புருஷனுக்குப் பதவி, ஆடுவதோ மனைவி

 

பலமில்லாத மனிதர்கள் பதவியில் இருக்கும்போது, பக்கவழியாக உள்ளே நுழைந்து, தனது பெலத்தைப் பயன்படுத்தி ஜனத்தை வீழ்த்த திட்டம் தீட்டுபவன் சத்துரு. தங்களது சக்தியைப் பயன்படுத்தி சாதிக்கவேண்டுமென்றால், அதற்குச் சாதகமானவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்; இதையே சத்துருக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். பலமில்லாத ராஜாவாயிருந்தால், அவனது அதிகாரங்கள் அனைத்தும் அடுத்தவரால் சூரையாடப்படும், அடுத்தவரது ஆலோசனையினால் ராஜாவின் கட்டளை பிறக்கும். இராஜாக்களை மாத்திரமல்ல, உலகின் பல தலைவர்களைக் கவிழ்க்க இந்தக் கலையினை இன்றும் அவன் பயன்படுத்திவருகின்றான். நண்பர்களாய் நின்றுகொண்டு, குடும்பத்தில் ஒருவராக இருந்துகொண்டு, உடன் ஊழியராக பணிசெய்துகொண்டு நம்மை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்களைக் குறித்து கவனமாயிருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். தனது மனதின் விருப்பத்தை நிறைவேற்ற தலைவர்களை பயன்படுத்திக்கொள்ளும் மனிதர்கள் ஏராளம். உயர்பதவியிலிருப்போரோடு ஒட்டிக்கொண்டும், மேலிடத்திலிருப்போரோடு தோள்சேர்ந்துகொண்டும் மெல்ல மெல்ல தங்களது இதயத்தின் விருப்பத்தை அவர்களின் இதயத்திற்குள் செலுத்த முயலும் மக்கள் பலர். மற்றவரைக் குறித்து குறைகூறி, பிறரைக் குறித்த தவறான அவதூறுகளையும், நிரூபிக்கப்படாத காரியங்களையும் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு விரோதமாக தலைமைத்துவத்திலிருப்போரை திருப்பிவிடும் குணம் கொண்டோரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். பதவியில் நீங்கள் இருக்கும்போது, தேவனுக்கு விரோதமாக உங்களை சத்துரு ஆட்டுவித்துவிடாதபடி ஜாக்கிரதையாயிருங்கள். பிறர் மீது கொண்டுள்ள நல்லெண்ணங்களை தகர்த்தெறிந்துவிடும்வண்ணம் தலைவர்களிடம் பேசும் அன்பு உள்ளங்களை அடையாளம்கண்டுகொள்ளுங்கள். மனிதர்களாலும், மனிதர்களின் வார்த்தைகளினாலும் வெல்லப்படாதிருங்கள்; தேவனையே சார்ந்துகொள்ளுங்கள்.

எனது தந்தை மரணப்படுக்கையிலிருந்தபோது, அவரைச் சந்திக்கும்படி சென்றிருந்தேன். அவரது படுக்கையைச் சுற்றி பிள்ளைகள் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். எழுந்திருக்க தன்னால் இயலாத அந்நிலையிலும், எங்களைக் கண்டதும் அவர் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்தார்; எனது தாயார் முதுகுப்புறமாக தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவர் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் அதிகரித்திருந்தது. தன்னுடைய பெட்டியிலிருந்து பையை எடுத்துவரச் சொல்லி, நின்றுகொண்டிருந்த அனைவருக்கும் நூறு ரூபாய் பணம் கொடுத்தார், அப்போது, அவர் எங்களை நோக்கி, 'நீங்கள் நல்லவர்கள் என்று நினைப்பவர்களும் உங்களுக்குப் பொல்லாப்பு செய்யலாம், கவனமாயிருங்கள்' என்பதே. இதுதான் எனது தந்தையின் வாயிலிருந்து நான் கேட்ட இறுதிவார்த்தை. ஆம், பிரியமானவர்களே; சுற்றியிருக்கும் மனிதர்கள் நம்மை சுற்றி வளைந்துகொள்ளக்கூடாது. சுற்றியிருக்கும் மனிதர்கள் நமது வாழ்க்கைக்கு சுருக்காக மாறிவிடக்கூடாது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பல்வேறு யூகங்களின் அடிப்படையில் அடுத்தவரின் மீது படையெடுப்பதும்; அடுத்தவரை அழித்துவிட நினைப்பதும், சத்துருவின் கைகளில் நாம் பிடிக்கப்பட்டுவிட்டதையே குறிக்கும். பிறருக்குப் பொல்லாப்பு செய்யவும், தேவனுக்குப் பொல்லாப்பு செய்யவும் உங்களை விற்றுப்போடாதிருங்கள்.

அடுத்தவர்களால் ஆட்டுவிக்கப்பட்ட சிலரது வாழ்க்கை இன்று நமது வாழ்க்கைக்கான பாடங்கள்.

அரசனை ஆண்ட அரசி

ஆகாப் இஸ்ரவேலின் ராஜா. அவன் இஸ்ரவேலை ஆண்டபோது, தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். நோபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினான். அத்துடன், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டான் (1இரா 16:30,31).

