முறியப்பண்ணும் எதிரி

 

மண்ணுக்குத் திரும்பும்வரை மனிதனுடைய வாழ்க்கையை கர்த்தருக்குக் கனிகொடுக்காததாகவே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமுடையவன் சத்துரு. கனிகொடாதவர்கள் களையானவர்கள் என்பேன் நான்; அத்தகையோர் பெருகிக்கொண்டேயிருந்தால், சபையோ, ஸ்தாபனமோ, ஊழியங்களோ கவலைக்கிடமாகிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கனிகொடாதவர்கள், தண்ணீரைக் குடித்துக் குடித்து தோட்டக்காரரையும் மற்றும் தோட்டத்தில் வாழும் பிற மனிதர்களையும் கண்ணீர்விட வைப்பவர்கள். தோட்டத்தில் இருக்கும் பிறரது உழைப்பையும், பிரயாசத்தையும் பிடுங்கித் தின்று தன்னைத் தேற்றி மண்ணைக் கெடுப்பவர்கள். பழங்கொடுக்கும் மரங்கள் பல பக்கத்தில் நின்றாலும் பழமின்றி தோட்டத்தில் பயனின்றி வாழ்பவர்கள். தாங்கள் நாட்டப்பட்டதின் நோக்கத்தை அறியாமல், அழைப்பில்லை என்று வீதியில் நட்டமாக நிற்பவர்கள். கர்த்தருடைய கண்களுக்கு கனிகள் தென்படாதவண்ணம், இலைகளோடேயே நிறுத்தி சாபத்தின் பக்கத்தில் மனிதர்களைச் சரிந்துவிழச் செய்பவன் சத்துரு.

ஒருபுறம் மனிதர்களைக் கனிகொடுக்காமலிருக்கச் செய்தாலும், மற்றொரு புறமோ, கனி கொடுக்கும் மனிதர்களைச் சுற்றிச் சுற்றி கண்ணி வைத்துக்கொண்டிருக்கும் அவன், அப்படிப்பட்ட மரங்களைத் தறித்துப்போடும்படியாகவும் தனது கோடாரியைத் தீட்டியவாறும் நீட்டியவாறும் ஓங்கிப் பிடித்திருக்கிறான். கனிகொடுக்கக் காரணமாயிருப்பவைகளை தடைசெய்வதே அவனது திட்டம். கனிகொடுக்காதவர்களாக்கி, நம்மைக் கர்த்தருக்கு விரோதிகளாக நிறுத்தும் சத்துருவின் வஞ்சகத்தில் சிக்கிக்கொள்ளவேண்டாம்.

'கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங் 1:3) என்கிறான் சங்கீதக்காரன். நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள் (எசே 47:12). நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள் (வெளி 22:2).

இப்படிப்பட்ட கனிகொடுக்கும் மனிதன் கத்தரித்துப்போடப்படலாகுமோ? அப்படி அவன் கத்தரித்துப்போடப்பட்டால், எத்தனையோ பேருக்கு கிடைக்கவேண்டிய கனிகள் கிடைக்காமற்போய்விடுமே. தன் காலத்தில் தன் கனியைக் கொடுக்கும் மனிதன் காப்பாற்றப்படவேண்டுமே.

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிகைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைளின் கனியை நீ புசிக்கலாமே, ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள். புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம் போடலாம் (உபா 20:19,20) என்பது எச்சரிப்பு.
கனிகொடுக்கும் மரம் மற்ற வேலைக்கென வெட்டப்பட்டுவிடக்கூடாது என்பதுதானே தேவ ஆலோசனை.

