எதிரியை உதறிவிடுங்கள்

 

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது (சங் 33:12). என்றாலும், பாக்கியமுள்ள நாம் கர்த்தரின் பக்கத்திலேயே, கர்த்தரையே அடைக்கலமாக்கியவர்களாகவே எப்பொழுதும் வாழவேண்டும். அங்கும் இங்கும் அலைய அல்ல, ஆணியடித்தாற்போல் ஆண்டவருடனேயே இணைந்து நிற்கவே அழைக்கப்பட்டவர்கள் நாம். சந்தேகத்தில் ஊசலாடிக்கொண்டிருக்க அல்ல, சத்தியத்தில் உறுதியாக நிற்கப் போதிக்கப்படுபவர்கள் நாம். என்றாலும், சில நேரங்களில் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் கூட, சத்துருவின் வலையில் சிக்கிக்கொள்ளுகின்றனர். எதிரிலிருந்தாலும், புதிரிலிருந்தாலும் எதிரி என்றும் எதிரியே. அவன் தேவ ஜனத்திற்கு நன்மையானவைகளை யோசிப்பவனல்ல. எனினும், நம்மைப் பிடிக்கும்படியாக நன்மைகள் சிலவற்றைச் செய்து, அவனது தோட்டத்தில் தன்னோடு நம்மை வைத்துக்கொள்வதே அவனது பிரதான திட்டம். ஏதா, கிடைக்கிறது என்று ஏமாந்தவர்கள் பலர், பழத்தை பறிக்கவேண்டுமென்று சென்று பாம்புகள் கையில் சிக்கிக்கொள்ளாதிருங்கள். மீனைப் பிடிக்க மீனவர்கள் செய்வது என்ன? தூண்டிலில் மீன் சாப்பிடக்கூடிய புழு ஒன்றைக் வைத்து அதற்கு முன் வீசுவதுதான். பசியோடு வரும் மீன்கள் தூண்டிலோடு அதனைத் திண்ணும், பின்போ அது மீனவன் உண்ணும்படியாக சமையலறைக்குச் கொண்டுபோகப்படும். எல்லா இடங்களிலும், சத்துரு செய்யும் தந்திரமான யுத்தங்களை அறிந்துகொள்வது நமது ஜீவனைத் தப்புவிக்கப் போதுமானது. வெளிச்சம் என்று வந்து, விளக்கில் விழுந்து மாய்ந்துபோகும் விட்டில் பூச்சிகளைப்போல உங்கள் வாழ்க்கை இருக்கவேண்டாம். ஆதியில், ஏதேனில், மெல்லப் பேசி ஒரு பழத்தைச் சாப்பிட ஆலோசனை கொடுத்து, மனித சந்ததியையே தன்னுடையதாக்கிக்கொண்டான் சாத்தான். உங்கள் உயிரைப் பறிக்கும் எதிரியை உதறிவிடுங்கள்.

கண்ணுக்குத் தெரியாமல் கர்த்தர்

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் (யாக். 1:8). அவர்கள் அப்படி நிலையற்றவர்களாயிருப்பதற்கான காரணம், 'அவர்கள் இருதயம் பரிசுத்தமாயில்லாலிருப்பதே' (யாக். 4:8). இருதயத்தின் பரிசுத்தமே, தேவனுடன் நிலையான வாழ்வில் நம்மை நிறுத்தும், இருதயத்தின் பரிசுத்தமே நிலையான வழியில் நம்மை நடத்தும். எனவே தாவீது, 'தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்' (சங். 51:10) என்று ஜெபிக்கின்றான். சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார் (சங். 73:1). நம்முடைய இருதயம் சுத்தமுள்ளதாக இருந்தால், எந்நிலையிலும், எச்சூழ்நிலையிலும் தேவனே நமக்கு நல்லவராக இருப்பார். துன்பமோ, வருத்தமோ, வியாகுலமோ, வியாதிகளோ கர்த்தரை கெட்டவர் என்றோ, கைவிட்டுவிட்டராகவோ, எதிரியாகவோ நமக்கு அடையாளம் காட்டிக்கொடுக்காது. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோம 8:36,37) என்று எந்நிலையிலும் நிலையான தங்கள் வாழ்க்கையை பவுல் எடுத்துக்கூறுகின்றாரே.

