கல்லறைக்கா? கலிலேயாவுக்கா?


இயேசுவின் உயிர்த்தெழுதலின் சத்தியம், நித்தியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒர் நற்செய்தி. இயேசு உயிர்த்தெழுந்ததைச் சுவிசேஷமாகப் பிரசங்கிக்கும் நாமும் உயிர்த்தெழுதலை ஓர் நாள் சுவைக்க இருக்கின்றோம். இவ்வுலகத்தின் துன்பங்களுக்கும், துக்கங்களுக்கும், வியாகுலங்களுக்கும், போராட்டங்களுக்கும் விடுதலையாகி சுதந்திரவாளியாக பரலோகத்தில் உலாவ இருக்கின்றோம். அந்த நாள் எத்தனை மகிமையான நாள், எத்தனை இன்பமான நாள்.


ஓய்வுநாள் முடிந்து வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. அங்கிருந்த காவலாளர்கள் தூதனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள் (மத் 28:1-4). தூதன் கல்லைப் புரட்டியதும், இயேசுவின் சரீரத்தைத் தேடினார்கள் ஸ்திரீகள். அப்போது தூதன் அவர்களை நோக்கி: அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் (மத். 28:6) என்றான்.


'அவர் இங்கே இல்லை' 'வைத்த இடத்தை வந்து பாருங்கள்' என்று இயேசுவின் சரீரத்தைத் தேடி ஸ்திரீகளிடத்தில் சொன்னான் தூதன். அவர் கல்லறையில் இல்லையென்றால், தூதன் கல்லை ஏன் புரட்டித் தள்ளவேண்டும்? கல்லறைக்கு வெளியே நிற்கிற ஸ்திரீகளிடத்தில், 'இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார், அவர் கல்லறையில் இல்லை' என்று சொல்லி அவர்களை அனுப்பியிருக்கலாமே. அப்படி தூதன் அந்த ஸ்திரீகளை அனுப்பியிருந்தால், அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியினை அப்போது விசுவாசித்திருக்கமாட்டார்கள். இயேசுவைத் தேடிவந்த ஸ்திரீகள் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கண்டு விசுவாசிக்கும்படியாகவே கல்லறை திறக்கப்பட்டது. இயேசு உயிர்த்தெழுந்து கல்லறையிலிருந்து வெளியே வருவதற்காக கல்லறையின் கல் புரட்டித் தள்ளப்படவில்லை; காலியான கல்லறையை ஸ்திரீகள் பார்க்கும்படியாகவே கல் புரட்டித்தள்ளப்பட்டது.


லாசருவை இயேசு உயிரோடு எழுப்பியபோது, கல்லை ஜனங்கள் எடுத்துப்போட்ட பின்னரே, லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார் (யோவா 11:43-44). லாசரு உயிரோடு எழுப்பப்பட்டதற்கும், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் வித்தியாசம் உண்டு. லாசரு கல்லறையைத் திறந்தபின் உயிரோடு எழுப்பப்பட்டான்; ஆனால், இயேசுவோ, கல்லறையைக் திறக்காமலேயே உயிரோடு எழுந்து வந்தார். அப்படியே, கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் (யோவா 20:19). அப்படியே, இயேசு சிலுவையில் தொங்கிய நேரத்தில், கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள் (மத் 27:52,53). பரிசுத்தவான்களும் கல்லறையைத் திறந்த பின்னரே உயிர்த்தெழுந்து வெளியே வந்தனர்.


முதல் முறை, காலியான கல்லறையைக் கண்டதும், மகதலேனா மரியாள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள் (யோவா 20:2). இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற செய்தியை மரியாள் அறிவிக்கவில்லை, எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் என்ற செய்தியையே அறிவித்தாள். இரண்டாம் முறை, பேதுருவுடனும், மற்ற சீஷர்களுடனும் கல்லறையினிடத்திற்குச் சென்றாள் மரியாள். அப்போதும் காலியான கல்லறையைப் பார்த்த மரியாளின் நிலை துக்கமே. மற்ற சீஷர்களோ காலியான கல்லறையைக் கண்டதும், இயேசுவை யாரோ எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்று எண்ணி, தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப் போனபோய்விட்டனர்; ஆனால், மரியாளோ திரும்பிப்போக மனதற்றவளாக, கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள் (யோவான் 20:10,11).


