ஓட்டைக் குடங்கள்

 

ஒழுகும் குடத்தை ஊர் ஊராகச் சுமந்தாலும், பயணத்தின் இடையிலோ நீர் அனைத்தும் பாதையிலிருந்து சிந்தியிருக்கும்; இறுதியில் குடமே எஞ்சியிருக்கும். காலிப்பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு நீர் இருப்பதைப் போல வீறுநடை போடுகிறவனை, உலகம் கேலிசெய்யும். பாத்திரத்தை பெரிதாக்கியபோதிலும், ஆங்காங்கே ஒழுக்காகி நீர் ஓடிக்கொண்டேயிருந்தால், தேங்கியிருப்பது தேவையில்லாததாயிருக்கும். 'என் பாத்திரம் நிரம்பி வழிகிறது' (சங். 23:5) என்பதுதான் சங்கீதங்காரனின் ஆனந்தம். எனினும், நம்முடைய பாத்திரங்கள் நிரம்பிவிடாதபடிக்கு சத்துரு எடுக்கும் எத்தனங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. அவன் உடைக்கவரும் இடங்களைக் கண்டுகொண்டு, அதற்கு எச்சரிக்கையாயிருந்து எதிர்த்துநிற்கவேண்டுமே. ஊழியத்திலும், சபையிலும், ஐக்கியத்திலும், ஸ்தாபனத்திலும் தேவன் கொண்டுவந்து சேர்க்கும் மனிதர்களை பல்வேறு வழியாக வெளியேற்றிவிட நினைக்கும் சத்துருவின் தந்திரத்திற்கு எதிர்த்து நிற்போம்; இது நாம் செய்யவேண்டிய யுத்தத்தில் ஒன்று. போருக்கு ஆயத்தமாகி, அணிவகுத்து சேனைகளாக நின்றுகொண்டிருக்கும் நாம் நமது ஆவிக்குரிய பெலத்தையும், அத்துடன், உடனிருக்கும் ஆவிக்குரிய பலசாலிகளையும் இழந்துவிடக்கூடாது. ஆவிக்குரிய வீரர்களைச் கூட்டிக்;கொள்ளவேண்டுமே அன்றி அவர்களை விரட்டிவிடக்கூடாது.

துரத்தப்பட்ட மாற்கு

உயர்ந்து நிற்கும் ஊழியர்கள்கூட பல கருத்துக்களை முன்வைத்து, ஒருவரோடு ஒருவர் ஒத்துக்கொள்ளமுடியாமலும், ஒருமனங்கொள்ள இயலாமலும் உரசிக்கொள்ளும்போது, விவாதித்துக்கொள்ளும்போது, உண்டாகும் ஓட்டையில் மீன்கள் வெளியேறும் நிலையினை ஏற்பட்டுத்திவிடுகின்றது. பவுல் - பர்னபா, இவ்விருவருக்கும் இடையே உண்டான கருத்துவேறுபாட்டில் மாற்கு என்ற மீன் மாட்டிக்கொண்டது. பவுலும், பர்னபாவும் இணைந்து கர்த்தருடைய வசனத்தை தொடர்ந்து பிரசங்கித்துவந்தார்கள். தங்களது ஊழியத்தின் தொடர்ச்சியாக கர்த்தருடைய வசனத்தை தாங்கள் அறிவித்த சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களளென்று சென்று பார்க்க இருவரும் புறப்பட்டனர். நல்ல தரிசனத்துடனான பயணம்; அநேகருக்கப் பயன்படக்கூடிய பயணம். சபைகளும், விசுவாசிகளும் ஸ்திரப்படக்கூடிய பயணம். அந்த பயணத்தின்போது, பர்னபா மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானை கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். பவுலோ: மாற்கு பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான் (அப் 15:41). பவுல் மாற்குவையும் இழக்க ஆயத்தமானான்; ஆனால், பர்னபாவோ மாற்குவை சேர்த்துக்கொள்ள ஆயத்தமானான். விளைவு, பவுல் மாற்குவையும் பர்னபாவையும் இழந்தான், பர்னபா பவுலையும் பவுல் உடன் செய்திருக்கவேண்டிய ஊழியத்தையும் இழந்தான். பெலவீனமான மனிதனைத் துரத்தும்போது, பெலமுள்ள மனிதர்கள் சிலரும் புறப்பட்டுவிடுகின்றனர். துரத்தப்படும் பெலவீனர்களை இழக்க மனதில்லாதவர்கள் அவர்கள். ஊழியத்தைக் காட்டிலும், உறவை முக்கியமெனக் கருதுபவர்கள் அவர்கள். தாங்கள் செய்துமுடிக்கவேண்டும் என்பதைக் காட்டிலும், தங்களுக்குப் பின் செயல்;படும் தலைமுறையை உருவாக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் அவர்கள்.

அவரை நான் போகச் சொல்லவில்லையே, அவர்தான் போனார் என்று பெலவீனர்களுடன் புறப்படும் பெலமுள்ளவர்களைக் குறித்து பேசப்படலாம்; ஆனால், பெலமுள்ளவர்களோ, சுவிசேஷம் எழுதும் மாற்கு போன்றோரை உருவாக்கக்கூடியவர்கள். விதைப்போர் வேலிக்கு வெளியே வீசும் விதைகளைக் கூட விதையாக்குபவர்கள்.