எக்காலத்திலும், சுத்தமான நமது இருதயம், அசுத்தமானவைகளைத் தேடிச் செல்வதில்லை; பரிசுத்தமே அதற்குப் பாதுகாப்பு. இயேசுவும் தனது போதனையில், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத். 5:8) என்றாரே. கிறிஸ்தவ வாழ்க்கையில், கிறிஸ்துவோடு கூட நிலையாக நிற்க விரும்புகிறீர்களா? நிலையான நகரமான பரலோகத்தில் அவரோடு வாழ விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அவருடனேயே நிலையாக நிற்கக் கற்றுக்கொள்ளுங்கள். 'புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது' என்ற பழமொழியின்படி, நமக்கு எத்தனை பசியிருந்தாலும், எத்தனை கஷ்டங்கள் நெருக்கினாலும், எத்தனையாய் துன்பங்கள் நம்மைச் சூழ்ந்துகொண்டாலும், மனிதர்களால் கைவிடப்பட்ட நிலையில் விடப்பட்டிருந்தாலும், பரிசுத்தம் பசித்தாலும் அசுத்தத்தைத் தொடாது என்ற அடைமொழி நம்முடைய வாழ்க்கைக்குச் சொந்தமாகட்டும், அதுவே நித்தியத்திற்கு நேராக நமது வாழ்க்கையை நிறுத்திவைக்கும். இருதயத்தில் பரிசுத்தமில்லாததே, அநேகர் வாழ்க்கை ஆடிக்கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதற்கும் காரணம். கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் (சங் 125:1). என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன், ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமாற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது (லூக். 6:48) என்றார் இயேசு.

'கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார்' (சங். 94:7) என்று அக்கிரமக்காரர்கள் யோசிப்பதைப்போல, கர்த்தரைப் பின்பற்றும் நாமும் யோசித்துவிடக்கூடாது. அவர் நம்முடைய உட்காருதலையும், எழுந்திருக்குதலையும் அறிந்திருக்கிறவர், நம்முடைய நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறவர் (சங். 139:2). அவருடைய காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை (சங். 19:6). கண்ணுக்குத் தெரியாமலிருந்தாலும் கர்த்தர் எப்போதும் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். இருமனமுள்ளவர்களே, உங்கள் மனம் அங்கும் இங்கும் தேவனை விட்டு விலகி அலையும்போது, தேவனுடைய கண்கள் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம்.

சீரிய படைத்தலைவனான நாகமான், மிகப் பெரிய வீரனாயிருந்தபோதிலும், குஷ்டரோகத்தினால் அவதிப்பட்டான். தனக்கு இருந்த குஷ்டரோகத்தை குணமாக்கிக்கொள்ளும்படி தீர்க்கதரிசியாகிய எலிசாவினிடத்திற்கு வந்தான். தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி, அவன் சுத்தமானான். அதற்குப் பிரதிபலனாக எதையாகிலும் செய்ய விரும்பிய நாகமான் எலிசாவை நோக்கி: உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். எலிசாவோ, 'நான் வாங்குகிறதில்லை' என்று தட்டினான். எனினும், எலிசாவின் வேலைக்காரனால் அதனை ஒத்துக்கொள்ள இயலவில்லை. இத்தனை பெரிய காணிக்கையை, வெகுமதியை எஜமான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே என்று வருத்தப்பட்டான். தனது எஜமானான எலிசாவினிடத்தில் சொல்லாமல், நாகமானைப் பின்தொடர்ந்து சென்று, எலிசாவின் பெயரில் பொய் சொல்லி, வெள்ளியையும், மாற்றுவஸ்திரங்களையும் கேட்டு வாங்கினான். வாங்கி, வீட்டிலே வைத்துவிட்டு தன் எஜமானுக்கு முன்பாக நின்றான் (2இராஜா. 5:24,25). கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய்? என்று எலிசா கேட்டபோதும் 'உமது அடியான் எங்கும் போகவில்லை' என்று மீண்டும் பொய்யே சொல்கிறான். அப்பொழுது எலிசா கேயாசியை நோக்கி: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? என்று கேட்டான்.
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான் (அப் 5:1-4). அனனியாவும், சப்பீராளும் மறைத்துவைத்த காணிக்கையினை தேவன் அறிந்திருந்தாரே.

