ஊசலாடும் உயிர்கள்

 

துணைக்குப் பின் துண்டிப்பு

குடும்பத்தில் அங்கங்களாயிருப்பவர்களை ஆங்காங்கே பிரித்துவைத்து, அரண்மனைகள் போன்ற குடும்பங்களில் சத்துரு தான் வாழ நினைப்பது நிகழ் உலகத்தில் தற்போது நடந்துகொண்டிருப்பது. குடும்பத்தின் கருவாகிய தேவசித்தத்தை, குடும்பங்கள் அறியாவண்ணம் கருக்கலைப்பு செய்து சித்தத்திற்கு விரோதமாகச் சிதறச் செய்வது சத்துருவின் திட்டம். நாடாளுமன்றம், பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியன கலைக்கப்படும்போது, ஆட்சிகளும், ஜனங்களும், அதிகாரங்களும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைப் போல, குடும்பத்தையும் கலைத்து அங்கத்தினர்களை அந்தரத்தில் ஊசலாடவிடுவது சத்துரு செய்யும் குறும்புகளில் ஒன்று. தனது சாயலின்படியும், தனது ரூபத்தின்படியும் ஆதாமை உண்டாக்கிய தேவன், 'மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்' (ஆதி 2:18) என்றார். ஆதாமின் உடலிலிருந்து, எலும்பெடுத்து ஏற்ற துணையை உருவாக்கி ஆதாமுக்குக் கொடுத்தார். ஒரே சரீரமான இவ்விருவரையும் குறித்து தேவனுக்குப் பெரியதோர் இருந்ததை அறிந்த சாத்தான், ஏவாளை தந்திரமாய் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டான், விளைவு 'தேவனுக்கும் அத்தம்பதியருக்கும் இடையிலான உறவு பறிபோனது.' இதே நிலையைத்தான் இன்றும் அநேக குடும்பங்களில் உருவாக்கத் துடிக்கிறான் சாத்தான். தேவனுக்கும் குடும்பங்களுக்கும் இடையிலான உறவைத் துண்டித்துவிடவேண்டும் என்ற துடிப்புடன் உலாவிக்கொண்டிருக்கிறான். ஏதேனில் அது ஏவாளின் மூலமாகச் சாத்தியமாயிற்று. சத்துருவின் சத்தத்திற்குச் செவிகொடுத்து சத்தியத்தை விட்டு சரிந்து விழுந்த ஏவாளினால் குடும்பமே, குலமே, முழு உலகமே வீழ்ந்தது. பிரியமானவர்களே! சத்துருவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும் கணவனோ அல்லது மனைவியோ குடும்பம் சரிந்து விழக் காரணமாகிவிடுகின்றனர். தேவனுக்கு விரோதமான போக்கு, பாவமான வாழ்க்கை, தேவனைத் தேடாத நிலை இவை கணவனிடத்திலோ அல்லது மனைவியினிடத்திலோ காணப்படுமாயின், சத்துரு குடும்பத்தில் ஊடுருவ அவர்கள் பாலங்களாகவும், பாதையாகவும் மாறிவிடுவார்கள். ஆதாமுக்குத் துணை கிடைத்தது, ஆனால் ஆண்டவரோ துண்டிக்கப்பட்டுவிட்டார். இதுதான் இன்று பல குடும்பங்களின் நிலை. கல்யாணத்துக்குப் பின் அநேகருடைய வாழ்க்கையில் கர்த்தரைக் காணவில்லை.
இதையே, விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள் (1கொரி 7:32-34) என்று எழுதி உணர்த்தும் பவுல், 'இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்' வாழப்பழகவேண்டும் (1கொரி 7:29) என்றும், உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள் (1கொரி 7:5) என்றும் யோசனையாகச் சொல்கிறாரே; இதன் அர்த்தமென்ன? பவுல் பிரிந்திருக்கச் சொல்வதென்பது 'விவாகரத்தைக்' குறிக்கவில்லை; மாறாக, திருமணம் ஆனாலும், மனைவியோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும், ஆண்டவருடன் செலவிடவேண்டிய நேரத்தைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதே. திருமணமானவர்களே உங்கள் குடும்பத்தில் தேவன் முக்கியமானவர், முப்புரிநூலானவர்; அவரைத் தவறவிட்டுவிட்டு வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கவேண்டாம். அவருக்கே முதலிடம் அவசியம்; இல்லையேல், இருதிரியும் பிரியும் என்ற ஆபத்து வாசலில் நிற்பது நிச்சயம்.

