உயர... உயர...

 

நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சியே பாவத்தில் கிடக்கும் மாந்தர்களின் பாதைகளை மாற்றியமைக்க வல்லது. பிறரை திசைதிருப்பவேண்டுமெனில் நாம் கிறிஸ்துவில் திடமாக நிற்கவேண்டுமே. நீங்கள் விதையாக வைக்கப்பட்டிருந்தாலும், புதையாவிட்டால் வளர வாய்ப்பில்லை என்ற இயற்கைத் தத்துவமே ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் சரிவரப் பொருந்தக்கூடியது. கிறிஸ்தவர்களாக வாழுகிறோம் என்பதோடு மாத்திரமல்லாமல், கிறிஸ்துவுக்குள் எப்படி வளருகிறோம் என்பது முக்கியமானது.

தனித்திருக்கச் செய்யும் தந்திரம்

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும் (யோவா 12:24) என்றார் இயேசு. நிலத்தில் விழும் எந்த விதையும், தன் உருவத்தை இழந்தால்தானே மரமாக முளைத்தெழும்புவது சாத்தியம். இயேசு நம் இரட்சிப்பிற்குக் காரணராக மாறியதும் இவ்வாறே. விதைக்கிறவராக மாத்திரமல்ல, விதையாகவும் தன்னை ஒப்புக்கொடுத்தவர் அவர். விதையைப் பற்றிய உவமையினைச் சொன்னதோடு விட்டுவிடாமல், தனது வாழ்க்கையினை விதையாகவும் விதைத்தவர் இயேசு. தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எத்தனையோ வல்லமைகள் அவரிடம் இருந்தபோதிலும், கெச்சமெனே தோட்டத்தில் இயேசு யூதாஸினால் காட்டிக்கொடுக்கப்பட்டபோது, பேதுரு கைநீட்டி தன் பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டியபோது, இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரெண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? (மத். 26:51-53) என்ற கேள்வியை முன்வைத்தவராக, வேதவாக்கியம் நிறைவேற தனது சரீரத்தை ஒப்புக்கொடுத்தார் (மத். 26:54).

அவர் நெருக்கப்பட்டார், ஒடுக்கப்பட்டார், அடிக்கப்பட்டார், இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து எடுக்கப்பட்டார்; வாதிக்கப்பட்;டார், பாடுகளுக்குட்பட்டார், குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டார் (ஏசாயா 53:7-10). அசட்டைபண்ணப்பட்டவராயிருந்தார், புறக்கணிக்கப்பட்டவராயிருந்தார், துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்தவருமாயிருந்தார். நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார், காயப்பட்டார், ஆக்கினைக்குட்படுத்தப்பட்டார் (ஏசாயா 53:3-5). அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது (ஏசா 53:2). இப்படிப்பட்ட இயேசுவைக் குறித்தே, 'அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்' (ஏசாயா 53:11) என்று தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டது. இத்தனையாய் அவர் உருமாறியிருந்ததினால், பல உயிர்கள் இன்று மனம் மாறியிருக்கின்றன.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணினார் (ரோமர் 5:8). எனவே பவுல் இயேசுவைக் குறித்து, 'எல்லாருக்காகவும் ஒருவரே மரித்தார்' (2கொரி. 5:15,16) என்று எழுதுகின்றார். மனிதரை இரட்சிக்க இந்த நிலைக்கு தனது உடலை ஒப்புக்கொடுத்தவரே ஆண்டவராகிய இயேசு.

தங்களையும் தங்களுடையதையும் தற்காத்துக்கொள்ளும் எல்லைகளுக்குள்ளேயே இன்றைய அநேக கிறிஸ்தவர்களின் நிலை காணப்படுகின்றது. வாழ்க்கையை விதைக்கவிடாமல் தனது வலைக்குள் வளைத்துவைத்திருக்கிறான் சத்துரு. கோதுமை மணி என்று வெண்கல மணியைப் போல முழக்கமிடுகின்றனர் பலர்; ஆனால், உண்மையிலோ தங்களை மூடியிருக்கும் உமியைக் கூட உதிர்க்க அவர்களுக்கு மனதில்லை. உமியைத்; தொட்டால்கூட உயிரே போனதுபோல கூச்சலிடுகின்றனர். சுகமான இடத்தில், மனம் விரும்பியவைகளுடன், பாடுகளைச் சந்திக்காமல், நெருக்கங்களைச் சந்திக்காமல், துன்பங்களைச் சந்திக்காமல் சுயம் சாகாமல் வாழ்வதினால் அநேகரை சத்துரு 'தனித்திருக்கச் செய்துவிட்டான்' தனது கூட்டத்தில் ஒருவராக அவர்களைச் சுதந்தரித்தும்;கொண்டான். பாதுகாப்பாக இருக்றோம் என்று நினைப்பவர்ளே, நீங்கள் பக்கத்து நிலத்தில் விழுந்தால் கூட பயிராக உயர்ந்துவிடலாம்.