தூதன் கல்லைப் புரட்டி, காலியான கல்லறையை ஸ்திரீகளுக்குக் காட்டியபோதிலும், மரியாளின் மனதில் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற நம்பிக்கை உண்டாகிவிடவில்லை. என் ஆண்டவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை (யோவா 20:13) என்றே அழுதுகொண்டிருந்தாள் மரியாள். ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் (யோவா 20:15) என்று தொடர்ந்து இயேசுவின் சரீரத்தையே தேடிக்கொண்டிருந்தாள் மரியாள். மரியாள் கல்லறைக்கு வந்தபோது, கல்லறையின் கல் புரட்டப்படாமலிருந்தது, காவலர்கள் கல்லறையைக் காத்துக்கொண்டிருந்தனர் அப்படியிருக்க, அடைக்கப்பட்டிருந்த கல்லறையிலிருந்து யார் இயேசுவின் சரீரத்தைத் திருடியிருக்க முடியும்? இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பவே முடியாத நிலையில்தான் மரியாள் காணப்பட்டாள்; அவள் தேடியதெல்லாம் இயேசுவின் சரீரமே, இயேசுவை வைத்த இடமே. நேரடியாக தான் தரிசனமாகாத பட்சத்தில், தான் உயிர்த்தெழுந்ததை மரியாள் விசுவாசிக்கமாட்டாள் என்பதை அறிந்த இயேசு, மரியாளுக்கு நேரடியாகத் தரிசனமாகி, 'மரியாளே' என்றார். அவள் திரும்பிப் பார்த்து: 'ரபூனி' என்றாள் (யோவா 20:16). இயேசு உயிர்த்தெழுந்து, சீஷர்களுக்கும் தரிசனமானார். ஆனால், தோமாவோ இயேசு வந்திருந்தபோது அங்கு இல்லை. கர்த்தரைக் கண்டோம் என்று மற்ற சீஷர்கள் சொன்னபோது, தோமாவோ, அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.(யோவா 20:25)


இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூருகிற நாமும் இன்று இத்தகைய நிலையில் காணப்படுகின்றோமா? மற்றவர்களின் மூலமாக நமக்குச் சொல்லப்படும் நற்செய்தியினை மனதார ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறோமா? இரட்சிப்பின் செய்தியை உலகமெங்கும் சுவிசேஷமாக அறிவிக்கும் நாம் எதிர்கொள்வதும் இதுதான். இயேசுவை வாழ்க்கையில் சுவைத்த நாம், அவரது அன்பை அனுபவித்த நாம், அவரது அற்புதங்களை கண்ணாரக் கண்ட நாம், அவரே வழியும், சத்தியயும், ஜீவனுமாயிருக்கிறார் என்ற சத்தியத்தை அறிந்த நாம், அவரை அறியாத மற்றவர்களுக்கும் அதனைச் சொல்ல முற்படும்போது, அவர்களோ அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இயேசு செய்த அற்புதங்களைக் கண்டு விசுவாசித்தோர் கூட்டமும் உண்டு, அப்படியே இயேசுவின் வார்த்தைகளை வேதத்தின் வழியே கண்டு அப்படியே விசுவாசித்து அல்லது மற்றவர் மூலம் நற்செய்தியைக் கேட்டு அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசித்தோரும் உண்டு. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யோவா 20:29) என்ற பாக்கியவான்களின் பட்டியலில் நாம் உண்டா?