ஆகாப் யேசபேலை விவாகம் செய்தபோது, அவனுடைய ஆளுகையின் பிடி யேசபேலின் கைக்கு இடம்மாறியது. பாகாலை வணங்கும் பெண்ணை மணமுடித்ததினால், பாகாலுக்கு கோவில்களையும், பலிபீடத்தையும், விக்கிரத்தோப்பையும் உண்டாக்கினான். விக்கிரகங்களை வணங்கும் பெண்களைத் திருமணம் செய்வதினால் என்ன பிரச்சனை? அவர்களை இயேசுவின் பக்கம் இழுத்துக்கொள்ளலாமே? அவர்களை நம்முடைய வழிக்குக் கொண்டுவந்துவிடலாமே என்று சவாலோடு கேள்விகளை முன்வைப்போர் ஆகாபை; போல அகப்பட்டுக்கொள்வது உறுதி. சாலமோனின் வாழ்க்கையும் விக்கிரகங்களை வணங்கும் ஸ்திரீகளை விவாகம் செய்ததினால்தானே வீழ்ந்துபோனது. கர்த்தருக்காக எத்தனை பெரிய ஆலயத்தைக் கட்டிய அவனை, விக்கிரகங்களை வணங்கும் ஸ்திரீகள் தங்களுக்கும் கோவில் கட்டுகிறவனாக மாற்றிவிட்டார்களே. அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள் (1இராஜா. 11:3). யாக்கோபு காதலித்து மணமுடித்த ராகேல் விக்கிரகங்களை வணங்குகிறவளாகவே இருந்தாள். யாக்கோபு புறப்பட்டபோது, புருஷனுக்குத் தெரியாமல் தெய்வங்களைத் திருடிவைத்திருந்தாள் (ஆதி. 31:32). கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார் (ஆதி 31:3); ஆனாலும், அந்த தேசத்திற்கு விக்கிரகங்களை வணங்கிய ராகேலை அழைத்துச் செல்லவில்லை. அந்த ராகேல், வழியிலேயே மரித்து அடக்கம்பண்ணப்பட்டாள் (ஆதி. 35:19). அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே (2கொரி 6:14-16) என்று பவுல் நம்மை எச்சரிக்கின்றாரே.

யேசபேல், அரசனும் கணவனுமான ஆகாபை தன்வசமாக்கிக்கொண்டது மாத்திரமல்லாமல், கர்த்தரின் தீர்க்கதரிசிகளை தேசத்தில் இல்லாமற்போகப்பண்ணவேண்டுமென்றும், பாகாலை வணங்குகிறவர்கள் மாத்திரமே தேசத்தில் இருக்கவேண்டும் என்றும், பாகாலின் கோயில்கள் மட்டுமே தேசத்தில் காணப்படவேண்டும் என்றும் வெறியுடன் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கத் தொடங்கினாள் (1இராஜா. 18:4,13). யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஆகாபின் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஓபதியா (1இராஜா. 18:3) நூறு தீர்;க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.(1இரா 18:4)

அதுமாத்திரமல்ல, நிலங்களை அபகரிக்க, குடிமக்களையும் கொலை செய்தாள். யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது (1இரா 21:1). உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப் பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான் ஆகாப் (1இரா 21:2). நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான் (1இராஜா. 21:3). நாபோத்தின் வார்த்தையினிமித்தம் சலிப்பும் சினமுமாய் தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின்மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தான் ஆகாப். உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன? என்று யேசபேல் கேட்டு அறிந்துகொண்டபோது, யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லி, ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பிளாள் (1இராஜா. 21:7,8). ஒரு நிலத்தை அபகரிப்பதற்காக, 'தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள்' என்று எழுதினாள் (1இரா 21:10). யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டபடியே செய்தார்கள் (1இரா 21:11). ஆகாபின் பெயரில் நிருபங்கள் வந்தாலும், அது யேசபேல் அனுப்பினதுதான் என்பதை ஜனங்கள் அறிந்திருந்தார்கள். நாபோத்தைக் கொன்று அவனது திராட்சத் தோட்டத்தை பிடுங்கிக்கொடுத்தாள். மனைவி ஆசைப்பட்டால் கணவன் வாங்கிக்கொடுப்பான்; இங்கோ, கணவன் ஆசைப்பட்டதை மனைவி வாங்கிக்கொடுக்கும் நிலை. தேசம் ஆகாபின் கையில் அல்ல யேசபேலின் கையிலேயே இருந்தது.

ஆகாபின் அக்கிரமத்தினாலும், யேசபேலின் செயலினாலும் கோபமடைந்த கர்த்தர். ஆகாபை எச்சரிக்கும்படியாக எலியாவை அனுப்பினார், எலியா ஆகாபை நோக்கி: 'என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்' என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான் (1இரா 17:1). தேசத்தில் தீர்க்கதரிகளை கொலை செய்கிறவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்தார் தேவன். தேசத்தில் பஞ்சத்தை வரப்பண்ணினார். இந்த பஞ்சம் யேசபேலின் செயலினாலும், ஆகாபின் அக்கிரமங்களினாலும் உண்டானது; அவர்களே பொறுப்பாளிகள். தேசம் வீழ்ந்துகொண்டே செல்வதற்கும், பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதற்கும், விலைவாசி ஏறிக்கொண்டே செல்வதற்குமான காரணம் இதுவே. தேசத்தில் பஞ்சம் கொடிதாயிருந்தது (1இராஜா. 18:2); என்றாலும், பஞ்சத்தைக் குறித்து கவலை கொள்ளாமல், அதற்கு காரணம் என்ன? என்பதை அறிய விழையாமல், பஞ்சத்திலிருந்து மக்களைக் காக்கும் வழிகளை யோசிக்காமல், தீர்க்கதரிசிகளைக் கொல்லுவதையே தனது வேலையாக்கிக்கொண்டாள் யேசபேல்.