வேண்டவே வேண்டாம் என்ற கட்டாயமாக தீர்மானித்ததால், மாற்குவை மட்டுமல்ல, பர்னபாவையும் கூடவே இழக்கும் நிலை உண்டானது. ஊழியம் தொடர்ந்தபோதிலும், நிருபங்கள் பல எழுதப்பட்டபோதிலும் ஆதியிலுள்ளவர்கள் அருகிலில்லை. இவ்விருவரையும் இழந்த பவுல், நிருபங்களை எழுதிக்கொண்டிருக்கும்போது, விரட்டப்பட்ட மாற்குவை 'சுவிசேஷம்' எழுதும்படி கர்த்தர் உபயோகப்படுத்தினார். மாற்கு உடன் பர்னபா வந்ததினாலேயும், உடன் இருந்ததினாலேயுமே இது சாத்தியமாயிற்று என்று நான் நம்புகிறேன். பவுலின் ஊழியத்தின்போது, ஜனங்கள் பவுலுக்காக தங்கள் நேரத்தையும், பணத்தையும், காலத்தையும், கழுத்தையும் கூட கொடுக்க ஆயத்தமாயிருந்தார்கள்; ஆனால், மாற்குவுக்கோ பவுலை உருவாக்கிய பர்னபா கழுத்தைக் கொடுத்து தாங்கிக்கொண்டிருந்தான். பவுலையும் தொடக்கநாட்களில் உருவாக்கியவன் பர்னபாதானே. குட்டிமீன்களை தொட்டியிலிருந்து வெளியே வீசிவிடும்போது, யோனாவை விழுங்கப்பட்டதுபோல, பெரிய மீன்கள் (ஊழியக்காரர்கள்) அத்தகையோருக்குக் கைகொடுத்து தேவ திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி. பவுல் பல நிருபங்களைத் தந்தான், மாற்குவோ ஒரு சுவிசேஷத்தைத் தந்தான். நிருபங்களுக்கு முன் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷ புத்தக வரிசையில் இரண்டாவது புத்தகத்தை தக்கவைத்துக்கொண்டான். இயேசுவைப் பற்றி எழுதிய அவனது விரல்களை சத்துருக்கள் வெட்டி வீசி எறிந்தார்கள் என்கிறது வரலாறு. நீங்கள் எங்கே இருந்தாலும் அங்கே அவர் உங்களோடு இருக்கிறார் என்பது உறுதி.

பிரியமானவர்களே, நீங்கள் வேண்டாம் என்று நினைக்கிறவர்களைக் கொண்டு தேவன் என்ன செய்யவிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வெளியேற்றும் அவர்களுக்காக தேவனே வழியை ஆயத்தம் செய்துகொடுக்கிறார் என்பது புரிகிறதா. யோசேப்போடுகூட எகிப்துக்குப் போன தேவன், நீங்கள் துரத்துபவர்களோடும் துணையாய்ப் போவார் என்பது நிச்சயம். விதைப்போரே நீங்கள் விதையின் பெலவீனத்தை அல்ல பெலத்தைப் பாருங்கள்; அந்த பெலத்தில் பெரிய அறுவடை காத்திருக்கிறது.

பெலவானை வெறுக்கும் பெலவீனன்

இந்த தலைப்புக்குப் பொருத்தமானவன் சவுல் அரசனே. இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல், பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான் (1சாமு. 14:52). தன்னுடைய அரசாட்சியின் ஆரம்ப நாட்களில் அரசை வலுப்படுத்த நினைத்தான் சவுல்; அந்த வரிசையில் சவுலோடு சேர்க்கப்பட்டவன்தான் தாவீது. தாவீது கோலியாத்தை வெற்றிகொண்டபோது, தாவீது பெலசாலி என்று கண்டுகொண்ட சவுல் அப்னேரை நோக்கி: இந்த வாலிபன் யாருடைய மகன்? என்று கேட்டான்; அப்னேர் தெரியாது என்று சொன்னபோது, 'அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி' என்றான் சவுல் (1சாமு. 17:55,56). சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்றுமுதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான் (1சாமு 18:2). தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும்போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான் (1சாமு 18:5).

இத்தனையாய் சவுல் தாவீதை தன்னுடன் வைத்திருந்தபோதிலும், கோலியாத்தின் வெற்றியைக் கொண்டாடிய ஸ்திரீகள், 'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' என்று பாடியபோது (1சாமு. 18:7) சவுல் தாவீதை விரோதியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டான்; அவர்களது பாட்டைக் கேட்ட சவுல், ராஜாங்கம் போய்விடுமோ என்று பயந்துவிட்டான்; 'இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்கு குறைவாயிருக்கிறது' என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு தாவீதை காய்மகாரமாய்ப் பார்க்கத்தொடங்கினான் சவுல் (1சாமு. 18:8). கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்த தாவீதை தன்னிலும் பெலவான் என்று கண்டுகொண்டபோது அவனைத் துரத்தத்தொடங்கினான். அதுமுதல் பெலவான்களைத் துரத்துவதே அவனுடைய பெலவீனமாகிப்போனது. வீட்டை விட்டு, நாட்டை விட்டு, ஆட்சிப்பொறுப்பினை விட்டு தாவீதையே துரத்திக்கொண்டிருந்தான் சவுல். தாவீது பெலமுள்ளவன், தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்பதை சவுல் அறிந்திருந்தான்; என்றாலும், அவன் தனக்குப் பின் அரசனாவதையோ அவன் விரும்பாதவனாயிருந்தான். பெலமுள்ளவர்களை வேண்டாம் என்று தள்ளுகிறவர்கள் பெலவீனர்களே. பெலவான்களை தன்னிடமாய்ச் சேர்த்துக்கொண்டுவந்த அவனது குணம் மாறிப்போனது. பெலவான்கள் தனக்கு வேண்டும்; ஆனால், தன்னிலும் பெலவான்கள் தனக்கு வேண்டாம் என்பதுதான் சவுலின் நிலை.

பெலமுள்ள தாவீது தேவைதான்; ஆனால், தன்னிலும் பெலவானாக அவன் போற்றப்படுவானென்றால் அவன் வேண்டாம். பெலமுள்ள தாவீது தேவைதான்; ஆனால், தனக்குப் பின் அரசனாக அமரும் தாவீது வேண்டாம் இதுதான் சவுலின் நிலை. இந்த விதையை இன்றும் அநேகருடைய இருதயத்தில் விதைத்து நீரூற்றிக்கொண்டிருக்கிறான் சத்துரு. ஆவிக்குரிய பெலவான்கள் வேண்டும், ஆவிக்குரிய வரம் பெற்றவர்கள் வேண்டும், அழகாகப் போதிக்கிறவர்கள் வேண்டும், அருமையாக ஊழியம் செய்கிறவர்கள் வேண்டும்; ஆனால், எனக்குப் பின் தலைமைப் பொறுப்பை அவர்களுக்குத் தரமாட்டேன் என்பதுதான் அநேக ஊழியத் தலைவர்களின் நிலை. தாங்கள் பெலமுள்ளவன் என்று சில மனிதர்களை அடையாளங்கண்டுகொண்டாலும், ஜனங்களோ அவர்களை தங்களிலும் பெலவான்கள் என்று அடையாளங்காட்டக்கூடாது, தங்களிலும் பெரியவர்களாக அங்கீகரித்துவிடக்கூடாது என்பதுதான் தலைவர்கள் பலரின் மனநிலை. தாவீதை இனியும் தேசத்தில் வைத்துக்கொண்டிருந்தால், ஜனங்களே அவனை ராஜாவாக்கிவிடுவார்கள் என்று பயந்த சவுல், தேசத்தை விட்டு தாவீதை துரத்தும் பணியைத் தொடங்கினான்.