தற்கொலை செய்யும் தலைகள்

சரீரத்துக்குத் தலை எத்தனை முக்கியமோ, அத்தனையாய் குடும்பத்திற்குத் தலையான புருஷன் முக்கியமானவர். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான் (எபே 5:23) என்று எடுத்தெழுதுகிறார் பவுல். மேலும், ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன் (1கொரி 11:3) என்றும் எழுதுகிறார். அவரே (கிறிஸ்துவே) சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (கொலோ 1:18). எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார் (எபே 1:23). தேவன் கிறிஸ்துவுக்குத் தலை, கிறிஸ்து புருஷனுக்குத் தலை, புருஷன் ஸ்திரீக்குத் தலை இதுவே தேவன் வகுத்துவைத்திருக்கும் வரிசை நிலை.

எனினும், தங்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை பல கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. கணவர்களே, சரீரத்தை இயக்கும் பொறுப்பும், அங்கங்களைக் காக்கும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு என்பதையும், கிறிஸ்துவாகிய தலைக்குக் கீழேயே உங்கள் தலை நின்றுகொண்டிருக்கவேண்டும் என்பதையும் மறந்துவிடவேண்டாம். சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும் (எபே 5:24) என்று எழுதப்பட்டிருப்பதைக் கையிலெடுத்து, தவறான காரியங்களுக்கும் கீழ்ப்படிய மனைவியரை வற்புறுத்தினால், குடும்பம் வாழாது, மாறாக பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்; எச்சரிக்கை! ஆவிக்குரிய வாழ்க்கையில் தலை மரித்துப்போய்விட்டால், குடும்பங்கள் 'கோமா' நிலைக்குள் தள்ள்பபட்டுவிடும். தலையாக தேவனுடைய கட்டளைக்கு இசைந்து வாழவேண்டிய குடும்பத் தலைவர்கள் சத்துருவின் பாவக் கயிற்றில் தொங்கிவிடுவதால், தலையைச் சார்ந்து நின்ற உடலோ அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. கிறிஸ்துவாகிய தலை உயிரோடிருப்பதால் நாமும் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கி வாழ்கிறோம். கிறிஸ்து மரித்து உயிர்த்தெழாவிட்டால், சபையும் இறந்ததாகத்தானே எண்ணப்பட்டிருக்கும். தலையான கணவர்களே, உங்கள் தலைமைத்துவத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களை இயங்கவிடாமல் நிறுத்த, அங்கங்கள் அனைத்தையும் அதினதின் இடத்தில் அசையாது அமர்த்திவிட சத்துரு விரிக்கும் வலைகளில் சிக்கிக்கொள்ளாதிருங்கள்.

விவாகத்துக்குப் பின் விவாகரத்து

உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப் போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள் (சங் 128:3) என்று குடும்பத்தை வர்ணிக்கிறான் சங்கீதக்காரன். இப்படியிருக்க, 'கனிதரும் திராட்சச்கொடியும்' சுற்றிலுமிருக்கும் 'ஒலிவமரக் கன்றுகளும்' தத்தம் பணியை அறிந்துகொள்வது அவசியம்; அப்பொழுதே குடும்பம் பாதுகாப்பான நிலையில் காணப்படும். கர்ப்பத்தின் கனியை மாத்திரம் கர்த்தரிடமிருந்து பறித்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கும் மனைவியர்கள் அநேகர். ஆனால், தேவனோடு இருக்கும் உறவினால் உதிர்க்கப்படவேண்டிய திராட்சைக் கொடியின் கனிகளாகிய மறுபுறத்தையோ பலர் மறந்துவிடுகின்றனர். கனிகொடாத வாழ்க்கை பலரது குடும்பத்தைக் கசப்பாக்கிவிட்டது. நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (யோவா 15:1,2) என்கிறார் இயேசு.

கனிகொடாத காரணத்தை அறியாமல், கணவன் மனைவிக்கு விரோதமாகவும், மனைவி கணவனுக்கு விரோதமாகவுமே காரணங்காட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆவியின் கனியாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை (கலா 5:23) என்ற இந்தப் பிரமாணம் குடும்பங்களில் காணப்பட்டால் பிரிவினைக்கு இடமில்லை. இத்தகையை கனிகளை மறந்துவிட்டதே கத்தரித்துப்போடப்பட்டதற்குக் காரணம். ஒன்றாயிருந்தும், வீட்டிலேயே பிரிந்து வாழும் மனநிலைக்குத் தள்ளப்பட்ட தம்பதியர் உண்டு. அத்துடன், இனி பிரிந்துபோய்விடுவது நன்று என்று விவாகரத்து பெற்றுக்கொண்ட தம்பதியரும் உண்டு. இணைத்த தேவன் இவர்களில் இல்லாததே இந்நிலைக்குக் காரணம். கிறிஸ்தவக் குடும்பங்கள் என்று சொல்லப்பட்டாலும் 'விவாகரத்துக்களால்' பிரிக்கப்பட்டு தனித்தனியே கணவனும் மனைவியும் ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர்.

