மறக்கப்பட்ட பிதா, மல்லுக்கட்டிய பிசாசு


நாம் தேவனால் அழைக்கப்பட்டிருந்தாலும், தெரிந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அனுப்பப்பட்டிருந்தாலும், சில வேளைகளில், சிக்கலான நேரங்களில் நாம் பிதாவைக் கூப்பிடவேண்டிய வேளைகளில் பிதாவைக் கூப்பிட மறந்துவிடுகின்றோம். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தினால் எவைகளைச் செய்யமுடிகிறதோ, அவைளே பிதாவினாலும் செய்யமுடிபவைகள் என்ற எண்ணத்திற்குள் நம்மைச் சிறைப்படுத்திக்கொள்கின்றோம். நாம் அழைக்கப்பட்டது உண்மைதான், அனுப்பப்பட்டதும் உண்மைதான், அதிகாரம் பெற்றதும் உண்மைதான்; ஆனாலும், சில சந்தர்ப்பங்களில் நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கும், வரங்களுக்கும் அப்பாற்பட்டு பிதாவைக் கூப்பிடவேண்டிய அவசியம் உண்டு. நமக்குக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு நம்மால் செய்யமுடியாவிட்டால், நமது அதிகாரங்களையும் எதிர்த்து காரியங்கள் நிகழுமென்றால், பிதாவை கூப்பிடவேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.


முதலாவதாக, இயேசு தம்முடைய பன்னிரெண்டு சீஷரையும் அழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார் (லூக். 9:1). இரண்டாவதாக, வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார் (லூக் 10:1). சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது (லூக் 10:19) என்று அவர்களுக்கும் அதிகாரம் கொடுத்தார்.


என்றபோதிலும், இத்தனை அதிகாரங்களைப் பெற்ற சீஷர்களால் சில நேரங்களில் செயல்படமுடியவில்லை; சில இடங்களில் தோல்வியைத் தழுவும் நிலை உருவானது. அதிகாரத்தைப் பெற்ற சீஷர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள் (லூக் 9:6). பன்னிரெண்டு சீஷரும் திரும்பிவந்து, இயேசு தங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள் (லூக். 9:10). அப்படியே, எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள் (லூக் 10:17). தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு செய்ய முடிந்தவைகளையும், செய்து முடித்தவைகளையும் குறித்து சீஷர்கள் மனதில் ஆனந்தமும், களிப்பும், திருப்தியும் உண்டாயிற்று. எல்லா அதிகாரமும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்று இனி பிதாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டியது ஒன்றுமில்லை என்பதைப்போலத்தான் சீஷர்களுடைய வார்த்தைகளும், செயல்பாடுகளும் வெளிப்படத்தொடங்கின.


பன்னிரெண்டு சீஷர்களும் தங்கள் செய்த காரியங்களை இயேசுவினிடத்தில் விவரித்தார்கள் ஆனால், தாங்கள் தோல்வியடைந்ததையோ சொல்லாமல் விட்டுவிட்டார்கள். நாம் பல வேளைகளில் இயேசுவிடத்தில் நமது வெற்றியின் வார்த்தைகளையே கொட்டிக்கொண்டிருக்கிறோம், நாம் தோற்ற இடங்கள் நமக்குத் தெரிந்திருந்தபோதிலும், இயேசுவும் அதனை அறிந்திருந்தபோதிலும், இயேசுவினிடத்தில் தோல்வியைச் சொல்லாமல் விட்டுவிடுகின்றோம். என்றபோதிலும், இயேசு நாம் தோற்ற இடங்களை அறிந்திருக்கிறாரே. அவருக்கு மறைவானது ஒன்றுமில்லையே. தோல்வியின் செய்தியோ இயேசுவின் காதுகளுக்கு நேரடியாக வந்தடைகிறது. சீஷர்களால் ஏமாற்றமடைந்த ஒரு மனிதன் இயேசுவினிடத்தில் வந்து: ஒரு ஆவி என் மகனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான் (லூக் 9:39,40; மத். 17:16; மாற். 9:18). இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான். அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள் (மத் 17:18,9). அதற்கு இயேசு, இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் (மத் 17:21). ஜெபமும் உபவாசமும், பிதாவை நோக்கிச் செய்யப்படவேண்டியவைகள். வரங்களினால் பல பிசாசுகளைத் துரத்தியிருந்தாலும், பிதாவினிடத்தில் வேண்டினால்தான் சில பிசாசுகளைத் துரத்தமுடியும் என்பதை சீஷர்கள் அப்போது அறிந்துகொண்டனர்.