தன்னுடைய மகனான யோனத்தான், தனக்குப் பின் அதே அரியணையில் அமரவேண்டும் என்று ஆசைகொண்டிருந்த சவுல், தாவீதை அழித்தால்தான் அது சாத்தியப்படும் என்று நினைத்து தாவீதைத் தொடர்ந்துகொண்டிருந்தான். சவுலின் மகனான யோனத்தானே தாவீதை அரசனாக அங்கீகரித்து, மனமாற நேசித்தபோதிலும், சவுல் மனம் மாறவில்லை. தனது குமாரன் இருக்கும்போது இன்னொருவனா? என்ற ஆதங்கம் அவனுக்கு. இது கிறிஸ்தவ ஊழியங்களிலும் இன்றைய நாட்களில் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. ஆரோனின் சந்ததியைப் போல தங்களை நினைத்து, சந்ததிக்குத்தான் ஊழியத்தின் அத்தனையையும் சத்தமில்லாமல் ஊழியத்தலைவர்கள் எழுதிவைக்கின்றனர். தங்கள் குமாரர்கள் பெரியவர்களாகும்போது, தலையெடுக்கும்போது, அவர்களுக்குத் தடையாக எவரும் இருந்துவிடக்கூடாது என்று, பிள்ளைகளுக்காகப் பிறரை களையெடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். தாவீதைப் போன்ற பெலவானை தேவன் அபிஷேகம் செய்தபோதிலும், அதனை ஏற்றுக்கொள்ள மனமற்றவர்களாக, இவர்களோ தங்கள் பிள்ளைகளைத்தான் அபிஷேகம் செய்கிறார்கள். தங்களுடைய அதிகாரம், ஆளுகை, திறமை, அனைத்தும் ஒருங்கேற்க தனது பிள்ளைகளுக்குத்தான் இருக்கிறது, பிறருக்கு இல்லை என்பதைப் போன்று சித்தரித்து, பெலவான்களையோ புறந்தள்ளிவிடுகின்றனர். பெலவான்களை எல்லையை விட்டுத் துரத்தினால் மாத்திரமே தனது பிள்ளைகளுக்குத் தொல்லையில்லாத வாழ்க்கையை வடிவமைக்கமுடியும் என்ற சுயத்தின் வெளிப்பாடு.

பலர் ஒருபுறம் பெலவான்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள், மற்றொருபுறமோ, பெலவான்களை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய முரண்பாடு உள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே தடைகளாக மாறிவிடுவார்கள். ஊழியத்திலோ, சபையிலோ, மற்றெந்த கிறிஸ்தவ ஸ்தாபனத்திலோ பெலவான்கள் என்று தங்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்ட பலர்; அவர்களைக் காட்டிலும், அதிகமாய் தாலந்து படைத்தவர்களாக, அழகாய் பிரசங்கிக்கிறவர்களாக போற்றப்படும்போது ஆபத்துக்குள்ளாகின்றனர். அரண்மனைக்குள் அழைக்கப்பட்ட தாவீது சவுலுக்கே தெரியாமல் ஓடினதுபோல, குடத்தின் வாய்வழியாக உள்ளே வந்த பல மீன்கள் ஓட்டை வழியாக வெளியே ஓடிவிடுகின்றன. இத்தகைய நிகழ்வு ஊழியத்தை பெலவீனப்படுத்திவிடும்.

தேவ பெலத்தை அவன் இழந்திருந்ததினால், எத்தனை பெரிய பெலசாலிகளை அவர் தன்னோடு சேர்த்துவைத்தாலும், அதனால் அவனுக்கு வெற்றி கிட்டாமற்போயிற்று. பெலவானாகிய தேவன் சவுலை விட்டு தூரமாக நின்றதால், எத்தனை பலசாலிகளை அவன் தன்னோடு சேர்த்துக்கொண்டிருந்தாலும், அவன் பெலவீனனாகவே காட்சியளித்தான். அவனுடைய பெலவீனம் பதவியிலிருந்தது; தேவனோடிருந்த பெலத்தையோ இழந்திருந்தான். தேவனை விட்டுவிட்டு, வேறெந்த மனிதர்களால் தங்கள் பெலத்தை அதிகரித்துக்கொள்ள விரும்பும் மனிதர்கள் சவுலைப் போன்றவர்களே. விழுந்துபோன தலைவன், தன்னுடைய படையில் வீரர்களைச் சேர்த்தால், வெற்றியைக் கண்டுவிடலாம் என எண்ணினான். தேவனைத் துரத்திவிட்ட தலைவனே; உன்னை மனிதர்களின் பெலம் காப்பாற்றது. தேவனை விட்டுவிட்டவர்கள், வசனத்தை விட்டுவிட்டவர்கள், சத்தியத்தின்படி நடவாமல் சறுக்கிவிட்டவர்கள், வழியை விட்டுவிட்டு வலதுபுறமும் இடதுபுறமும் விலகிச் செல்பவர்கள், மனிதர்களின் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டால் அது வெற்றிக்கு வழிவகுக்காது.