சாரமற்றவர்களாக்கும் சத்துரு

கிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்தாலும், கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து வாழவேண்டும் என்று விரும்புபவன் பிசாசு. இவர்களையே மறுமுகமாக பெயர்க் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறது ஆவிக்குரிய உலகு. கர்த்தருடைய கரத்தினாலேயே நாம் கத்தரித்துப்போடப்படவேண்டும் என்ற சத்துருவின் விருப்பத்திற்கு விலைபோய்விடவேண்டாம். 'கிறிஸ்தவனாயிரு, கிறிஸ்துவோடிராதே' என்ற பிசாசின் கோஷத்துக்கு இணங்கி உள்ளத்தில் தேவனின்றி வேஷமிட்டு வாழும் வாழ்க்கைக்கு தூரமாயிருப்போம். நம்முடைய சரீரத்தை ஆலயத்தில் வைத்துவிட்டு, சாரத்தை நம்மிடமிருந்து உறிந்துகொள்ள இடங்கொடாதிருப்போம். தேவனுடைய தோட்டத்தில் நாம் நாட்டப்பட்டிருந்தாலும், கனிகொடுக்கவில்லை என்றால் தேவனாலேயே வெட்டி எறியப்படுவோம் என்பதை அறிந்தவன் சத்துரு, இந்த அறிவு நமக்கு இருந்தால் மாத்திரமே, நம்மை அந்த ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும். 'நான் மெய்யான திராட்சச் செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்' என்று சொல்லும் இயேசு, என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார் என்ற எச்சரிப்பையும் விடுக்கிறாரே (யோவான் 15:1-2). கர்த்தருடைய தோட்டம் கனிகளால் நிறைந்தது; அதில், தனியாய் ஒரு மரம் மட்டும் கனியின்றி நின்றுகொண்டிருந்தால், அவர் கண்ணுக்குத் தப்பிவிடமுடியாது. கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிற நாம், கிறிஸ்துவுக்கேற்ற கனிகளைக் கொடுக்கிறவர்களாகவும் வாழவேண்டும். சாரத்தை விட்டு விட்டு, மண்ணில் புதைக்கப்படவிருக்கும் சரீரத்தை மட்டும் அவருக்குக் காட்டி அவரை நாம் ஏமாற்றிவிட முடியாதே.

எங்கிருந்து நாம் வெட்டப்பட்டவர்கள்? எத்துடன் இப்போது ஒட்டவைக்கப்பட்டிருப்பவர்கள்? என்ற உணர்வே நம்மை உயிருள்ளவர்களாக வைக்க உதவும். சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நாம் வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 11:24) என்று எழுதுகின்றார் பவுல். முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபே. 2:2-8). நல்ல ஒலிவமரத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தும், பழைய சுபாவத்தை விட்டுவிடாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கலாகுமோ. முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்த மா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும் (ரோமர். 11:16). 'கர்த்தர் நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக (லேவி. 11:45) என்கிறாரே கர்த்தர். கர்த்தர் பரிசுத்தர் என்பதை நமது வாழ்க்கையின் கிளைகள் வெளிப்படுத்தவேண்டும். கர்த்தருடைய குணங்கள் நமது வாழ்வில் வெளிப்படவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நம்மில் அசுத்தமான காரியங்களும் செயல்களும் வெளிப்பட்டால், கர்த்தர் அவமதிக்கப்படுவார்; நாமும் அறுத்துப்போடப்படுவோம். உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது (ஏசா 59:2). கிறிஸ்தவன் என்ற பெயர் கொண்டிருந்தும், கிறிஸ்துவின் முகத்தைத் தரிசிக்காமல் வாழுவதால் அவருக்கும் நமக்கும் ஐசுவரிவான் லாசரு இவ்விருவருக்கு இடையே இருந்த இடைவெளிதான் உண்டாகும். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங் 103:12) என்கிறான் சங்கீதக்காரன். பாவங்களுக்கும் நமக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் பெரிதாக இருக்கவேண்டும்; அவருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவோ இறுக்கமாயிருக்கவேண்டும்.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது (மத் 5:13) என்று போதித்தார் இயேசு. நாம் திராட்சத் தோட்டக்காரருக்குச் சொந்தமானவர்களாக இருந்தாலும், திராட்சத் தோட்டத்தில் நட்டப்பட்டிருந்தாலும், திராட்சச் செடியுடன் இணைந்திருந்தாலும், நம்மை எப்படி அறுக்கவேண்டும் என்று அறிந்தவன் சாத்தான். செடியைத் தொட அவனால் முடியாது, ஆனால் கொடியில் அவன் வெடிவைக்க விட்டுவிடாதிருங்கள். தேவன் விரும்பும் கனிகள் உங்களில் இல்லையெனில், நீங்கள் அறுபட்டு காய்ந்து கிடக்கும் கொடிகளாகத்தான் கர்த்தருடைய தோட்டத்தில் கிடப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. தேவனுக்கும், இயேசுவுக்கும், தனக்கும் தொடர்பில்லாமல் வாழும் மனிதர்கள் இத்தகையோர்களே. வெளியிலே கொட்டப்படவேண்டிய பலர் இன்றோ வீட்டிற்குள் கிடக்கிறார்கள்; அத்தகையோர் வீதியில் வீசப்படும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. பிரியமானவர்களே; கிறிஸ்தவம் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்தவக் குடும்பம் என்றும், ஆலயத்திற்குப் போகிறோம் என்றும், ஆராதனையில் மற்றும் கூட்டங்களில் பங்கேற்கிறோம் என்றும் சொல்லும் நீங்கள் கர்த்தருக்காகச் செயல்படாதவர்களாக இருந்தால், கர்த்தராலேயே கத்திரித்துப்போடப்படுவீர்கள் என்பதை சிந்தையில் கொள்ளுங்கள்.