வாலிபத்தின் விதை

தேவன் நம்மை ஏவும் நேரத்தில் தாமதமின்றி செயல்பட நம்மை ஒப்புக்கொடுப்பதே நல்லதோர் அர்ப்பணிப்பு. வாலிபத்திலேயே விதையாக விழுந்திருந்தால், முதிர்வதிற்குள் எத்தனையோ பெரிய மரமாகியிருக்கும் பலரது வாழ்க்கை. ஆனால், அழைப்பை மறந்து வாலிபத்தில் வழிவிலகிப் போனதினால், முதிர்வயதில் முளைக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. 'பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்' (1இரா 17:12) என்று சாறிபாத் விதவை சொன்னதைப்போல, சாகும் நாட்கள் நெருங்கும்போது ஏதாவது ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயம் செய்து செத்துவிடவேண்டும் என்று பரிதாபமான நிலைக்குள் பலர் தங்கள் வாழ்க்கையினைத் தள்ளிவிட்டனர். முதிர்வயதில் ஆத்தும அறுவடை செய்வது தவறல்ல; எனிலும், முன்னமே அதைச் செய்யாமல் தவறிப்போனது தவறல்லவோ. இருபது வயதிலேயே மாங்கன்றை தோட்டத்தில் நட்டினால், அறுபது வயதில் அதன் கனிகளை 'அந்நியக் கண்களால் அல்ல, உன் சொந்தக் கண்களால் காணமுடியும்'; ஆனால், அறுபது வயதில் மாங்கன்றை நட்டினால், அது பூக்கத்தொடங்கும் முன் உனது வாழ்க்கை பூமிக்குள் போயிருக்கும். கர்த்தர் கொடுத்த தாலந்துகளை, வரங்களை இன்றே உபயோகப்படுத்தத் தொடங்கிவிடுங்கள். உள்ளறையில் பதுங்கியிருப்பவனின் உறையில் மறைந்து இருக்கும் பட்டயமாக அதனை ஒளித்துவைத்திராதேயுங்கள். பிரசங்கம் பண்ணவோ, எழுதவோ, பாடல் பாடவோ மேலும் கிறிஸ்துவுக்காகச் செயல்பட உங்களிடத்திலிருக்கும் திறமைகளை இன்றே வெளிக்கொணருங்கள், உங்கள் வயோதிபத்திற்கு முன் அநேகரை நீங்கள் ஆதாயப்படுத்திக்கௌ;ளமுடியும். 'அதைச் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன், இதைச் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன்' என சாவின் விளிம்பில் நின்றுகொண்டு சங்கீதம் பாடிக்கொண்டிருக்கும் மனிதர்களாக மாறிவிடவேண்டாம்.

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும், மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை (பிர 12:1-7) என்று சாலமோன் எழுதியுணர்த்துவதும் அதுதானே.

மண்ணாணது பூமிக்கு எப்படி திரும்புகிறது என்பதை எத்தனையாய் சாலமோன் வர்ணிக்கிறான். மண்ணான நமது உடலை வெள்ளிக்கயிறு என்றும், பொற்கிண்ணி என்றும், சால் என்றும், உருளை என்றும் வர்ணிக்கும் சாலமோன், இத்தகைய மனித உடல் தேவனுக்கேற்ற பாத்திரமாக வாலிபத்திலேயே பயன்படத் தொடங்கிவிடவேண்டும் என்பதைத்தானே வலியுறுத்துகிறான்.