துரத்தப்பட்ட யெரொபெயாம்

யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான் (1இராஜா. 11:28). சாலமோனோ, தன் தகப்பன் தாவீதைப் போல கர்த்தருக்குப் பிரியமாக நடந்துகொள்ளாமல், கர்தத்ருக்குப் பொல்லாப்பானவைகளைச் செய்துகொண்டிருந்தான். சாலமோனின் செய்கைகளில் பிரியப்படாத கர்த்தர். அவனது காலத்திற்குப் பின்னர், ராஜ்யபாரத்தை அவனது ஊழியக்காரனில் ஒருவனான யெரொபெயாமின்; கைக்கு மாற்ற நினைத்தார். கர்த்தர், அகியா தீர்க்கதரிசியைக் கொண்டு யெரொபெயாமுக்கு அதனை அறிவித்தார். கர்த்தரின் இத்திட்டத்தினை அறிந்துகொண்ட சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான் (1இரா 11:40). தனக்குப் பின் ராஜாவாக வரவேண்டியவன் எனது வாரிசாகிய ரெகொபெயாம், ஊழியக்காராகிய யெரொபெயாம் அல்ல என்ற வைராக்கியம் சாலமோனுக்குள் உண்டானது. என்றாலும், தான் தெரிந்துகொண்ட யெரொபெயாமை தேவன் எகிப்திலே ஒளித்துவைத்தார், 'தன்னுடைய பிள்ளையாகிய இயேசுவையும், சத்துருவின் கைக்குத் தப்புவிக்க எகிப்திற்கு தேவன் கொண்டுசென்றாரே. ஊழியத்தை விட்டுப் போய்விட்டார், ஊழியத்தை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டார் என்று முத்திரை குத்தப்படும் நபர்களை கர்த்தர் எதற்காக கொண்டுசென்றார் என்ற காரணத்தோடு அறிய முற்பட்டால் நலமாயிருக்கும்.

சாலமோனின் மரணத்திற்குப் பின்னர், அவனது குமாரனை ராஜாவாக்கும் நிகழ்வுக்கு யெரொபெயாமும் எகிப்திலிருந்து அழைக்கப்பட்டிருந்தான்; ஜனங்கள் அவனை அழைத்திருந்தார்கள். கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன் (1இரா 11:11). ஆளுகின்ற அபிஷேகத்தைப் பெற்றிருந்தபோதிலும், அகியாவினால் ராஜாவாகும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தபோதிலும், யெரொபெயாமும், இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள் (1இரா 12:3,4). யெரொபெயாம், ரெகொபெயாமை எதிர்க்கவில்லை, தேசத்தில் வாழும்படியாகவே வந்தான். ஆனால், அந்த வாய்ப்பை சாலமோனின் மகன் ரெகொபெயாம் நழுவவிட்டுவிட்டான். பெலமுள்ள, தகப்பனாகிய சாலமோனின் சமூகத்தில் நின்று ராஜ்யபாரத்தைக் குறித்து நன்கு அறிந்திருந்த முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படி ரெகொபெயாம் நடந்துகொண்டதால் விழுந்த ஓட்டையில் மிஞ்சியது ஒரு கோத்திரமே.

வீராப்பு பேசும் அரசர்களே, உங்கள் ராஜ்யத்தில் உள்ள ஜனங்கள் தங்கள் நெஞ்சில் மாற்று ராஜாவை ஆயத்தமாக வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் கடினமாய் நடந்தால், உங்களை உதறிவிட்டு தங்கள் மனதில் உள்ள ராஜாவை அவர்கள் ராஜாவாக்கிக்கொள்வார்கள். பல ஊழியங்கள் இன்று தங்களுக்கென்று ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு பிரிந்துசென்றதற்கு இத்தகைய நிகழ்வுகள் ஒரு காரணமல்லவோ? எகிப்தில் மட்டுமல்ல எங்கும் கடினமாய் தன் ஜனம் நடத்தப்படுவதை கர்த்தர் விரும்புபவரல்ல; தலைவர்கள் அரசர்களாயிருந்தாலும், ஆட்சியோ ஆண்டவரின் கையிலிருக்கிறது. ஜனங்களின் எதிர்பார்ப்பு, ஜனங்களின் மனநிலை, ஜனங்களின் ஆலோசனை ஆகியவற்றை அறிந்துகொள்ளாமல் தலைவன் என்கிற தைரியத்தில் ஊழியத்தை தங்கள் தடத்தில் இழுக்க நினைத்தால், அந்த ரயிலில் மிஞ்சி நிற்பது ரயில் ஏஞ்சினாகத்தான் இருக்கும் எச்சரிக்கை.

துரத்தப்பட்ட யெப்தா :

கீலேயாத் என்ற மனிதன் மனைவியோடு கூட ஒரு பரஸ்திரீயையும் வைத்திருந்தான். அந்த பரஸ்திரீக்குப் பிறந்தவனே யெப்தா; அவன் பராக்கிரமசாலியாயிருந்தான் (நியா. 11:1). என்றாலும், பின் நாட்களில் கீலேயாத்தின் மனைவிக்கும் குமாரர்கள் பிறந்தனர். கீலேயாத்தின் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி யெப்தாவை துரத்தினார்கள் (நியா. 11:2). அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான். 'எங்கள் தகப்பன்' என்று அவர்கள் சொல்லும்போது, 'எனது தகப்பன்' என்று யெப்தாவும் சொல்ல உரிமைபெற்றவனல்லவா? அவர்களது தகப்பன் ஒன்றுதானே. ஊழியர்களே, உங்களுக்கு மாம்சத்தில் பிறந்தவர்கள் மாத்திரம் பிள்ளைகளல்ல, உங்கள் ஊழியத்தினால் பிறந்தவர்களும் உங்கள் பிள்ளைகள்தான். உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கு எதிராய் எழும்பும்போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் பெரிதாய் வளரும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்த கேள்வி உங்களுடையது.

பராக்கிரமசாலியாயிருந்த யெப்தா, 'அந்நிய ஸ்திரீயின் மகன்' என்ற ஒரே காரணத்திற்காக வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான். சொந்தப் பிள்ளையை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளையைத் துரத்திவிட்டான்; அந்த வீடு பராக்கிரமத்தை இழந்து நின்றது. பராக்கிரமசாலிகள் பலரைத் துரத்திவிட்டு, பராக்கிரமத்தை இழந்து நிற்கும் வீடுகள் அநேகம். ஊழியர்களும், ஊழிய ஸ்தாபனங்களும்கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்நியர், தங்கள் பிள்ளைகளின் மேல் ஆதிக்கம் செலுத்திவிடுவார்களோ? என்ற அச்சத்தில், ஆவிக்குரிய பராக்கிரமசாலிகள் ஊழியத்தை விட்டு துரத்திவிடப்படுகின்றனர். ஊழியம் வளரும் வரை அவர்களது பராக்கிரமங்களை உபயோகித்துவிட்டு, அவர்களைப் பயன்படுத்திவிட்டு, தங்கள் பிள்ளைகள் பெரிதாகும்போது, பராக்கிரமசாலிகளைத் துரத்திவிடுகின்றனர். இதுவே, போர்முனையில் நிற்கும் ஊழியங்கள் பல பெலமிழந்துபோனதற்குக் காரணம். வீடு, சுயம், தங்கள் பிள்ளைகள் என்ற புயல் ஊழியர்களையும், ஊழியங்களையும் பிடித்து ஆட்டும்போது, அந்த மரத்தில் இருக்கும் இனிமையான பிற கனிகளைக்கூட உதிர்க்கப்படுகின்றது.