கனிகொடுக்கும் வாழ்க்கையே கர்த்தருடனான உங்கள் உறவைக் காப்பாற்றும். தேவனுக்காக நீங்கள் என்ன கனி கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்பது வாழ்க்கையின் பிரதான கேள்வி. உங்களில் கனி இருந்தால் கர்த்தருக்குக் கொடுப்பீர்கள், நீங்கள் களை என்றால் நிலத்தைக் கெடுப்பீர்கள். நம்மை சாரமற்றுப்போகச் செய்யவும், கனிகொடாமலிருக்கப்பண்ணவும் சத்துரு எடுக்கும் முயற்சிகளில் சிக்குண்டுபோய்விடாதிருப்போம்.

இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:21-24) என்று எழுகிறார் பவுல். இத்தகைய நிலையில் காணப்பட்டால் முறித்துப்போடப்படுவதுதான் இறுதி முடிவாயிருக்கும். சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்கின்றன (ரோமர் 11:17), அவைகளுடைய அவிசுவாசத்தினாலே முறித்துப்போடப்பட்டன. சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு (ரோம 11:21). கர்த்தருடைய தயையினை உணர்ந்து, மனந்திரும்பாமற்போனால், நாமும் வெட்டுண்டுபோவது நிச்சயம் (ரோமர் 11:22) என்பதுதானே சத்தியம்.

எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள் (1கொரி 11:28-30). கர்த்தரண்டை கிட்டிச் சேரும்போது எத்தனை கவனம் அவசியம் என்பதைத்தானே இந்த வசனங்கள் காட்டுகின்றது. இந்த வசனத்தை இத்தனை அர்த்தமும் பயமுமுள்ளதாக கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்? வாரம் முழுவதும் அல்லது மாதம் முழுவதும் என்னவெல்லாமோ செய்துவிட்டு, அண்டை வீட்டாருடன் மற்றும் உறவினருடன் சமாதானமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, கர்த்தருடைய பந்தியிலும் கரம் கலந்துகொள்ளும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர். 'கர்த்தரின் பந்தியில் வா, சகோதரா கர்த்தரின் பந்தியில் வா' என்ற பாடலின் அர்த்தமும், அது பாடப்பட்ட சூழ்நிலையையும் அறிந்தவர்கள் எத்தனை பேர்? பகையோடு பந்திக்குப் போக இயலாத ஒருவர் பகைத்தவனை சிநேகிக்கப் பாடப்பட்ட பாடல் அல்லவா இது. பிரியமானவர்களே, கர்த்தரால் நீங்கள் முறித்துப்போடப்படாமலிருக்கவேண்டுமென்றால் மனிதர்களுடனான உங்கள் முறிவுகளைச் சரி செய்யுங்கள். அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத் 5:24) என்று போதித்தாரே இயேசு. 'முன்பு உன் சகோதரனோடே' என்றும் 'பின்பு வந்து காணிக்கையைச் செலுத்து' என்றும், மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு முக்கியம் கொடுக்கும் கர்த்தரின் போதனை பலருக்கோ வேதனை கொடுக்கிறது; அதற்குக் கீழ்ப்படிய மனதில்லாமல் அவர்கள் மனம் கெடுகிறது. முடிவோ! அவர்களுக்கும் தேவனுக்கும் இடையில் உண்டாகும் இடைவெளியால் விளையும் தீங்குகளே. ஏன் என் குடும்பத்தில் இப்படி நடக்கிறது? ஏன் எனது பிள்ளையின் வாழ்க்கையில் இப்படி? என்று பல விதமான ஏன்? ஏன்? ஏன்? என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தாலும், விடைகிடைக்காமற்போவதற்குக் காரணம், மனிதர்களை நேசிக்க மனமில்லாமல், விலகி வாழ்வதே. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (மத் 5:25-26) என்பதே இயேசுவின் போதனை. நாம் இருக்கும் இடத்திலிருந்து நம்மை அசையவிடாமல் தடுக்கப் போதுமானது மனிதர்களுடன் நாம் கொள்ளும் மனக்கசப்புகள். போகவேண்டும் என்று நினைத்தாலும், புறப்பட பெலனற்றவர்களாக நம்மை மாற்றிவிடும்.

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவா 3:16). நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோம 5:7,8). அப்படியே நமக்கு விரோதமாக நிற்கும் சகோதரர்களிடத்தில் நமது அன்பை விளங்கப்பண்ணுவது நமது கடமை. அவர்களுக்காக ஜீவனைக் கொடுக்க அழைக்கப்பட்டவர்கள் நாம். நேசிக்கும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கும் அளவில்தான் நிற்கிறது இன்றைய பலரது ஆவிக்குரிய வாழ்க்கை; நேசிக்காத சகோதரர்களுக்காக ஜீவனைக்கொடுக்கும் அளவிற்கு ஆவியில் வளராதோரின் எண்ணிக்கை ஏராளம். நேசித்தவர்களையே நேசித்துக்கொண்டு, பழகினவர்களுடனேயே பழகிக்கொண்டு, விரோதிகளுடனோ விலகியே வாழும் சூத்திரத்தைக் கற்றுக்கொடுத்தவன் பிசாசு என்பதில் சந்தேகமேது? பிரியமானவர்களே நீங்கள் கிறிஸ்து என்னும் கனிகொடுக்கும் செடியிலிருந்து முறித்துப்போடப்படுவதற்கு இத்தகைய சத்துருவின் சூத்திரங்கள் காரணங்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 'அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?' (அப் 5:3) என்று பேதுரு கேட்டபோது, அனனியா முறித்துப்போடப்பட்டான், மூன்று மணி நேரத்துக்குப் பின்பு வந்த அவனது மனைவியும் அனனியாவுக்கு உடந்தையாய் பேசி உண்மையை மறைத்தபோது அவளும் முறித்துப்போடப்பட்டாள் (அப். 5:5-7). மனிதர்களின் பார்வைக்காக தேவனுக்குக் கொடுக்கும் மனிதர்களே உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது (மத் 6:3) என்று போதித்தார் இயேசு; அது அவரது அளவுகோல். ஆனால், தேவனுக்கு எல்லாற்றையுங்; கொடுப்பதைப் போல பேசி ஒரு சிறு பங்கை மேடைபோட்டு கொடுத்துவிட்டு, பெரும்பங்கை தங்களுக்கென வைத்துக்கொண்டால், ஜனங்களை வஞ்சிக்கலாம் ஆனால் தேவனையோ வஞ்சித்துவிட முடியாது. ஜீவனுக்குண்டானவைகளை காணிக்கையாகப் போட்ட ஏழை விதவையைப் போல பலர் அமைதியாய் போட்டுவிட்டுத் திரும்புகிறார்கள். சிலரோ, ஜீவனுக்குரியவைகளிலிருந்து சிலவற்றைப் போட்டுவிட்டு ஜீவன் போகக் கத்துகிறார்கள். கொஞ்சமோ, அதிகமோ பொருட்டல்ல, மிஞ்சும்படி அதனை விளம்பரம் செய்வதே திருட்டு.

