குறிவைக்கப்படும் ஸ்திரீ

 

 

யாரைக் குறி வைத்தால், எது அழியும் என்பதை அறிந்தவன் சாத்தான். பிதாக்களைக் குறிவைத்தால், பிள்ளைகளை அழித்துவிடலாம் என்றும், தலைவர்களைக் குறிவைத்தால் தலைமுறைகளை அழித்துவிடலாம் என்றும் செயல்படும் அவனது தந்திரங்களை அறிந்துகொண்டால் நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம். ஸ்தீகளைக் குறிவைக்கும் சத்துருவின் தந்திரங்களை நாம் அறிந்துகொள்வது இக்காலகட்டத்திற்கு மிக்க அவசியமான ஒன்று.

ஸ்திரீகளைக் குறித்த அடிப்படையான வேத ரகசியங்களை முதலில் நாம் அறிந்துகொள்வது நல்லது.

ஏவாளும், ஏதேனும்

மனித இனத்தின் விதையை விதைக்க தரையாய் தேவன் தந்த பூமியே பெண். இந்தத் தரை இல்லாவிட்டால், நாளடைவில் பூமியில் தலைமுறைகளே இல்லாமற்போகும் நிலை உண்டாகிவிடும். ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் மனிதன் அறியானே (பிரசங்கி 11:5). ஒரு மனிதனை உருவாக்குவதில், ஸ்திரீயின் கருவரையிலேயே தன் பணியைத் தொடங்கிவிடுகின்றார் கர்த்தர். மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கும் ஏதேன் தோட்டம் ஸ்திரீயின் கருவறை என்பதை நினைத்தால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வீழ்த்தும்படியாக வலம் வந்து வெற்றிகண்ட சாத்தான், இன்றும் ஏவாளைச் சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருக்கின்றான். 'கருப்பை' 'கருவறை' என்ற இவ்விரு சொற்களில் செரிந்துள்ள அர்த்தம் என்ன? 'கருவறை' என்றால் தேவன் கிரியை செய்யும் இடம்; 'கருப்பை' என்றால், தேவன் செய்த கிரியையை தாங்கி நிற்கும் பை' என்பதே பொருள். விதைக்கவேண்டிய நிலம் எத்தனையாய் வேலியடைத்து, பாதுகாத்து வைக்கப்படவேண்டும். விதைத்த உடனேயோ, முளையெழும்பும்போதோ, பூக்கும்போதோதா அல்லது கனிகொடுக்கும்போதோ மிருகங்கள் அதனை மேய்ந்துபோட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கவேண்டியதும் அவசியமல்லவா! 'என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்' (உன் 4:12) என்பதுதான் மணவாளியைக் குறித்து மணவாளன் கூறும் வார்த்தை. மணமானவர்களுக்கு மாத்திரமல்ல, மணமாகவிருப்பவர்களுக்கும் இது பொருந்தத்தக்கதே. பாதுகாக்கப்படவேண்டிய பெண் இனத்தை, பறிகொடுத்துவிடக்கூடாது. 'ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்' (யோபு 14:1) என்கிறார் யோபு. பவுல் அப்போஸ்தலனும், 'காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்' (கலா. 4:5) என்று ஸ்திரீயினிடத்தில் பிறந்தவராகவே இயேசுவை அடையாளம் காட்டுகின்றார். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபை பெற்றான் என்று வம்சவரலாறு ஆண்களை முன்நிறுத்தி எழுதப்பட்டிருந்தாலும், ஆதாமைத் தவிற அனைவரும் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர்களே.

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதி 3:15) என்பது ஸ்திரீயைக் குறித்துச் சொல்லப்பட்ட பிரதானமான தீர்க்கதரிசனம். தலையை இயேசு நசுக்கிவிட்டுச் சென்றாலும், தலைமுறைகள் நம்மாலும் நசுக்கப்படவேண்டிய பிசாசின் அங்கங்கள் மீதி இருக்கிறது. இது இயேசுவோடு முடிந்துவிடுகிறது அல்ல; பிதாவின் பிள்ளைகளான நமக்கும் பொருந்தக்கூடியதே. ஸ்திரீயினிடத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், சாத்தானை நசுக்கவேண்டும் என்றே தேவன் விரும்புகின்றார். எனவே பவுல், 'சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார்' (ரோமர் 16:20) என்று எழுதுகின்றார்.

ஆனால், சாத்தானோ ஸ்திரீயையும், ஸ்திரீயின் வித்துக்களையும் நசுக்கிவிடவேண்டும் என்று முயற்சிக்கிறான். ஆதியிலிருந்து இன்றுவரை நடப்பது இதுவே. தலைமுறைகளை தேவனை விட்டு தடம்புரளச் செய்வதோடு மாத்திரமல்லாமல், தேசத்தில் நடைபெறும் பெண் சிசு கொலைகள், விபச்சாரங்கள், பாலியல் வன்முறைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணம் சத்துருவின் போராட்டமே. தன்னை நசுக்கும்படி 'இயேசு' என்ற ஒரு வித்தை பிறப்பித்த 'ஸ்திரீயை' நசுக்குவதே சாத்தானது பிரதான இலக்கு. குடும்பங்களிலும், பணி இடங்களிலும் பெண்கள் நசுக்கப்படுவதற்குக் காரணம் இதுவே. ஸ்திரீகள் அழிக்கப்பட்டுவிட்டால், மனித சமுதாயமே அழிக்கப்பட்டுவிடும் என்ற திட்டத்திலேயே சத்துரு தனது வேலையை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்கின்றான். கருவில் உருவாகியிருப்பது 'பெண்' என்றால், அங்கேயே கல்லறையைக் கட்டிவிட முயற்சிக்கிறான்; கண் தப்பி பெண்காகப் பிறந்துவிட்டாலும், மண்ணுக்குள் புதைத்துவிடத் துடிக்கிறான். பெண்ணிடத்தில் பிறந்தாலும் பெண்ணுக்கே வாழ்வு கிடைக்காமற்போகச் செய்வது சத்துருவின் சாமர்த்தியம். கருவறையிலேயே ஸ்திரீயை சாத்தானின் கை பிடிக்க முயற்சிக்கிறது. 'Eve teasing'' என்ற கலையைக் கற்றுக்கொடுத்தவனும் சாத்தானே. இன்னும், வௌ;வேறு வழியில் பெண்களை இழிநிலைக்குட்படுத்தும் பாவங்கள் எத்தனையோ உலகில் மலிந்து கிடக்கின்றன. ஸ்திரீயினிடத்தில் பிறக்கும் மனிதன் தனக்கு பகையாளி என்பதை அறிந்த சாத்தானில் வலைக்குள் உலகமே சிக்கிக்கிடக்கிறது; அநேக ஸ்திரீகளும் சிக்கிக்கிடக்கின்றனர். அதன் ஒருபடி மேலாக, பெண்களை வியாபாரப்பொருளாக்கிவிட்டது இன்றைய வர்த்தக உலகம். தொலைக்காட்சிகளிலும், விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் நிகழ்வது இதுவே. கார்களை விற்பதற்காகவும், பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காகவும் பெண்களையே பலர் முன் நிறுத்துவது ஏன் என்பதை நீங்கள் யோசித்துப்பார்த்ததுண்டா?. பெண்களுக்கு கர்த்தர் கொடுத்த அழகை கையிலெடுத்துக்கொண்டு, அவனுடைய வியாபாரத்தை கச்சிதமாக செய்துமுடிக்கத்தான்.