என்றாலும், அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணத் தொடங்கியபோது, கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை தோப் தேசத்திலிருந்து அழைத்துவரும்படி சென்றார்கள் (நியா. 11:5). யெப்தாவின் பராக்கிரமத்தைப் புரிந்துகொண்ட கீலேயோத்தின் மூப்பர்கள் அவனை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சோதிபதியாயிருக்கவேண்டும் (நியா. 11:6), 'கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர் மேலும் தலைவனாயிருக்கவேண்டும்' (நியா. 11:8) என்றார்கள். கீலேயாத்தின் பொயி குமாரர்கள் எங்கே போனார்கள்? யுத்தம் என்றவுடன் அவர்களது சத்தம் எங்கே போனது? சொத்துக்களுக்காக உரிமை கோரியவர்கள், போருக்காக உரிமைகோரவில்லையே. 'எங்கள் தகப்பன் வீட்டிலே உனக்கு சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன்' என்று சொல்லி அவனைத் துரத்திவிட்டிருந்த, அவனுடைய சகோதரர்களும் கீலேயாத்தின் மற்ற குமாரர்களுமானவர்கள் அம்மோனியரை எதிர்க்க பெலனற்றவர்கள் என்பதை தேசத்துக் குடிகளின் வார்த்தை வெளிப்படுத்துகின்றதே. அவர்களுடைய பெலத்தை சோதிக்கும் ஆபத்து வந்தபோது, அவர்கள் பெலவீனர்கள் என்று வெளிப்பட்டதே. துரத்திவிடப்பட்டிருந்த மனிதனை சேனாதிபதியாகவும், தலைவனாகவும் ஜனங்கள் அழைக்கும் நிலை உண்டானது. யுத்தம் செய்ய பெலமுள்ளவர்களை பாளையத்திலிருந்து துரத்திவிட்டு, பெலவீனர்களை மாத்திரம் பாளையத்தில் மிஞ்ச வைப்பது சத்துருவின் தந்திரம்; நாள் ஒன்று வரும், ஆபத்து கிட்டிச் சேரும், யுத்தம் நெருங்கும், அன்று பெலவான்கள் நம்மிடத்தில் இல்லையே என்ற ஜனங்கள் அங்கலாய்க்கும் சூழ்நிலை உண்டாகும்.

எதிரியோடு எப்படி பேசவேண்டும் என்பதை அறிந்தவன் யெப்தா, என்ன பேசவேண்டும் என்பதை அறிந்தவன் யெப்தா, யுத்தத்தின்போது யாரை முன்நிலைப்படுத்தவேண்டும் என்பதை தெரிந்திருந்தவன் யெப்தா. தேவன் எங்களுக்குக் கொடுத்த சுதந்தரத்தை நாங்கள் உமக்குக் கொடுப்பதில்லை என்ற தெளிவு யெப்தாவுக்கு இருந்தது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தை கட்டிக்கொள்ளத்தகுமோ? எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்கள் கட்டிக்கொள்கிறோம் (நியா. 11:23, 24) என்று கர்த்தரால் பெற்றதை சத்துருவுக்கு தெரியப்படுத்தினான். அதுமாத்திரமல்ல, நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்Nமுhன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் (நியா. 11:7) என்று சத்துருவுக்கும் தனக்கும் இடையே யுத்தத்தில் கர்த்தரை வைத்தான் யெப்தா. கர்த்தருடைய பட்சத்தில் இருந்த யெப்தாவின் மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினார். கர்த்தர் அம்மோன் புத்திரரை யெப்தாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்.

துரத்தப்பட்ட இஸ்மவேல் : ஆபிரகாமுக்குப் பிள்ளையில்லாதிருந்தபோது, சராள் ஆகாரை ஆபிரகாமுக்குக் கொடுத்து சந்ததியைக் காண விரும்பினாள். ஆகார் பிள்ளை பெற்றபோது, தாயாக ஆகார் ஆனந்தப்பட்டிருக்கலாம்; என்றபோதிலும், தனது வீட்டில் தனது கணவனுக்கு சந்ததி கிடைத்துவிட்டது என்று சாராள் அதிக ஆனந்தமடைந்திருக்கக்கூடும். இந்த ஆனந்தம் அனைத்தும் சாராள் பிள்ளை பெறும் வரையிலேயே. சாராள் பிள்ளை பெற்றதும், ஆகாரின் மகன் அடுத்தவனாகிப்போனான். சந்ததியாகப் பார்க்கப்பட்டவன், வீட்டில் சங்கடமாகப் பார்க்கப்படுகின்றான். தன்னுடைய பிள்ளையை சந்தோஷமாக தனித்துவமாக, பிள்ளைகள் விரும்பியபடியும், தனது விருப்பப்படியும் வளர்க்கவேண்டுமென்றால், ஆகாரையும், அவள் ஆபிரகாமுக்குப் பெற்ற பிள்ளையையும் துரத்துவதைத் தவிற வேறே வழியில்லை என்ற நிலைக்கு வந்தாள் சாராள். ஈசாக்கும், இஸ்மவேலும் விளையாடிக்கொண்டிருக்கும்போது, தன் பிள்ளையும் வேறொருவனும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே சாராளில் மேலோங்கி நின்றது. தன் பிள்ளைக்குக் கொடுக்கும் அத்தனை உரிமைகளையும், அத்தனை உணவுகளையும், அத்தனை சுகபோகங்களையும், அத்தனை அன்பினையும் இஸ்மவேலுக்குக் கொடுக்க விரும்பாதவளாயிருந்தாள் சாராள். தன் பிள்ளையாகிய ஈசாக்கிற்கு தனிக்கவனம் கொடுக்கவும், போஷிக்கவும், மகிழ்விக்கவுமே.