பஞ்சம் கொடிதாயிருந்த காலத்தில், கர்த்தர் எலியாவை நோக்கி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார் கர்த்தர் (1இரா 18:1); என்றாலும், பாகால் தீர்க்கதரிசிகள் அழிக்கப்பட்ட பின்னர், ஜனங்கள் அனைவரும் 'கர்த்தரே தெய்வம்' என்று கோஷமிட்ட பின்னரே கர்த்தர் மழையை வருஷிக்கப்பண்ணினார். பாகால் தீர்க்கதரிசிகளை வெட்டிப்போட்ட பின்னர் எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான் (1இராஜா. 18:41).

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும் ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான் (1இரா 19:1). கர்த்தரே தெய்வம் என்று நிரூபிக்கப்பட்டபோதிலும், யேசபேலோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் என்ன சொன்னாலும், எப்படி நிரூபித்தாலும், 'பாகாலே தெய்வம்' என்பதில் பிடிவாதமாயிருந்தாள்; அவள். எனவே, தனது போராட்டத்தை தொடர்ந்தாள், மேலும் தீவிரமாக்கினாள். ஆத்திரமடைந்த யேசபேல், எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: பாகால் தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள் (1இரா 19:2). எலியாவைக் கொன்றுவிட்டு, கர்த்தரின் தீர்க்கதரிசிகள் அனைவரையும் அழித்துவிட்டு பாகாலை மட்டுமே தேசத்தில் தெய்வமாக்கிவிடவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டாள் யேசபேல். கர்த்தருடைய ஊழியர்கள் பிடிபடலாம், ஆனால், கர்த்தர் பிடிபடுவாரோ? 'கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்' என்று சொல்லிக்கொண்டிருக்கிற, சாட்சியிட்டுக்கொண்டிருக்கின்ற ஜனங்களைப் பிடித்து அழித்துவிடுவதினால், விக்கிரகங்கள் தெய்வமாகிவிடாதே.

தேசத்தை ஆளுவது யாராக இருந்தாலும், யேசபேல்களைப் போன்ற பல கிறிஸ்தவ விரோத அமைப்புகளே இன்று தேசத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரை ஆட்டுவிக்கும் அமைப்புகள் இவைகளே. இவர்களாலேயே நிருபங்கள் எழுதப்படுகின்றன, திட்டங்கள் தீட்டப்படுகின்றன, சட்டங்கள் இயற்றப்படுகின்றன, தேசத்தின் முத்திரை குத்தப்படுகின்றன. அரசாங்கத்தின் பேரில் செய்திகள் வெளியே வந்தாலும், அவை அத்தனையும் யேசபேலைப் போன்ற அமைப்புகள் எழுதுகிறவைகளே. ஆட்சியாளர்களை ஆட்சி பீடத்தில் பொம்மைக்கு அமர்த்திவிட்டு, விக்கிரகங்களின் கோவில்களை வீறுகொண்டு கட்டுகின்றனர். தேவஜனத்தையோ, தேவஜனங்கள் தொழும் ஆலயங்களையோ தேசத்திலிருந்து இடித்துத் தள்ளி, தேசத்தை தங்களுடையதாகவே மாற்றிக்கொள்ளத் துடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆகாப் ஆண்டுகொண்டிருக்கிறான், யேசபேலாக அவன் மனைவிகள் தேசத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட ஆவிகள் சபைகளுக்குள்ளும், ஊழியங்களுக்குள்ளும் காணப்பட்டுவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருப்போம். ஸ்தாபனங்களிலும், சபைகளிலும் ஊழியர்களை விஞ்சி நிற்கும் மனைவிமார்கள் உண்டு. 'போங்கங்க, உங்களுக்கு ஒன்னுந்தெரியாது, அத அப்படிச் செய்தாத்தான் சரியா இருக்கும்' என்ற மனைவியின் ஆலோசனையினால் சரிந்து நிற்கும் கோபுரங்கள் உண்டு. வீட்டுக்குள் தலையான புருஷனுக்கு அடங்கியிராமல், வீட்டுக்கு வெளியே புருஷனின் பெயரைக் கொண்டு ஆட்சிசெய்கிறவர்கள் அநேகர். புருஷனை மதிக்கும் போர்வையில், அத்தகையோரிடம் புதைந்துபோனவர்கள் உண்டு. ஊழியங்கள் பல ஒன்றுமில்லாமற்போனதற்கு இதுவும் ஓர் காரணம். தலைமைத்துவத்தில் இருக்கும் தலைவரைப் போன்ற ஆவிக்குரிய நிலை, அவருடைய மனைவியினிடத்திலோ அல்லது அவரது பிள்ளைகளிடத்திலோ காணப்படாதிருக்கும்போது, அவர்களால் வரையப்படும் நிருபங்களை அப்படியே ஏற்றுக்கொள்வோமென்றால், பல நாபோத்களின் கொலைக்கு நாம் காரணமாகிவிடுவோம். பல திராட்சைத் தோட்டங்கள் கீரைக்கொல்லையாக்கப்படும். கனிகொடுக்கும் திராட்சைச் செடிகளை அகற்றிவிட்டு, இலையோடு மாத்திரம் நிற்கும் கீரைகளையே விரும்புகிறவன் சத்துரு. பிரியமானவர்களே! சபைகளில், ஸ்தாபனங்களில் கர்த்தருக்காக கனிகொடுக்கும் நபர்களை அகற்றிவிட்டு, கீரைச் செடிகளை நட்டுவிக்க சத்துரு எடுக்கும் முயற்சிகளை அடையாளம்கண்டுகொள்ளுங்கள். கீரைச்செடிகளைக் கொண்டுவந்து, அர்ப்பணிப்போடு ஊழியம் செய்துகொண்டிருக்கும் திராட்சைச் செடிகளை அகற்றிவிடவேண்டாம். சத்துருவின் இந்த தந்திரத்தை புரிந்துகொள்ளாத பலர், தங்கள் ஊழியங்களில் கனிகொடுப்போரை இழப்பதைக் குறித்து கவலைகொள்ளுவதில்லை, கீரைகள் வளர்ந்து கனிகளை அகற்றும்போது கண்டுகொள்ளுவதில்லை. களைகள் வந்து பல திராட்சைச் செடிகளை வெந்துபோகச் செய்துவிடுகின்றன.