வாலிபன் ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும்? (மத். 19:17) என்று கேட்டான். கட்டளைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் (மத். 19:20) என்றாலும், அவனது வாழ்க்கையை பிறருக்குப் பிரயோஜனமாக மாற்ற இயேசு ஆலோசனை கொடுத்தபோது, 'நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு' (மத். 19:21) என்று சொன்னபோது அவனோ மனமாற்றமடையவில்லை மாறாக மனதற்றவனாக அவரை விட்டு அகன்று போனான். இவனுடைய வாழ்க்கை, அடிபட்டு, குற்றுயிராகக் கிடந்த மனிதனைக் கண்டு அகன்றுபோன லேவியனுக்கும் ஆசாரியனுக்கும் ஒத்ததே. பிரியமானவர்களே உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்காகப் பயன்படுவதே கிறிஸ்துவின் பிரதான போதனை என்பதனை மறந்துபோய்விடவேண்டாம். தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது (மத். 11:5) என்றார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார் என்றார் (லூக். 4:18) இயேசு. வானத்தையும் பூமியையும் படைத்தவரே தரித்திரரை நோக்கித் திரும்பி நிற்கும்போது, நாம் திரும்புவதில் தாமதம் வேண்டாம். இயேசுவை அறியாதவர்களுக்கு அவரை அறிவிப்பதே அறிந்தோர்களின் இலட்சணம், இலக்கணம் என்பது மாற்ற இயலாதது; அது விதையாவோரின் வாழ்வினிலேயே துளிர்விடுவது.

தனிப்பட்ட வாழ்க்கையின் காரியங்களை, குடும்ப காரியங்களை, எதிர்காலத்தைக் குறித்த காரியங்களை, பிள்ளைகளைப் பற்றிய காரியங்களை என அனைத்தையும் ஒழுங்குபடுத்திவிட்டு புறப்படலாம் என்று நினைப்பவர்கள் அநேகம். அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரில் இருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான் (2சாமு 17:23). அப்படியே எசேக்கியா ராஜா வியாதிப்பட்டிருந்தபோது, ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான் (2இரா 20:1).

வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தவேண்டியவர்கள் யார் என்பதை இந்த வசனங்கள் நமக்கு வெளிக்காட்டவில்லையா? சாக இருப்பவர்கள் செய்யவேண்டிய காரியத்தை, சத்தியத்தை அறிவிக்க அழைக்கப்பட்டவர்கள் செய்ய நினைப்பது எத்தனை பரிதாபமானது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சுவிசேஷத்தைச் சுமந்துவந்த பல மிஷனரிகள், தாயகம் திரும்பியதில்லை, தாய் தந்தையரைப் மீண்டும் பார்த்ததில்லை, ஆபிரகாமைப் போல இனத்தையும், பூமியையும் விட்டு விட்டு கர்த்தர் காண்பித்த தேசத்திற்கு புறப்பட்டு வந்தவர்களல்லவோ அவர்கள். பலரது கல்லறைகள் இன்றும் இந்தியாவில் நமது கண்கள் முன்னே இல்லையோ.

ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்ற மனிதனிடத்தில், மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் இயேசு (லூக் 9:59,60). தேர்தல் நாட்களில் 'தேர்தல் அவசரம்' என்று எழுதப்பட்ட வாசகங்களைக் கொண்ட வாகனங்கள் அங்கும் இங்கும் பாய்ந்து செல்வதுபோல, அந்த வாகனங்களுக்கு பிற வாகனங்களும் வழி கொடுப்பது போல, நிறுத்தங்களில் கூட அவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுபோல, 'இராஜாவின் காரியம் அவசரம்' என்ற வாசகங்களை வாழ்க்கையில் ஒட்டியவாறு புறப்பட்டுச் செல்லவேண்டியவர்கள் நாம்.

பாடுகள் தங்கள் பிரயாணத்தை முடுக்கிவிடுகிறது என்பதை அறியாமல், பாடுகளில் படுத்துக்கொள்ளும் மனநிலையோடு முடங்கிவிட்டனர் பலர். வியாதிகள் உன் வேகத்தைத் தூண்டிவிடவேண்டும், மாறாக நம்மைச் சோகத்தில் ஆழ்த்திவிடக்கூடாது. உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் (சங் 91:12) என்ற வார்த்தையினையே திரும்பத் திரும்பக் கூறி, சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா 52:7) என்ற சத்தியத்தை இன்றைய நாட்களில் பலர் எடுத்துப்போட்டுவிட்டனர். கிறிஸ்தவர்கள் பாடுபட்டுவிட்டால் கிறிஸ்துவின் பாதுகாப்பு அவர்கள் மீது இல்லை என்ற மலிவான எண்ணங்களை மனதில் சுமந்து நிற்கும் கூட்டத்தினர் இன்றும் உண்டு. சுகமான பாதங்களை விரும்பும் பலர், சுவிசேஷகனுடைய பாதங்களைப் பறிகொடுத்துவிட்டனர்.

