளியேறிவிட நினைத்தான். அந்த நேரத்தில், ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். அதைத் தொடர்ந்து, தொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். பவுல் தனது ஊழியத்தில் சோர்ந்துவிடாதபடி, தூஷிக்கிறவர்களைக் கண்டு தூரமாய்ப் போய்விடாதபடி, அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனே கூட இருக்கிறேன், உனக்குத் தீங்கு செய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார் (அப். 18:8-10). பவுலைப்போல நாம் இன்று காணப்படுவோமென்றால், இந்த சத்தமே இன்று நம்முடைய காதுகளிலும் கேட்கட்டும். இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் நாம் மாத்திமே, சபையில் இருக்கும் இத்தனை பேர் மாத்திரமே, நமது குடும்பத்தில் மற்றும் உறவினரில் இயேசுவை சொந்தமாக்கிக்கொண்டவர்கள் சொற்பமானவர்கள் மாத்திரமே என்று நினைத்துக்கொண்டிருக்கும் நம்மிடத்தில் ஊரில், நகரத்தில், நாட்டில் இன்னும் 'வேறே ஆடுகளும் எனக்கு உண்டு' என்று சொல்லி ஆத்துமபாரத்தை நமக்கு ஊட்டி நமது ஓட்டத்தைத் தீவிரமாக்குகிறார் இயேசு.

'நாமே ஆடுகள்' என்று மாத்திரம் நினைத்துக்கொண்டிராமல், 'வேறே ஆடுகள்' என்ற நினைவுக்குள் தங்களைத் தள்ளிக்கொள்ளுபவர்களே, ஆடுகளைத் தேடிச் செல்லும் ஆத்தும ஆதாயகர்களாகத் தங்களை மாற்றிக்கொள்கின்றனர், வாழ்க்கையை அப்பணிக்காக அர்ப்பணிக்கின்றனர். தங்களைத் தாங்ளே ஆடுகள், ஆடுகள் என்று சொல்லிக்கொண்டு, அதே உணர்வினையே மனதில் கொண்டு, மேய்ப்பனானவன் தங்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வதையே மேய்ச்சல் என்று நினைத்துக்கொண்டிருப்பவர் பலர். ஆலயத்திற்குச் சென்றேன் நான் விரும்பியது கிடைத்தது, அந்த கூட்டத்திற்குச் சென்றேன் என் வியாதி குணமானது என்று தங்களுக்குக் கிடைத்தவைகளையே 'மேய்ச்சல்' என்ற வரையறைக்குள் வைத்துக்கொண்டிருக்கின்றனர் பலர். நம்மை திருப்திப்படுத்துவதையே மேய்ச்சல் என்றெண்ணாமல், தேவனைத் திருப்திப்படுத்தும் காரியங்களை மேய்ச்சல் என்று எண்ணுவோமென்றால், நம்முடைய திசை ஆத்துமாக்களை நோக்கித் திரும்பிவிடும். வேட்டைக்காரர்கள் பலர் தங்களை நோக்கியே துப்பாக்கியைத் திருப்பிவைத்திருப்பது பார்ப்பவருக்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். இயேசு தனது சீஷர்களை நோக்கி: நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார் (யோவான் 4:32). தன்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்று, 'எது அந்த போஜனம்' என்பதையும் சுட்டிக்காட்டினார் (யோவான் 4:34). 'பிதாவுக்குப் போய்ச் சேருபவைகளே பிள்ளைகளுக்குப் போஜனமாயிருக்கவேண்டும்' என்பதையே இயேசு போதித்தார்.

யூதர்கள் இயேசுவை சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்றார் (யோவான் 10:24-26).

வேறே ஆடுகள் யார் என்பதை இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு அடையாளம்காட்டிக்கொடுக்கிறதல்லவா. இயேசுவை விசுவாசியாத அனைவரும் வேறே ஆடுகள்தான். இயேசுவை தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாத, மனந்திரும்பாத, அவரது இரத்தத்தினால் கழுவப்படாத, அவரே ஒரே தெய்வம் என்பதை ஏற்றுக்கொள்ளாத, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாத அத்தனை பேரும் வேறே ஆடுகளே. இயேசுவே வழி என்பதை அறியாமல், வழிதப்பித் திரியும் ஆடுகளுக்கு, வழி தெரியும் நாம் வழியினைக் காட்டிக்கொடுக்கவேண்டியது நமது கடமை.