இயேசு வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று (மத் 21:19). கனிகளை அகற்றிவிட்டு, இலைகளோடு உங்களை நிற்கவைப்பதுதான் யேசபேலின் யோசனை.

நிருபம் யாரிடமிருந்து வருகிறது என்பதில் கவனம் தேவை. தந்தையின் பெயரைக் கொண்டு, பிள்ளைகள் வரையும் கடிதங்களையும், புருஷனின் பெயரைக் கொண்டு மனைவி வரையும் கடிதங்களையும், சத்ருருவுக்கு அவர்கள் இடங்கொடுத்திருப்பார்களென்றால், ஊழியத்தை உடைக்க சத்துரு பயன்படுத்தலாம்.
யேசபேல் எத்தனையாய் ஆடிக்கொண்டிருந்தாலும், அவளது ஆட்டத்தை யெகூவைக் கொண்டு ஆட்டத்திற்கு முடிவுகட்டியதே நமது வெற்றிக்கு அடையாளம்.

கோரேஸ் அனுமதித்ததால் கோபம்

நேபுகாத்நேச்சாரின் நாட்களில், இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டனர். எனினும், கோரேஸ் ராஜா தனது நாட்களில், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயம் கட்டும் அனுமதி அளித்தான். நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர்களிடத்தில் ஒப்புவித்து, 'தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்தில் கட்டப்படவேண்டும்' என்றும், அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக என்றும் கட்டளையிட்டான் கோரேஸ் ராஜா (எஸ்றா 5:15, 6:4). கர்த்தருடைய ஜனங்கள் ஆலயத்தைக் கட்டும் பணியினைத் தொடங்கினர்.

அதனை, சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது (எஸ்றா 4:1) அவர்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, அவர்களுக்கு விரோதமாக எழும்பினர். ஆலயத்தின் கட்டுமானப்பணியினை எப்படியாகிலும் தடுத்துவிட முயற்சித்தனர். பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள் (எஸ்றா 4:5). தேவாலயத்தைக் கட்டும் பணியினைத் தடுக்க தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். ராஜாவே அனுமதி அளித்திருக்க, இவர்களோ அதற்கு விரோதமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். பின்பு அகாஸ்வேரு ஆட்சி செய்தபோது, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள். பின்னர், அர்தசஷ்டா ராஜாவாயிருந்தபோது, சத்துருக்கள் ராஜாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய பாஷையிலும் எழுதியிருந்தது (எஸ்றா 4:7).

அதில், 'நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால், உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக் கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக. இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள்; அதினால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக. இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்' (எஸ்றா 4:11-14) என்று எழுதினார்கள். சத்துருக்களின் மனுவை விசாரித்த ராஜா, இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்ணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள் என்றான் (எஸ்றா 4:21). அந்த உத்தரவு கிடைத்ததும், அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள் (எஸ்றா 4:23). ராஜாவே உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும், அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு ஆட்சியின்போதும் அவர்கள் கூக்குரலிட்டுக்கொண்டேயிருந்தனர். சாதகமான ஆட்சி வந்தபோது, சாதித்துவிடத் துணிந்து நின்றார்கள். தேசத்தை ஆண்ட முந்தைய ராஜா கட்டளையிட்டிருந்தபோதிலும், 'இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார்?' (எஸ்றா 5:3) என்று கேட்டார்கள்.

இன்றைய நாட்களிலும், தேசத்தில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என்று முழக்கமிட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினர் உண்டு. அரசாங்க ஆணையையே இவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; அரசு ஆணை பிறப்பித்துவிட்டால், இவர்கள் தங்கள் பெலத்தைக் காட்டத் தொடங்குவார்கள்.

எனினும், தரியு ராஜாவானபோது, மீண்டும் தேவ ஜனங்களுக்கு தேவாலயத்தைக் கட்ட அனுமதி கிடைத்தது. ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது (எஸ்றா 6:15). எத்தனை முயற்சிகள் செய்தாலும், எத்தனை சட்டங்களை இயற்றினாலும், தடைச் சட்டங்களை பிறப்பித்தாலும், ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதே நமது வெற்றிக்கு அடையாளம்.