கல்லறையின் கல் புரட்டப்பட்டது, நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்க மாத்திரமல்ல, எதிரிகளுக்கும் எச்சரிப்பு விடுக்கவே. கல்லறையின் கல் புரட்டப்படாதிருந்திருக்கும் என்றால், இயேசு இன்னும் உள்ளேதான் இருக்கிறார், அவர் உயிர்த்தெழவில்லை, கல்லறை அடைக்கப்பட்ட நிலையில் பத்திரமாக காவலர்களால் இன்னும் பாதுகாப்பாக இருக்கிறது என்று எதிரி ஏளனம் பேசியிருப்பான். எனவே, எதிரியின் வார்த்தைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் இடங்கொடாதிருக்க, கல் புரட்டப்பட்டபோது எதிரிக்கும் எச்சரிப்பு விடுக்கப்பட்டது. மரணத்திற்குப் பின் நீ இனி என்னை ஒன்றுமே செய்யமுடியாது என்ற செய்தி எதிரியின் காதில் எக்காளமாய் ஊதப்பட்டது.


அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள் (மத் 28:7) என்றான் தூதன். இயேசு உயிர்த்தெழுந்த பின்னர் செய்த காரியத்தையே இன்றும் நாம் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றார்.
தூதர்கள் கல்லறையின் கல்லைப் புரட்டித் தள்ளும் முன்னரே இயேசு உயிர்த்தெழுந்து கல்லறையிலிருந்து புறப்பட்டு கலிலேயாவுக்குச் சென்றுவிட்டார். இயேசு கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, நாமோ காலியான கல்லறையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கக்கூடாது. இயேசு உயிர்த்தெழுந்து சென்றதை அறியாமல், காலியான கல்லறையினையே காத்துக்கொண்டிருந்தனர் காவலர்கள். கல்லறையை தூதன் திறந்ததும், இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை அறிந்த சேவகர்கள், உடனே நகரத்திற்குள் சென்று பிரதான ஆசாரியரிடத்தில் அச்செய்தியை அறிவித்தனர். நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் (மத் 28:13) என்ற செய்தியையே காவலர்களும், மூப்பரும், பிரதான ஆசாரியரும் யூதருக்குள்ளே பரம்பச் செய்தார்கள். அதுவும், பணத்தைப் பெற்றுக்கொண்டே அவர்கள் அதனைச் செய்தனர். உண்மையான இயேசுவின் உயிர்த்தெழுதலை ஜனங்கள் நம்பிவிடக்கூடாது, என்று பொய்களை ஊதத்தொடங்கினர் சேவகர்கள். சேவகர்கள் நகரத்தில் பொய்களை ஊதிக்கொண்டிருக்கும்போது, நாம் கல்லறையில் நின்றுகொண்டிருந்தால் என்னவாகும், சத்துருவின் சத்தத்திற்கு செவிகொடுத்து பலர் திசைமாறிவிடுவார்களல்லவா?


இன்று, சத்துருவும் இத்தகைய செயலைச் செய்துவருகிறான். 'எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்' என்று அவர்கள் பரப்பும் செய்தியையே, நமது வாயாலும் சொல்லவைக்க பிரயத்தனம் செய்கிறான் பிசாசு. இன்றும் சத்துரு இந்தக் காரியத்தை நகரத்தில் செய்துவருகிறான். சுவிசேஷத்திற்கு விரோதமாக ஜனங்களின் மத்தியில் கிரியை செய்துவருகின்றான். சத்துரு இத்தனையாய் வைராக்கியங்கொண்டு செயல்படும்போது, உயிர்த்தெழுந்துவிட்டார் என்ற உண்மைச் செய்தியை அறிந்த நாம், எத்தனையாய் சுவிசேஷத்தைப் பரப்பவேண்டும். நாட்கள் பொல்லாதவைகளானபடியால், காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்வோம். 'இயேசு எடுத்துக்கொண்டு செல்லப்படவில்லை, அவர் உயிரோடு எழுந்தார்' என்ற செய்தியை அறிவிக்க நாம் நகரங்களுக்குள் பிரவேசிக்கவேண்டியது எத்தனை அவசரம், தீவிரம் காட்டுவோம், தீயோனின் செய்தியில் சிக்கிக்கிடக்கும் மாந்தரை மீட்டெடுப்போம். கல்லறையில் தேடாமல், நாம் கலிலேயாவுக்குப் புறப்படுவோம்.