தன்னுடைய மகளிடத்திலேயே பாலுறவு வைத்திருக்கும் தந்தைகளைக் கொண்டதாகவும், அண்ணனும் தங்கையும் கூட உடலுறவு கொள்ளும் உலகமாகவும் இன்றைய நாட்கள் மாறிவருகின்றன. எழுதி எச்சரிப்பதிலேயே இத்தனை அருவருப்பாயிருந்தாலும், அந்த அருவருப்பு அனுபவிப்பவர்களுக்குத் தெரிவதில்லையே. தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான் (2சாமு 13:1), ஏக்கங்ககொண்டு வியாதிப்பட்டான் (2சாமு. 13:2). அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான். அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே; இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத் தகாது. இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம் (2சாமு 13:12) என்றாள். எனினும் அம்னோன் தனது காமத்தை அடக்கிக்கொள்ள பெலனற்றவனாக, அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். (2சாமு. 13:14)

லோத்துவின் மகள்கள், தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து தகப்பனோடே சயனித்தார்கள் (ஆதி. 19:32). முதல்நாளில் மூத்தவளும், அடுத்த நாளில் இளையவளும் தகப்பனோடே சயனித்தும், தகப்பன் அதை உணராதிருந்தான் (ஆதி. 19:33). இன்றைய மருத்துவ உலகில், இத்தகைய முறைக்குப் பயன்படுத்தபடும் மாத்திரைகள் ஏராளம் ஏராளம். தகப்பன் மகளுக்குக் கொடுத்தோ, அல்லது மகள் தகப்பனுக்குக் கொடுத்தோ, சகோதரர்கள் சகோதரிக்குக் கொடுத்தோ, நண்பர்களுக்குக் கொடுத்தோ, சகோதரிகள் சகோதரர்களுக்குக் கொடுத்தோ காமத்தை முடித்துக்கொள்ளவும், ஸ்திரீயின் முக்கியத்துவத்தை அழித்துப்போடவும் சத்துரு வகை செய்கிறான். என்ன நடக்கிறது என்று நினைவுகூட இல்லாமலிருக்கும்படி எல்லாவற்றையும் செய்துமுடித்துவிடுகிறான் சத்துரு. இவைகளில் சிக்கிக்கொள்ளும் ஸ்திரீகள் ஏராளம் ஏராளம். பாதுகாப்பு என்று நாம் கருதும் குடும்ப எல்லைக்குள்ளும் ஸ்திரீயை அழிக்க சத்துரு பதிவிருக்கிறான்.

திருமணம் முடிந்தாலும், பல ஸ்திரீகள் மீது கணவனைக்கொண்டு கைவரிசையினைக் காட்டுகின்றான்; சிலரிடத்தில் மாமியாரைக் கொண்டும், சில வீடுகளில் மாமனாரைக் கொண்டும் ஸ்திரீகளைச் சித்திரவதைச் செய்யும் கோட்பாடுகள்; சாத்தானுடையதே. மனைவியை வேலைக்காரியைப் போல நடத்தும் கணவன்மார்களே, மனைவியை கரங்கொண்டு அடிக்கும் கணவன்மார்களே, மனைவியை கண்டபடியெல்லாம் வாய்க்குவந்தபடியெல்லாம் வார்த்தைகளைக் கொண்டு திட்டும் கணவன்மார்களே, மனைவியை சிறுமைப்படுத்தி கோபத்துடன் நடந்துகொள்ளும் கணவன்மார்களே, உங்களை ஆட்டுவிப்பது யாரென்றும், நீங்கள் யாருடைய பிடியில் இருக்கிறீர்கள் என்பது இப்போது புரிகிறதா? உங்களுடைய குடும்பத்தில் ஸ்திரீ ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறாளா? ஸ்திரீயை நசுக்கும் குணம் உங்களில் இருந்தால், உங்களில் பிசாசின் வித்து தரித்துநிற்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கணவன், மனைவி இருவருக்கிடையில் பகை உருவாவதன் காரணத்தை இப்போது அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா? ஸ்திரீயை நசுக்கவேண்டும் என்று கணவனை கையிலெடுக்க முயலும் சத்துருவுக்கு வீட்டில் இடம்கொடாதிருங்கள்.

எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார் (1கொரி 12:12) என்று போதிக்கும் பவுல், நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம் (1கொரி. 12:13) என்று ஒரே சரீரமான கிறிஸ்துவில் அங்கங்களாக இணைந்திருக்கும் நம்மை சுட்டிக்காட்டுகின்றார். என்றாலும், கணவன் - மனைவியைக் குறித்தோ, 'இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்' (ஆதி 2:24) என்றல்லவா வாசிக்கின்றோம். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான் (எபே 5:28,29). சொந்த மாம்சமாக மனைவியை கர்த்தர் மாற்றினாலும், கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொள்கிற கணவன்மார்கள் அநேகர் (மாற். 5:5). மனைவியைக் காயப்படுத்துகிறவன் தன்னைத்தானே காயப்படுத்துகிறான், அது சாத்தானால் முடுக்கிவிடப்பட்ட போரே. 'லேகியோன்' போன்ற ஆவிகள் அன்று செய்தவைகளையே இன்றும் பலரது குடும்பத்தில் செயல்படுத்திக்கொண்டிருக்கின்றான் சாத்தான். உங்களையே அடித்துப்பார்த்தால், உங்களையே கடித்துப் பார்த்தால், உங்களையே குத்திப்பார்த்தால் சொந்த மாம்சத்தின் வலி என்ன என்று உங்களுக்குத் தெரியவரும்.

நாகரீகத்தின் போர்வையில் அநாகரீகம்

நாட்டியம், நடனம், நளினம் போன்ற அத்தனைச் சொற்களும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவேயிருப்பினும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா இடங்களிலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதும், எல்லா நிலைகளிலும் நாம் விரும்பியபடியெல்லாம் அதனைப் பொருத்திப்பார்ப்பதும், ஆவிக்கு விரோதமாக மாம்சத்தை யுத்தத்தில் களமிறக்குவதற்கு வழிவகுத்துவிடும். நடனம் என்ற போர்வையில் ஆவிக்கு விரோதமான போர் உருவாகிவிடும்; அது ஆத்துமாக்களுக்கு ஆபத்தைத்தான் கொண்டுவரும். நடனத்துறையில் ஆண்களுக்கும் பங்கு உண்டு; எனினும், பெண்களின் பெலமே ஓங்கி நிற்கிறது. பெண்களும், பேதைகளாய் இக்கலையில் பலியாகிப்போவதுதான் வேதனைக்குறிய விஷயம்.

கர்த்தர் தங்களுக்குக் கொடுத்திருக்கும் இத்தனை பெரிய ஸ்தானத்தை ஸ்திரீகள் அறிந்துகொள்ளாமலிருப்பது கொடிய நிலை. உடலைக் காட்டுவதே அழகு என்ற நிலைக்குள் பல ஸ்திரீகள் தங்களைத் தள்ளிக்கொள்ளச் செய்துவிட்டான் சத்துரு. அழகான பெண்கள் தங்களை மேலும் அழகாகக் காட்டும் எண்ணத்தில், காக்கும் ஆடைகளைக் கூட பலர் கழற்றிவிடுகின்றனர். 'கவர்ச்சி' என்ற கடலுக்குள் விழுந்து பல பெண்களின் ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துகொண்டேவருகின்றது. விதவிதமான ஆடைகளில் பெண்களை மேடையேற்றுவதில் கைதேர்ந்துவிட்டது இன்றைய உலகு; இதனை பெண்களும் விரும்புவதுதான் அவர்களுக்கே விஷமாகிப்போகிறது. 'ஆள் பாதி, ஆடை பாதி' என்பது அன்றைய மொழி; இன்றோ, 'ஆள் பாதி ஆடை மீதி' என்ற வழிக்குள் உலகம் பெண்களைத் தள்ள முயற்சிக்கிறது. அடக்கம், ஒடுக்கம், அமைதி என்ற பெண்களுக்கான பிரதான குணங்களைப் பிடுங்கிக்கொண்டு, ஆடையினாலும், ஆட்டத்தினால் கண்களுக்கு இதமாய் கன்னிப் பெண்களை மாற்றிக்கொண்டிருக்கின்றது. கிராமத்து வாழ்க்கை என்பது கேலிக்கூத்தாகி, நகரத்து வாழ்க்கை என்பதும் இன்று நக்கலாகவே மாறிப்போனது; இறுக்கமான ஆடைகளுடன், வெறுக்கும்படி அளவைக்; குறைத்து மேடையில் அழகைக் காட்டுவது வழக்கமாகிவிட்டது. அரங்கத்தில் இருப்போரை ஈர்க்க இதுதான் ஏற்ற வழி என்ற சத்துருவின் வலைக்குள் விழுந்துவிட்டவர்கள் ஏராளம். தேவனைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற செய்தி மறக்கப்பட்டுவிட்டது. அது, உலக மனுஷருக்குப் பிரியமானதாயும், தேவனுக்குப் பிரியமற்றதாயும் மாறிப்போனது. இன்றைய சினிமா உலகம், பெண்களை கண்களுக்கு விருந்தாக்கிக்கொடுக்க முனைகிறது. திரைகளிலும், சுவரொட்டிகளிலும், தினசரி பத்திரிக்கைகளிலும், வாராந்தர பத்திரிக்கைகளிலும், மலிந்தவர்களாகவே அவர்களை மாற்றிவிட்டது. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதி 3:15) என்ற மாபெரும் வாக்குத்தத்தத்தை சுமந்து நிற்கும் பெண்ணை, தன்னுடையவளைப்போல சத்துரு அடையாளம் காட்டிக்கொள்ள விழைகின்றான்.

'ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று' (மத். 5:28) என்று போதித்தார் இயேசு. இன்றைய நாட்களில், பருவமடைந்த பெண்கள், தொடை தெரிய மேடையில் இருப்பதும் நிற்பதும், நிலை குலையும் ஆடைகள் அணிந்து ஆடுவதையும் மேலை நாட்டு கலாச்சாரம் என்று மேன்மையாக நினைத்து இன்றைய சமுதாயமும் கலாச்சாரமென பின்பற்றத் தொடங்கிவிட்டது; விஷயம் எல்லாம் வசீகரம் என்பதுதான். அழகிற்காக இறைவன் கொடுத்த மார்பகங்களை அருவருப்பாக காட்டி ஆடுவது அழகா. நடனங்கள் எல்லாம் மனிதர்கள் ரசிப்பதற்குத்தான் என்றால், அடுத்தவனுக்கு உங்கள் உடலை ருசிக்கக் கொடுக்கிறீர்கள் என்பதுதான் உள்ளர்த்தமோ! உடலாட, ஆடையாட, அழகோடு மேடையில் அரங்கேறுவது யாருக்காக? தேவனுக்காகவா அல்லது மனிதர்களுக்காகவா? ஸ்தனங்களை மறைக்கும் துணிகள்கூட ஸ்தானங்களில் இல்லாமல், மேடையில் நிற்பதுதான் நடனமா? பள்ளி நாட்களில், கல்லூரி நாட்களில், வீட்டின் பிற நேரங்களில், ஆலய ஆராதனைகளில் மேலும் மற்ற நாட்களில் அப்படி வரக்கூடாது; அப்படி வருவது தவறு என்று பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியும். ஆனால், நடனத்துக்கென்றால் எப்படிவேண்டுமென்றாலும் வரலாமோ? 'நடனம்' என்ற வார்த்தைக்காக நாகரீகத்தை இழப்பது நியாயமோ? நடனத்திற்கு ஒரு சட்டம், நாட்டிற்கு மற்றொரு சட்டமா? வீட்டிற்கு ஒரு சட்டம், வீதிக்கு ஒரு சட்டம், நடனத்திற்கு வேறொரு சட்டமா? கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பெற்றோர்களும் இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு தங்கள் பெண் குழந்தைகளை விற்றுப் போட்டவர்களாக, ஆட்டத்தில் இணைந்து அழகுபார்ப்பது அடங்கொணா வேதனை. மெல்ல மெல்ல சினிமா பாணியை ஆவிக்குரிய உலகத்திற்குள்ளும் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறான் சத்துரு. அவனது யுக்தியை வீழ்த்தவேண்டுமென்றால், தேவனைச் சார்ந்து நிற்கும் புத்தி வேண்டும் நமக்கு.
இரண்டு விதமான செடிகள் உலகத்தில் உண்டு. ஒருவிதம், வேர்களில் ஊற்றப்படும் நீரை உறிஞ்சி, உரத்தை உட்கொண்டு, சூரியனின் துணையோடு வாழ்வது. மனிதர்களின் உதவியோடு வளர்வது. மற்றொருவகை செடியும் உண்டு; அது தானாக இரையைப் பிடிக்கக் கற்றுக்கொண்டது. யாவருக்கும் தெரிய இலைகளை விரித்துவைக்கும், விரிக்கப்பட்ட இலையில் பூச்சியோ, புழுவோ வந்து அமந்துவிட்டால் அவ்வளவுதான் அப்படியே பிடித்துக்கொள்ளும். சத்துருவும் இதைத்தான் செய்கிறான், பெண்களை இச்சிப்போரை பிடித்திழுத்து தன்பக்கம் வைத்துக்கொள்கிறான். அழகுக்கும், கவர்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தில் அறிவிலிகாயிருப்போரை தன் பக்கம் வைத்துக்கொண்டு சத்துரு செய்யும் யுத்தத்தில் விழுந்துவிடாதிருங்கள்.

வேதத்திலிருந்து சில நடனங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்:

நிர்வாணமா, விக்கிரகமா

தேவ ஜனங்களை நடத்திக்கொண்டுவந்த மோசே, தேவனின் அழைப்பைப் பெற்று, ஜனங்களுக்காக தேவனைச் சந்திக்கும்படியாக மலையின்மேல் ஏறிப்போனான். தேவனுக்கும், மோசேக்கும் இடையில் மலையிலே பேச்சுவார்த்தை தொடந்து நடந்துகொண்டிருந்தது. ஜனங்களோ, மோசே எப்போது மலையிலிருந்து கீழே இறங்கி வருவான் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். மேலே ஏறிச் சென்று பார்க்க தகுதியற்றவர்கள் ஜனங்கள். இந்த தகுதியின்மைதான், சீக்கிரம் கீழே வரவேண்டும் என்று எதிர்பார்த்ததற்குக் காரணம். ஆலயத்தில் செய்தி சீக்கிரம் முடியவேண்டும் என்று விரும்புவோரைப் பற்றிய ரகசியம் இப்போது விளங்குகிறதா? முன்னே சென்று பிரசங்கிக்க பெலமற்றவர்களும், பிரசங்கத்தை கேட்க மனமற்றவர்களும் எப்போது பிரசங்கம் முடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களது மனது ஆராதனையின் முடிவை நோக்கியே நின்றுகொண்டிருக்கும். மலையிலிருந்து மோசே இறங்கிவர தாமதமானபோது, காத்துக் காத்து அலுத்துப் போன ஜனங்கள், மோசே செத்துப்போனான் என்ற எண்ணத்தோடுகூட, ஆரோனை நோக்கி: 'எங்களுக்கு முன்செல்லும் தெங்வங்களை எங்களுக்காக உண்டாக்கும்' என்றார்கள் (யாத். 32:1). அவர்களது இந்த வார்த்தை, மோசேயின் மரணத்தை மாத்திரமல்ல, தேவனுக்கும் அவர்களது மனதில் இனி இடமில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. அப்போது, ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள் (யாத் 32:3). ஜனங்களின் காதுகளில் இருந்த பொன்னணிகளால், ஆரோன் கன்றுக்குட்டி ஒன்றை வார்ப்பித்தான் (யாத். 32:4). அத்துடன் வார்ப்பித்த விக்கிரகமான அந்த தெய்வத்துக்கு பண்டிகையையும் அவர்கள் கொண்டாடினார்கள். விக்கிரகத்தை உருவாக்க காரணமாயிருந்தவன் ஆரோன்; ஆனால், விக்கிரகத்தை உருவாக்கக் காரணமாயிருந்தவர்கள் பெண்கள். அவர்களே தங்கள் ஆபரணங்களை ஆரோனிடத்தில் கொடுத்தவர்கள். பாடல்களின் சத்தம் தொனித்தது (யாத். 32:18), நடனக் களிப்பு உண்டாயிருந்தது (யாத். 32:19). ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான் (யாத் 32:25). மோசே பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டான் (யாத் 32:19). பெண்கள் தங்கள் காதனிகளை உருக்கக் கொடுத்தார்கள், அதினால் உண்டான சிலை தலைவன் கையில் வைத்திருந்த கற்பலகையே உடைந்துபோகச் செய்தது. கன்றுக்குட்டி உடைத்தெறியப்படுமுன் கற்பனை நிறைந்த கற்பலகை உடைத்தெறியப்பட்டுவிட்டதே. நியாயப்பிரமானங்களை உடைத்துப்போடும் இத்தகைய நிர்வான நடனங்கள் நடந்துவிடாதபடி நமது மேடையைக் காத்துக்கொள்ளவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