இன்றைய நாட்களிலும் நடப்பது இதுதானே, தேசம் பல்வேறு காரியங்களால் சீர்குலைந்துகொண்டிருக்கிறது, ஒருபுறம் உணவுக்கான திண்டாட்டத்துடன் வறுமைக்கோட்டின் கயிற்றிலே தொங்கிக்கொண்டிருக்கும் கூட்டம், மதுபானத்தினால் வெறித்து கூத்தாடி குடும்பங்களை சூறையாடும் நிலை, வேசித்தனங்களும் விபச்சாரங்களும் குறிப்பிட்ட இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே பாவிக்கப்படும் கொடுமை, கொலை, கொள்ளை, பல்வேறு எத்தலும் ஏமாற்றுகளும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, பாலிய வன்கொடுமைக்குள் பச்சிளம் சிறார்களும் சிறைவைக்கப்படும் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், மின்சாரப் பற்றாக்குறை இன்னும் எத்தனையோ எத்தனையோ. ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகங்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான் (1இரா 18:5). இவைகளையெல்லாம் சத்துரு மறக்கடித்துவிட்டு, தேசத்தை அழிய விட்டுவிட்டு, தேவ ஜனங்களுக்கு விரோதமாக தொடரும்படி செய்வதுவே அவனது தந்திரம். சவுல் தாவீதை தொடர்ந்தான்; ஆனால், சவுலின் தேசத்தின்மேலோ பெலிஸ்தியர்கள் படையெடுத்துவந்துவிட்டார்கள். ஆளுகிறவர்கள், அதிகாரம் பெற்றவர்கள் தேசத்திற்குச் செய்யவேண்டியதைக் குறித்து கரிசனைகொள்ளாமல், ஆண்டவரையே அவர்களது எதிரியாகக் கொண்டு செயல்பட்டால் தேசத்தின் நிலை இப்படித்தான் மாறும். கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது (ஆமோஸ் 9:8). தேசத்தை ஆளுகிறவர்களே! நீங்கள் தேசத்தைப் பாருங்கள், தேசத்திற்கு நன்மையுண்டாக யோசியுங்கள், அவைகளை விட்டுவிட்டு ஆண்டவரோடு போராடாதீர்கள்; அது சித்திக்காது. தேசம் யாரால் சீர்குலைகிறது என்பதை அறியாமல், தேவ ஜனத்தையே குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தான் ஆகாப். ஆகாப் மட்டுமல்ல, ஆமானும் சொன்னது இதுதானே! ஆக்க அனுப்பப்பட்டவர்கள் அழிக்க குறிவைக்கப்படுகிறார்கள்.

ஆட்சி செய்த ஆமான்

ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.(எஸ்தர் 3:2)

அரன்மனையில் அவன் உயர்தப்பட்டவனாயிருந்ததால், ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி, நமஸ்கரித்துவந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை (எஸ்தர் 3:2). வணக்கத்திற்கும், வணங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்திருந்தவன் மொர்தெகாய். வணக்கம் சொல்வது யூத கலாச்சாரத்தில் இருந்தது, ஆனால் அவர்கள் வணங்குவதோ கர்த்தர் ஒருவரையே. அந்த வணக்கத்தை மனிதர்களுக்குச் செலுத்துவதில்லை. வணக்கம் செலுத்துகிறோம் என்ற போர்வையில் பலரை ஜனங்கள் வணங்கிவிடுகின்றனர்; தேவன் அதனை விரும்புகிறவரல்ல. தலைவர்களின் காலுக்கு அருகே முகங்குப்புற கிடக்கும் ஜனங்களை என்னவென்று சொல்லுவது? தாங்கள் வணங்கப்படவேண்டும் என்பதும் பல தலைவர்களின் விருப்பமாகிவிட்டது. தலைவர்களிடம் அதிக பழக்கத்தை உருவாக்கிக்கொண்டு, தலைவர்களின் மறுஉருவமாக செயல்பட விரும்பும் மனிதர்கள் அநேகர். அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்தும், தாங்கள் தலைவருக்கு நெருங்கியவர்கள் என்பதையும், குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் என்பதையும், தாங்கள் சொன்னால் தலைவர் கேட்பார் என்பதையும், தலைவரை அதிகம் தெரியும் என்பதையுமே அடிக்கடி சுட்டிக்காட்டும். எவ்விடங்களிலும், தலைவர்களின் அருகிலேயே அடையாளம் காட்டிக்கொள்ளவும் விரும்புபவர்கள் அவர்கள்.

