மீதியாயிருந்தவனும்,

மிதித்துக்கொன்றவனும்

 

எதிரிகள் எத்தனையோ பேர் நம்மைச் சுற்றியிருந்தபோதிலும், உயிருக்கு உலைவைக்கும் கணைகளை வீசிக்கொண்டிருந்தபோதிலும், வலைகளை விரித்து விரோதமான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தபோதிலும், அவர்களிடத்தில் சிக்கிக்கொள்ளாமல், தேசத்தில் மீதியாயிருப்பதற்கான காரணத்தையும், வாழ்க்கையின் நாட்கள் இன்னும் நமக்கு மீந்திருப்பதின் காரணத்தையும் அறிந்தவர்களாக; நம்முடைய வாழ்நாட்களின் ஒவ்வொரு மணித்துளியினையும் தேவனுக்கு உகந்ததாக்கும் உணர்வு இன்றை நாட்களின் நமக்குத் தேவை. பிண்டமாயிருக்கும்போதே அண்டத்தைக் காணாமல் பல கருக்கள் கலைந்து அல்லது கலைக்கப்பட்டு மரணத்தைத் தழுவுகின்றன. குழந்தைப் பருவத்திலே, வாலிபப் பருவத்திலே, முதிர்வயதிலே; என இப்படி பல்வேறு நிலைகளில் மனிதர்கள் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்துசென்றுகொண்டேயிருந்தாலும், ஒவ்வொரு நிலையிலும் பலரை தேவன் மீதியாக வைத்திருப்பதின் ரகசியத்தை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா? தேவ திட்டங்களைச் செய்துமுடிப்பதற்காகவே அத்தகையோர் மீதமாக வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. நீங்கள் உயிரோடு இருப்பது, அவர் உங்களுக்குக் குறித்த திட்டங்களைச் செய்துமுடிக்கவே. மீதியாயிருப்பவர்கள், தேவ நீதியை செய்துமுடிக்கத் தவறிவிட்டால், தேவராஜ்யத்திற்கு இழப்பு ஏற்படுத்துகிறவர்களாகவே அவர்களது வாழ்க்கை கணக்கில் கொள்ளப்படும் என்பதில் சந்தேமில்லை.

என்றாலும், மனிதர்களின் மனம் இதனைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றதே. வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளிகளையும் தங்களுக்கெனவே பயன்படுத்திக்கொள்ளவும், இலாபமாக்கிக்கொள்ளவுமே விரும்புகின்றனர். சொத்துக்களைச் சேர்த்து, சுகமானவைகளைத் தேடிக்கொண்டு, தனக்கு, தனக்கு, தனக்கு என்றே இறுதிவரை அவர்கள் புரியும் போர், உயிர் விடும் வரை ஓயாமற் போய்விடுகின்றது. அத்தகைய மனிதர்களுடைய வாழ்க்கையில் 'கர்த்தருக்கு' என்று எதுவுமே கிடைப்பதில்லை. பிரியமானவர்களே! கர்த்தருக்கென்று என்ன வைத்துவிட்டுப் போகப்போகிறீர்கள்? பரலோகத்தில் அவரைச் சந்திக்க என்ன கொண்டுபோகிறீர்கள்? இவ்விரு கேள்விகளுமே இம்மையிலும், மறுமையிலும் நமது வாழ்க்கையை நிரூபிக்கவும், நியாயந்தீர்க்கவும் போதுமானவைகள். 'திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்' (நீதி. 27:7). அப்படியே, சரீரப்பிரகாரமாய் திருப்தியந்துவிட்டவர்கள், ஆவிக்குரிய தேன்கூட்டை மிதித்துவிடுகின்றனர். 'தேவனுடைய குமாரனை காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவர்களாக' மாறிவிடுகின்றனர் (எபி. 10:29). பன்றிகள் முத்துக்களை மிதித்துப்போடும் (மத். 7:6) என்றுதானே இயேசுவும் போதித்தார்; முத்துக்களின் மதிப்பு, அதாவது வாழ்க்கையின் மதிப்பு அவர்களுக்குத் தெரிவதில்லை. அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என்பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள் (எரே 12:10) என்று அங்கலாய்க்கிறார் கர்த்தர். உங்கள் வாழ்க்கை இந்த நிலையோடு கூட ஒத்துப்போகிறதா? கர்த்தருக்குக் கொடுக்கப்படவேண்டிய நேரத்தை, நாளை, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தாலந்துகளைக் குறித்த கரிசனையின்றி, காலால் மிதித்துப்போட்டு வாழுகிறீர்களா?

நீங்கள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான கர்த்தரின் பணியினை அறிந்துவைத்திருக்கின்றீர்களா? இல்லையேல், ஏன் இருக்கிறேன் என்ற அறியாமையில் வாழுகின்றீர்களா? மீதியானவர்களே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களைக் குறித்த திட்டம் கண்களுக்குத் தெரியட்டும்.

எல்லாம் எனக்குத்தான் என்ற எண்ணம் சத்துருவால் மனிதர்களின் சரீரத்திற்குள் விதைக்கப்பட்டுவிட்டதினால், அதுவே மரமாகி வளர்ந்து, முழு மனிதனையும் களையாக்கிவிடுகின்றது. ஒவ்வொரு நாளும் வேதம் வாசிக்கவும், ஜெபிக்கவும் கூட கொஞ்ச நேரத்தை தேவனுக்கென்று மீதிவைக்கத் தவறிவிடும் மனிதர்கள் எத்தனை எத்தனை. உங்களுக்கு கிடைக்கும் வாழ்நாட்களில் தேவனுடையவைகளை மதித்து வாழப் பழகுங்கள். தேவ கற்பனைகளை மிதித்து, நியமங்களை மிதித்து நீங்கள் மீதியாயிருப்பதினால் அவருக்குப் பிரயோஜனம் என்ன? இவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்ற அங்கலாய்ப்புதான் தேவனுக்கு மிஞ்சும்.