பிள்ளை என்றால் 'ஈசாக்கு மட்டும்தான்' வேறு பிள்ளை எனக்கு இனி இல்லை என்ற சுதந்தரமான வாழ்க்கைக்குள் வாழ சாராள் விரும்பினாள். இந்த குணம் சாராளில் முற்ற முற்ற, அதற்கு முடிவுகட்டிவிட விரும்பினாள். ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள் (ஆதி 21:10). 'அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன்' (ஆதி. 21:13) என்று கர்த்தர் சொன்னபோதிலும், சாராளோ அவனை வீதிக்கு அனுப்பிவிட்டாள். தள்ளப்பட்ட 'பிள்ளையின் சத்தத்தை கர்த்தர் கேட்டார்; பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்' (ஆதி. 21:17). ஆபிரகாமிடத்டதில் 'அவனையும் ஒரு ஜாதியாக்குவேன்' (ஆதி. 21:13) என்று கொன்ன கர்த்தர், ஆகாரினிடத்திலோ, 'அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்' என்றார் (ஆதி. 21:18). இத்தனை பெரிய ஜாதியாக கர்த்தர் மாற்ற நினைத்திருந்த இஸ்மவேலை வீட்டை விட்டே துரத்திவிட்டாள் சாராள்.

ஆபிரகாம் இஸ்மவேலோடு கூட இல்லாமற்போனாலும், சாராள் அவனோடு கூட இல்லாமற்போனாலும், சுகமான வீடு இல்லாமற்போனாலும், ஆபிரகாமின் ஐசுவரியங்களை இஸ்மவேலால் அனுபவிக்க இயலாமற்போனாலும், தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான் (ஆதி 21:20). இத்தனை பெலமுள்ளவனாக தேவன் மாற்ற நினைத்திருந்த இஸ்மவேல் மீது கர்த்தருக்கு இருந்த திட்டத்தை அறியாமல் அவனை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். இஸ்மவேல் ஈசாக்கோடு கூட இருந்தால், பின் நாட்களில் தன் பிள்ளைகள் ஏதாகிலும் பிரச்சனைகளைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் சாராள் எடுத்த முடிவு அது. இன்றோ, வீட்டுக்குள் இருந்து பெருகவேண்டியவன், வீட்டிற்கு வெளியே இருந்து பெருகுகின்றான்; பகையும் கூடவே பெருகிக்கொண்டேயிருக்கின்றது. வீசியவர்களால் உண்டான நாசம் இது.

தூரமாய் வைக்கப்பட்ட தாவீது

தாவீதின் வாழ்க்கையோ சற்று வித்தியாசமானது. இஸ்ரவேல் ஜனங்களை ஆள தெரிந்துகொள்ளப்பட்ட முதல் அரசன் சவுல், கீழ்ப்படியாமையினால் தேவ சமூகத்தினின்று தள்ளப்பட்டபோது, அடுத்த அரசனை தெரிந்துகொள்ளவேண்டிய பொறுப்பினை தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் கையிலே கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டு வா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார் (1சாமு 16:1). நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார் கர்த்தர் (1சாமு 16:3). சாமுவேல் பெத்லகேமுக்குச் சென்றான், அவனைக் கண்டதும் அவ்வூரின் மேய்ப்பர்கள் தத்தளிப்போடே அவனை எதிர்கொண்டு வந்தனர். தத்தளித்துக்கொண்டிருந்த அவர்களிடத்தில், கர்த்தருக்குப் பலியிட வந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான் சாமுவேல். மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான் (1சாமு 16:4,5). ஊரில் உள்ள மேய்ப்பர்கள் அனைவருக்கும் பலிவிருந்துக்கான அழைப்பு கொடுக்கப்பட்டது, அதுமாத்திரமல்லாது, ஈசாயின் குடும்பத்தினருக்கு விசேஷமான அழைப்பு கொடுக்கப்பட்டது.

பெத்லகேம் ஊர் மேய்ப்பர்கள் பலிவிருந்துக்கு வந்து சேர்ந்தார்கள், அப்படியே ஈசாயின் குடும்பமும் பலிவிருந்துக்கு வந்து சேர்ந்தது; ஆனால், தாவீதோ அழைப்பாரற்று மந்தையோடுகூட விடப்பட்டிருந்தான். சாமுவேலின் அழைப்பை, ஊராரும், அவன் சொந்த குடும்பத்தாரும்கூட தாவீதுக்கு அறிவிக்கவில்லை. அரசனாகவேண்டியவனை காட்டிலே விட்டு விட்டு மீதமுள்ள அனைவரும் விருந்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர். தீர்க்கதரிசி வந்திருக்கிறார், கர்த்தருக்கு பலியிடும் அறிவிப்பு; என்றாலும், தகப்பன் கூட தாவீதைத் தேடவில்லை. இந்த நிலையில் விடப்பட்டிருக்கும் மனிதர்கள் உண்டு. கர்த்தர் அழைத்த இடத்திற்கு மனிதர்கள் அவர்களை அழைப்பதில்லை; தங்களிலும் ஒருவனாகக்கூட மதிப்பதில்லை. கர்த்தருக்கடுத்த காரியங்கள் பல நடந்தாலும், அவர்களைக் காணாமல் விட்டுவிடுகின்றனர்.

ஈசாயின் குமாரர்களான எலியாப், அபினதாப், சம்மா உட்பட தன் குமாரரில் ஏழுபேர் சாமுவேல் தீர்க்கதரிசிக்கு முன்பாகக் கடந்துபோனார்கள். அனைவருக்கும் கிடைத்த பதில், 'நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்' என்பதே (1சாமு. 16:7). உன் பிள்ளைகள் இவ்வளவுதானா? என்று சாமுவேல் ஈசாயைக் கேட்டான். அதற்கு ஈசாய்: இன்னும் எல்லாருக்கும் இளைவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்க மாட்டேன் என்றான் (1சாமு. 16:11). அழைக்கப்படவேண்டிய, அரசனாக அபிஷேகம் பண்ணப்படவேண்டிய, இஸ்ரவேலின் மேல் தலைவனாக உயர்த்தப்படவேண்டிய தாவீது அழைக்கப்படாததால், போஜன பந்தியே நிறுத்தப்பட்டது.