ஊழியத்தை முடித்து திரும்பி வந்த பன்னிரெண்டு சீஷர்களுடனும் தனித்திருக்கும்படி விரும்பிய இயேசு அவர்களை வனாந்தரமான இடத்திற்குக் கூட்டிக்கொண்டுசென்றார் (லூக். 9:10). ஆனால், அங்கே ஜனங்களும் திரளாய் வந்து குவிந்தனர். சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களை இயேசுவே வனாந்தரத்தில் சுகமாக்கினார் (லூக். 9:11), அதிகாரம் பெற்ற சீஷர்கள் உடனிருந்தபோதிலும், அவர்கள் இயேசுவுடன் இணைந்து ஜனங்களை சொஸ்தமாக்கவில்லை. மணவாளன் தங்களுடன் இருக்கும்போது, தாங்கள் கஷ்டப்படவேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமுடன் அவர்கள் இருந்தார்களோ; நான் அறியேன்.


பன்னிரெண்டு சீஷர்களையும் நோக்கி: 'நீங்களே ஜனங்களுக்குப் போஜனங்கொடுங்கள்' என்று இயேசு சொன்னபோது, சீஷர்களோ: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மாத்திரம் உண்டு என்று பதிலளித்தனர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு இந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு கொடுக்க முடியாதே; எனவே, என்ன செய்வதென்று திகைத்தவர்களாக, பிதாவை மறந்து, கடைக்காரர்களையே அவர்களது கண்கள் தேடின. அப்பொழுது இயேசு அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார் (லூக் 9:16). கொடுக்கப்பட்ட அதிகாரங்களினால் செய்யமுடியாத நிலை உருவாகும்போது, பிதாவை நோக்கிப் பார்க்கவேண்டும் என்ற பாடத்தை சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார் இயேசு.


நாம் பெற்ற அதிகாரங்கள், வரங்கள் மாத்திரமே ஊழியத்தில் நமக்குப் போதுமானவைகள் அல்ல; நாம் பிதாவை நோக்கி வேண்டுதல் செய்து சுகத்தையும், விடுதலையையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரவேண்டியதும் உண்டு. 'இயேசுவின் நாமத்தில் போ' என்றாலே சில பிசாசுகள் போய்விடலாம், சில வேளையிலோ 'பிதாவே இந்த மனிதரை பிசாசினின்று விடுதலையாக்கும்' என்று நாம் ஜெபிக்கும் நிலை உருவாகலாம். அதிகாரம் பெற்ற அநேகருக்குள் இந்த அறியாமை காணப்படுகின்றது. நான் வாலிபனாக இருந்தபோது, ஒரு பிரசித்திப்பெற்ற ஊழியரின் கூட்டம் சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மைதானமெங்கும் திரளான கூட்டம்; ஊழியர் பிரசங்கத்தை முடித்துவிட்டு, மேடைக்கு முன் ஜெபம் வேண்டி வந்திருந்த மக்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தின் மத்தியில் ஒரு பெண் அசுத்த ஆவி பிடித்தவளாக ஆடிக்கொண்டிருந்தாள். அந்த ஊழியர் ஜெபித்தால் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்துடன், குடும்பத்தினர் விசுவாசத்துடன் நின்றுகொண்டிருந்தனர். எல்லாருக்கும் ஜெபித்து முடித்துவிட்டு, இறுதியாக அந்த பெண்ணுக்கு ஜெபிக்க வந்தார் அந்த ஊழியர். சுமார் இரண்டு நிமிடம் ஜெபித்த அவர், இந்த பெண்ணுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட்டார். அந்த பெண் தொடர்ந்து அலக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்தார். வாலிபர்களாகிய நாங்கள் கூடி அந்தப் பெண்ணுக்காக மைதானத்தில் ஜெபித்தபோது, அந்தப் பெண்ணுக்கு விடுதலை உண்டானது. பைத்தியமாயிருந்தாலும், பிசாசாயிருந்தாலும் பிதாவோடு மல்லுக்கட்ட முடியாதே; நாம் பிதாவை மறந்துவிட்டு, நமக்குக் கொடுக்கப்பட்ட வரங்களினால் அனைத்தும் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இருந்தால் பல காரியங்களோடு மல்லுக்கட்டும் நிலை உண்டாகும், தோல்வியையும் நாம் சந்திப்போம்.