சொத்துக் குவிப்பு -
சொத்தைக் கொடுத்தவனும், சொத்தைக் குவித்தவரும்

அத்தனையையும் அனுபவித்து, சந்ததிக்கும் பல தலைமுறைகளுக்கான ஆஸ்திகளைச் சவதரித்துக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்கோ ஒன்றும் கொடுக்காமல் போகிறவர்கள் அநேகர். ஆலயத்திற்குக் காணிக்கை கொடுத்துவிட்டால், கணக்கு முடிந்துவிட்டது என்றும் தசமபாகம் கொடுத்துவிட்டால் தண்டணையிலிருந்து தப்பிவிட்டோம் என்றும் கருதும் விசுவாசிகள் இன்றைய நாட்களில் பெருகத்தொடங்கிவிட்டனர்.
தாவீதோ, நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன். இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன் (1நாளா 29:2,3) என்கிறான். தாவீதுக்குச் சொந்தமானவைகள் கர்த்தருடைய ஆலயத்துடன் சேர்ந்தது; கர்த்தருடைய ஆலயத்திற்குச் சொந்தமானவைகள் தாவீதுக்குச் சொந்தமாகவும், சொத்தாகவும் சேரவில்லை. இன்றைய நாட்களில் போதகர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஊழியங்களுக்கும் தாவீது ஒரு சவால் அல்லவா? ஊழியங்கள் என்ற பெயரில், தனி மனிதனின் சொத்துக்கள் குவியத்தொடங்கிவிடுகின்றன, ஆடம்பரங்கள் அம்பாரமாக அரங்கேறிவிடுகின்றன. 'கர்த்தர் சொத்துக் குவிப்பு வழக்கு போட்டால்' எத்தனை பேர் தப்புவார்களோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். எங்கேயிருந்து வந்தவை, எதற்காகச் செலவுசெய்யப்படவேண்டியவை என்ற எண்ணமின்றி, ஆலயத்தின் உண்டியலில் போடப்படும் காசு கண்டதற்கெல்லாம் செலவுசெய்யப்பட்டுவிடுகின்றதே.

யோவாஸ் ராஜாவாக இருந்த நாட்களில், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு உண்டானது. யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும், ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுதுகாண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான் (2இரா 12:4,5).

ஆனால் நடந்ததோ விபரீதம், வேதனையான காரியம்; ஆலயத்தை பழுதுபார்க்கும்படி ஜனங்கள் கொடுத்த பணத்தைக்கூட ஆசாரியர்கள் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆலயமோ பழுதாகவே விடப்பட்டிருந்தது. யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபாராNதுபோனார்கள் (2இராஜா. 12:6). ஆசாரியர்களைக் கொண்டு ஆலயத்தைப் பழுதுபார்ப்பது என்பது இனி நடக்காத காரியம் என்பதை அறிந்த ராஜா, அப்பொழுது யோவாஸ், ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான். அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள் (2இரா 12:7,8).

ஆசாரியர்கள் எதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள் பாருங்கள்; 'ஆலயத்தைப் பழுதுபாராமல் இருக்கிறதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்'. ஜனங்களை கண்ணீPராக்கும் செய்தி இது அல்லவா? ஆசாரியர்களிடமிருந்து ஆலயத்தைக் காப்பாற்ற, கர்த்தருடைய ஆலயத்திலே ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் பலிபீடத்தண்டையிலே, துவாரமிடப்பட்ட ஒரு பெட்டி ராஜாவின் கட்டளையின்படி வைக்கப்பட்டது. கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்டும் பணம் அதிலே போடப்பட்டது. பெட்டியிலே பணம் சேரும்போது, ராஜாவின் சம்பிரதியும், பிரதான ஆசாரியனும் வந்து, அந்தப் பணத்தை எடுத்து எண்ணி கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுத்தார்கள் (2இரா 12:9-12). கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும் வேலையைச் செய்கிறவர்களுக்கே அந்தப் பணம் கொடுக்கப்பட்டது (2இராஜா. 12:14). வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷர் கையிலே கணக்கு கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள் (2இராஜா. 12:15). ஆசாரியர்களைக் காட்டிலும் இந்த மனுஷர் எத்தனை உண்மையுள்ளவர்கள். ஆசாரியர்களைச் சேரவேண்டியது மாத்திரம் ஆசாரியர்களைச் சேர்ந்தது. ஆலயத்திற்குச் சேரவேண்டியவைகள் ஆசாரியர்களுக்குச் சேரவில்லை, ஆசாரியர்களுக்குச் சேரவேண்டியவைகள் ஆலயத்திற்குச் சேரவில்லை. ஆசாரியர்கள் வரம்பு மீறிவிடாதபடி, பலிபீடத்தண்டையில் வைக்கப்பட்டிருந்த பெட்டி ஆசாரியர்களைக் கட்டிப்போட்டது.

இந்த சம்பவம், இன்றைய நாட்களின் பல ஊழியங்களுக்கும் சபைகளுக்கும் பொருந்தக்கூடியதே. கர்த்தருக்காக ஜனங்கள் கொடுக்கும் பணம், ஆசாரியர்களின் கஜானாவைத்தான் நிரப்பிக்கொண்டிருக்கின்றது. ஆசாரியர்களின் மேஜையிலிருந்து துணிக்கைகள்தான் ஆலயத்தில் விழுந்துகொண்டிருக்கின்றது.

ஏலியின் நாட்களிலும் நடந்தது இதுதானே; ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. அந்த ஆசாரியார்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங் காலத்தில் இறைச்சி வேகும்போது ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து, அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக் கொள்ளுவான். அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள் (1சாமு 2:12-14). கொழுப்பை தகனிக்கும்வரைக்குக் கூட ஆசாரியர்கள் தாமதிக்கவில்லை; 'ஆசாரியனுக்கு பொரிக்கும்படி இறைச்சி கொடு; பச்சை இறைச்சியே அல்லாமல் அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை; இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்வேன்' (1 சாமு. 2:15,16) என்றான் ஆசாரியன் அனுப்பிய வேலைக்காரன். விதவிதமான கூட்டங்களில், விதவிதமான விதங்களில் கூறுள்ள ஆயுதத்தைக் கொண்டு ஊழியர்கள் குத்தியெடுப்பதற்கான திருஷ்டாந்தமே இந்தச் சம்பவம். ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு கவர் கொடுக்கப்படுகிறது.

