ஊரும், வேரும்

 

இயேசு பாலகனாக இந்த உலகத்தில் அவதரிக்கும் வேளையில், யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில் உள்ள சத்திரங்களில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தபோது, யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும், குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து, யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான் (லூக். 2:1,4,5).மரியாள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள் (லூக் 2:7).


கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் என்னும் ஊரில் சுகமாக வாழ்ந்துகொண்டிருந்தவன் யோசேப்பு. பெத்லகேம் யோசேப்பின் சொந்த ஊராக இருந்தபோதிலும், அவனுக்கென்று அங்கு எதுவும் இல்லை. தான் தொழில் செய்து பிழைத்துக்கொண்டிருக்கும் கலிலேயாவிலேயே அவன் வாழ்பவனாக இருந்தபோதிலும், சொந்த ஊராகிய பெத்லகேமிலும் ஒரு வீட்டைக் கட்டிவைப்போம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகவில்லை. நீதிமானாகிய அவன் இவ்வுலகத்தின் வாழ்க்கை நிலையற்றது என்பதை அறிந்திருந்தான். கர்த்தர் தன்னை வைத்திருக்கிற இடத்திலே தனக்குக் கிடைப்பது போதும் என்றெண்ணிய நீதிமான் அவன். பவுலும் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும்கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம் (1தீமோ 6:6-8) என்று ஆலோசனையாக எழுதுகின்றாரே.


சொந்த ஊரிலும் சொந்தமாக ஏதுமில்லாதவன் யோசேப்பு. ஆனால், இன்றைய நாட்களில் நமது மனநிலை எப்படி காணப்படுகின்றது. பணியின் நிமித்தம் வேறு ஊரில் வேலை செய்தாலும், எத்தனையாய் ஊழியம் செய்தபோதிலும், இறுதிக் காலத்தில் சொந்த ஊரிலேதான் சென்று தங்கவேண்டும் என்ற விருப்பம் நம்மை ஆளுகின்றதல்லவா, சொந்த ஊருக்குச் செல்லும்போது நாம் தங்கிக்கொள்ள ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் உண்டாகின்றதல்லவா. ஊழியத்தில், பணித்தளத்தில், எத்தனையாய் உற்சாகமாக கர்த்தருடைய பணியினை நாம் நிறைவேற்றிக்கொண்டிருந்தாலும், ஆத்தும அறுவடை செய்துகொண்டிருந்தாலும், சொந்த ஊரை வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டும் என்ற வாஞ்சை வருகின்றதல்லவா, உறவுகள் விட்டுப்போய்விடக்கூடாது என்றும், உறவினர்களைச் சென்று பார்க்கவேண்டும் என்றும் நம்முள்ளம் துள்ளுகிறதில்லையோ. கால்களினால் பணித்தளங்களில் நடந்து, நடந்து ஊழியம் செய்தாலும், சில நேரங்களில் சிந்தையில் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுகின்றோமே. சொந்த ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விசேஷங்கள் இவை அனைத்தும் எங்கிருந்தாலும் நம்மைச் சிறை பிடித்துக்கொள்கின்றதல்லவா. மரணம் நம்மைச் சந்தித்தாலும், நமது உடல் சொந்த ஊரிலேயே புதைக்கப்படவேண்டும் என்ற விருப்பமும் நம்மில் பலருக்கு உண்டு.


தேவன் ஆபிரகாமை நோக்கி: நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார் (ஆதி 17:8). ஆனால், நாமோ பரதேசியாய் வாழும் இடத்தினை நமது சொந்த தேசமாகப் பார்க்கமுடியாதபடி மாறிவிடுகின்றோம். பிள்ளைகளுக்கு சொத்துக்களையும், சுதந்திரத்தையும் சொந்த ஊரிலேயே சேர்க்க முயலுகின்றோம்; இதனால், கர்த்தருடைய கட்டளையின்படி நாம் பரதேசியாக வாழும் இடம் நம்முடைய சந்ததியாருக்குச் சொந்தமாகக் கிடைக்காமல்போய்விடுகின்றது. நம்முடைய நித்திய குடியிருப்பு சொந்த ஊரில் இல்லை, பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (பிலி 3:20).


யோசேப்பு கலிலேயாவில் வசித்தபடியினாலே, இயேசு தனது ஊழியத்தின் பெரும் பங்கை கலிலேயாவில் நிறைவேற்றினார். இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று (லூக் 4:14). கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்திற்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்கப் போதித்தார் (லூக். 4:31). கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார் (லூக் 4:44). 'இந்த மனுஷன் கலிலேயனா?' என்று கலிலேயா ஊரின் பெயராலேயே இயேசுவை அழைத்தான் பிலாத்து (லூக். 23:6). மேலும் சிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா (யோவா 7:42) என்றனர். இயேசு தாவீதின் வேரானவர், அவரது சொந்த ஊர் பெத்லகேம் என்பதை மறந்து, 'கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை' என்று சொல்லுமளவிற்கு இயேசுவை கலிலேயனாகவும், இயேசுவின் சொந்த ஊராக கலிலேயாவையுமே ஜனங்கள் சிந்தையில் கொள்ளும் அளவிற்கு அவரது ஊழியம் கலிலேயாவில் பரந்து விரிந்திருந்தது.