தேவன் முன்னே இருப்பாரென்றால், ஜனங்கள் ஆடையோடிருப்பார்கள்; விக்கிரகம் முன்னேயிருக்குமென்றால், ஆடுபவர்கள் அரைகுறையாயிருப்பார்கள், நிர்வாணமாயிருப்பார்கள். இரண்டில் ஒன்றை வைத்தே மற்றொன்று எது என்பதை நாம் தீர்மானித்துக்கொள்ளலாம். பண்டிகைகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விழாக்களை விக்கிரகங்களாக்கிவிட்டால், முன்னே ஆடுபவர்கள் நிர்வாணமாகத்தான் ஆடுவார்கள்; அங்கு தேவனுக்கு முதலிடம் இல்லையே, தொட்டு வைக்கும் ஊறுகாயாய் ஜெபமும், வேதவாசிப்பும் நடத்தப்பட்டாலும், தட்டில் மீதம் வைக்கப்படும் அனைத்தும் ஆவிக்குரியவர்கள் எட்டி உதைக்கத்தக்கவைகளே, அவை விக்கிரகத்துக்குரியவைகளே. ஆடுபவர்களின் ஆடையினைப் பொருத்தே, முன்னே இருப்பது தேவனா அல்லது விக்கிரகமா? என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும். இதனைக் காணும் தேவ மனிதர்களின் நிலை மோசேயைப் போன்றே காணப்படும். எதற்கு முன்பாக அவர்கள் ஆடினார்களோ, அதனை அக்கினியில் சுட்டெரித்து, பொடியாக்குவதுதான் மோசேக்களின் பணி.

பாபாக்களும், சாமியார்கள் ஆசிரமங்களையும், கோவில்களையும் கட்டிக்கொண்டு அரசர்களைப்போல வாழும் இமயமலைப் பகுதிக்கு நான் சென்றிருந்தேன். விக்கிரகங்களை வணங்கும் அவர்கள் உடலில் பொட்டுத் துணி கூட இல்லாமல், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு அமர்ந்திருந்தனர். சுமார் நாற்பது நிர்வாணச் சாமியார்களுடன் நேர்முகமாக உரையாடி அவர்களைப் பற்றி அறிந்துகொண்டேன். ஆயிரக்கணக்கானோர் 'நிர்வாண சாமியார்கள்' (ஹிந்தியில் நாகா பாபா) என்ற பெயருடன், கூட்டம் கூட்டமாக நிர்வாணக் கோலத்தில் குகைகளிலும், ஆசிரமங்களிலும் குழுமியிருப்பதைக் கண்டேன். அருகில் சென்று பேசுவதற்கு அச்சத்தைக் கொடுக்கும் தோரணையில் அவர்கள் இருந்தார்கள். இவர்களை நிர்வாணமாக்கியது எது? விக்கிரகம் அல்லவா? 'மனிதர்களை நிர்வாணிகள்' என்று அறிவிக்கவே சாத்தான் விரும்புகிறான் (ஆதி. 3:11); மனிதர்களே எச்சரிக்கை. மறுபடியும், ஏவாளைப் போல உங்களை பிசாசு வீழ்த்திவிட இடங்கொடாதிருங்கள்.

புத்தாண்டு தினத்தன்போது, ஓர் இடத்தில் சினிமா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, நன்றாக குடித்திருந்த வாலிபன் ஒருவன் அந்த இடத்திற்கு வந்ததும், பாடலுக்கு ஏற்ப நடனமாடத்தொடங்கினான். கூடியிருந்த சக வாலிபர்கள் உற்சாகப்படுத்தவே, குடிபோதையில் என்ன செய்கிறோம் என்ற உணர்வையே இழந்து, தன் உடலிலிருந்த துணிகளையெல்லாம் கழற்றி வீசியவாறு ஆடத்தொடங்கினான். இடுப்பு உள்ளாடை உடுப்பு மட்டுமே அவன் உடலில் எஞ்சியிருந்தது. தற்செயலாக அங்கு வந்த பெரியவர் ஒருவர் அவர்களை விரட்ட ஆட்டம் ஓட்டமாகியது.

கிறிஸ்தவ உலகிலும், சபைகளிலும், பள்ளிகளிலும், விழாக்களிலும், விடுமுறை வேதாகமப் பள்ளி, ஞாயிறு பள்ளி, கன்வென்ஷன் கூட்டங்கள், வாலிபர் கூட்டங்கள் மற்றும் ஏனைய ஆவிக்குரிய கூட்டங்களிலும்கூட தேவ மனிதர்கள் இருக்கும் இடத்திலே தேவதைகளைப்போல வாலிபப் பெண்களை தேவையற்ற ஆடைகளுடன் அரங்கேற்றி, நியாயப்பிரமாணத்தை உடைத்துப்போடுவோர் ஏராளம் ஏராளம். வானம் மதிக்காத எதுவும் நிர்வாணமே. இதனால், கிறிஸ்தவம் பகைவர்களுக்கு முன்பாக அவமானப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுகின்றது (யாத். 32:25). கன்றுகுட்டி விக்கிரகத்து முன்பாக போடப்பட்ட நடனம், ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழச்செய்தது (யாத். 32:28).

கர்த்தரின் பட்சத்தில் நிற்கிறவர்களே விழித்தெழுங்கள். ஆட்டத்தைப் பார்க்க அரங்கத்திற்குள் வந்தவர்கள் எத்தனை பேர் என்பது முக்கியமல்ல, ஆட்டத்திற்குப் பின் விழப்போகிறவர்கள் எத்தனைபேர்?

தேவனுக்கு எவ்வளவு?

யாருக்காக ஆடுகிறோம்? எதற்காக ஆடுகிறோம்? யாரைப் பிரியப்படுத்த ஆடுகிறோம்? நமது ஆட்டத்தினால் யாருக்கு மகிமை போய்ச் சேருகின்றது என்பதெல்லாம் சிந்தையில் கொள்ளவேண்டியது. கோலியாத் தேவனை நிந்தித்தான், கோலியாத்தை எதிர்கொள்ள பெலனற்ற சவுலும், இஸ்ரவேல் ஜனங்களும் தினம் தினம் கோலியாத்தின் நிந்தனையான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தேவஆவியைப் பெற்ற தாவீது அங்கு வந்தபோது, நிந்தித்துக்கொண்டிருந்த கோலியாத்தை தாவீதைக்கொண்டு வீழ்த்தினார் தேவன். தேவனை விட்டு சவுல் பிரிந்து இருந்ததினால் கிடைக்காத வெற்றி, தேவனோடு இணைந்தே வாழ்ந்துகொண்டிருந்த தாவீதின் மூலமாய் கிடைத்தது. வெற்றிக்கு காரணம் தேவனே என்றாலும், ஜனங்களோ தாவீதை கொண்டாடினார்கள். 'சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்' என்று முறைமுறையாக ஆடிப்பாடினார்கள் ஸ்திரீகள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்க மாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான் (1சாமு 18:7-9). ஸ்திரீகளின் பாட்டும் ஆட்டமும், சவுலுக்கும் தாவீதுக்கும் இடையில் பகையை உண்டாக்கிவிட்டது. 'தாவீதுக்கு பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்' என்று மூர்க்கத்துடன் சவுல் தாவீதைப் பகைக்க காரணமாயிருந்தது. அவர்களின் ஆட்டமும், பாட்டும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் பகையை உண்டாக்கியதோடு மாத்திரமல்லாமல், தேவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய மகிமையையும் மனிதன் பக்கம் திருப்பியது.