அகசியா ராஜா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாகய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். ராஜாவின் கட்டளையின்படி ஆட்கள் எக்ரோனின் பாகால்சேபூபிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்கள். இதைக் கண்ட தேவன், தூதனை அனுப்பி, எலியா தீர்க்கதரிசியைத் தட்டியெழுப்பி, அந்த ஆட்களைச் சந்திக்கும்படி அனுப்பினார். எலியா அவர்களை நோக்கி: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட ராஜாவின் ஆட்கள், தங்களது பயணத்தைப் பாதியில் நிறுத்தியவர்களாக, எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபைச் சந்திக்காமல், ராஜாவினிடத்தில் திரும்பினார்கள். அகசியா ராஜா எலியாவை அழைத்தனுப்பியபோதும், எலியா அகசியாவை நோக்கி: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் (2இரா 1:16) என்று மீண்டும் உரைத்தான். எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான். அந்நிய தேவர்களிடத்தில் விசாரிக்கப்போனவர்களை வழியிலேயே தீர்க்கதரிசியைக் கொண்டு சந்தித்தார் தேவன். இப்படியே இன்றும் எத்தனையோ ஊழியர்களையும் தேவன் பயன்படுத்திக்கொண்டுவருகின்றார். வேதத்திற்கு விரோதமான முடிவுகளை ஜனங்கள் எடுக்கும்போது, சாத்தானின் உபாயங்களைத் தேடிச் செல்லும்போது உங்களை வழிமறிக்கும் கர்த்தரை அறிந்துகொள்ளுங்கள்.

இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி, பாலாக் பிலேயாமை அழைத்தனுப்பியபோது, தேவனோ தன் ஜனத்திற்கு விரோதமாக தன் ஊழியக்காரனை அனுப்பாமல், பிலேயாமைத் தடுத்து நிறுத்தினார். என்றாலும், போகவேண்டும் என்ற விருப்பம் பிலேயோமை ஆட்கொண்டிருந்தது; எனவே, மீண்டும் மீண்டும் தேவனிடத்தில் கேட்டுக்கொண்டேயிருந்தான். பிலேயாமின் பிடிவாத குணத்தைக் கண்ட கர்த்தர், போ என்று அனுமதியளித்தார். காலைமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடு பிலேயாம் புறப்பட்டான். அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது (எண். 22:22). கர்த்தருடைய தூதனானவர் வழியிலே பிலேயாமுக்கு எதிராளியாக நின்றார். கழுதைக்குத் தெரிந்தும், பிலேயாமின் கண்களுக்கோ தெரியவில்லை. கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிறவர்களே, உங்களை வழிமறிக்கும் கர்த்தரை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

பிரியமானவர்களே! சங்கீதக்காரனின் வார்த்தைகள் மீண்டும் நமக்கு நினைவில் வரட்டும். நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும் (சங் 139:9,10). எங்கு போனாலும் நம்மைத் தொடரும் கர்த்தரின் கண்களுக்கு நாம் தப்பிக்கொள்வது இயலாதகாரியமல்லவா. கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் அநேகர் மதியில்லாதவர்களாகவே இருக்கின்றனர் (2நாளா. 16:9). அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது (சங் 11:4). நாம் போகும் இடமெங்கும் தேவனது கண்கள் நம்மைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறது, அவரது மனம் நம்மோடு கூட செல்கிறது, யாரை எதற்காக எங்கு அனுப்புகிறோம் என்பதையும் அவரது கண்கள் பார்க்கின்றது. அப்படியிருக்க ஒன்றும் அறியாதவர்களைப் போல அவருக்கு முன்பாக வந்து நின்று அவரை ஏமாற்றிவிடமுடியாது. பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படி செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே (பிர 8:10) என்கிறான் சாலமோன். மேலும், மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ? (யோபு 11:11) என்கிறான் யோபு.