இயேசுவின் ஊழியத்தினால்; கலிலேயாவில் அநேகர் தொடப்பட்டனர். 'கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவு கூறுங்கள்' (லூக். 24:7); 'இயேசு கலிலேயாவுக்குப் போக மனதாயிருந்தார்' (யோவா. 1:43); 'கலிலேயாவுக்குப் போனார்' (யோவா. 4:2,43, உயிர்த்தெழுந்த பின்னரும் எழுந்து கலிலேயாவுக்கே இயேசு சென்றார் (மத். 26:32). இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார் (யோவா 2:11); இரண்டாம் அற்புதத்தையும் கலிலேயாவிலேயே செய்தார் (யோவா. 4:54). கலிலேயர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர் (யோவா. 4:45). யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார் (யோவா 7:1,9). கலிலேயா கடற்கறையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களையே சீஷர்களாகவும் இயேசு தெரிந்துகொண்டார் (மத். 4:18). இயேசு மரித்தபோது, கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்தார்கள் (லூக். 23:55).


புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது (மத். 4:14,15). கலிலேயாவில் யோசேப்பு நீதிமானாக வாழ்ந்துகொண்டிருந்தபடியினாலேயே, யோசேப்பின் குமாரன் என்று என்னப்பட்ட இயேசுவின் வெளிச்சமும் கலிலேயாவில் அதிகம் பிரகாசித்தது. சொந்த ஊரோ பெத்லகேம், யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை, இயேசுவின் வெளிச்சமோ கலிலேயாவிலிருந்து பிரகாசிக்கத் தொடங்கியது. ஆவியின் ஏவுதலினால் தேவாலத்தில் வந்திருந்த சிமியோன், இயேசுவை கைகளில் ஏந்தியவனாக, 'உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான் (லூக் 2:29-32). இயேசு யூதனாக இருந்தபோதிலும், அவரது ஒளி புறஜாதிகளிலிருந்து பிரகாசித்து சொந்த ஜனங்களை நோக்கி வீசியது. இன்றைய நாட்களிலும், அழைப்பின் நிமித்தம் புறப்பட்டுச் சென்று, இயேசுவை அறியாத மக்கள் மத்தியில் பணியினைச் செய்துகொண்டிருக்கும் ஊழியர்கள் மூலமாக அவ்விடங்களில் வெளிச்சம் பிரகாசிக்கின்றது. சொந்த ஜனங்களோ அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கலிலேயாவில் இயேசுவின் ஊழியம் இத்தனையாய் வளர்ந்ததற்குக் காரணம், கலிலேயாவில் வாழ்ந்த யோசேப்பும் ஓர் காரணமல்லவா!


இத்தனையாய் சொந்த ஊரை மறந்து வாழ்ந்த யோசேப்பு, குடிமதிப்பெழுதப்படும் கட்டளை அகுஸ்துராயனால் பிறந்தபோது (லூக். 2:1) சொந்த ஊராகிய பெத்லகேமை நோக்கிச் செல்கிறான்; இதன் காரணம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். மனைவி கர்ப்பவதியாயிருந்தபோதிலும், கூட்டிச் செல்வதில் பலவித சங்கடங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை உருவானபோதிலும், சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதின் (லூக். 2:4,5) பிரதான நோக்கம், தாவீதின் வம்சத்தில் இயேசுவின் பெயர் எழுதப்படவேண்டும் என்பதற்காகவே. மரியாளின் வயிற்றில் இருப்பவர் தாவீதின் வேரானவர் (வெளி. 5:5; 22:16), ஈசாயின் அடிமரத்திலிருந்து தோன்றிய துளிரானவர் (ஏசா. 11:1), தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படவேண்டியவர் (மத். 1:1, 9:27, 12:23, 15:22, 20:30, 21:9) என்பதை யோசேப்பு அறிந்திருந்தான். இயேசு தாவீதின் குமாரன் என்று அறியப்படவேண்டுமென்றால், நான் எனது பெயரை தாவீதின் வம்சத்தில் பதிவு செய்யத் தவறிவிடக்கூடாது என்ற எண்ணத்துடனேயே யோசேப்பு சொந்த ஊராகிய பெத்லகேமுக்குப் புறப்பட்டான். தான் தவறிவிட்டால், பின் நாட்களில் தாவீதின் சந்ததியாரின் வரிசையில் இயேசுவின் பெயர் இல்லாமற்போய்விடும் எனவே, மனைவி கர்ப்பமாயிருக்கும் இக்கட்டான நிலையிலும், அதனை நிறைவேற்ற அவன் கருத்தாயிருந்தான்.


நம்மைக் கொண்டே, கிறிஸ்து யார்? என்று அறியப்படுகின்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் நமது பெயரை எவ்விதம் காத்துக்கொள்கின்றோம். நம்மைக் காண்கிறவர்கள் கிறிஸ்துவையும், அவரது குணங்களையும் நம்மில் காண வகையுண்டா? கிறிஸ்தவர்கள் என்ற பெயரைக் கொண்டிருந்தும், சினிமாவிலும், சிகரெட்டிலும், போதை வஸ்துக்களிலும், சண்டைகளிலும், வீணாண காரியங்களிலும் நாம் நமது பெயரை பதிவு செய்துவிட்டால், கிறிஸ்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று இயேசுவின் பெயரும் நஷ்டப்படுமே. மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:21-24).


சொந்த ஊரிலே சத்திரத்திலே யோசப்புக்கும், மரியாளுக்கும் இடம் கிடைக்காமற் போனாலும், சரித்திரத்தில் அவர்களுக்கென்று ஓர் இடம் கிடைத்ததுபோல, நாமும் சுவிசேஷத்தைக் கூறுவோம், சரித்திரத்தில் இடம் பெறுவோம்.