இந்த நடனம் மனிதனை மகிமைப்படுத்திய, சந்தோஷப்படுத்திய நடனம். தாவீதின் மூலமாக வெற்றியை தேவனே கொடுத்திருந்தபோதிலும், 'நடனம் ஆடிய ஸ்திரீகள் மகிமையை தேவனுக்குச் செலுத்தவில்லை.' 'தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்' என்ற சவுலின் வார்த்தைகள், தேவனுக்கு அந்த ஸ்திரீகள் என்ன கொடுத்தார்கள்? என்ற கேள்வியை முன்வைக்கிறது. வெற்றி தந்தவரை மறந்து, வெற்றிபெற தேவன் உபயோகித்த மனிதனைக் கொண்டாடுகின்ற நடனங்கள் அநேகம். ஊழியத்தில் பல பெரிய காரியங்களை செய்து முடித்துவிட்டார் என்பதற்காக, ஊழியரை மகிழ்விக்கும் ஆட்டமா உங்கள் நடனம். பாராட்டப்படவேண்டியவர் ஊழியரல்ல, உன்னதர். ஊழியத்தின் வெற்றிப்படிகளைத் தொடும்போது, 'சிறப்புவிழா' 'பாராட்டுவிழா' 'வெள்ளிவிழா' 'பொன்விழா' என்று வைப்போரே, உன்னத தேவனுக்கு என்ன விழா வைத்தீர்கள். ஊழியரையே கொண்டாடத் தொடங்கிவிடுகின்றோம்; புரிந்துகொள்ளுங்கள், உன்னதரோ அங்கு ஒதுங்கியே நிற்பார்.

இறந்தநாளாகிய பிறந்தநாள்

ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள் (மத் 14:6). விளைவு, மற்றொருவனுடைய சந்தோஷம் பறிபோனது.

ஏரோது, இயேசுவுக்கு விரோதமானவன். யோவான், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தியவன். யோவான் ஏரோதுவை திருத்த முயற்தித்தபோது, ஏரோது யோவானை சிறையில் அடைத்தான். இப்படிப்பட்ட மனிதனின் ஜென்ம நாள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தபோது, சிறுமி ஒருத்தியின் நடனம் அரங்கேற்றப்பட்டது. ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள் (மத். 14:6). பிறந்தநாளைக் காணச் செய்த தேவனைச் சந்தோஷப்படுத்தும்படியான நடனம் அல்ல, பிறந்தநாளைக் கொண்டாடுகிறவனைச் சந்தோஷப்படுத்தும்படியான நடனம். அநேக நடனங்கள் இன்று இப்படியே நடக்கின்றன; இயேசுவை விரோதிப்பவர்கள் மேடையில் அமர்ந்திருக்க, இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவியாதவர்கள், இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத ஏரோதுக்கள் மேடையில் சிறப்பு விருந்தினர்களாக அமர்ந்திருக்க, அவர்களைச் சந்தோஷப்படுத்தும்படியான நடனங்கள்; அரசின் எத்தனை உயரிய பதவியில் இருக்கும் மனிதர்களானாலும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவராயிருப்பின் அவர்களுக்கு இப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்க நாம் அழைக்கப்பட்டவர்களல்ல. தேவ ஊழியர்களை துன்பப்படுத்தி, சபைகளை தகற்கும் அரசினைச் சார்ந்த, மந்திரிகளுக்கு முன்பாகவோ, கட்சித் தலைவர்களுக்கு முன்பாகவோ அரங்கேற்றப்படும் நடனங்கள் இத்தகையவையே. யாருக்கு முன்னே நீங்கள் ஆடிக்கொண்டிருக்கிறீர்களோ, அவர்கள் தேவஜனத்தை சிறையில் வைத்திருப்பவர்கள் என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?

இயேசுவை ஏற்றுக்கொள்ளதவர்களை ஆடி சந்தோஷப்படுத்துவதற்கும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களின் ஆட்டத்தினால் சந்தோஷமடைவதற்கும் வித்தியாசமில்லையே; அவர்கள் தலையில்லாதவர்கள், இவர்கள் தலை போனவர்கள்; அவ்வளவே. அங்கே அவர்கள் மேடையிலே நாம் கீழே, இங்கே அவர்கள் மேலே நாம் கீழே அவ்வளவே வித்தியாசம். யாருக்காக? யாருக்கு முன்னே? எதற்காக? என்ற கேள்விகள் நடனத்தில் மாத்திரமல்ல எல்லா இடத்திலும் முக்கியமானது; இதில் தவறுவோரின் நடனங்கள் தேவமனிதர்களின் தலைகளை வாங்க காரணமானவைகளாக மாறிவிடும்; தேவ மனிதர்களின் தலைகளையும் வாங்கப் புறப்பட்டு விட்டவர்கள். மனிதர்களைச் சந்தோஷப்படுத்தும்படி நடைபெறும் காரியங்கள் அனைத்தும் இப்படியே நிறைவுறுகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

நடனத்தினால் சிக்கிய நங்கைகள்

நடனம், பெண்களை மற்றவர்களிடத்தில் சிக்கவைக்கப் போதுமானது. மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும் (பிர. 9:12) அநேக ஸ்திரிகள் நடனமாடி வலைகளில் மாட்டிக்கொள்கின்றனர்.
இஸ்ரவேலருக்கும் அதின் கோத்திரத்தில் ஒன்றான பென்யமீனருக்கும் பிரிவினை உண்டாயிருந்தது. பிரிவினையின்போது, நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று இஸ்ரவேலர் ஆணையிட்டிருந்தார்கள் (நியா. 21:1). பென்யமீன் கோத்திரத்தாருடன் சமாதானம் பேசி, மீண்டும் அவர்களைச் சேர்த்துக்கொண்டபோதிலும், தங்கள் குமாரத்திகளைக் கொடுக்கவோ பிற கோத்திரத்தார் ஆயத்தமாயில்லை; சாபத்தினிமித்தம் பயந்திருந்தார்கள். பென்யமீன் கோத்திரத்தில் ஸ்திரீகள் அழிந்துகொண்டிருந்தார்கள்; பென்யமீன் கோத்திரத்திலிருந்த புரூஷர்களுக்கு மனைவிகள் கிடைப்பது அரிதாகிப்போனது. பென்யமீன் கோத்திரத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டுமென்றால், அவர்களுக்கு இஸ்ரவேலர் தங்கள் பெண்பிள்ளைகளைக் கொடுத்தாகவேண்டும். எனினும், சாபத்தினிமித்தம் அது சாத்தியமல்ல என்பதை அறிந்த அவர்கள், பென்யமீன் கோத்திரத்திலிருந்த மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்ன செய்யலாம் என்று சபையின் மூப்பர்கள் யோசித்துக்கொண்டிருந்தனர் (நியா. 21:16); அப்போது, சாமர்த்தியமாக அதைச் செய்யத் திட்டமிட்டனர்.

அப்போது அவர்கள் பென்யமீன் புதிரரை நோக்கி: சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள். அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை (நியா 21:21,22) என்று பெண்வீட்டாரை நாங்கள் சமாளித்துக்கொள்கிறோம், சமாதானப்படுத்திக்கொள்கிறோம் என்று ஆலோசனை சொன்னார்கள்.

பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள் (நியா 21:23). நடனம் பண்ணிய ஸ்திரீகள் அப்படியே பென்யமீனருக்கு மனைவிகளாகச் சிக்கிக்கொண்டார்கள். நடனமாடும் ஸ்திரீகளே, நீங்கள் யாரிடம் சிக்கிக்கொள்ளப்போகிறீர்கள்? நீங்கள் என்ன காரணத்திற்காக நடனம் ஆட அனுப்பப்பட்டிருக்கிறீர்கள்? நீங்கள் யாருடைய தந்திரத்தில் சிக்கியிருக்கிறீர்கள்? உங்களைப் பதிவிருந்து பிடிக்கவிருப்பது யார்? எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை !!!

கிராம ஆலயம் ஒன்றில் விடுமுறை வேதாகமப்பள்ளி நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எனது கையில் தரப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிரலை பெற்றுக்கொண்டு, நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது, வாலிபவயதுடைய பெண்கள் நடனம் என்ற நிகழ்ச்சியை நிரலின் வரிசகையில் கண்டதும், யார் ஆடுகிறார்கள் என்று கேட்டேன். அங்கோ, ஒருசில வாலிபப் பெண்கள் ஆயத்த நிலையில் நின்றுகொண்டிருந்தனர். 'குதித்து ஆடவேண்டிய' இந்தப் பாட்டுக்கா அவர்கள் ஆடப்போகிறார்கள் என்று நான் கேட்டபோது, 'ஆம்' என்ற பதில் வந்தது. அந்த உடையுடன், மேடையில் வருவதே தவறு அப்படியிருக்க ஆடுவது சரியாகிவிடுமா என்று யோசித்த நான், அவர்களை பொறுத்திருக்கச் சொல்லிவிட்டு, அடுத்த நிரலை வாசித்தேன். அந்த வாலிப சகோதரிகளோ காத்துக்கொண்டேயிருந்தார்க்ள. அடுத்து, அடுத்து என்று அவர்கள் நின்று அலுத்துப்போனபோதிலும் அவர்களை மேடையில் ஏற்றாமல், முடிவு ஜெபத்தை செய்ய குருவானவரை அழைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், அந்த சகோதரிகளும், அவர்களின் பெற்றோர்களும் என்னைச் சுற்றிவளைத்துக்கொண்டு சரமாரியாகக் கேள்வி கேட்டனர். கலைந்துபோகவேண்டிய கூட்டம் கலையாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. என்றாலும், அன்று வெற்றியை இறைவனுக்குக் கொடுத்தேன்.

ஆயுதமாக தன்னை ஆயத்தம் செய்தவள்

பெண்கள் தங்களை ஆயத்தம் செய்யும்போது, எதற்காக ஆயத்தம் செய்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் அவர்களிடத்தில் மாத்திரமே உண்டு. ஊரை வீழ்த்த உடலை ஆயத்தம் செய்யும் பெண்ணும், ஒருவனை வீழ்த்த ஊரில் ஆயத்தமாயிருக்கும் பெண்ணும் ஆவிக்குரியவனால் அடையாளம் கண்டுகொள்ளப்படத்தக்கவளே. சினிமா உலகத்தில் புடவைகளை இழந்து புழுவாக திரையில் கொருக்கப்படுவோர் பெண்களே. யேசபேலின் வேஷத்தில் வெள்ளித் திரையில் வலம்வரும் அவர்களைக் காண மோசமான மீன்கள் பல நாளுக்கு நாள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றன. திரையில் வந்தாலும் மீன்களுக்கு இரையாகத்தான் இயக்குநர்களால் கொண்டுவரப்படுகிறாள் என்றால் அது மிகைச்சொல் அல்ல. பெண்ணை ஆயுதமாகவே ஆயத்தம் செய்கிறது சினிமா உலகு.
யெகூ யெஸ்ரயேலுக்கு வந்ததை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்தாள். (2இரா 9:30,31)

யெகூவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் யேசபேலின் யோசனை, அதற்காக தன் உடலையும் ஆயத்தமாக்கி வைத்திருந்தாள். கண்களுக்கு மையிட்டு, தலையைச் சிங்காரித்து, ஜன்னல் வழியாக யெகூவை எட்டிப்பார்த்தாள். ஆனால் யெகூவோ, என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டான்; அப்போது, யேசபேலின் அருகே இருந்த இரண்டு மூன்று பிரதானிகள் யெகூவை எட்டிப்பார்த்தார்கள். அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு, உள்ளேபோய், புசித்துக் குடித்தபின்பு நீங்கள் போய்ச் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான் (2இரா 9:32-34). அவள் தன்னை ஆயத்தப்படுத்தினதின் நோக்கம் வேறு. இப்படிப்பட்ட ஆயத்தத்துடன் மேடையில் ஆடவருவோர், அடுத்தவரை வீழ்த்துவது நிச்சயம். என்றாலும், நம் பக்கத்தில் இருக்கிறவர்கள் யார்? யார்? என்று நாம் கூவி அழைத்தால், யேசபேலைத் தள்ளிவிட ஆயத்தமாயிருக்கும் சிலரை நாம் காணமுடியும். யேசபேலின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், உங்கள் அறைகூவலைக் கேட்கட்டும், உங்களது அறைகூவல் அவர்களை யேசபேலின் பட்சத்திலிருந்து தேவனது பட்சமாய் ஈர்க்கட்டும். அமைதியாயிருந்தால் இது சாத்தியப்படாது, அறைகூவினால் மாத்திரமே சத்துருவின் அஸ்திபாரம் அதிரும்.

'ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று' (மத். 5:28) என்றார் இயேசு. கணவனை ஈர்க்கவேண்டிய மனைவிகளுக்கு, கிராமத்தையே ஈர்க்கவேண்டும் என்ற கனவைக் கொடுத்துவிடுகின்றான் பிசாசு. தெருவில் போகும் மற்றொருவனையும் கவர்ந்து இழுக்கவேண்டும் என்று தங்களைத் தள்ளிக்கொள்ளும்போது, நீதிமொழிகள் 7-ம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளதே நிறைவேறுகிறது. யெகூக்களே, உங்களை எட்டிப்பார்க்கும் இத்தகைய யேசபேல்களைத் தள்ளிவிடுங்கள். அத்தகைய நிகழ்ச்சிகளை ஒதுக்கித்தள்ளுங்கள். தேவனை மகிமைப்படுத்த உங்களைத் தனிமைப்படுத்துவதுதான் ஒரே வழி என்றால் அதனையும் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே (எபி 12:4). ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபி 12:1)

கெட்ட ஈ தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறி கெட்டுப்போகப்பண்ணும், அப்படியே, கெட்டுப்போனவர்கள் ஆயத்தம் செய்யும் (பயிற்சிகொடுக்கும்) நடனங்களும் இருக்கும். ஒவ்வொரு காரியத்திற்கும் யாரை நீங்கள் உபயோகிக்கிறீர்கள் என்பது முக்கியமானது. சத்துரு ஆயுதமாக உபயோகிக்கிறவர்களை, ஆவிக்குரிய ஆராதனையினை நடத்த உபயோகிக்காதீர்கள்.

வெற்றக்குப் பின் வீழ்த்தியவள்

வெற்றிபெரும் எவருக்கும், அடுத்தபடியில்கூட தோல்வி எதிர்த்து வரலாம் கவனமாயிருங்கள். வெற்றியின் களிப்பில், கணமும் யோசிக்காமல், கண்மூடிக்கொண்டு முடிவெடுத்து, தோல்வியில் முட்டிக்கொள்ளும் நிலை சடுதியாக உண்டாகிவிடலாம். தேவன் கொடுக்கும் வெற்றியைப் பற்றி மாத்திரமல்ல, வெற்றிக்கு நன்றியாக நாம் தேவனுக்குக் கொடுக்கும் காரியத்தில் கூட கவனம் தேவை. தேவன் வெறுக்கத்தக்கவைகளை பரிசாக அவருக்குக் கொடுத்தால், தேவனும் வேண்டாம் என்று அவைகளை ஒதுக்கித் தள்ளுவார். 'என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்' (யாத். 23:15) என்று சொன்ன தேவனது அறிவுரையைப் பெற்றது மாத்திரமல்ல, கையில் என்ன கொண்டுவரவேண்டும், எவை தேவனால் அங்கீகரிக்கப்படும் என்ற அறிவையும் நாம் பெற்றிருக்கவேண்டும். அவருக்குத் தேவையில்லாதது தேவசந்நிதிக்கும் தேவையில்லாதது.