பிறந்தநாள் கொண்டாடும் ஒரு வீட்டிற்குள் நான் அமர்ந்திருந்தேன், அப்போது, அங்கு வந்த கோவில் பணிவிடையாளர் கவர் ஒன்றை அந்த வீட்டுத் தலைவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். சற்று நேரம் கழித்ததும், அது என்ன என்று நான் விசாரித்தேன். அப்போது அந்த குடும்பத்தின் தலைவர் : பிறந்தநாள், திருமண நாள், கல்யாண நாள், தசமபாகம் என பல்வேறு கவர்களை ஆலயத்திலிருந்து கொடுப்பார்கள். மாதம் தொடங்கியதும் தசமபாக கவர் வரும், பின்பு திருமண, பிறந்த தின நாட்களின் கவர்கள் அந்தந்த நாட்களைப் பொருத்து எங்களிடத்தில் கொடுக்கப்படும்; அடுத்த வாரம் சபைக்குச் செல்லும்போது அந்த கவரில் காணிக்கை வைத்து படைக்கவேண்டும் என்று சொன்னதோடு நிறுத்தாமல், 'எதுக்கெடுத்தாலும் இப்போ கவர்தான்' என்று சலித்தவாறு தனது வார்த்தையினை முடித்தார். கர்த்தருக்குக் கொடுப்பது ஜனங்களுடைய கடமை, ஆனால், ஆசாரியர்கள் ஜனங்களிடத்திலிருந்து எடுப்பதோ மடமை. விசுவாசிகளை விசனமாய் கொடுக்கவைக்க வேதம் போதிக்கவில்லை; உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் அல்லவோ தேவன் பிரியமாயிருக்கிறார். ஜனங்கள் பலிசெலுத்தி, கர்த்தருக்குக் கொடுக்கவேண்டியவைகளைக் கொடுக்கட்டுமே. ஆலயத்தை ஏன் வரி பிரிக்கும் கருவூலத்தைப் போல செயல்படுத்துகிறீர்கள். 'இப்பொழுதே கொடு' என்று இல்லாத நேரத்திலும், ஜனங்களின் கரத்தில் கொடுக்கப்படும் கவர்கள், ஏலியின் குமாரர்கள் கையிலிருந்த ஆயுதத்தைப் போலவே செயல்படுகின்றன.

முதலில் தேவனுக்கு அல்ல தனக்கு என்பதுதான் ஆசாரியனின் கணக்கு. தான் திருப்தியான பின்புதான் தேவன் திருப்தியாகவேண்டும் என்பதுதான் ஆசாரியனின் எதிர்பார்ப்பு. தாங்கள் உண்டுபோக மீந்ததுதான் தேவனுக்கு என்பது அவர்கள் வஞ்சகம். 'முதலில் கொழுப்பை தகனித்துவிடட்டும்' (1சாமு. 2:16) என்று ஜனங்கள் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. ஜனங்கள் முதலிடம் கொடுப்பது தேவனுக்கு, ஆசாரியன் முதலிடம் கொடுப்பதோ தனக்கு. ஜனங்களும் தங்களுக்கே முதலிடம் கொடுக்கவேண்டும் என்று ஆசாரியர்கள் விரும்புகிறார்கள். இப்படிப்பட்டவர்களைக் குறித்துதான் இயேசுவும் தனது போதனையின்போது, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் (மத் 23:6,7) என்று சொன்னார்.

நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே (ஏசா 14:14) என்ற சாத்தானின் தந்திரமே இத்தகையோரின் வாழ்க்கை எந்திரத்தைச் சுழற்றுகிறது. இப்படிப்பட்ட ஆசாரியர்களிடமிருந்து தேவனுக்கு என்ன கிடைக்கும்?

கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் தாவீதை ஆட்கொண்டிருநதது. தாவீது ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது; தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான் (2சாமு. 7:2). கட்டியெழுப்பப்பட்ட தன்னுடைய அரண்மனையையும், தேவனுக்கு ஆலயம்கூட கட்டப்படாததையும் ஒப்பிட்டுப் பார்த்தான் தாவீது. தேவனுக்கு வீட்டைக் கட்டவேண்டும் என்று தாவீது விரும்பியதால், கர்த்தர் தாவீதின் வீட்டை (அரண்மனையை அல்ல சந்ததியை) கட்டினார் (2சாமு. 7:11). தேவனுக்கு வீடுகட்டுவதை விட்டுவிட்டு, தங்களுடைய வீட்டைக் கட்டவே பலர் திட்டமிட்டுக்கொண்டிருப்பதினால், அவர்களது சந்ததி இடிக்கப்பட்டுப்போகிறது. தங்கள் வசிப்பிடத்தை அரண்மனையைப் போலவும், தேவ ஆலயத்தை ஏழைகளின் கூடாரத்தைப் போலவும் மாற்றிவிட்ட ஊழியர்கள் அநேகர் உண்டு. தாவீது தன்னுடையதிலிருந்து எடுத்து தேவனுக்குக் கொடுத்தான், இவர்களோ தேவனுடையதிலிருந்து எடுத்து தன்னுடையதாக்கிக்கொள்கிறார்கள். ஆலயத்தைக் காட்டிலும், பல ஊழியர்களின் வீடு ஆடம்பரமாகிப்போனது. பல விசுவாசிகளுக்கு, சொர்க்கத்தின் வாசலில் நிற்பதில் போன்ற உணர்வு ஊழியர்களின் வீட்டிலேயே கிடைக்கிறது. ஆலயத்தின் பணத்தை எதற்கு செலவுசெய்கிறோம்? போதகரின் பிள்ளைகள் எப்படி செலவுசெய்கிறார்கள்? தேவனுக்குக் கொடுங்கள், தேவனுக்குக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு, தன்னுடைய வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் கூட்டம் இந்நாளில் மிகுதி. 'கர்த்தருக்கு உபவாசம்' என்று யேசபேல் எழுதி ஏமாற்றியதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லையே.

கர்த்தருடைய ஆலயம் பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? (ஆகாய் 1:4) திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதற்கும், புசித்தும் திருப்தியாகாததற்கும், குடித்தும் பரிபூரணமடையாததற்கும், வஸ்திரம் உடுத்தியும் குளிர் விடாததற்கும், பொத்தலான பை வழியாக கூலி ஒழுகிப்போவதற்கும் காரணம், தேவனுடைய ஆலயத்தை தேடுவாரற்று விட்டுவிட்டதே (ஆகா 1:6).