ஜீவத்தண்ணீரும் ஜீவனும்

அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே (2கொரி 8:9) என்பதல்லவோ பவுலின் வார்த்தை. தன்னுடைய ஐசுவரியத்தையும், பரலோக மேன்மையையும் மற்றும் சகலத்தையும் விட்டுக்கொடுத்து, தான் சிருஷ;டித்த பூமியிலேயே சடலமாக கல்லறையில் வைக்கப்பட்டிருந்தாரே; அந்த கோதுமை மணியில் விளைச்சலல்லவோ நாம். உலகத்திற்காக ஜீவனைக் கொடுத்த அப்பம் அவர் (யோவான் 6:33); ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுத்த மேய்ப்பன் அவர் (யோவான் 10:11). 'அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்' (ஏசாயா 53:11) என்ற தீர்க்கதரிசன வார்த்தைக்கு பிசகாமல் இருந்தது இயேசுவின் வாழ்க்கை.

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலி 2:7-11)

பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையின் பலனைக் காண விரும்புகிறீர்களா? விதையாகிய உங்களின் வலிமையைக் காண விரும்புகிறீர்களா? உங்களுக்குள் என்ன இருக்கின்றது என்பதை உணரவும் அதை உலக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கவும் விரும்புகிறீர்களா? உங்களால் மற்றவர்களுக்கு என்ன இலாபம் என்பதை அறிய விரும்புகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் உருமாறவேண்டும். உதிர்க்கவேண்டியவைகளை உதிர்த்தேயாகவேண்டும். இதனையே பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும்போது, 'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்' (ரோம 12:2) என்று எழுதுகின்றார். மேலும், 'கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்' (பிலி. 1:21) என்று சாவை ஆதாயமாகப் பார்க்கும் பவுலின் பார்வை நம்மிலும் உருவாகட்டும்.
நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம்பிராயணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன் (2கொரி 11:23-27) என்ற பவுலின் உடல் எத்தனை உலைக்களத்தைச் சந்தித்திருக்கின்றது. விறகு எரியாமல் சோறு வேகாது, மெழுகு உருகாமல் வெளிச்சம் வீசாது, உப்பு கரையாமல் சுவையும் ஏறாது, விதையாய் வீழாமல் மரமும் வளராது. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் (1கொரி 15:19) என்ற பவுலின் வார்த்தைகள் நமது பாதையை மாற்றியமைக்கட்டும். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் (யோவான் 7:38) என்றார் இயேசு. 'நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்' (2தீமோ. 4:6) என்று ஜீவத் தண்ணீரை ஊற்றியதோடு மாத்திரமல்லாமல் தன் வாழ்க்கையையே நீராக கிறிஸ்துவுக்கென்று ஊற்றிவிட்டதை உணருவோம்.

கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும் தரித்திரானதில்லை
இராஜ்ய மேன்மைக்காய் கஷ;டமடைந்தோர் நஷ;டப்பட்டதில்லை
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் உலகத்தின் இறுதிவரை

கல்வாரி தொனிதான் மழைமாரி தொனிக்கும்
நாள்வரை உழைத்திடுவோம்.

உயர்த்தப்படு உலகை இழு

நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார் இயேசு (யோவா 12:32); மேலும், உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவா 1:9) என்று இயேசுவைக் குறித்து எழுதிவைத்திருக்கிறான் யோவான். இயேசுவின் தரிசனத்தின் தெளிவான பிரகடனத்தை வெளிப்படுத்துகிறது அவரது வாயின் வார்த்தைகள். 'எல்லாரையும் தன்னிடத்தில் இழுத்துக்கொள்ளவேண்டும்' என்பதே அவரது தரிசனம்.

பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார் (மத் 13:32) இயேசு. அநேக ஆத்துமாக்கள் அடையத்தக்க மரமாக நம்முடைய வாழ்க்கை மாறவேண்டுமெனில் நாம் வளரவேண்டும். நாம் விதையாகவே தனித்திருந்துகொண்டிருப்போமென்றால், அந்த ஆத்துமாக்களெல்லாம் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கும். நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்று இயேசு சொன்னதைப் போல (மத் 8:20), பிரச்சனைகளினாலும், பாடுகளினாலும், உலக உபத்திரவங்களினாலும், வாழ்க்கைப் போராட்டங்களினாலும் நொந்தவர்களாக இளைப்பாறுதல் தேடியலைந்து தலைசாய்க்க இடமின்றி ஆத்துமாக்கள் ஆறுதல் பெறவேண்டுமென்றால், நாம் ஆவிக்குரிய மரமாக உயர்ந்து வளரவேண்டும்.

நம்முடைய வாழ்க்கை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாறவேண்டுமெனில், விதையாயிருப்பதால் மாத்திரம் பயனில்லை, வளர்ந்தால் மாத்திரமே அது நிகழும். ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சியடையாதவர்களால் அடுத்தவரை இழுத்துக்கொள்ள இயலாது. வேதம் கையிலிருந்தும் அதிலுள்ள வசனங்களைக் கொண்டு ஜனங்களை இழுக்கும் முறைதனை அறிந்திருப்பவர்களால் மாத்திரமே ஆத்தும அறுவடை என்பது சாத்தியம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 17:20) என்றாரே; அப்படியிருக்க, அந்த விசுவாசம் மரமாக வளர்ந்துவிட்டால் எத்தனை பெரிய அற்புதங்கள், அடையாளங்கள், சாதனைகள் நிகழும்.

மற்றவரை இழுக்கமுடியாமற்போகிறதற்குக் காரணம், நீ இன்னும் இளைஞனாயிருப்பதே. 'வெட்டு' என்ற ஆணை பிறந்தபின்னும், யெத்தேரைப் போல பட்டயத்தை உருவாமல் மௌனமாய் நின்றுகொண்டிருப்பதில் பயன் இல்லை. நம் கையிலிருக்கும் பட்டயம் நமது கையில் பத்திரமாய் இருக்கவேண்டியது அல்ல, அது மனிதனின் ஊணையும், எலும்பையும் பிரிக்க கர்த்தர் கொடுத்த பலத்த ஆயுதம். தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது (எபி 4:12).

இத்தகைய வேத வசனங்களை கையில் வைத்திருக்கும் நாம் செய்வது என்ன? அநேகருக்கு பட்டயத்தைக் கையாளுவதில் பழக்கமில்லை, பலருக்கு பட்டயத்தைக் கையாளுவதில் பயம் ஒரு தொல்லை. நம்முடைய கையில் கொடுக்கப்பட்டிருக்கின்ற பட்டயத்தைக் கொண்டு, எத்தனை பேருடைய வாழ்க்கையில் ஆவியையும், ஆத்துமாவையும், கணுக்களையும், ஊனையும், நினைவுகளையும், யோசனைகளையும் நாம் குத்திக் காட்டியிருக்கின்றோம். பேதுரு பிரசிங்கித்தபோது, ஜனங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள் (அப். 2:37). குத்திக்காண்பிக்கும் பட்டயத்தை உறையில் பொத்திவைத்து பாதுகாப்பதில் பயன் உண்டோ?

இயேசுவின் வார்த்தைகளையும், வேதத்தின் சத்தியங்களையும் சரிவரப் புரிந்துகொள்ளத் தவறுவதே பலர் தவறிப்போவதற்கும், தடுமாறுவதற்கும், தயங்கி நிற்பதற்கும் முக்கியமானதோர் காரணம்.

கொரிந்து சபைக்கு பவுல் கடிதம் எழுதும்போது, நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை (1கொரி 3:2) என்று எழுதுகின்றார். இந்த வசனத்தை சற்று உற்று கவனித்தால் உண்மை தெரியவரும். போஜனத்தை உண்ணும்படியான பெலன் இல்லாதவர்களுக்கு, பெலனைப் பெருகச் செய்ய பாலைக் குடிக்கக் கொடுத்தபோதிலும், அவர்களுக்கு போஜனத்தை உண்ணும்படியான பெலன் உண்டாகவில்லை; இவர்களால், உச்சிதமான பதார்த்தங்கள் பரிமாறப்படும் விருந்துசாலைக்குள் வந்து என்ன செய்துவிடமுடியும். போஜனம் இருக்கும் இடத்தில் உட்காரவைத்தாலும் பாலைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள். தங்களுக்கு ஆசீர்வாதமான வசனங்களை, தங்கள் விருப்பத்திற்கேற்ற பிரசங்கங்களை மற்றும் தங்கள் தேவைகள் சந்திக்கப்படும் வழிமுறைகளைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள்; காரணம் அவர்கள் மாம்சத்தின் வழிகளை விட்டு விலகாததே.