யெப்தா யுத்தத்திற்குச் செல்லும்போது, கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பிவரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான் (நியா 11:30,31). யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தப்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.(நியா 11:34)

எதிரே வந்த தனது குமாரத்தியை யெப்தா கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்துபேசினீரல்லவோ? அம்மோன் புத்திராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றான் (நியா 11:35, 36). இரண்டு மாதத்திற்கு பின்னர், அவன் பண்ணியிருந்த பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான் (நியா. 11:9). ஆபிரகாமிடம் ஈசாக்கை பலியிடும்படி சொன்னார் கர்த்தர்; பலிபீடத்தில் கிடத்தப்பட்டபோது, தான் பலியாகப் போவதை ஈசாக்கு ஏற்றுக்கொண்டான், தகப்பனுடன் தேவன் பேசியதை சந்தேகிக்காமல் விசுவாசித்து சந்ததியாகிய தன்னை பலிபீடத்தில் ஒப்புக்கொடுத்தான். ஆனால், கத்தியை உயர்த்திப் பிடித்திருக்கும் வேளையில், கர்த்தர் ஆபிரகாமை தடுத்து நிறுத்தினார்.

ஆனால், யெப்தாவின் மகளை ஏன் காப்பாற்றவில்லை? அவர் நரபலியினை அங்கீகரியாதவராயிற்றே. அப்படியிருக்க யெப்தாவின் பொருத்தனையை ஏற்றுக்கொண்டது ஏன்? என்ற கேள்வி நமக்குள்ளே உருவெடுக்கலாம். யெப்தாவின் பொருத்தனையை தேவன் ஏற்றுக்கொண்டார்; ஆனால், அந்த பொருத்தனையை புரிந்துகொண்டு நிறைவேற்றுவதிலோ அவன் தவறிவிட்டான். 'எதிர்கொண்டு வருவது எதுவோ அது' என்றுதான் யெப்தா சொன்னான், 'வருகிறவர் யாரோ அவர்கள்' என்று சொல்லவில்லை. மேலும், மனித பலியை தேவன் அங்கீகரிப்பதில்லை என்பதை அறியதவனாகவே அவசரப்பட்டு, குமாரத்தியை பலியாக்கிவிட்டான் யெப்தா. தேவன் அங்கிகரியாதவைகளை தேவனுக்குக் கொடுத்து என்ன பயன்? யுத்தத்தில் யெப்தாவுக்கு வெற்றி கிடைத்தது உண்மைதான்; ஆனால், வீட்டிலோ அவன் தோற்றுப்போனவன். ஐந்தறிவுள்ளவைகளைக் குறித்த அவனது வார்த்தைகள் ஆறறிவுள்ள மகளை பலிவாங்கியது. தகப்பனின் வெற்றியை கொண்டாடி வரவேற்கும் சந்தோஷத்தில், குமாரத்தியோ நடனமாடி, தகப்பனையே வரவேற்று தன் உயிரையும் விட்டுவிட்டாள். வருஷந்தோறும் போய், நாலுநாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று (நியா 11:40). வெற்றியின் ஞாபகம் நினைவுகூறப்படவேண்டிய அந்நாளை, புலம்பலின் சத்தம் தொற்றிக்கொண்டது.

எனக்குப் பிரியமானவர்களே, தேவனிடத்தில் வாய்திறந்து சொல்லி, தேவனுக்குப் பிரியமற்றவைகளை நிறைவேற்றும் நிலைக்குள் உங்களைத் தள்ளிக்கொள்ளாதிருங்கள். வெற்றியின் களிப்பில் அநேகரை சத்துரு விழச்செய்துவிடுகின்றான். ஏரோது, பிறந்தநாளைக் கொண்டாடி யோவான் ஸ்நானகனை பலியாக்கிவிட்டதுபோல, யெப்தா வெற்றியைக் கொண்டாடி மகளை பலியாக்கிவிட்டான். விக்கிரகத்தை வணங்குவோர் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு பிள்ளைகளை பலியிடுகிறார்கள்' (எசே. 23:39), அந்த முறை புறஜாதியாருடையது, 'புறஜாதிகளுடைய மார்க்கத்தை கற்றுக்கொள்ளாதிருங்கள்' (எரே. 10:2) என்ற நியமத்தை யெப்தா மறந்துபோனான். 'உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும்' (யாத். 34:20) என்று தேவனே விலக்களித்திருக்க, வேண்டுமென்றே அறியாமையினால் அவளை இழந்தான் யெப்தா. எத்தனை பெரிய வெற்றி கிடைத்திருந்தாலும், நியாப்பிரமாணத்தின் அறிவு இல்லையென்றால் தோல்வி நிச்சயம் எங்காவது ஒட்டிக்கொண்டிருக்கும். வெற்றி தேவன் கொடுப்பது; ஆனால், நாம் தேவனுக்குக் கொடுப்பதோ தேவையில்லாதது. யெப்தா அன்று செய்தது ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது, வேதத்திற்குட்பட்டது என்றால், இன்று புறஜாதியினர் தங்கள் தெய்வங்களுக்கு குழந்தைகளைப் பலியிடுவதும் ஏற்கத்தக்கதாகிவிடுமே.

சகோதரர் ஒருவரின் திருமணத்திற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். ஆலயத்தில் திருமணம் முடிந்து, மேடையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மணமகன் எனது நண்பராயிருந்தபடியினால், மேடையில் பேசவேண்டும் என்று கட்டாயமாக பணிக்கப்பட்டிருந்தேன்; நானும் ஒத்துக்கொண்டிருந்தேன். மேடைக்கு கீழே நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். போதகர் வேதம் வாசித்து ஜெபித்து நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார், தொடர்ந்து உறவினர் சிலர் வாழ்த்தினர், அதனைத் தொடர்ந்து, சினிமா பாடல் ஒலித்தது, நடனம் அரங்கேறியது. இதைக் கண்ட எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. அடுத்து நான் பேசவேண்டும். எனவே, உடனே அவ்விடத்தை விட்டு எழுந்து வீட்டிற்குப் புறப்பட்டேன். 'நான் பேசமாட்டேன்' என்ற செய்தியை மணமகனிடம் சொல்லிவிடுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொண்டேன். நண்பர்கள் எத்தனையாய் என்னை சமாதானப்படுத முயற்சித்தும் மண்டபத்தை விட்டு நான் வெளியேறினேன்; அது எனக்குரிய மேடை அல்ல என்பதை உறுதியாகச் சொன்னேன். எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில், ஜெபங்களுககு மத்தியில் அந்த திருமணம் பேசப்பட்டது என்பதை அறிந்தவன் நான். ஆனால், தேவன் கொடுத்த வெற்றியைக் கொண்டாடும்போதோ சத்துரு உட்புகுந்துவிடுகிறான்.