தேவனுடைய ஆலயம் என்றால், அது ஒரு கட்டிடம் என்ற மனநிலையைத்தான் இன்னும் கிறிஸ்தவர்கள் பலர் கொண்டிருப்பது வேதனைக்குறியது. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம் (1கொரி 3:16,17). தேவனை ஏற்றுக்கொண்ட நாம் மட்டும் தேவனுடைய ஆலயங்கள் அல்ல, தேவனுடைய ஆவியானவர் வசிக்கும் நாம் மாத்திரம் தேவனுடைய ஆலயங்கள் அல்ல; தேவனை ஏற்றுக்கொள்ளாதவர்களும் தேவனுடைய ஆலயங்களே; அவைகளில் தேவன் வசிக்க அவர்கள் இடம்கொடுக்கவில்லை. இந்திய தேசத்தில் எத்தனை ஆலயங்கள் புகைபிடித்துக்கொண்டிருக்கிறது, எத்தனை தேவனுடைய ஆலயம் போதை வஸ்துக்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது, எத்தனை ஆலயம் திருட்டிலும், விபச்சாரத்திலும், கொலையிலும் கறைபட்டுக்கிடக்கிறது; இந்த ஆலயங்களைப் பழுதுபார்ப்பது யார்? இந்த ஆலயங்களைக் கட்டியெழுப்பும் பணி நம்முடைய கரங்களிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது. எத்தனையோடு கோடி ஆலயங்கள் பாழாய் கிடக்கும்போது, மச்சுப்பாவப்பட்ட வீடுகளிலும், மனம் விரும்பிய அரண்மணையிலும் வாழ்வதற்கான காலம் இது அல்ல.

பிரியமானவர்களே! உங்கள் வாழ்க்கை எதற்காக செலவழிக்கப்படுகின்றது; மீதிவைக்கப்பட்டிருக்கும் உங்கள் கால்கள் தேவ ஆலயங்களைச் நோக்கி பயணிக்கிறதா; அதுதானே ஆத்தும அறுவடை.

கொலையாளி -
மீதியானுக்குப் போன மீதியானவன்

பாவோன் இஸ்ரவேல் ஜனத்திற்கு விரோதமாய் எழும்பி நின்றபோது, இஸ்ரவேலருக்குப் பிறக்கும் ஆண் பிள்ளைகளெல்லாம் கொல்லப்படவேண்டுமென்று ஆணை பிறப்பித்திருந்தான்; அத்தகைய கொடூரமான சூழ்நிலையிலும் அற்புதமாக மோசேயை மீதியாக வைத்திருந்தார் கர்த்தர். குழந்தைப் பருவத்திலிருந்து மோசேயை பாதுகாக்கும் பொறுப்பு தேவனுடையதாகவே இருந்தது. மோசேயை மீதியாக வைத்திருந்ததின் நோக்கம், தேவனுடைய திட்டத்தின்படி தேவஜனத்தை விடுவிக்கவேண்டும் என்பதே. பார்வோனின் அரண்மனையில் மோசே வளர்ந்துகொண்டிருந்தபோது, நேரடியாக தேவன் அவனிடத்தில் தனது திட்டத்தை வெளிப்படுத்தவில்லை. என்றாலும், 'தன் ஜனம்' என்ற ரத்த சம்பந்தமான உணர்வு அவனை உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது. எகிப்தின் அரண்மனையில் அவன் கற்றுக்கொண்ட பெலம் அதிகமாய் அவனிடத்தில் கிரியை செய்தது. எனவே, ஆவியானவர் ஏவத்துவங்கும் முன்பதாகவே, அவனாகவே எழுந்து எகிப்தியருக்கு எதிராகப் புறப்பட்டான். தேவபெலத்தோடு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே, மாம்சீக திட்டத்தின்படி எகிப்தியனை வெட்டினான். எகிப்தியர்களை வெட்டுவதால் அல்ல விடுதலை, இஸ்ரவேல் ஜனங்களை வெளியே கொண்டுபோவதே விடுதலை என்பதை அப்போது அவன் அறிவுக்கு எட்டவில்லை. இஸ்ரவேலருக்கும், எகிப்தியருக்கும் இருந்த ஏற்றத்தாழ்வுகள் மோசேயின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது; அதனை சமன் செய்யவேண்டும் என்றும், அடிமைகளாகப் பாவிக்கப்படும் அவர்கள் எகிப்தில் எஜமான்களாகவும் பார்க்கப்படவேண்டும் என்றும் விரும்பினான் அவன். எகிப்தியர்களிடமிருந்து விடுவிக்கப்படுவதிலேயே நோக்கமாயிருந்தான் மோசே; தேவனோ, எகிப்திலிருந்து விடுதலையாக்குவதில் நோக்கமாயிருந்தார். கானானை அப்போது மோசே அறியான். எகிப்தியரிடமிருந்து விடுதலையாகி, எகிப்திலே சுதந்தரமான வாழ்க்கையைக் கொடுக்க நினைத்தவன் மோசே. தேவ ஜனங்களை விடுவிக்கவே அன்றி நாம் எகிப்தியர்களை வெட்ட அழைக்கப்பட்டவர்களல்ல.

எனினும், இன்றைய நாட்களில், மோசேக்குள் இருந்த குணம், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் போராடுபவர்களைச் சந்திக்கும்போது கிறிஸ்தவர்களுக்கும் வந்துவிடுகின்றது. ஊழியர்களைக் கொன்றுவிட்டார்கள், மிஷனரிகளை கொலைசெய்துவிட்டார்கள், ஆலயங்களை எரித்துவிட்டார்கள், கிறிஸ்தவர்கள் தேசத்தில் கொடுமையாக நடத்தப்படுகிறார்கள், கிறிஸ்தவர்களின் சுதந்தரம் பறிக்கப்படுகின்றது, பொது இடங்களில் கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது; கிறிஸ்தவ ஊழியர்கள் வெளியிடும் மாதாந்திர பத்திரிக்கைகளுக்கு விரோதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. தேசத்தில் ஒடுக்கப்படும் கிறிஸ்தவர்களைக் காப்பாற்ற ஏதாகிலும் செய்யவேண்டும் என்று மாம்சத்தில் முடிவெடுத்துவிடும் ஊழியர்களும், கிறிஸ்தவர்களும் அநேகர். இத்தகைய மக்கள் எதிரிகளுக்கு தங்களை எதிரியாக்கிக்கொள்ளுகிறார்கள். இத்தகைய செயல், பல மோசேக்கள் விரட்டிவிடப்படும் நிர்ப்பந்தத்தை உண்டாக்கிவிடுகின்றது. மீதியாயிருக்கும் அவர்களை மீதியானுக்குள் ஒளித்துக்கொள்ளச் செய்துவிடுகின்றது.