சீஷர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது (லூக் 24:13-16). அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார் (மல். 3:16). பிரியமானவர்களே! எங்கு நின்றாலும் யாரோடு பேசிக்கொண்டிருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத கர்த்தர் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடவேண்டாம். அவர் கட்டிடமான ஆலயத்தில் அல்ல, சரீரமான உங்கள் ஆலயத்தில் வசிக்கிறவர். சரீரமான ஆலயத்தல் இடங்கொடமலிருப்பீர்களென்றாலும், ஆலயத்தின் வாசலில் நின்று தட்டிக்கொண்டேயிருப்பவர். ஆலயம் எங்கே சென்றாலும், அதை கவனிக்கும் பொறுப்பு அவருடையதல்லவா!

கிறிஸ்தவர்களே! தேவனை ஆராதிக்க தேவாலயத்திற்குப் போய்வருவோரே, நீங்கள் எங்கே சென்றுவருகிறீர்கள்? பாவத்தின் வழிகளில் சென்றுவிட்டு, பரிசுத்தத்தரின் ஸ்தலத்திலே வந்து நிற்கும் உங்களிடத்தில் 'என் மனம் உன்னோடுகூடச் செல்லவில்லையா?' என்ற தேவனின் தொனி கேட்கட்டும். 'நான் போகும் வழியை அவர் அறிவார்' (யோபு 23:10) என்ற யோபுவின் சிந்தை நம்மிலும் உண்டாயிருக்கட்டும்.

சத்துருவின் சக்தி

சத்துருவின் சக்தியைக் கண்டே பலர் அவன் பக்கமாய் ஈர்ப்புண்டுபோய்விடுவின்றனர். அங்கும் இங்கும் அலசடிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கர்த்தர் மோசேயை எகிப்திற்கு அனுப்பியபோது, ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். (யாத். 7:10-11).

மேலும், மோசேயும் ஆசேயும் பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள் (யாத் 7:19-22).

மேலும், அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள். (யாத் 8:6-7)

எகிப்தின் மந்திரவாதிகள் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? அவர்களும் எகிப்துக்கு விரோதமானவர்களா? அவர்களுக்குப் பெலனிருந்தால், இரத்தமான தண்ணீரை மீண்டும் நல்ல தண்ணீராக அல்லவா மாற்றியிருக்கவேண்டும்? தேவனுடைய பெலத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஆரோனுடனும், மோசேயுடனும் தங்கள் பெலத்தையும் இணைத்துக்கொள்ளவும், அவர்களுக்குச் சமமானவர்கள் நாங்கள் என்று தேசத்திற்கு எடுத்துக்காட்டவுமல்லவா அப்படிச் செய்துகொண்டிருந்தார்கள். தேவ ஊழியர்களுக்கு நாங்களும் சமமானவர்கள் என்று காட்டவும், அவர்களுக்கு இணையாக தங்களை வைக்கவும் விரும்புபவன் சத்துரு; அவன் தன்னை தேவனுக்கும் மேலாக உயர்த்த நினைத்தவன் அல்லவா, சமமாக்க நினைத்தவன் அல்லவா. இந்தக் காரியத்தைத்தான் இன்றும் உலகத்தில் செய்துவருகின்றான். சில அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து ஆண்டவருடைய ஜனத்தை தன் பக்கத்தில் இழுத்துக்கொள்ள முயற்சிக்கிறான்.