2015-ம் ஆண்டு புத்தாண்டு தொடக்கத்தின்போது நான் தூத்துக்குடி பட்டணத்திலிருந்தேன். புத்தாண்டு ஆராதனையை முடித்துவிட்டு, காலையில் வீட்டைவிட்டு வெளியே நடந்துகொண்டிருந்தேன். அப்போது, நான் கண்ட காட்சி: ஒரு வீட்டின் அருகே சிறிய மேடைபோன்று அமைக்கப்பட்டு சில சிறுவர்கள் அதில் நடனமாடிக்கொண்டிருந்தார்கள். நடந்து சென்ற நான் சற்று நின்று அவர்களை பார்த்தேன். நடனத்திற்குப் பின்னால், 'பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், நீ என்னுடையவன்' (ஏசாயா 43:1) என்ற வசனம் தொங்கிக்கொண்டிருந்தது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அவர்கள் செய்த அலங்காரம் அது. அதன் கீழே சினிமா பாடல்களுடன் அச்சிறுவர்கள் போட்டுக்கொண்டிருந்த ஆட்டத்தை என்னாலே சகிக்க இயலவில்லை. அப்படியே வீட்டின் மேலே ஏறிட்டுப் பார்த்தேன், 'தேவனுக்கே மகிமை' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. என்ன வேதனை, நம்முடை வாழ்க்கை இப்படி மாறிவிடக்கூடாது. தேவஜனம், தேவ ஊழியர்கள், தேவனுடை ஊழியம் என்ற பேனரை வைத்துக்கொண்டு இச்சிறுவர்களைப் போல ஆடிக்கொண்டிருக்கக்கூடாது. மற்றொரு இடத்தில், ஆலயத்தை நோக்கி ஒலிபெருக்கி வைக்கப்பட்டிருந்தது, 'கட்டவண்டி கட்ட வண்டி, காப்பாத்த வந்த வண்டி' என்ற சினிமா பாடல் ஆலயத்தை நோக்கி ஒலித்துக்கொண்டிருந்தது. ஆலயமோ பூட்டிக் கிடந்தது. கிறிஸ்மஸ் தினத்தன்று ஆலயத்திலிருந்து தேவ சத்தம் ஒலிக்கிறது, புத்தாண்டில் ஆலயத்தை நோக்கி பிசாசு சத்தம் ஒலிக்கிறது இதுதான் 2015-ம் ஆண்டில் நான் கண்ட புத்தாண்டு காட்சி. இவை புறஜாதியாரால் அல்ல, கிறிஸ்தவர்களால் செய்யப்படுவதுதான் வேதனை. பகைவருக்குள் அவமானப்பட வேறென்ன வேண்டும் (யாத். 32:25)

ஒரு சினிமா நடிகையின் தம்பியைச் சந்தித்தேன். அவனது அக்கா பிரபலமான நடிகை என்பதால், அவனைச் சந்தித்ததும், 'அவனது அக்காவின் பெயரைச் சொல்லி, அவர்களது தம்பியா நீ? என்று கேட்டேன். அதனைக் கேட்டதும், அவனது முகம் கோணிப்போனது. சார், எங்க அக்காவை நான் அக்கா என்று சொல்வது கிடையாது, எங்களது வீட்டிலும் இப்போது அவள் இல்லை. நடிப்புத் தொழிலை அவள் தெரிந்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோது, குடும்பத்தில் அனைவரும் அவளுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்; என்றாலும், அத்தனை பேரின் சொற்களையும் மீறி நடிப்பை தெரிந்துகொண்டாள். எனது அக்கா நடித்த படத்தை உலகத்தில் அநேகர் பார்க்கலாம், ஆனால், நானோ என் குடும்பத்தினரோ ஒன்று கூட பார்த்ததில்லை, தரம் குறைந்த உடையில் அவளது படத்துடன் ஆங்காங்கே வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதை காணும்போது எனக்கு கஷ்டமாயிருக்கும் என்றும், எனது அக்காவை அருவருப்பாக மற்றவர் பார்க்கும்போதும் பேசும்போதும் என்னால் சகிக்கமுடியவில்லை என்றும் அவன் சொல்லி, நான் அவளது தம்பி என்று உங்களுக்கு சொன்னது யார்? என்ற கேள்வியை முன்வைத்தான். உனது நண்பர்கள்தான் என்று பதில் சொன்னேன். தொடர்ந்து, அவனது அக்காளைப் பற்றி அதிகம் பேச அவன் இடங்கொடுக்கவில்லை, நானும் தொடரவில்லை. குடும்பத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவளின் நடனத்தைத்தான் உலகம் ஆசையாய் பார்க்கிறது.

ஆராதனையை அறிந்துகொள்ளுங்கள்

ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தihப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள் (யாத் 15:20,21). அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள் (சங் 149:3) என்றும், தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள் (சங் 150:4) என்றும் சங்கீதக்காரன் எழுதுகிறான்.

கர்த்தருடைய பெட்டியை புது இரத்தின்மேல் ஏற்றி, தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள் (2சாமு 6:5). அது ஓர் ஆராதனை; ஏதோ சிலபேர் ஆட மற்றவர்களெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்வு அல்ல; அனைவரும் இணைந்து ஆடிப்பாடும் ஆராதனை. ராஜாவாகிய தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான் (2சாமு. 6:14). 'ஏபோத்து' அது ஆசாரியனின்; அடையாளம், அது ஆண்டவரைச் சந்திக்கச் செல்லும்போது உடுத்தும் உடை. தன்னை ராஜாவாக்கினவருடைய பெட்டியைக் கொண்டுவரும்போது, தாவீது தன் ராஜா வஸ்திரத்தை உடுத்திக்கொண்டு ராஜாவாக கெம்பீரமாக நடந்துவரவில்லை; மாறாக, ராஜவஸ்திரத்தை களைந்துபோட்டு, 'சணல்நூல் ஏபோத்தைத்' தரித்துக்கொண்டு நடனமாடியவனாக வருகிறான். தாவீது ராஜ வஸ்திரத்தில் வராததைக் கண்ட மீகாள், தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள் (2சாமு. 6:16). மீகாளுக்கு ஆசாரிய வஸ்திரமல்ல, ராஜ வஸ்திரமே தேவை.

இன்று ஆராதனையில் கலந்துகொள்ளும் அநேகரின் நிலை என்ன? ஆராதனையை நடத்துபவர், ஆடிப்பாடுவார், கரங்களைத் தட்டுவார், உற்சாகமாக காணப்படுவார்; ஆனால், ஆராதனையில் கலந்துகொண்டிருக்கும் பலரோ பார்வையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் மீகாளைப் போன்ற எண்ணமுடையவர்கள். போதகரும், ஆராதனை நடத்துபவரும் ஆட பார்த்துவருவது ஆராதனையல்ல; அவர்களோடு கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாட நீங்களும் கற்றிருக்கவேண்டும். ராஜவஸ்திரத்தோடு ஆராதனைக்கு வந்து, ஆடாமல், அசையாமல் அப்படியே அமர்ந்திருந்து எழுந்துபோவது ஆராதனையாகிவிடுமோ?

பாகால் தீர்க்கதரிசிகள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள் (1இரா 18:26). தங்கள் வழக்கத்தின்படியே, இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள் (1இராஜா. 18:28), சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை (1இரா 18:29). இன்றைய நாட்களிலும் இப்படிப்பட்ட ஆராதனைகள் உண்டு, ஜனங்களை பார்வையாளர்களாக நினைத்துக்கொண்டு, அவர்களைக் கவர தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்கிறார்கள். தேவன் ஆராதனையை நுகரவேண்டும் என்பதை மனதில் கொள்ளாமல், ஜனங்களுக்கு இந்த ஆராதனை பிடித்திருக்கவேண்டும் என்ற பக்கத்தில் இழுப்புண்டுபோய்விட்டார்கள்.

எலியாவின் ஆராதனையோ வித்தியாசமானது, அவன் ஜனங்களை நோக்கி என் கிட்டே வாருங்கள் என்றான் (1இராஜா. 18:30); நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து சர்வாங்க தகனபலியின் மேலும் விறகுகள் மேலும் ஊற்றுங்கள் என்றான் (1இராஜா. 18:34). அப்போது, 'கர்த்தரே தெய்வம்' என்ற ஆராதனை (1இரா 18:39) ஜனங்களின் வாயில் பிறந்தது. கர்த்தருடைய ஆலயத்தில் நிற்பவர்கள் அனைவரும் கர்த்தருடைய ஊழியக்காரர்களே (சங். 134:1). எரிகோவுக்கு எதிராக சென்றபோது, எக்காளங்களை ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள் (யோசுவா 6:20).
ஆட்டத்திலிருந்து, ஆராதனைக்கு வருவோம்; ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்.