சமீபத்தில் லிபியாவில் எகிப்து தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்படும் வீடியோ பதிவினை இணையதளத்தில் பார்த்தேன். கடலோரத்திலே வரிசையாக நிறுத்தப்பட்டு, ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு தீவிரவாதி கத்தியுடன் நிற்க, வெறிப்பாடலைப் பாடிக்கொண்டிருந்தனர் தீவிரவாதிகள்; எனினும், கிறிஸ்தவர்களோ தேவனை நினைத்து மெல்லிய தொனியில் பாடிக்கொண்டிருந்தனர். ஆடு அறுக்கப்படுவதுபோல, ஒவ்வொரு தீவிரவாதியும் ஒவ்வொரு கிறிஸ்தவனை அறுக்க, கடற்கரை நீரே இரத்தமாக மாறியிருந்தது.

மற்றொரு புகைப்படத்தில், கிறிஸ்தவ சிறுவர்கள் ஒரு இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்; அப்படியே, மற்றொரு கிறிஸ்தவரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டார். தான் அறுத்த தலையை கையில் ஏந்திப் பிடித்தவாறு சாலையில் சிரிப்போடு நடந்துவந்தான் தீவிரவாதி ஒருவன். மற்றுமோர் புகைப்படத்தில், தீவிரவாதி ஒருவன் கிறிஸ்தவ விசுவபாசி ஒருவரை கழுத்தில் கத்தியால் அறுக்க, மற்றவர்கள் பாத்திரத்தில் இரத்தத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவலமாக்கப்பட்டும், அம்மணமாக்கப்பட்டும் ஆண்களுடன் பெண்களும் தீவிரவாதத்தினால் பலியாகும் காட்சிக்கு பதில் தேவனிடத்திலேயே உண்டு என்பது நிச்சயம். இஸ்லாமியர்களையும், இஸ்லாமிய மதத்தையும் காப்பாற்றவேண்டுமென்றால், கிறிஸ்தவர்களை அழித்துத்தான் ஆகவேண்டும் என்ற கொள்கை வெறி, இரத்தப் பழியையே அவர்கள் வாழ்க்கையில் கூட்டுமேயன்றி, தீவிரவாதிகளின் வழியை நிலைநாட்டிவிடாது.

தேவஜனம் விடுவிக்கப்படவேண்டும் என்ற சிந்தை மோசேயினிடத்தில் இருந்தது உண்மைதான்; என்றாலும், அது தேவதிட்டத்தோடு பொருந்திப்போகவில்லை. 'என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று' (ஏசாயா 55:8) என்ற வசனத்தின்படிதான் மோசேயில் செயல்பாடு ஆரம்பமானது. தேவஜனத்தின் எதிரியாக எதிப்தியர்களின் மேல் மோசே கோபமாயிருந்ததினிமித்தமும், தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, அங்கும் இங்கும் பார்த்து, ஒருவனும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான் (யாத் 2:11,12); அந்தச் செய்தி பார்வோனைச் சென்றடைந்தது. பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடினான் (யாத். 2:14,15). தேவஜனத்தை விடுவிக்கும் முன் வெளியே ஓடவேண்டிய நிலை மோசேக்கு ஏற்பட்டது. வீரமாக மோசே செயல்பட்டதைப் போலவும், வெற்றி பெற்றதைப் போல காணப்பட்டபோதிலும், பார்வோனைப் பற்றிய பயம் அவனைத் தொற்றிக்கொண்டது. எகிப்திலிருந்து தப்பியோடி மீதியான் தேசத்தில் போய் தங்கியிருந்தான். அங்கே திருமணம் முடித்து, பிள்ளைகளையும் பெற்றான்.

'உன்னை பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா' என்று தேவன் தேடிவந்து சொன்னபோது, 'இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவர நான் எம்மாத்திரம்' (யாத். 3:10,11) என்றான். 'நான் உன்னோடே இருப்பேன்' என்று சொன்னபோதிலும், 'இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்று சொன்னபோதிலும், அடையாளங்களைச் செய்ய அதிகாரமளித்தபோதிலும், 'ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்' என்றே சொன்னான் மோசே (யாத் 4:10). பிராணனைக் குறித்த பயம் அவனை பின்னுக்கு இழுத்தது. எனவே, தேவன் மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திருப்பிப் போ, உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள்' (யாத் 4:19) என்று தேவன் சொன்னபோது, மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான் (யாத் 4:20). 'நான் உன்னோடே கூட இருப்பேன்' என்று சொன்னதைக் காட்டிலும், 'உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள்' என்ற வார்த்தைதான் மோசேக்குள் பெலத்தைக் கொண்டுவந்தது. உங்களுக்குள் பெலத்தைக் கொண்டுவருவது எது? எதிரி இறந்துபோன செய்தியா? விரோதிகள் வீழ்ந்துவிட்ட செய்தியா? அல்லது தேவன் உடனிருக்கும் செய்தியா? உங்கள் பெலன் எதிலே? ஆராய்ந்துபாருங்கள். மீதியாயிருக்கும் நீங்கள் தேசத்தை மீட்கவேண்டுமென்றால், தேவன் உடனிருப்பதையே பெலனாக உணர்ந்துகொள்ளுங்கள்.

உங்கள் பிராணணைக் குறித்த பயம் உங்களுக்குள் இருக்குமென்றால், அது ஜனத்தை விடுவிப்பதற்கு விரோதமாகவே உங்களுக்குள் கிரியை செய்துகொண்டிருக்கும். உங்கள் பிரயாணம் எல்லாம் உங்கள் பிராணணைச் சுற்றியே வந்துகொண்டிருக்கும். அந்த பகுதிக்கு ஊழியத்திற்குச் சென்றால் அடித்துவிடுவார்கள், இங்கு பிரசங்கம் பண்ணினால் எரித்துவிடுவார்கள் என்று பிராணனைக் குறித்த பயமே உறுத்திக்கொண்டிருக்கும். சுவிசேஷம் அறிவிக்காதபடி உங்களைச் சுற்றி வளைத்திருப்பதும், ஊழியம் செய்யாதபடி உங்களை ஓட விரட்டுவதும் பயமே, பயமே, பயமே. கைப்பிரதிகள் கூட கொடுப்பதற்கு கைகள் பலருக்குத் தயங்குகின்றன. எகிப்திலிருந்து ஜனங்கள் விடுதலையாகவேண்டுமென்றால், நீங்கள் பயத்திலிருந்து முதலில் விடுதலையாகவேண்டும். மீதியான மோசே மீதியானில் இருந்துவிட நினைத்தானே.