மந்திரவாதிகளின் செயல்களினால், மோசேயும் ஆரோனும் கலங்கிப்போகவில்லை, 'தேவன் நமக்குக் கொடுத்த அடையாளங்களை இவர்கள் எப்படிச் செய்கிறார்கள்?' என்று சந்தேகப்படவில்லை. போலிகளால் தங்களோடு சாத்தான் போராடுவதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஜனங்கள் குழம்பிப்போகும் இடங்களில் ஒன்று அற்புதங்கள் நடைபெறும் இடங்களே. எப்படி நடக்கிறது, யாரால் நடக்கிறது என்ற அறிவில்லாமல், அற்புதங்கள் நடக்கும் இடங்களை ஆண்டவர் இருக்கும் இடங்களாக நினைத்துவிடுகின்றனர். பிசாசும், அற்புதங்களைச் செய்து தாண்டவமாடி ஆண்டவரைப்போல தன்னை வெளிக்காட்டிவிட முயலுகின்றான். அங்கே சென்றால் பிசாசு பிடித்தது குணமாகிவிடுகிறது, இங்கே சென்றால் பில்லிசூனியம் நீங்கிவிடுகிறது என்று கண்ட இடங்களிலெல்லாம் ஜனங்கள் நின்றுகொண்டிருக்கின்றார்கள். அது யாருடைய கோல்? என்ற அறிவிற்கு இடங்கொடுப்பதில்லை. கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுக்கொண்டால், வியாதிகளிலிருந்து விடுதலை கிடைத்துவிடும், மசூதிகளுக்குச் சென்று மந்திரித்துக்கொண்டால் கட்டுகள் கழன்று போகும் என்று, சுகத்தை மட்டுமே மனதில் கொண்டு சிக்கிக்கொண்டிருப்போர் அநேகர். பணத்தேவை என்று உங்கள் நண்பரிடத்தில் நீங்கள் சொல்லும்போது, 'பொறுங்கள், ஒரு இடத்தில் திருடித் தருகிறேன்' என்று அவர் சொன்னால், அதனை ஒத்துக்கொள்வீர்களோ? உங்களுக்கு பணம் முக்கியமா? அல்லது சரியான வழி முக்கியமா?

சாத்தானின் செயல்களை அடையாளம்கண்டுகொண்டு, அவனிடமிருந்து வெளிப்படும் சக்திகளுக்குள் நாம் சிக்கிக்கொள்ளாமல் காத்துக்கொள்ளவேண்டிது எத்தனை அவசியம். வல்லமையோடும், அடையாளங்களோடும், பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் செயல்படும் சாத்தானின் செயற்திட்டங்களை (2தெச. 2:9,10) அறிந்துகொள்ளும் மனப்பக்குவமும், பகுத்தறிந்துகொள்ளும் ஆவியின் உன்னத அனுபவமும் நமக்கு அவசியமல்லவா. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினால் அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது (1யோவான் 4:1,2). கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மாற். 13:22). அவைகளினால் வஞ்சிக்கப்பட்டுவிடாதிருங்கள்.

போலிகளின் சாயம் வெளுக்கும் நாள் வருகுpறது, ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்துதேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று (யாத் 8:18). தேவன் எகிப்தின் மந்திரவாதிகளின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்காலிக விடுதலை

'நான் கர்த்தரை அறியேன்' (யாத். 5:2) என்று சொன்னவன் பார்வோன். தேவனிடத்தில் திரும்பவும் மனதற்றவன் அவன். ஆனால், வாதைகள் நீங்குவதற்காக மோசேயினிடத்திலும், ஆரோனிடத்திலும் வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறான். பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தih நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள் (யாத் 8:8) என்றான். தனது மந்திரவாதிகளை அழைத்து தனது தெய்வங்களிடத்தில் வேண்டிக்கொள்ளும்படிச் சொல்லவில்லையே. வண்டுகள் வாதையாக வந்தபோதும், 'எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்' என்றான் பார்வோன் (யாத். 8:28). மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டியபோது, இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கர்த்தர் அனுப்பினார் (யாத். 9:23). அப்பொழுதும் பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: 'இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்' (யாத். 9:28) என்றான். வெட்டுக்கிளிகள் வந்தது, அபொழுதும் பார்வோன் மோசேயையும், ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: 'அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணுங்கள்' என்றான் (யாத். 10:17).
எகிப்தியருடைய மிருக ஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று (யாத். 9:6). மோசே சூளையின் சாம்பலை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும், மிருகஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று (யாத். 9:10); அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகளையும் விட்டுவைக்கவில்லை. நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை. இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள். நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடு மாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான் (யாத் 12:29-32).