யாக்கோபுக்கு தேவன் ஆடுகளை எடுத்துக்கொடுத்தது போல நமக்கும் இந்நாட்களில் தேவன் ஆத்துமாக்களை எடுத்துக் கொடுப்பார். மாமன் என்ற உறவின் பெயரில் லாபானிடம் தஞ்சம் புகுந்து வாழ்ந்துகொண்டிருந்தான் யாக்கோபு. என்றாலும், லாபானோ அவனை வஞ்சகமாகவே நடத்திக்கொண்டிருந்தான். உறவின் பெயரில் யாக்கோபு மறுமகனாக இருந்தபோதிலும், தனது மகளை மணம்முடிக்கும் மருமகனாக மாறவிருந்தபோதிலும், லாபான் பத்துமுறை யாக்கோபின் சம்பளத்தை மாற்றினான்; என்றாலும், லாபான் யாக்கோபுக்குத் தீங்கு செய்ய தேவன் இடங்கொடுக்கவில்லை (ஆதி. 31:7). புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று லாபான் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறiமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று லாபான் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது. இவ்விதமாய் தேவன் லாபானுடைய ஆடுகளை எடுத்து யாக்கோபுக்குக் கொடுத்தார் (ஆதி 31:8,9). சம்பளத்தை மாற்றினான் லாபான், ஆனால், ஆடுகளின் சந்ததியை மாற்றவோ அவனால் கூடாமற்போயிற்று. அது தேவனால் அல்லவோ உருவாக்கப்பட்டது. தனக்குக்கிடைத்த ஆடுகளை லாபானுடைய மந்தையின் ஆடுகளுடன் கலக்கவிடாமல், தனியாக வைத்து வளர்த்தன் யாக்கோபு (ஆதி.30:40). பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் யாக்கோபு போட்டுவைத்ததினாலேயே அந்த சந்ததி உருவானது (ஆதி. 30:38). பச்சை மரம் இயேசுவே (லூக். 23:31), அந்த மரம் அங்கிகள் உரியப்பட்டு (யோவான் 19:23), சிலுவையில் அறையப்பட்டது. போர்ச்சேவகர்களால் வாரினால் அடிக்கப்பட்டார். இடையிடையே வெண்மை தோன்றும்படி, யாக்கோபு பட்டையை உரித்ததுபோல (ஆதி 30:37) போர்ச்சேவகர்கள் அவரை வாரினால் அடித்திருந்தார்கள். அவர் உழப்பட்ட நிலம், அதிலே எந்த விதை போட்டாலும் வளரும். இந்தக் கொப்பு (இயேசு) இன்று உங்கள் கையில் உண்டு. உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவா 1:9)

யாக்கோபிற்கு இத்தனையாய் தேவன் ஆடுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தாலும், யாக்கோபினிடத்தில் காணப்பட்ட ஒரு குணம் நம்மிடத்தில் காணப்படாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளுவோம். தேவனே யாக்கோபுக்கு ஆடுகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தபோதிலும், பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொம்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான். இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன (ஆதி 30:41,42). பலவீனமான ஆடுகளை தன்பக்கம் சேர்த்துக்கொள்ள யாக்கோபு விரும்பவில்லை. தேவனே எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாலும், யாக்கோபோ வன்மமாய் நடந்துகொண்டது ஏனோ? கர்த்தரோ பெலமுள்ளவைகளையும், பெலவீனமானவைகளையும் தன்னிடமாய்ச் சேர்த்துக்கொள்பரல்லவா. பலவீனமானவைகள் வேண்டாம் என்ற யாக்கோபின் மனுஷீகத் தன்மையினால், பெலவீனமான பல ஆடுகளை இழந்தான். பெலமுள்ளவைகள் இருந்தால் மாத்திரமே அது தனக்கு பெலம் என்று எண்ணினான். மந்தையில் ஆடுகளைச் சேர்க்கும் மேய்ப்பர்களாகிய நம்மில் இக்குணம் உண்டோ? உயர்ந்தோரையும், பணம்படைத்தோரையும், ஐசுவரியவான்களையும், பதவியிலிருப்போரையும் தேடித் தேடிச் சென்று, பெவீனரை விட்டுவிடுகின்றோமோ? பாரபட்சம் காட்டுகின்றோமோ?