எங்கே யார் இருக்வேண்டுமோ, அங்கே அவர்கள் கட்டாயம் இருந்தேயாகவேண்டும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மனிதனை மனிதர்கள் ஒதுக்கித் தள்ளினால், பந்தி நிறுத்தப்படும். அழைக்கப்பட்டவர்களுக்காக பந்தியில் காத்திருக்கிறவர் அவர். இன்று இதே நிலை அநேக இடங்களில் நடைபெறுகின்றது, தேவன் தெரிந்துகொண்டவர்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளாமல் ஒதுக்கித்தள்ளி தேவனை பந்தியில் சாப்பிடவிடாமல், தாங்கள் மட்டும் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். நீர் வேண்டுமென்றால் சாப்பிடாமல் இரும், நாங்கள் சாப்பிடுகிறோம். அவன் இல்லாவிட்டால் உம்மால் சாப்பிடமுடியாதிருக்கலாம், ஆனால், அவன் இல்லாமற்போனாலும் எங்களால் சாப்பிடமுடியும் என்று துணிந்து நிற்கின்றனர்; பந்தியில் இருக்கும் தேவனோ பட்டினியாயிருக்கிறார். தலைவர்களாக இருக்கவேண்டிய, நியமிக்கப்படவேண்டிய ஆவிக்குரியவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஊரையே கூப்பிட்டு விருந்துகொடுக்கும் ஊழியர்கள், ஊழியங்கள் அநேகம். தேவன் தெரிந்துகொள்பவர்களை, தாங்கள் தெரிந்துகொள்ள விருப்பமில்லாமற்போவதே அதற்கான பிரதான காரணம். அநேக ஊழியங்களில் தங்கள் சாமுவேல் தீர்க்கதரிசியைப் போல எண்ணப்படும், மதிக்கப்படும் ஊழியர்கள் பலர் தங்கள் குமாரர்களையே தலைவர்களாக்க முயலுகின்றனர்; ஈசாயின் குமாரன் அவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஊழியம் தடம்புரண்டதற்கும், ஊழியம் தடுக்கி நிற்கிறதற்கும், ஊழியங்கள் தடைபட்டுப்போனதற்கும், சத்துருவை எதிர்த்து நிற்கும் வீரர்கள் ஊழியத்தில் இல்லாமற்போனதற்கும், கோலியாத்தை எதிர்க்கும் பெலன் பெற்றோர் இல்லாமற் போனதற்கும், ஆவிக்குரிய பெலம் இல்லாமல் கெக்கரிக்கும், நிந்திக்கும் கோலியாத்திற்கு முன்பாக ஊழியங்கள் பல உட்கார்ந்துகொண்டிருக்கிறதற்கும் காரணம் இதுவே.

சீர்தூக்கிப்பாருங்கள்; கோலியாத்தினிடமிருந்து தேவஜனத்தைக் காக்கவேண்டியவனை, தேவஜனத்தின் மேல் சொல்லப்படும் நிந்தையை நீக்கவேண்டியவனை நீங்கள் எங்கே விட்டுவிட்டீர்கள் என்று ஆராய்ந்துபாருங்கள்? ஆட்டு மந்தையில் இருக்கும் அத்தகையோரை அழைத்தனுப்புங்கள் அவர்களாலேதான் வெற்றி; இல்லையெனில், கோலியாத்தைக் கண்டு புற்றிற்குள் புகும் நிலை உண்டாகும். பராக்கிரமசாலிகளை விட்டுவிட்டு போருக்கு வந்து நிற்கிறீர்களோ? அல்லது பராக்கிரமசாலிகள் இல்லாமல் போரில் வென்றுவிடலாம் என்று நினைக்கின்றீர்களோ? பராக்கிரமசாலிகளுக்கு ஆட்டு மந்தையைக் கொடுத்துவிட்டு, பெலவீனர்களுக்கு அரசாங்கத்தைக கொடுத்துவிட்டீர்களோ? யுத்தம் கர்த்தருடையது, கர்த்தருடன் இருப்பவர்களைக் கொண்டே கர்த்தர் யுத்தத்தை நடப்பிக்கிறவர். அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது (சங் 44:3) என்கிறான் சங்கீதக்காரன்.

தாவீது வந்து சேரும்வரை சாமுவேல் காத்திருந்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான் (1சாமு. 16:13). சகோதரன் என்று பாசத்தில் உரிமைபாராட்டிக்கொண்டாலும், தங்கள் மேல் அரசனாக தாவீது மாறுவதை அவர்கள் விரும்பாதவர்கள். தாவீது போர்முனைக்கு வந்து, மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீவின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான் (1சாமு 17:28). மந்தையில் இருக்கும் தாவீதை பந்தியில் அமர்த்துங்கள்; கோலியாத் விழும் விந்தை நடக்க காரணம் அவன்தான்.

தூக்கிப்போடப்பட்ட யோசேப்பு

யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுமேய்த்துக்கொண்டிருந்தான்; ஆனால், அவனோ சகோதரர்களைப் போல இல்லை, அவன் தேவனுடைய பிள்ளை. அவனுடைய சகோதரர்களோ துன்மார்க்கமாக வாழ்ந்துகொண்டிருந்தனர் (ஆதி. 37:2). அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள் (ஆதி 37:4). சகோதரர்களின் துன்மார்க்கத்தை யோசேப்பு தன் தகப்பனுக்கு அறிவித்துக்கொண்டிருந்தான்; அவனது பரமதகப்பனோ, அவனது மார்க்கத்தை அவனுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் சகோதரர்களின் பகை அவன் மீது மேலும் அதிகரித்தது (ஆதி. 37:5). 'உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது' என்று அவன் சொப்பனத்தில் கண்டதைச் சொன்னபோது, அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள் (ஆதி 37:8). அவனோ, பார்வோனுக்கு இணையாய் உயர்த்தப்பட தேவன் தெரிந்துகொண்ட மனிதன். அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது (ஆதி 37:9) என்று சொன்னபோது, யோசேப்பை பிரியமாய் நேசித்த தகப்பன் கூட, 'நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான்' (ஆதி 37:10). ஆளத்தெரிந்துகொள்ளப்பட்டவனை, ஆட்டுமந்தையை நோக்கியே திசைதிருப்புகிறான் அவனது தகப்பன்.