இந்த நிலையில் வாழும் ஜனங்கள் இன்றைய நாட்களிலும் உண்டு, கர்த்தரை அறிய மனமில்லாமல், பாவங்களிலிருந்து மனந்திரும்ப மனதில்லாமல், வாதையிலிருந்து மட்டும் விடுதலை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று தேவ ஊழியர்களை நாடித் தேடி விண்ணப்பம்பண்ணும்படி அலைகின்றனர். 'எனக்காக விண்ணப்பம் பண்ணுங்கள்' 'என்னையும் ஆசீர்வதியுங்கள்' என்று பார்வோன் சொன்னதைப் போலவே சொல்லிக்கொள்ளும் இவர்கள், தங்கள் அக்கிரமங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும், கர்த்தருக்கு விரோதமான பாதைகளிலிருந்தும் மனந்திரும்புவதில்லை. தற்காலிக விடுதலை தேவ ஊழியர்களால் கிடைத்துவிட்டால் போதும் என்ற மனதுடனேயே தேவ ஊழியர்களிடத்தில் வருகின்றனர். மனமாற்றமின்றி, இப்படி தற்காலிக விடுதலை பெறுகிறவர்கள், மீண்டும் பாவத்திற்குள்ளாகவும், தேவஜனத்திற்கு விரோதமாகவும், தேவனுக்கு விரோதமாகவும் மீண்டும் திரும்பி நிற்பார்கள் என்பதற்கு பார்வோனின் வாழ்க்கை ஒரு பாடமல்லவா.

அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார் (மத். 12:43-45) அநேகருடைய வாழ்வின் நிலை இன்று இப்படித்தான்.

தற்காலிக பெலம்

பார்வோனின் பெலம் பலமுறை சோதிக்கப்பட்டு, அவன் பெலவீனன் என்று சமுத்திரத்திலே மூழ்கடிக்கப்பட்டான். சில நாட்களுக்கு முன்னர், இணையதள பக்கம் ஒன்றில் சிவந்த சமுத்திரத்தின் அடியில் ரதங்களின் தங்க சக்கரங்கள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது வரலாறை அல்ல, தேவ பெலத்தையே நிரூபிக்கும் அத்தாட்சி. சத்துருவின் பெலம் தற்காலிகமானதே. நம்மை நெருக்கினாலும், ஒடுக்கினாலும், சித்திரவதைச் செய்தாலும், சிரைச்சேதம் பண்ணினாலும் அவனது பெலம் நிரந்தரமானது அல்ல என்பதை நமது மனதில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

கதரேனருடைய நாட்டிலே, அசுத்த ஆவியினால் பிடிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான் (மாற் 5:3-5). இரண்டாயிரம் பன்றிகளை ஒரே நேரத்தில் பலிகொள்ளக்கூடிய பெலமுள்ளவைகளாயிருந்தன அவனுக்குள் இருந்த பிசாசுகள் (மாற். 5:13). சங்கிலிகளினால் கட்டக்கூடாதவனயிருந்ததினால், விலங்குகளைத் தகர்த்துப் போடுகிறவனாயிருந்ததினால், எவராலும் அடக்கக் கூடாதவனாயிருந்ததினால் அவன் பெலமுள்ளவனைப் போலவே பாதசாரிகளுக்குக் காட்சியளித்துக்கொண்டிருந்தான்.