மனிதர்கள் தங்களை வணங்கவேண்டும் என்ற மனநிலையினை பலர் தங்களில் வளர்த்துக்கொள்ளுகிறார்கள். சந்தைவெளியில் வந்தனங்களைப் பெறுவது தவறல்ல, வந்தனங்களை விரும்புவது தவறு. இப்படிப்பட்டவர்களைக் குறித்து இயேசுவும் தனது போதனையில் எடுத்துச் சொன்னாரே. சகோதரர் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, 'Praise the Lord' என்று 'கர்த்தரைப் பார்த்துதான் சொல்கிறோம்' அவரை இன்று சந்திக்கச் செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுகின்றோம். ஆனால், இன்றைய நாட்களிலோ அத்தiயும் தலைகீழ், எனக்கு 'Praise the Lord' சொல்லவில்லை என்று கோபித்துக்கொள்ளும் மனிதர்கள்தான் உருவாகிவருகின்றார்கள். கர்த்தருக்குக் கொடுக்கப்படுவதை, தங்களுக்குக் கொடுக்கப்படுவதாக பார்ப்பதினால் வரும் விளைவுதான் இது. 'Good morning' 'வணக்கம்' இந்த வார்த்தைகளை மரியாதையினிமித்தம் உபயோகப்படுத்தினாலும், 'Praise the Lord' என்ற பதம் கர்த்தருக்கு உரியதே. மேலும், உயர்ந்த பதவியிலிருப்பர்களுக்கு கீழ் பதவியிலிருப்பவர்கள்தான் முதலில் சொல்லவேண்டும் என்ற சட்டத்தையும் கூடவே விசுவாசிகள் கூட்டம் இயற்றிவைத்திருக்கிறது. உயர்பதவிலிருப்பவர்கள் தங்களை 'Lord' ஆக பார்ப்பதினாலேயே இத்தகைய நிலை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை அவர்களது வணக்கத்திலேயே வெளிப்படுகின்றது. அவர் எனக்கு 'Praise the Lord' கூட சொல்லுவதில்லை என்ற எண்ணம் உங்களில் உண்டாகுமென்றால் அது ஆமானின் குணத்தையே உங்களில் விதைக்கும் என்பதில் சந்தேமில்லை. சிலையை வணங்காததால் அவனை எரிகிற அக்கினி சூளையில் போடவேண்டும் என்று கோபத்தையே உண்டாக்கும். பொற்சிலையை நிறுத்தவேண்டாம், நீங்கள் உங்களை விக்கிரமாக மாற்றிவிடவேண்டாம். சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள், சகோதரர்களாயிருங்கள், தேவனையே மகிமைப்படுத்தப் பழகுங்கள். மரியாதையை பெறுகிறோம் என்ற போர்வையில் மகிமையை தினம் தினம் திருட முயற்சிக்காதிருங்கள். பவுல் தான் எழுதும் நிருபங்களில், 'வாழ்த்துங்கள்' என்ற வார்த்தையினையே குறிப்பிடுகின்றார், 'வணங்குங்கள்' என்று எங்கும் எழுதவில்லையே. கரங்களைக் குலுக்கி, வாழ்த்து தெரிவிக்கும் பழக்கம், கரங்களை உயர்த்தி அடுத்தவரை வணங்கும் பழக்கமாகிவிட்டது உலகத்தில். நான் வணக்கம் சொன்னேன், அவர் வணக்கம் சொல்லவில்லை, நான் 'Praise the Lord' சொன்னேன் அவர் சொல்லவில்லை என்ற எதிர்பார்ப்போடு கூடி நடைமுறைகளே இன்றைய உலகத்தின் பழக்கவழக்கங்கள். தூரத்தில் ஒருவர் நின்றால்கூட, அவருக்காக தேவனை நோக்கி 'Praise the Lord' சொல்லலாமே. 'ஆண்டவரே, அவரை இன்று காண எனக்குக் கிருபை செய்ததால் உமக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லிப்பாருங்கள் அப்போது 'Praise the Lord' யாருக்குச் சொல்லுகிறோம் என்பதின் நிரந்தரமான அர்த்தம் புரியவரும்.

ராஜாவே கட்டளையிட்டிருந்தாலும், ஆமானை வணங்காமலிருந்த இந்த மொர்தெகாய், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்குச் சமமானவன். மொர்தெகாய் தன்னை வணங்காததை ஆமான் கண்டபோது, அவனுக்குள் கோபம் மூண்டது. மொர்தெகாய்க்கு விரோதமாக மாத்திரமல்ல யூத குலத்திற்கு விரோதமாகவே அவன் திட்டங்களைத் தீட்டினான். எஸ்தரின் நாட்களில், அகாஸ்வேரு ராஜாவாக தேசத்தை அரசாண்டுகொண்டிருந்தபோது, ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான். அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து, ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான் (எஸ்தர் 3:8-11).
ராஜ்யமெங்கும் இருக்கிற யூதரையெல்லாம் சங்கரிக்க ஆமான் வகைதேடினான். ஆமான் ராஜாவுக்கு கொடுத்த இந்த ஆலோசனை, அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது (எஸ்தர் 3:12).

ராஜாவாயிருப்பதோ அகாஸ்வேரு, ஆனால் ஆடுவதோ ஆமான். தனக்குப் பிரியமில்லாதவர்களை அழிக்க ராஜாவை அவன் பயன்படுத்தினான். தனக்கு மதிப்பளிக்காதவர்களை அழிக்க ராஜ முத்திரையையை உபயோகப்படுத்தினான்.

இத்தனை செய்தாலும், தான் நினைத்ததை சாதிக்க அவனால் முடியாமல் போனதே நமது வெற்றிக்கு அடையாளம்.

ரெகொபெயாமின் நிலையும் இதுவே. ரெகொபெயாமை ராஜாவாக்கும்படிக்கு ஜனங்கள் வந்திருந்தபோது, அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார்; நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார்; நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன், என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார்; நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்ல வேண்டும் என்றார்கள் (1இரா 12:10,11). அந்த வாலிபரின் சொற்படியே ஜனங்களுக்கு உத்தரவுகொடுத்தான் ரெகொபெயாம். ராஜ்யம் இரண்டாய்ப் போனது. ரெகொபெயாமை இயக்கியவர்கள் அந்த வாலிபர்களே.