ஆவிக்குரிய வாழ்க்கையில் உயர்ந்த நோக்கத்தோடு ஓட கர்த்தர் நமக்கு பெலன் தருவாராக. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக (எபி 6:2). காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள் (எபி 5:12) என்றே எபிரேய ஆக்கியோனும் எழுதுகின்றார்.

இயேசுவோடு கூட இருந்த சீஷர்களின் வாழ்க்கையிலும் இதனை நம்மால் காணமுடிகிறது. ரபீ, போஜனம் பண்ணும் என்று சீஷர்கள் அவரை வேண்டிக்கொண்டபோது, 'நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு' என்று பதிலளித்தார் இயேசு. இயேசு குறிப்பிட்டுச் சொல்லும் போஜனம் எது என்பதை அறியாத சீஷர்களோ, 'யாராவது அவருக்குப் சாப்பிடும்படியாக போஜனம் கொண்டுவந்திருப்பானோ' என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது (யோவா 4:34) என்றார். போஜனம் என்பது அவருக்காக ஆத்தும அறுவடை செய்யப் புறப்பட்டுப் போவதே. இந்த போஜனத்தை உணராமல், பலரை சாப்பிடும் இடத்திலேயே சங்கிலிகளால் கட்டிவைத்துவிட்டான் சத்துரு. தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய் (நீதி 25:16) என்று சாலமோன் சொல்வதைப் போல, மட்டமிஞ்சி தேவனுடைய ஆசீர்வாதத்தை வாழ்க்கையில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பல கிறிஸ்தவர்கள். 'உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடே போ' (நியா. 6:14) என்ற வார்த்தைக்கு இணங்கி புறப்பட இன்று ஆயத்தமா? பந்திக்கு வரும் ஆத்துமாக்களே பிதாவுக்குப் போஜனம் என்று உணர்ந்தோர் உலகை வலம் வருவர், ஊர் ஊராய் ஆத்துமாக்களைத் தேடியலைவர்.

பாலைக் குடித்துக்கொண்டேயிருக்கும் குழந்தைப் பருவத்திலிருந்து, பிதாவின் கிரியையைச் செய்து முடிக்கும் புருஷர்களாக நாம் வளரவேண்டியது அவசியம். வாழ்க்கையில் கிடைக்கும் ஆசீர்வாதங்கள், அற்புதங்கள் இவைகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு, அவருக்காக கிரியை செய்யவோ நாம் மறந்துபோய்விடக்கூடாது. நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவா 6:26) என்று தன்னைப் பின்பற்றும் ஒரு கூட்டத்தினரை இயேசு அடையாளங் காட்டிக்கொடுத்தார். அவர்கள் அப்பம் என்று நினைத்தது 'வயிற்றுப் பசிக்கு வேண்டிய சாப்பாடைத்தான்'. தேவன் விரும்பும் போஜனத்தையோ அவர்கள் அறிந்துகொள்ளாதிருந்தார்கள். பல ஊழியர்களைக்கூட இந்த திசைக்கு நேராகத் திருப்பிவிட்டான் சத்துரு. அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள் (ரோம 16:18). கள்ள உபதேசங்களினால் தங்கள் கல்லாவை (பணப்பெட்டியை) நிரப்பும் ஊழியர்களாகிப்போனது எத்தனைப் பரிதாபமான நிலை.

இயேசு வனாந்திரத்தில் இருந்தபோது, 'இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படிச் சொல்லும்' என்று வயிற்றைக் காட்டினான் பிசாசு. ஆனால் இயேசுவோ, 'மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே' என்று வார்த்தையைக் காட்டினார் இயேசு (மத் 4:4).எது அப்பம், என்று இன்றும் அடையாளம் கண்டுகொள்ள இயலாமற் திணறுகிறவர்கள் பலர்.

நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார் (யோவான் 6:53-58) இயேசு.

போராடும் போராளி

நாம் உயர்ந்துவிடாதபடிக்கு சத்துரு சிக்கவைக்கும் சகதிகளைக் குறித்து எச்சரிக்கையாயிருக்காவிடில், நமது ஆவிக்குரிய உயிரையே இழந்துவிடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிவோம். மற்றவர்களை இழுக்கப் புறப்படும் நம்மை சத்துரு இழுத்துக்கொள்ளாதபடிக்கு எச்சரிக்கையோடிருப்போம்.