கருப்புப் பணங்கள்

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும் ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள். (1இரா 19:1,2)

பாகால் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டவன் எலியா; 'கர்த்தரே தெய்வம்' என்பதை ஜனங்களுக்கு முன்பாக நிரூபித்தவன் எலியா; என்றாலும், யேசபேலின் வார்த்தைகள் எலியாவை பயமுறுத்திற்று. தனக்கு விரோதமாக யேசபேல் சொன்னவைகள் எலியாவுக்கு தெரிந்தபோது, தன் பிராணனைக் காக்க வனாந்தரத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றான். பயம் ஒரு மனிதனுக்குள் வந்துவிடும்போது, அவன் தனது பிராணணையே காக்கும்படியாக அனைத்து வகைகளையும் தேடுகின்றான்; அதக்கே முன்னுரிமை கொடுக்கிறான். கர்த்தருடைய பணி பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றது. எதிர்காலத்தைக் குறித்த பயம், பிள்ளைகளைக் குறித்த பயம், வியாதியைக் குறித்த பயம், பொருளாதாரத்தைக் குறித்த பயம் உங்களை ஊழியத்திலிருந்து விலக்கிவிடவும், ஓட்டத்திலிருந்து பின்னே இழுத்துவிடவும் போதிய பெலனுள்ளவைகள்.

கர்த்தர் எலியாவை போகச் சொல்லவில்லை; அவனாக வனாந்தரத்தைத் தெரிந்துகொண்டான். அங்கிருந்து வெளியே வர இயலாதவனாக காணப்பட்டான். எதிரிக்கு பயந்து நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் ஓடிக்கொண்டேதானிருப்பீர்கள், மீண்டுவர இயலாதவர்களாகிவிடுவீர்கள். நீங்களாக தெரிந்துகொள்ளும் இடம் உங்களை அடைத்துக்கொள்ளும். 'வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது' என்று என்று பார்வோன் சொன்னதைப் போலவே உங்கள் வாழ்க்கையின் நிலையும் மாறிவிடும். ஆகாரின் பிள்ளைக்கு வனாந்தரத்தில் தண்ணீர் கொடுத்த தேவன், வனாந்தரத்தில் எலியாவையும் போஷித்தார். என்றாலும், எலியாவோ புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான் தூதன் (1இராஜா. 19:6,7); ஆனால், எலியாவின் பயணமோ கெபியை நோக்கியதாகவே இருந்தது. தேவைகள் தேவனால் சந்திக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், நீங்கள் இருக்கும் இடம் தேவன் விரும்பாத வனாந்தரமாக இருக்கலாம். ஆவிக்குரிய வலிமை பெற்றிருந்த எலியா, ஆகாரைப் போல வனாந்தரத்தில் அலைந்துகொண்டிருந்தான். 'என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்' என்ற அங்கலாய்ப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. பயப்படுத்தும் யேசபேலை தனது மனதிலிருந்து தள்ளிவிடக்கூடாதவனாகவே வாழ்ந்துகொண்டிருந்தான் எலியா. காலையில் எழுந்தாலும் யேசபேலைப் பற்றிய பயம், மாலையில் படுத்தாலும் யேசபேலைப் பற்றிய பயம். போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொன்னான் (1இரா 19:3,4). வழியில் நிற்பவளுக்குப் பயந்து, வாழ்க்கையே பிடிக்காமற்போனது எலியாவுக்கு.

தேவ ஜனத்திற்கு விரோதமாக சத்துரு செய்யும் யுத்தங்கள் தொடர்கதையாகிக்கொண்டிருக்கின்றன. தேவனை அறியாதவர்களை அந்த யுத்தத்திற்குப் பயன்படுத்தும் அவன், பலரைக் கொன்ற வெறியில், தனது பெலத்தைப் பெரிதென எண்ணி போரை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறான். ஈசாய் என்னும் அடிமரம்; வேரிலிருந்து வளரும் என்ற விந்தையை அறியாதவன் அவன். வளர்ந்திருக்கும் மரத்தை அழித்துவிட்டாலும், படர்ந்திருக்கும் வேர்கள் தேவனது பெலத்தை ஒருநாள் நிரூபிக்கும் என்பது நிச்சயம். கொலையுண்ணப்பட்டவர்கள், தங்களுக்காக விலைகொடுத்தவரோடு விண்ணில் வாழ்க்கையைத் தொடங்கினாலும், கொலையுண்ணப்படாமல் மீந்திருக்கும் நாம் எப்படி செயல்படவேண்டும்? என்பதுவே நமக்கு முன் நிற்கும் பிரதானமான கேள்வி. 'கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்' 'கர்த்தர் விடுவித்தார்' 'சத்துருவை கர்த்தர் அழித்தார்' என்பது போன்ற, சாட்சியின் வார்த்தைகள் நம்மிடத்தில் காணப்பட்டாலும், அதையே சொல்லிக்கொண்டு வீதிக்கு வராமல், ஒளிந்திருப்பதினால் பலன் ஒன்றுமில்லை. ஆலயத்தில் உரக்கப் பாடுவோரும், ஆலயத்தில் உரக்கப் பிரசங்கிப்போரும் ஆத்துமாக்களை தேடும் பணியில் அமைதியாயிருந்துவிடக்கூடாது. என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை (நெகே 6:11) என்ற நெகேமியாவின் வார்த்தைகள் நமக்கு பாடமாகட்டும்.

உயிருக்கு உபயோகமில்லாமல், வங்கிதனில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தால் என்ன பயன்? பாதுகாப்பாக வங்கியில் வைக்கப்பட்டிருந்தாலும், புழக்கத்திற்கு வந்தால்தான் பிழைப்பதற்கு உபயோகமாகும். தேசத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய வரிதனை கொடுக்காமல், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை 'கருப்புப் பணம்' என்று சொல்லுகின்றோம். இன்றைய நாட்களில், இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. 'கருப்புப் பணத்தை' மீட்டுக் கொண்டுவந்தால், தேசத்தில் பெரிய பெரிய காரியங்களைச் செய்துவிடலாம், மக்கள் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றிவிடலாம், ஏன், வறுமையிலிருக்கும் மக்களின் வறுமையினையும் விரட்டிவிடலாம் என்ற வார்த்தைகளை தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் தலைவர்கள் பலர் மேடையில் முழங்கினர்; ஒருபுறத்தில் அவர்களது முழக்கம் உண்மைதான்; என்றாலும், அதனை மீட்டுக்கொண்டுவர, அரசியல் கட்சிகள் எடுக்கும் முயற்சிகள் இன்னும் பயன்தரவில்லை.