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார் (ஏசா. 61:1-3) என்ற இயேசுவின் சிந்தையைச் சுமந்தவர்களாக சுவிசேஷப் பாதையினைத் தொடருவோம். பலமுள்ளவைகளோ, பலவீனமானவைகளோ அனைத்து ஆத்துமாக்களும் கர்த்தருக்கே. என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை (எசே. 34:6) என்கிறார் கர்த்தர். விசாரிக்கப்படாமல், கைவிடப்பட்ட நிலையில், உதவுவார் யாரென்று தயங்கி நிற்கும் மனிதர்கள் எத்தனையோ, எத்தனையோ; அந்த வேறே ஆடுகளைக் கண்டுபிடிப்பதுதான் நமது பணி.

யாக்கோபோடு கூட இருந்த கர்த்தர் நம்முடனும் இன்று உண்டு. அவருக்காக நாம் பணிசெய்தால் நம்மிடம் வந்து சேரவேண்டிய ஆத்துமாக்கள் நிச்சயம் நம்மண்டை வந்து சேரும். தேசத்தின் சட்டங்கள் எத்தனை முறை மாறினாலும், ஆளுவோர் கடினமாகப் பேசினாலும், கிறிஸ்தவத்திற்கும் கிறிஸ்துவுக்கும் இழுக்கு நேரும் வார்த்தைகளை உதிர்த்தாலும், ஆத்துமாக்களை எடுத்து தேவன் நமக்குக் கொடுப்பது நிச்சயமே. உள்ளதும் போய்விடுமோ என்ற சந்தேகத்திற்குள் சத்துரு நம்மைத் தள்ளினாலும், வேறே ஆடுகள் நமது மந்தைக்குள் நிதமும் நிச்சயம் வந்துகொண்டேதானிருக்கும். நாம் கொண்டுவந்தவர்களை உரிந்துகொண்டு சென்றாலும், நாம் தொண்டு செய்தால் மீண்டும் ஆத்துமாக்கள் பிறந்துகொண்டேதான் இருக்கும் என்பதுதான் நமது ஆனந்தம். தேவனின் செயலைத் தடுக்கும் சக்தி மனிதனுக்கு இல்லையே. 'நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?' (ஏசாயா 43:13) என்பதுதான் தேவன் மனிதனிடத்தில் விடும் சவால். கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன் (ஏசாயா 60:7) என்கிறார் தேவன். உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? (மத். 18:12) ஆத்துமாக்களை ஆதாயம் செய்யும் பணிக்காகவும், வேறே ஆடுகளை மந்தையில் சேர்க்கும் பணிக்காகவும், தனது ஜீவனையே பலியாகக் கொடுத்த ஆட்டுக்குட்டி இயேசு.
தொழுவத்திலிருக்கும் தொழுதுகொண்டிருக்கும் ஆடுகளாக மாத்திரம் நாம் காணப்படாமல், தொழுவத்தை விட்டு தூரமாய்க் கிடக்கும் ஆடுகளை தேடிச் செல்லுவோராகவும் மாறுவோம்.

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே - அழைக்கிறார் இயேசு

என்ற சகோதரர் எமில் ஜெபசிங் அவர்கள் எழுதிய பாடல், எத்தனை ஆத்தும பாரத்தை முன்னிருந்த ஊழியர்கள் தங்கள் நெஞ்சில் வைத்திருந்தார்கள் என்பதையே நமக்கு வெளிக்காட்டுகின்றது; அர்ப்பணிப்போம்.