ரெகொபெயாம் ராஜாவாகிவிட்டபோது, அவனது நண்பர்களின் ஆட்டம் அதிகரித்துவிட்டது. தகப்பனுக்கு அருகில் நின்ற முதியவர்களுக்கு, மூத்தவர்களுக்கும் செவிகொடுக்க இயலாதபடி, நண்பர்களின் ஆட்டத்திற்கேற்ப அவன் ஆடிக்கொண்டிருந்தான். சுற்றியிருக்கும் நபர்களால் சுயநினைவைக் கூட இழந்து செயல்படும் தலைவர்கள் உண்டு. சுற்றி நிற்போரால் சிறைவைக்கப்பட்டிருக்கும் தலைவர்கள் உண்டு. தங்கது ஆவிக்குரிய வாழ்க்கையின் பெலத்தையும், அனுபவத்தையும் கூட செயல்படுத்த முடியாமல், சுற்றியிருப்போரின் சூறாவழிக் காற்றால் அடித்துச் செல்லப்படும் தலைவர்கள் உண்டு. தங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்ற சிந்தையில் உள்ள தலைவர்கள் பலர் இதில் சிக்கிக்கொள்கிறார்கள். ஊழியர்களே, உங்கள் அந்தரங்கங்களையும் ஆக்கிரமிப்புச் செய்யும் ஜனங்களைக் குறித்து கவனமாயிருங்கள். இன்றைய நாட்களில், ஊழியர்களின் தலைமுறைகள் செய்யும் பிரதான தவறுகளில் இதுவும் ஒன்று. எங்குபார்த்தாலும் அவர்கள் தங்கள் நண்பர்களுடனேயே நேரத்தை செலவழித்து, எல்லா ஆலோசனைகளுக்கு நண்பர்களையே நாடி, மூத்தவர்களையோ ஒரத்தில் ஒதுக்கிவிடுகின்றனர். தலைவர்களாக தாங்கள் இயங்குவதற்கு துணை நிற்கும் முதியவர்களைத் தள்ளிவிட்டு, தலைவர்களாகிய தங்களை இயக்கும் நண்பர்களிடம் சிக்கிக்கொள்கின்றனர்.

பாபிலோனுக்குக் கிடைத்த பாடங்கள்

நேபுகாத்நேச்சார் ராஜா தானியேலையும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களையும் ராஜ்யத்தின் உயர்ந்த ஸ்தானத்திலே அமர்த்தியிருந்தான். என்றாலும், அதனை விரும்பாதவர்கள் பலர் ராஜ்யத்தில் இருந்தனர். தானியேலை கவிழ்க்க அவர்கள் வகைதேடிக்கொண்டிருந்தனர். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான் (தானி 3:1). அந்த சம்பவம் அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. அவர்கள் வந்து சந்தோஷமாக வணங்கினார்கள், ஆனால், சாத்ராக், மேஷக், ஆபேத்நேகோ என்பவர்களை பிடித்துவிட வகைபார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் சிலையை வணங்காமலிருந்தபோது, அவர்கள் ராஜாவை நோக்கி: பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள் (தானி 3:12). ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான் (தானி 3:1). எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள். எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான் (தானி 3:5,6). என்றாலும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய தேவபிள்ளைகள் அந்த சிலையை விழுந்து வணங்கவில்லை. தாங்கள் விழுந்து வணங்கவேண்டியது மெய்யான கர்த்தர் ஒருவரையே என்ற அறிவு அவர்களுக்கு இருந்தது. சிலையை வணங்க ராஜா இறுதி வாய்ப்பு ஒன்றைக் கொடுத்தபோதிலும், 'நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என்று தேவனுக்காக தங்கள் தலையைக் கொடுக்க ஆயத்தமாயிருந்தார்கள் அவர்கள்.அவர் எரிகிற அக்கிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது (தானி 3:17,18) என்ற தெளிவான பதில் அவர்களிடமிருந்து பிறந்தது; தானியேல் அனைவருக்கும் அதிகாரியாயிருந்தபடியினால், அவர்கள் அவனை வற்புறுத்தவில்லை. தானியேல் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான் (தானி. 2:49).

அச்சயமத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி, பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள் (தானி 3:8,12). யூதருக்கு எதிராக குற்றஞ்சாட்டி, ராஜாவின் கோபத்தை விரோதிகள் அதிகரிக்கச் செய்தனர். என்றபோதிலும், ஏழுமடங்காக சூளை சூடாக்கப்பட்டிருந்தாலும், நெருப்பின் வாசனை கூட வீசாமல் உயிரோடு வெளியே வந்ததுதான் நமது வெற்றிக்கு அடையாளம்.

தானியேலின் நாட்களிலும் இப்படியே நடந்தது. தரியுவின் ஆட்சி நாட்களில், ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்கு தன் ராஜ்யத்தின் மேல் நூற்றிருபது தேசாதிபதிகளை நியமித்தான். நூற்றிருபது தேசாதிபதிகளின் மேல் மூன்று பிரதானிகளை நியமித்தான்; அந்த மூவருள் தானியேல் ஒருவனாயிருந்தான். எனினும், தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால், அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான் (தானி. 6:1-3). இந்த செய்தி மற்ற இரு பிரதானிகளுக்கும், நூற்றிருபது தேசாதிபதிகளுக்கும் தெரிந்தபோது, அவர்கள் தானியேலை குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். தேவனைப் பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலாழிய தானியேலை வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது என்பதை அறிந்துகொண்ட அவர்கள், தரியு ராஜாவினிடத்தில் சென்று : தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி;, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள். அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான். (தானி 6:6-9).