உயரத்தில் நின்றுகொண்டிருந்தாள் யேசபேல், இஸ்ரவேலை ஆளும்படி தெரிந்துகொள்ளப்பட்ட யெகூ வருவதைக் கண்டபோது, தனது வசீகரமான பார்வையினால், வேசிக்கேற்ற தோரணையினால் யெகூவை தன் பக்கம் இழுத்துக்கொள்ள நினைத்தாள் யேசபேல். கணவனைக் கைப்பிடியில் வைத்திருந்தாள் அவள், எனினும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன் மீது கைபோட இயலவில்லை. யுத்தத்திற்கென்று புறப்படும் சகோதரர்களே உங்கள் சத்தத்தை அடக்க சத்துரு அனுப்பும் சகோதரிகளைக் குறித்து கவனமாயிருங்கள். யுத்தத்திற்கென்று புறப்படும் சகோதரிகளே உங்கள் சத்தத்தை அடக்க சத்துரு அனுப்பும் சகோதரர்களைக் குறித்து கவனமாயிருங்கள். பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி 12:1); தள்ளிவிடத் தெரியவில்லையென்றால், பாதையிலிருந்து நீங்கள் தள்ளப்பட்டுப்போவீர்கள் என்பது நிச்சயம்.

யோசேப்பை தன் பக்கம் இழுத்துக்கொள்ள துணிந்தாள் போத்திப்பாரின் மனைவி. கட்டிய கணவன் வீட்டிலே இருந்தபோதிலும், கண்ணோ யோசேப்பின் உடலைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அவனோடு சயனிப்பதற்கு சமயம் தேடிக்கொண்டிருந்தாள். எனினும், யோசேப்போ வஸ்திரத்தை விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான். நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான் (ஆதி 39:17) என்ற சொல்லும் அவள், அவனோடு சரசம்வண்ணியிருந்தால் அதனை கணவனிடம் சொல்லியிருப்பாளோ? யோசேப்போடு சயனிக்கமுடியவில்லை என்ற கோபமே, அவளை கணவனிடம் அப்படிச் சொல்லவைத்தது. இவளிடமிருந்து தப்பிய யோசேப்பு உயர்த்தப்பட்டு முழு தேசத்தையுமே இழுத்துக்கொண்டான்.

புத்தியீனனாயிருந்த வாலிபன் ஒருவன் தன்னை தற்காத்துக்கொள்ளத் தவறியதால், ஸ்திரீயினால் பிடிக்கப்பட்டான். மாலையிலும், இரவிலும் தெருவில் அவள் வீட்டு வழியாய் அவன் நடந்துபோனதைக் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்த அவள் வேசியின் ஆடையாபரணந்தரித்து அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவனைப் பிடித்து முத்தஞ் செய்து, வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம் என் புருஷன் வீட்டிலே இல்லை என்று சொல்லி அந்த வாலிபனை அழைத்தாள். ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது (நீதி 7:22-23).

இம்மூன்று சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் 'திருமணமான ஸ்திரீகளே' என்பது நாம் கருத்தில் கொள்ளவேண்டியது. திருமணமான பெண்களுடன்தானே பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சாக்குப்போக்குச் சொல்லி சிக்கிக்கொள்ளவேண்டாம் என்பதை எச்சரிக்கவே இந்த சம்பவங்கள் வேதத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

தேசத்தை இழுத்துக்கொள்ள அழைக்கப்பட்டவர்கள் பலரை இன்று ஸ்திரீகள் பலர் இழுத்துக்கொண்டது இழுக்காகிப்போனதல்லவோ. இன்றோ, சிறைக்குச் செல்லும் முன்பாக சேலையில் சிக்கிக்கொண்டவர்கள் உண்டு. ராஜாவின் போஜனம் தானியேலை இழுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்காசனம் மோசேயை இழுத்துக்கொள்ள முடியவில்லை. சத்துரு நம்மை இழுத்துக்கொள்ளாதபடிக்கு, எச்சரிக்கையோடிருப்போம். நாம் உயர.. உயர... இவையத்தனையையும் மனதில் கொண்டால் தேவராஜ்யமும் உயரும் உயரும், பரலோகம் மகிழும் மகிழும்.