வேதனையாகும் பிள்ளைகள்

உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள் (சங் 128:3) என்பதே பிள்ளைகளைக் குறித்த தரிசனம். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது (சங் 23:5) என்று சொல்லும் தாவீது, இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்றும், வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள் (சங் 127:5) என்றும் குறிப்பிடுகின்றான். இத்தகைய நிலைக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தவேண்டியதும், பிள்ளைகள் ஆயத்தப்படுத்தப்பட தங்களை ஒப்புக்கொடுக்கவேண்டியதும் அவசியம். சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்கவேண்டிய பிள்ளைகள் பலர், சத்துருக்களோடு சேர்ந்து போய்விடுவதால் குடும்பங்களில் மிஞ்சுவது வேதனையே.

ஒலிவமரக் கன்றுகளைப் போல வளரும் அவர்கள், தேவனை அறியாமலும், தேவனுக்கு விரோதமாகவும் வளரும்போது முறித்துப்போடப்படுகிறார்கள். சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? (ரோம 11:24). என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் (சங் 51:5) என்று சரீரத்தின் சுபாவ குணத்தின் வலிமையைச் சொன்னாலும், தேவனோடு ஒட்டியவனாக வாழ்ந்ததினால் அல்லவோ அவன் தேவனின் 'இருதயத்திற்கு ஏற்றவனாக' (1சாமு. 13:14) அவரோடேயே ஒட்டிக்கொண்டிருந்தான். காட்டொலிவமரமாகிய பெற்றோரிடத்திலிருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் காட்டொலிவமரமாகிய சுபாவ குணம் கூடவே இருக்கின்றது. பெற்றோர் ஊழியராகவோ, போதகராகவோ, மிஷனரியாகவோ. சுவிசேஷகராகவோ, விசுவாசியாகவோ இருந்தாலும், பிறக்கும் பிள்ளைகள் சுபாவ குணத்தைச் சுமந்தே வருகின்றன. எனவே, பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும் (நீதி 22:15) என்று எழுதுகின்றான் சாலொமோன். காட்டொலிவமரமாகிய பெற்றோரின் சரீரங்களிலிருந்து வெட்டப்படும் பிள்ளைகளின் ஆத்துமாக்கள், நாட்டொலிவமரமாகிய தேவனோடு ஒட்டவைக்கப்படவேண்டியது அவசியம். இப்படி ஒட்டவைக்கப்படாத பிள்ளைகள், வேதனைகளாகவே வாழ்கின்றன. நாட்டு ஒலிவமரத்தோடு ஒட்டாததால், ஒட்டிவைக்கப்படாததால் பல பிள்ளைகளின் வாழ்க்கை வீட்டிற்கு வெளியே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன.

மற்றோராகத் தென்படும் பெற்றோர்

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே (குடும்பத்திலே) உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக (உபா 5:16) என்பது தேவ கற்பனை. கை கழுவி போஜனம் பண்ணத் தெரிந்த பல கணவன் அல்லது மனைவிகளுக்கு, தங்கள் பெற்றோரை உடன் வைத்துக் காப்பாற்றத் தெரியமற்போனது சத்துருவின் சுபாவமே.

வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து, உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்யஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள் (மாற்கு 7:10-13) என்று சொன்னார். உடன் வைத்திருக்கப்படவேண்டிய உயிர்கள் பல ஓரங்கட்டப்பட்டு இந்நாட்களில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. அம்மா, அப்பா தொந்தரவு தாங்க முடியல என்றும், என்ன சொன்னாலும் அவர்கள் தாங்கள் சொல்வதைத்தான் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள் என்றும், தங்கள் விருப்பப்படி நடக்கவிரும்புகிறார்கள் என்றும், சும்மா எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள், கோபப்படுகிறார்கள் என்றும், சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை என்றும் தேவையற்ற சாக்குப்போக்குகளைச் சொல்லி, தேவ கற்பனைக்கு விரோதமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றன பல குடும்பங்கள். கிறிஸ்துவைப் பின்பற்றும் நமது குடும்பங்கள் இத்தகைய சத்துருவின் நயவஞ்சகத்திலிருந்து தப்பிக்கொள்ளவேண்டும். இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் (ஏசா 8:18) என்ற வார்த்தை நம்மில் நிறைவேறவேண்டும்.