இப்படித்தான் இன்றும் சத்துரு தனது பெலத்தை காட்டி பலரை பயமுறுத்திக்கொண்டிருக்கிறான். தேவஜனத்தை துன்புறுத்தி, கொலை செய்து, தேவாலயங்களைத் தீக்கிரையாக்கி, கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் விரோதமாக அவர்கள் ஆடும் ஆட்டும் கல்லறைகளிலிருந்து ஆடிய லேகியோன் போன்றதே. ஜனங்களின் சாதாரணமான வாழ்க்கை முறையினை அவர்களது ஆட்டங்கள் பாதிக்கும். வீட்டிற்குள் வாழ்க்கையை அடக்க முயற்சிக்கும். எனினும், அது தற்காலிகமானது என்பதை அறிந்துகொள்ளுவோம். அந்த பெலம் அவர்களை விட்டு விலகக்கூடியது, ஒருத்தரையும் போகவிடாத அந்தப் பிசாசின் பெலம், இயேசு உத்தரவிட்டால் போகக்கூடிய காற்றைப்போலவே காணப்படுவது. 'அப்பாலே போ சாத்தானே' என்று சொல்லக்கூடிய பெலம் அது, நாம் அப்புறம் ஓடி ஒளியக்கூடியது அல்ல. இப்படியே இன்று சத்துருவின் ஆதிக்கத்திற்குள் அகப்பட்டுக் கிடக்கும் மக்களும். அவர்களது ஆட்டம் அரளும்படி இருக்கும், அவர்களது செயல்பாடுகள் விரோதமாக இருக்கும், உலகத்தின் வழியில் சென்றுகொண்டிருக்கும் மனிதர்கள் அவர்களை பெலசாலிகள் என்று போற்றலாம், அவர்களை வீழ்த்த எவருமில்லை என புகழ்பாடலாம். 'ஒருவனாலும் கூடாதிருந்தது' என்று அவர்களைக் குறித்து சொல்லப்பட்டாலும், அவர்கள் ஓடக்கூடியவர்களே. தங்களுடைய பெலம் அத்தனையையும் செலவழித்து பின்னர், நம்மை வெற்றியாளர்களாக மாற்றுபவர்கள் அவர்கள். தற்காலிக பெலத்தோடு போராடுபவர்களுக்கு அஞ்சவேண்டாம்.

எதிரியாக்கும் எதிர்மறைகள்

எதிர்மறையான நமது வார்த்தைகளும், எதிரிக்கு இணக்கமாக நம்மைப் பேசவைத்துவிடுகின்றது. 'நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான் தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு' (எண். 13:1,2) என்று கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னார். ஆனால், மோசேயோ அவர்களை அனுப்புகையில், தன்னுடைய விருப்பத்தையெல்லாம் அத்துடன் சேர்த்துக்கொண்டான். சுற்றிப் பார்க்கச் சொன்னார் தேவன், மோசேயோ சோதித்துப் பார்த்தான். மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான் (எண்; 13:17-20).