பின்பு அவர்கள் ராஜாவினிடத்தில் வந்து, சிறைப்பிடிக்கப்பட்ட யூதேயாதேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினமும் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்றார்கள் (தானி 6:13). ராஜாவை தானியேலுக்கு விரோதமாக திருப்பினார்கள். தானியேலை சிங்கக்கெபிக்கு அனுப்பினார்கள்; சிங்கக்கெபியில் தானியேல் போடப்பட்டாலும், உயிரோடு வந்து தேவனை நிரூபித்ததே நமது வெற்றிக்கு அடையாளம்.

ஏரோதுவை ஏவிய ஏரோதியாள்

ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். அதினிமித்தம் அவன்: நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அந்த நேரத்தை ஏரோதியாள் பயன்படுத்திக்கொண்டாள். தன் மகளிடம், யோவான்ஸ்நானகனின் தலையைக் கேட்கும்படி சொல்லி அனுப்பினாள். நடனம் முடிந்த பின்னர், அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு, ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான் (மத் 14:3-10). கணவனாகிய ஏரோதுவுக்கு முன், ஏரோதியாள் ஆடிய ஆட்டம் யோவான்ஸ்நானகனின் தலையை வாங்கியது. தனது வார்த்தையை விட்டுக்கொடுக்க மனதில்லாமல், மனைவிக்கு யோவான்ஸ்நானகனின் தலையை வெட்டிக்கொடுத்தான். நடனத்தின்போதே இதை ஏரோதியாள் கேட்டிருப்பாளென்றால், யோவான் சிறையிலிருக்கும்போது எத்தனை முறை அவனை வெட்டிப்போடும், வெட்டிப்போடும் என்று நச்சரித்திருப்பாள்.

சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுதுகொண்டேயிருந்தாள். விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டேயிருந்தாள், அலட்டிக்கொண்டேயிருந்தாள். முடிவு, கோபத்தோடு தன் தகப்பன் வீட்டுக்குப் போனான். சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள் (நியா. 14:17-20).

சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். அவளும் இதே ஆயுதத்தினால் சிம்சோனை வீழ்த்தினாள். தினம் தினம் தன் வார்த்தைகளினாலே சிம்சோனை நெருக்கி அலட்டிக்கொண்டிருந்ததினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமாவில் விசனப்பட்டான் (நியா. 16:16); வாழ்க்கையையே இழந்தான்.

அழுது, அழுது கண்ணீரினான் கணவனை கரைத்துவிடும் மனைவிமார்கள் உண்டு. கண்ணீரிலேயே புருஷனை படகாக்கி மிதக்கச் செய்து தாங்கள் விரும்பும் இடத்திற்கு கணவனைக் கொண்டுசெல்லும் மனைவிகள் உண்டு. கண்ணீரினாலே தாங்கள் விரும்பும் கரைக்கு உங்களைக் கொண்டுசெல்வோரைக் குறித்து கவனமாயிருங்கள்.

நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான் பவுல் (அப் 21:13).

எலியா எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துக்கொண்டு, தண்ணீரை அடித்து, அது பிரிந்ததும் இக்கரைப்பட்டான் எலிசா. எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி: இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான். அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான் (2இரா 2:15-17).

தலைமைப் பொறுப்பிலிருக்கும் தலைவர்கள் யேசபேலின் ஆவிகளை தேசத்தில் உலாவவிட்டுவிடாதபடிக்கு எச்சரிப்புடன் காணப்படவேண்டும். தலைவர்களை தங்கள் பாதைக்கு வளைக்க நினைக்கும் மக்களைக் குறித்தும், தேவஜனத்திற்கு விரோதமான செயல்களைச் செய்யவும், திட்டங்களைத் தீட்டவும் மறைமுகமாக ஆலோசனை தரும் கும்பல்கள் குறித்தும் கவனமுடன் இருக்கவேண்டும். யேசபேல் எந்த வாசல் வழியாகவும் ஊடுருவிவிடலாம். தலைவர்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு, ராஜ்யத்தைத் தனதாக்க நினைப்போரைக் குறித்து கவனமாயிருங்கள்.ஒவ்வொரு காரியத்தையும் முடிவு செய்யும்போதும், தீர்மானிக்கும்போதும், அவை தேவனால் அங்கீகரிக்கப்பட்டவைகளா என்பதை ஆராய்ந்துபாருங்கள். மனிதர்களுடைய கண்ணிகளில் சிக்கி, மனிதர்களுக்கு கண்ணிகளாக மாறிவிடாதிருங்கள். வலதுபுறமும், இடதுபுறமும் சாயாமல் வழி இதுவே என்ற சத்தம் உங்களுக்குப் பின்னே கேட்கட்டும்.

ராஜ பதவி முக்கியமல்ல, ராஜா யார்?
ஆட்சி பீடம் முக்கியமல்ல, ஆளுவது யார்?
பொய்க்கால் குதிரைகளாயிருந்தால்,
முடிவெடுக்க அல்ல, முத்திரைக்குத்தான் பயன்படுவீர்கள்