தேசத்திற்குப் பயன்படக்கூடிய நபர்கள், ஆத்துமாக்களை அறுவடை செய்யும் வேலையாட்கள் சபையில் பதுங்கியிருந்துவிட்டால்; சபையின் நிலையும், கருப்புப் பணத்தைப் பதுக்கிய வங்கியைப் போன்றதாகவே மாறிவிடும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்யக்கூடிய, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக்கூடிய நபர்கள், வரம் பெற்றவர்கள், அபிஷேகம் பெற்றவர்கள், தாலந்துகளைப் பெற்றவர்கள் தேவாலயத்திலேயே தங்கிவிட்டால், தேவ சித்தம் நிறைவேறுவது எப்படி? தேசத்தைச் சந்திக்கும் பணிக்கென இவர்களை வெளியே கொண்டுவந்தால், ஆத்துமாக்கள் பல கொள்ளைப் பொருளாகக் கிடைக்கும்; பரலோகம் களிகூறும்.

பிரியமானவர்களே! நீங்கள் ஆலயத்திற்குப் போவது எதற்காக? அங்கத்தினராகவா அல்லது ஆத்துமாக்களுக்காகவா? தேசத்தைச் சந்திக்கவேண்டியவர்களை பதுக்கிவைக்கும் இடமல்ல தேவாலயம்; அது யுத்தத்திற்கு போர்வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிக்களமே. கடைசி வரை பயிற்சியே பெற்றுக்கொண்டு, ஒருமுறை கூட யுத்தம் என்னவென்றோ, யுத்தத்தில் வென்றோ பார்த்திராதவர்களாகவா நீங்கள் பரலோகம் செல்ல நினைக்கிறீர்கள். 'ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல், வெட்கத்தோடே ஆண்டவா, வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளால் ஆகுமோ' என்ற பாடல் அப்படிப்பட்டோரை தட்டியெழுப்பட்டும். 'என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்' (யாத். 23:15) என்ற வார்த்தை, இவ்வுலகத்தில் தேவாலயத்திற்குப் போகும்போது மாத்திரம் பொருந்தத்தக்கதல்ல. தேகத்தை விட்டு பரலோகத்திற்குப் போகும்போதும் பொருந்தக்கூடியது. உங்கள் கைகள் நிறையவேண்டுமென்றால், உங்கள் விரல்கள் யுத்தத்திற்குப் பழகவேண்டும். வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார் (சங் 18:34) என்கிறான் தாவீது. வெண்கல வில்லை வளைப்பது அவ்வளவு எளிதல்ல, வெண்கலம் அவ்வளவு எளிதாக வளைந்துகொடுக்கக்கூடியதும் அல்ல, எனினும், வலிமை மிக்க அந்த வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு வில்லை வளைக்கும்போது, அதிலே தொடுக்கப்பட்டிருக்கும் அம்பானது, வெண்கலத்தின் பெலத்தையும், வலிமையையும் சுமந்ததாக வேகமாகப் புறப்பட்டுச் செல்லும். அப்படி யுத்தம் செய்யவே தேவன் நம்மைப் பழக்குவிக்கிறார். என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் (சங் 144:1) என்கிறான் தாவீது. வெண்கல வில்லை வளைக்கும் பெலன் கொண்டவர்களே வெளியே வாருங்கள் வேட்டையாடலாம்.

ஏதாவது ஒரு சபையில் அங்கம் வகித்தால், பாதுகாப்பாக இருந்துவிடலாம், அநேக விசுவாசிகளின் உறவும், உதவிகளும் கிடைக்கும், போதகரின் கண்காணிப்பு கிடைக்கும், வீட்டின் நிகழ்ச்சிகளுக்கும், சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் போதகரின் ஆலோசனையும் உதவியும் கிடைக்கும் என்பது உண்மைதான்; என்றாலும் அந்த எண்ணத்துடன் மாத்திரம் சபையில் நீங்கள் பதுங்கியிருப்பவர்களாக, தங்கள் ஆத்துமாக்களைக் குறித்த கரிசனை அற்றவர்களாகவும், ஆத்தும ஆதாயப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமலும், சுவிசேஷப் பணிக்குத் தோள் கொடாமலும் இருந்தால் நீங்கள் ஒளித்திருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஹரிதுவார், ரிஷிகேஷ் என்னுமிடங்களுக்கு நான் சென்றிருந்தபோது, அநேக பல நிர்வாணச் சாமியார்களைச் சந்தித்தேன். பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு பின்னணியத்திலிருந்தும் வந்தவர்கள் அவர்கள். ஒவ்வொரு சாதுவை நான் சந்திக்கும்போதும், வித்தியாச வித்தியாசமான செய்திகளை அவர்களிடமிருந்து வெளிவந்தன. ஒரு சாதுவிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது, நீங்கள் எப்படி நிர்வாண சாமியாக மாறினீர்கள் என்ற கேள்வியை அவருக்கு முன் வைத்தேன். அதற்கு அவர், 'ஊரில் உண்டான சில பிரச்சனையினால், போலீசின் பிடியிலிருந்து தப்பிக்க இங்கு வந்தேன், பின்பு நான் திரும்பிப்போகவே இல்லை' என்று பதில் சொன்னார். சாது என்று அவர் அழைக்கப்பட்டாலும், குற்றவாளியாகத்தான் அந்தப் போர்வையில் அவர் ஒளிந்திருக்கிறார் என்பதுதானே உண்மை.

கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில், நீங்கள் சபைக்குள் ஒளிந்திருக்கிறீர்களா? சிகரெட், பீடி, சாராயம், பான்மசாலா, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, ஆண்புணர்ச்சி, திருட்டு உட்பட பல்வேறு பாவங்களுக்கு வாழ்க்கையில் இடங்கொடுத்துவிட்டு, ஆலயத்திலும் ஒரு இடத்தை உங்களுக்கென பிடித்துவைத்திருக்கிறீர்களா? பாவங்களைச் செய்துகொண்டே தேவ ஆலயத்திலும், தேவ ஆராதனையிலும் நீங்கள் பங்குபெறுகிறவர்களாக இருந்தால், நீங்களும் அந்த நிர்வாணச் சாமியாரைப் போல 'கிறிஸ்தவன்' என்ற போர்வையில் ஒளிந்திருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். பகையோடும், பொறாமையோடும், பிரிவினைகளோடும் வாழ்ந்துகொண்டு, ஆலயத்திலும் தொண்டு செய்வது என்பது மாய்மாலமான வாழ்க்கையல்லவா.

உலகின் பல்வேறு தேசங்களில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது இன்றைய அன்றாடகச் செய்தி. 'கிறிஸ்தவர்களே நீங்கள் வெளியேறிவிடுங்கள், இல்லையென்றால் உங்களை நாங்கள் வெளியேற்றிவிடுவோம்' என்பது போன்ற பயமுறுத்தும் வார்த்தைகள் குறுந்தகவல்கள் மூலமாகவும், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதலங்கள் வாயிலாகவும் நமது கண்பட பரவிக்கொண்டிருக்கின்றது. பல சபைகள் எரிக்கப்படுகின்றன, பல ஊழியர்கள் கொலை செய்யப்படுகின்றனர்; என்றாலும், இன்றும் நாம் மீந்திருப்பது எதற்காக என்பதை அறிந்தவர்களாக செயல்படவேண்டும்.

கண்களை ஏறிட்டுப் பார்க்கும்போது, எதிர்த்துவருவது எதிரியென தெரிந்துவிட்டால், நமது பாவனைகளும், பாதைகளும் எப்படி தடம் மாறுகின்றது என்பதைப் பொறுத்ததே நமது வெற்றி. கிறிஸ்தவர்களைக் கலங்கடிக்கும் காரியங்கள் தேசத்தில் ஒன்றன்மேல் ஒன்றாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, அவைகளைச் சந்திக்கும் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் எனச் சிந்திப்பது அவசியம். தேவ ஊழியர்களையும், ஊழியங்களையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்று வீண்டுரைத்து எழுந்து வருவோர் அநேகர். வண்டுகளின் இரைச்சல்களில், இறைவனின் கூண்டு கலையப்போவதில்லை, இறைவனின் தொண்டும் முடியப்போவதில்லை. எனினும், கர்த்தருக்குத் தொண்டு செய்யும் ஊழியர்களைக் கொண்டு தேவன் நியமித்தவைகளைச் செய்துமுடிக்கும் முன்னர் அவர்கள் மேல் எவரும் கைபோடமுடியாது என்பதே நமக்குள் உறைந்திருக்கவேண்டிய தைரியம்.

வேடிக்கையான வேசி

யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து, யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள். எலியாவை விரட்டிய யேசபேல், இப்போது யெகூவின் மேல் கண் வைக்கிறாள். ராஜாவான யெகூவை வீழ்த்த திட்டமிடுகிறாள். யெகூ தன்னை பார்க்கவேண்டுமென்று, தன்னை அலங்கரித்துக்கொண்டு, சிங்காரித்துக்கொண்டு எட்டிப்பார்த்தாள். ஆனால், அவளது பார்வையிலோ யெகூ விழுந்துவிடவில்லை. யேசபேலின் விபச்சாரங்களையும், பில்லிசூனியங்களையும், கர்த்தரின் தீர்க்கதரிசிகளுக்கு அவள் செய்த அத்தனை காரியங்களையும் யெகூ அறிந்திருந்தான். யேசபேலின் வார்த்தைகள் யெகூவை இழுத்துக்கொள்ளவில்லை.

அப்பொழுது யெகூ தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள். அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு, உள்ளேபோய், புசித்துக் குடித்தபின்பு நீங்கள் போய்ச் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான் (2இரா 9:30-34). பிள்ளை கீரைக்கொல்லையில் தள்ளப்பட்டான், தாய் கீழே தள்ளப்பட்டாள். யேசபேலைக் கண்டு யெகூ பயந்துபோகவில்லை, யேசபேலின் கவர்ச்சியினால் மயங்கிப்போகவுமில்லை. மயானத்துக்கு அனுப்பவேண்டியவர்களுக்கு மனதில் இடம் கொடாமல், மரணத்தைக் கொடுத்தான்.

சாலமோனின் நீதிமொழிகளில் வரும் சம்பவமும் இதற்கு ஒத்ததுதானே. அழகு மற்றும் ஆசையான வார்த்தைகள் இவைகளுக்கு மசிந்துபோவோர் எத்தனை பேர். பேதையான ஒரு வாலிபனைக் குறித்து சாலமோன் எழுதும்போது, இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள். அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்தாள் (நீதி 7:10-13) மேலும், என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன். வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம் (நீதி 7:16-18) என்று தன் இனிய சொற்களால் வாலிபனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள் (நீதி. 17:21).

உங்களிடத்தில் யெகூவின் பெலம் உண்டா? யெகூவின் பெலன் இல்லாதவர்கள் பெண்களைக் கண்டதும் அவர்களது அழகினாலும், ஆசை வார்த்தைகளினாலும், லிப் ஸ்டிக்கினாலும், அணிந்திருக்கும் உடைகளாலும் கவர்ந்து இழுக்கப்பட வாய்ப்பு உண்டு. ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று (மத் 5:28) என்ற இயேசுவின் போதனைக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், யெகூவைப் போன்று உங்களிலும் பெலன் நிலைத்திருக்கும். தள்ளிவிடவேண்டியவைகளை அள்ளிக்கொண்டுவந்துவிடாதீர்கள்.

பிரியமானவர்களே! எலியாவைப் போல பயம் உங்களைப் பற்றிப்பிடித்திருக்கின்றதோ? தேசத்தில் கேள்விப்படும் செய்திகள், ஆங்காங்கே வெடிக்கும் வன்முறைகள், செய்தித்தாள்கள் சுமந்துவரும் செய்திகள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள் கொல்லபட்ட செய்திகளினால் மனம் தடுமாறுகிறீர்களோ? கெபியை விட்டு வெளியே வாருங்கள், இரதத்தில் ஏறுங்கள், பயணத்தைத் தொடருங்கள்.