மோசேயின் வார்த்தையில் அங்கும் இங்கும் பெலவீனம் ஒட்டிக்கொண்டிருப்பதை நாம் காணமுடியும், 'பலவான்களோ' 'அநேகம்பேரோ' 'கெட்டதோ' 'கோட்டையில் குடியிருக்கிறவர்களோ' 'இளப்பமானதோ' 'விருட்சங்கள் இல்லையோ' என்ற எதிர்மறையான சொற்களை அவர்கள் மனதில் ஒட்டி அனுப்பினான் மோசே. நாமும் பல நேரங்களில், நம்மிடத்தில் பேசிக்கொண்டிருப்பவர்கள் நெஞ்சில் தேவையற்ற, தேவனுக்கு விரோதமான, பிரியமில்லாத வார்த்தைகளை ஒட்டிவிடுகின்றோமல்லவா. இத்தகைய வார்த்தைகள் அவிசுவாசிகளை வளர்க்கவும், அவிசுவாசத்தைப் பெருக்கவும் பெலமுள்ளவைகள் என்பதை மறந்துபோகவேண்டாம். ஒரு கிராமத்திற்கோ, நகரத்திற்கோ, தேசத்திற்கோ, தனி நபரிடத்திலோ சுவிசேஷத்தை அறிவிக்க யாதொருவர் புறப்படும்போது, அந்த மனிதர்களிடத்தில், அந்த தேசத்தைக் குறித்து நமக்கு என்னவெல்லாம் தெரியுமோ அத்தனையையும் உளறிக்கொட்டிவிடுகின்றோம். எதிரியை வெல்ல ஒருவன் புறப்பட்டுக்கொண்டிருக்கையில், எதிர்மறையாய் பேசும் ஒருவனால் வீரர்கள் பலர் வீழ்த்தப்பட்டுவிடுகின்றனர். 'பார்த்துப் போங்க' 'அவங்க கேட்கமாட்டாங்க' 'அவங்க கிட்ட நாங்களே பல முறை பேசிப்பார்த்துட்டோம்' என்றெல்லாம் பேசி தங்கள் பெலவீனத்தை பெலமுள்ளோர் மனதிலும் ஒட்டிவிடுவதால், வீரர்கள் போர்க்களத்திலிருந்து போய்விடுகின்றனர்; அல்லது, யோனாவைப் போல வேறு ஊருக்குப் பயணப்பட்டுவிடுகின்றனர்.

கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி, சென்று வந்தவர்கள் மோசே பேசியதைப் போலவே திருப்பிப் பேசுகிறதைக் கவனியுங்கள்: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம் (எண்; 13:27,28) என்றார்கள். அதுமாத்திரமல்ல, அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பெலவான்கள் என்றார்கள் (எண். 13:30). அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள் (எண்; 13:31). நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள் (எண்; 13:32), இராட்சதரைக் கண்டோம் (எண். 13:33) என்றும் துர்ச்செய்தியையே பேசத் தொடங்கிவிட்டனர்.

கர்த்தர் மோசேயை அழைத்தபோது, எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கி பாலும், தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய் சேர்க்க இறங்கினேன் (யாத். 3:8) என்றே சொன்னார். அது பாலும் தேனும் ஓடுகின்ற தேசம் என்று பமுறை தேவன் சொல்லியிருந்தார் (யாத். 3:17, 13:5, 33:1, லேவி. 20:24). அப்படியிருந்தும், தேசத்தை நெருங்கியபோது, அதை சோதித்துப் பார்க்க விரும்பினான் மோசே. அந்த சோதனையே பிரிவினையை உண்டாக்கிவிட்டது. அந்த பரீட்சையில் தோற்றவர்கள் ஒருபுறமும், ஜெயித்தவர்கள் மற்றொருபுறமும் என மாறும் நிலை உண்டாகிவிட்டது.

தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார் என்றார்கள் (எண்; 14:6-8). தன் ஜனத்தின் மேல் பிரியமாயிருந்ததினால் அல்லவோ எகிப்திலிருந்து அவர்களை பிரித்துக்கொண்டுவந்தார். ஆனால், 'பிரியமாயிருந்தால் கொடுப்பார்' என்று இவர்கள் பேசுவதைக் கவனியுங்கள்.

தேவன் கொடுப்பவற்றைச் சோதிக்கவும், தேவனுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவினைச் சோதிக்கவும் இவர்கள் முற்பட்டார்கள். பக்கத்தில் வந்து நிற்கும்போது, 'பிரியமாயிருந்தால் கொடுப்பார்' என்ற நிலைக்குத் தங்களைத் தள்ளிக்கொண்டார்கள். பிரியமானவர்களே! எச்சரிக்கையாயிருங்கள். உங்களது ஆசீர்வாதம் நெருங்கி நிற்கும்போது, வாக்குத்தத்தங்கள் வாசலண்டை வந்து நிற்கும்போது, இப்படிப்பட்ட மனநிலைக்குள் சத்துரு உங்களைத் தள்ளிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். எதிர்மறையான சிந்தனைகளையும், எதிரிக்குச் சாதகமான சிந்திப்புகளையும் உங்களை விட்டு உதறிப்போடுங்கள்.