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் (மத் 3:12). அறுப்புக்காலத்தில் அவர் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்கிறாரே (மத் 13:30). எனினும், நமது வீழ்ச்சியை உணர்ந்து, அவரிடத்தில் ஓடிவருவோமென்றால், மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே (ரோமர் 11:23).

வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான் (மத் 21:33,34). ஆனால், நடந்ததோ விபரீதம்; கனிகளை வாங்கும்படி ஊழியக்காரர்கள் வந்து வாசலில் நின்றபோது, வந்தவர்களையெல்லாம் கொலை செய்தார்கள். அந்த தோட்டத்தில் கனிகள் இருந்தது; எனினும், அவைகள் அனைத்தையும் தங்களுக்குரியவைகளாக வைத்துக்கொள்ள அவர்கள் நினைத்ததால் செய்த கொலைகள் அவை. உரியாவுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை, யேசபேலுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை. இப்படிப்பட்டவர்களின் கைகளிலிருந்து உரிமைகளை தேவன் முறித்துப்போடுகின்றார். ஊழியங்கள் வளர வளர அதின் ஆதாயத்தை தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஊழியர்கள் அநேகர்; சந்ததிக்காக பணங்களைச் சீரழிக்கும் ஊழியர்களும் அநேகர். தேவனுடையதை தங்களுடையதென்று எண்ணி தப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறவர்கள் பலர் உண்டு. தோட்டத்தை வாங்கும்போது வேலைக்காரர்களாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட பல ஊழியர்கள், தோட்டம் கனிகொடுக்கத் தொடங்கியபோதோ தங்களை எஜமான்களாகப் பார்த்துவிடுகின்றனர்; தங்களுக்கு தோட்டத்தைக் கொடுத்த மெய்யான எஜமானனை மறந்துவிடுகின்றனர். விளைவு, தோட்டத்தை தங்களுடையதாக்கும் எண்ணம். கர்த்தர் செய்வது என்ன? அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பதே (மத் 21:41).

இன்றைய நாட்களில் பல ஊழியங்கள், ஸ்தாபனங்களின் நிலை குடும்ப அரசியல் கட்சிகளுக்கு ஒப்பானதாகத்தானே இருக்கின்றது; சொந்தங்களும் பந்தங்களும் பதவியில் அலங்கரிக்கப்பட்டு, உடன்பிறந்தோரும், உறவினரும் உயர்த்தி வைக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தினரோ உதறப்படுகின்றனரே. காளையாய்; மிஷனரிகளை ஓடவிட்டு வண்டிக்காரனாக வேண்டிய ஆட்களை அமர்த்திக்கொள்ளும் ஊழியங்களும் ஸ்தாபனங்களும்தான் எத்தனை? எத்தனை? ஆவிக்குரியவர்களைக் கொண்டு அஸ்திபாரம் போட்டு, மாம்சத்துக்குரியவர்களைக் கொண்டுவந்து மாளிகையில் அமர்த்திவிட்ட நிலை இன்று நடைபெறாமலில்லை. ஊழியர்கள் தங்கள் பதவிகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம், பிள்ளைகள் வளர்ந்ததும் அதனை அவர்களுக்கு பரிசாக்குவதற்குத்தான். ஊழியமே செய்யத்தெரியாத மகனுக்கு ஊழியத்தை பரிசளித்துவிடுகின்றனர். கார் ஓட்டத் தெரியாத மகனை தந்தை கார் ஓட்டிச் செல்ல அனுமதிப்பாரா? அப்படி அனுமதித்தால் என்ன ஆகும்? பல உயிர்கள் பலியாகும்.

உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார் (லூக் 11:11-13) இயேசு. ஆனால், இன்றைய நாட்களில் 'ஊழியம் வேண்டும்' என்று கேட்காத வாரிசுகளுக்கு அழைப்பைக் கற்றுக்கொடுக்காமல், ஊழியத்தைக் கொடுப்பதால், மீறிநடக்கும் தலைவர்கள் ஏராளம். அப்பாடா! கரை சேர்ந்துவிட்டேன், இனி படகு எதற்கு? துடுப்பு எதற்கு? என சுமந்துகொண்டுவந்தவர்களைத் தூக்கிவீசிவிடத் தயங்காக ஊழியங்கள், மீண்டும் வெள்ளத்தில் பயணிக்க முடியாது என்பது திண்ணம். ஊழியம் மாளிகையாகிவிட்டாலும், அதனை நடத்திச் செல்லும் மாலுமி இல்லாமற்போனால் கடலிலே மிதந்துகொண்டே இருக்கும் நிலைதான் ஏற்படும், அலைகள் வரும்போது அவைகளோடு இணைந்து போகும். தனக்கென ஒரு திசையைக் குறித்து, தைரியமாகப் பயணிக்கும் சக்தியினை இழந்து, இயற்கையின் இழுப்பினாலேயே அதன் போக்கு நிர்ணயிக்கப்படும்; முடிவிலோ இழப்பைச் சந்திக்கும். பலமில்லாத அரசன், எதிரியின் படைக்கு தன் தேசத்தை பறிகொடுப்பதுபோல, சத்துருவின் சீற்றத்தை சற்றும் எதிர்கொள்ளத் திராணியின்றி, சர்வாயுதவர்க்கமுமின்றி, சடுதியில் தடுமாறும்.

பிரியமானவர்களே, உங்களுடைய காலத்தில் உங்கள் கனியை நீங்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்களா? நமது ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம் (சங் 90:10). இந்த உலகத்தில் நாம் நடப்பட்ட நாட்கள் முதல், இந்நாள்வரை மற்றோருக்காகவும், கர்த்தருக்காகவும் நாம் செய்திருப்பது என்ன? வீணாகும் மணித்துளிகள், வீணாகும் நாட்கள், வீணாகும் வருடங்கள், வீணாகும் வார்த்தைகள் எத்தனை எத்தனை? காலம் முடியப்போகிறது; ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றும் அநேகருடைய கனிகள் இன்னும் வெளிப்படாமலிருக்கிறது. அத்தகையோரின் வாழ்க்கை கர்த்தருக்கும், பிறருக்கும் பயனிற்றியே மண்ணில் புதைக்கப்படுகிறது. தன் காலத்தில் தன் கனியைக் கொடுக்க மறந்துபோன சந்ததியார்கள் இவர்கள்.
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத் 7:17-20) என்றார் இயேசு.

இயேசுவின் போதனையில் காணப்படும் மூன்று சத்தியங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமே. ஒன்று, 'நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கக்கூடாது' மற்றொன்று, 'அடுத்த மரத்துக் கனிகளை நாம் கொடுக்கமுடியாது'. இதைத்தானே, 'அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?' (மத் 7:16) என்று இயேசு வினவுகிறார். மூன்றாவது, கனிகளே நாம் யாரென்று வெளிக்காட்டும் அடையாளம். உலகத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில், உங்களுக்கு நியமிக்கப்பட்ட கனிகளைக் கொடுக்க ஆயத்தப்படுங்கள். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத் 3:10). ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார் (லூக் 13:6-9) இயேசு. நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை விட்டுவிடவேண்டாம். சரீரமாகிய மரம் சாயுமுன், கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கும் நம்மில் கர்த்தர் விரும்பும் கனிகள் உருவாகட்டும்.

உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? (மத் 18:12) என்று காணாமல் போனவர்களைச் சேர்த்துக்கொள்ளும் பணியைச் செய்ய அழைப்பு கொடுக்கும் தேவன். உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் (மத் 18:8,9) என்ற ஆலோசனையையும் கொடுப்பதை நினைவில் கொள்ளுவோம்.