யோசேப்பு வருவதைக் கண்ட அவனது சகோதரர்கள், அவனைக் கொன்று, குழிகளில் ஒன்றில் போட்டு, தகப்பனுக்கு முன் நாடகமாட நினைத்தனர். அவனை தண்ணீரில்லாத வெறுங்குழியிலே போட்டுவிட்டு, போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள் (ஆதி. 37:24,25).தேவன் தெரிந்துகொண்டவனை குழியில் போட்டுவிட்டு பந்தியிருந்தனர் சகோதரர்கள். ஆனால், கர்த்தரோ யோசேப்போடுகூட இருந்தார். சகோதரர்கள் பந்தியிலிருந்தார்கள்; கர்த்தரோ யோசேப்போடுகூட குழியிலிருந்தார். எதிரிகள் சிங்கக்கெபியில், எரிகிற அக்கினிச் சூளையில் போட்டபோது, தேவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ, தானியேல் என்பவர்களுடன் இருந்தாரே; அவ்வாரே, யோசேப்பின் வாழ்க்கையிலும் நடந்தது. விற்றுப்போடப்பட்டபோதுகூட கர்த்தர் யோசேப்போடுகூட இருந்தார்; போத்திபார் என்பவனின் வீட்டில் இருந்தபோதும் கர்த்தர் உடனேயே இருந்தார்; யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது (ஆதி 39:5). தேவனைத் தேடுகிறவன் கூட இருக்கும்போது, அவன் இருக்கும் வீட்டிலும் ஆசீர்வாதம் கூட கொடுக்கப்படும். தேவனுடைய மனிதன் விற்கப்பட்டுப்போகும்போது, ஆசீர்வாதமும் அவனோடுகூட புறப்பட்டுப்போகும்.

அந்த வீடு சமாதானத்திற்கு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள் மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கே திரும்பக்கடவது (மத். 10:13) என்று இயேசு சொன்னாரே. தகப்பன் விடு ஆசீர்வதிக்கப்படுவதற்குப் பதிலாக எகிப்தியன் வீடு ஆசீர்வதிக்கப்படுகிறது. சகோதரர்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்குப் பதிலாக, சத்துரு ஆசீர்வாதத்தை பெறும் நிலைக்கு யோசேப்பை இழந்துவிட்டனர் சகோதரர்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்பது தேவ சட்டமல்லவா. தேவனுடைய ராஜ்யத்தை முதலில் தேடுகிறவர்களை வெளியேற்றிவிட்டு, ஆகாரத்தையும், ஆதாரத்தையும் இழந்து நிற்கும் கூட்டம் உண்டு. வேராயிருந்த அவர்களை வெளியேற்றிவிட்டால், மரம் விழுந்துபோகும் என்பதை தீர்க்கதரிசனம் கூறித்தான் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

யோசேப்பை எகிப்துக்கு அனுப்பியதால், தேவன் யாக்கோபையும் அவன் குமாரரையும் அப்பமெனும் ஆதரவை முறித்து எகிப்துக்கு அனுப்பினார். 'நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது' (ஆதி. 42:21) என்று யோசேப்பின் சகோதரர்கள் பேசினார்களே. தேவனுடைய மனிதர்கள் எகிப்திலே இருந்தாலும், அங்கே சென்று தானியம் கொள்ளவேண்டிய நிலைக்கு யோசேப்பின் வீட்டாரும், சகோதரர்களும் தள்ளப்பட்டனர். யோசேப்பை முன்னே அனுப்பிவைத்ததால், தேவன் அவர்களை பின்னே எகிப்துக்கு அனுப்பிவைத்தார். எகிப்துக்கு இஸ்ரவேல் குடும்பம் போனதன் ரகசியம் விளங்குகின்றதா? அன்று ஒருவனை விற்றீர்கள்; இன்றோ அனைவரும் அங்கு செல்லும் நிலை, பிற்காலத்தில் அடிமையாகவும் மாற்றப்பட்டு, பார்வோனால் வாதிக்கப்படும் நிலை. இப்படி இவர்கள் யோசேப்புக்குச் செய்வார்கள் என்பதைத்தான் அன்றே ஆபிரகாமுக்கு தீர்க்கதரிசனமாகச் சொன்னார் கர்த்தர். கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய் என்றார் (ஆதி 15:13). ஒருவனைக் குழிக்குள் போட்டுவிட்டு வீடே எகிப்துக்குப் போகும் என்பதை உணர்த்தும் தீர்க்கதரிசனமே அது.

பிரியமானவர்களே! தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், தேவனால் பயன்படுத்தப்படுகிறவர்களையும் அடையாளங் கண்டுகொள்ளுங்கள்; அவர்கள் உங்கள் வீட்டின், ஊரின், ஊழியத்தின், நாட்டின் ஆதாரங்கள் என்பதை மறந்துவிடாதிருங்கள். உலகத்திற்கே இரட்சிப்பை கொடுக்கும்படியாக வந்த இயேசுவையும் ஜனங்கள் புரிந்துகொள்ளாமல், புறம்பே தள்ளினார்கள், சிலுவையில் அறைந்தார்கள். வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது. அவரே நமது சரீரத்தின் தலையாயிருக்கவேண்டியவர் என்பதை அறியாமலும், நாம் கட்டும் அனைத்துக்கும் அவரே தலைக்கல் என்ற அறிவு இல்லாதமலும்போனதினால் அவரைத் தள்ளிவிட்டார்கள்.

பிரியமானவர்களே! தேவனையும், தேவனுடையவர்களையும் அடையாளங்கண்டுகொள்ளுவோம்; தேவசேனையின் பெலத்தை இழந்துவிடாதிருப்போம்.

மரம் வாழ வேண்டிய வேளையில்
வேர்கள் வாளாய் வாழ வேண்டும்
வேரைக் காக்கவேண்டியவரெல்லாம்
மரத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாமா?
மறைந்திருக்கும் வேரின் மேலேதாhன்
மரம் உயர்ந்திருக்கிறது என்று அறியுங்கள்
உயர உயர உயரும் மரமே
நீ உயர உயர வேர்கள் வேணுமே
மரத்தை விட்டு வேரை வெட்டியதே
மரங்கள் பட்டுப் போனதின் காணரங்கள்.