பிழைப்பும் இழப்பும்

 

இழப்பு என்பது மனிதனுடைய மனம் ஏற்றுக்கொள்ளாதது. தன்னுடைய வாழ்க்கையின் அத்தனையும் தான் எதிர்பாப்பது போலவும், விரும்புவது போலவும் அப்படியே நடந்தேறிவிடவேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாம். நமக்கு வரவிருப்பதிலும், மற்றவர்கள் தரவிருப்பதிலும், தேவனுக்குக் கொடுக்கவிருப்பதிலும் ஒரு குறைவுமில்லாமல் வந்துவிடவேண்டும் என்று நினைக்கும் நாம், பிறருக்குக் கொடுப்பதிலும், தேவனுக்குக் கொடுப்பதிலும் குறைவுள்ளவர்களாகக் காணப்பட்டுவிடக்கூடாது என்ற மறுபக்கத்தை மனதில் கொள்ளாமல் விட்டுவிடக்கூடாதே. ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம் (மத் 7:12) என்பதல்லவோ இயேசுவின் போதனை; இதனை கைக்கொள்ளுவதில் நாம தவறாதிருந்தால், நம்முடைய வாழ்க்கைக்கும், பிறருடைய வாழ்க்கைக்கும் இழப்பு ஏற்படுத்தும் மனிதர்களாக நாம் காணப்படமாட்டோம். முடிந்தவரை செய்வோம், முடியாவிட்டால் விட்டுவிடுவோம் என்று தோல்வியானாலும், வெற்றியானாலும் சமரசம் செய்துகொள்ளும் மனநிலை நமக்கு வேண்டாம். 'முடிந்தது' என்று சொல்லும்வரை முன்னேறிச் செல்லுவோம்.

பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை (மத் 6:20) என்றார் இயேசு. எனினும், இப்போதனையினைப் புரிந்துகொள்ளாமல், இவ்வுலக வாழ்க்கையே புண்ணியமென போற்றி வாழும் மானிட வர்க்கம் பரலோகத்திற்கே இழப்புண்டாக்கிவிடுகின்றது. பரலோகத்தில் அநேகர் பொக்கிஷத்தைச் சேர்த்தால் பரலோக பொக்கிஷம் நிரம்பி வழியும்; குறைவானோர் சேர்த்தால் பரலோகமும் குறைவுபட்டுத்தானே காணப்படும். 'என் பாத்திரம் நிரம்பி வழிகிறது' என்று தன் பாத்திரத்தின் மேலேயே கண்ணை வைத்துக்கொண்டிருப்போர் விண்ணிற்கு இழப்பு ஏற்படுத்தும் கூட்டத்தில் சேர்ந்தோர்களே.

தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2தீமோ 2:4) என்பது, பவுல் தீமோத்தேயுவுக்கு வழங்கிய ஆலோசனைகளில் பிரதானமான ஒன்று. இன்றைய உலகத்தில், பிழைப்புக்கு அடுத்த காரியங்களிலேயே மனிதர்கள் தங்கள் வாழ்வுதனைப் பின்னி பிணைத்து வைத்திருக்கின்றனர். பிழைப்புக்கடுத்த காரியங்களில் மேலும் மேலும் முன்னேறிச் சென்றுகொண்டேயிருந்தால், அதுவே வாழ்க்கையின் இலாபம் என்பது அவர்களின் கணக்கு; என்றாலும், பிழைப்புக்குப் பின்னால் ஓடிக்கொண்டேயிருக்கும் மனிதர்கள் பரலோகத்திற்கு ஏற்படுத்தும் இழப்புதனையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டியது ஆவிக்குரியோரின் அழகு அல்லவா. ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான் (1கொரி 2:15) என்பதுதானே பவுல் காட்டும் ஆவிக்குரிய மனிதனின் தன்மை. உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ? (லூக் 14:28-30) என்று இயேசுவும் கற்பித்தாரே.

இயேசு கிறிஸ்துவை வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் காட்டும் வழிகளில் விழிகளைத் திறந்துவைத்து நமது ஆவிக்குரிய பயணத்தைத் தொடங்குவது வாழ்க்கையின் முதற்படி என்றாலும், முன்னேறுதல் என்பது ஜீவியத்தில் முடிவின்றி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவேண்டிய ஒன்று. ஓட்டத்தைத் தொடங்கி முன்னேற்றத்தைக் குறித்து கவலையற்றிருந்த பலருடைய ஆவிக்குரிய வாழ்க்கை பாதி வழியிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. 'ஓட்டம் தொடங்கிய பேர் அதிகம்' என்ற பாடல் நாம் அறிந்ததே. வேகமாக பயணத்தைத் தொடங்கிய பலர் விவேகமாக முன்னேறாததினால், தங்கள் வாழ்க்கையின் விளைச்சலில் நூறு மடங்கு பலன் கொடுக்க இயலாமற் போய்விட்டனர்.

கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் இயேசு (லூக் 9:62). கலப்பையில் கை வைத்த பின்பு, கண்கள் பின்னோக்கிப் பார்த்தால், கால்கள் பின்னிட்டுப் பயணிக்கத் தொடங்கிவிடும். கலப்பையில் கை வைத்து உழுதுவிட்டு, விதைப்பதற்கு முன் விழுந்துபோகும் மனிதர்கள் அநேகர். பின்னிட்டுப் பார்க்கும் இவர்களுக்குப் பரலோகத்திலே பங்கில்லை என்றே இயேசு கூறுகின்றார். பிரியமானவர்களே, உங்களைக் கொண்டு பெரியதோர் விளைச்சலை தேவன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். கலப்பையின் மேல் நீங்கள் கைகளை வைக்கும்போது கர்த்தர் களிகூறுகின்றார். என்றாலும், உலகத்தின் ஆசைகள், இச்சைகள், இன்பங்கள், தேவைகள் என பின்னுக்கு இழுக்கும் சக்திகள், நமது கைகளைக் கலப்பையிலிருந்து எடுத்துவிடச் செய்யப் போதுமானவைகள்.

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை (மத் 21:28-30). கர்த்தர் உங்களுக்கென்று நியமித்த வேலையினைச் செய்யவிடாமல் தடுப்பதுதான் சத்துருவின் பணி. உங்கள் பயணத்தைத் தொடங்கும் முன்னதாகவே பதிவிருந்து உங்களை வீழ்திவிடக் காத்திருப்பவன் அவன். பயணத்தைத் தொடங்க இருப்பவர்களை பின்னிட்டுத் திரும்பச் செய்ய பல்வேறு காரியங்களை சத்துரு செய்வான். எனவே, கலப்பையில் கைவைத்திருப்பவர்களே கவனமாயிருங்கள், முன்னிட்டுப் பார்த்தால் நீங்கள் உழத் தொடங்குவீர்கள், பின்னிட்டுப் பார்த்தால் நீங்கள் விழத் தொடங்குவீர்கள்.

'அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்' (மத். 20:16) என்று இயேசுவே அறிவித்துவிட்டுச் சென்றார். அநேகராயிருந்த கூட்டம் சிலராக இருக்கும் கூட்டமாகச் சிறுகிப்போனதன் காரணம் என்ன? மீன்கள் முட்டையிட்டால், அவை அனைத்தும் குஞ்சுகளாக பொறிப்பதில்லை; அப்படியே குஞ்சுகள் சில முட்டைகளிலிருந்து வெளிவந்தாலும், எல்லாமே தொடர்ந்து நிலைப்பது இல்லை; ஆயிரக்கணக்கில் உருவாகும் முட்டைகளில் எஞ்சி நின்று மீன்களாக வளரும் குஞ்சுகள் சிலவைகளே.

விதைகளைப் பற்றிய உவமையும் நமக்கு விளக்கும் சத்தியம் இதுவே. சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. (மத் 13:8)

விதைகளைப் பற்றிய உவமையிலும், சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது (மாற் 4:8). பலன் தந்த விதைகளிலும்கூட இழப்பு காணப்பட்டது. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையாக இருந்தபோதிலும், அனைத்து விதைகளும் நூறாகப் பலன் தந்துவிடவில்லை. சில விதைகள் எழுபது விழுக்காடு இழப்புடன் முப்பது விழுக்காடு பலனைக் கொடுத்தது, சில விதைகள் நாற்பது விழுக்காடு இழப்புடன் அறுபது விழுக்காடு பலனைத் தந்தது. நல்ல நிலத்தில் வேரூன்றி நின்றபோதிலும் எல்லா விதைகளும் நூறாக பலன் தந்துவிடவில்லை. சில விதைகளே நூறு விழுக்காடு பலனைக் கொடுத்தது. விளைத்தவர் என்ன எதிர்பார்ப்புடன் விதைத்தாரோ, அந்த பலனை அப்படியே கொடுத்தது.

இந்த விதைகளைப் பற்றிய உவமைகள் நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் இன்றும் நமது வாழ்க்கையில் பலனைக் கூட்டிக் கொடுக்க போதுமானவைகள். அழைக்கப்பட்ட அநேகர், பலனைக் கொடுத்தாலும், நூறு மடங்கு பலனைக் கொடுப்பதில்லை. முப்பது மடங்கு கொடுப்பதற்குள்ளேயே அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகின்றது, அறுபது மடங்கு கொடுப்பதற்குள்ளாகவே அவர்களது ஜீவன் அழிந்துவிடுகின்றது. கர்த்தருக்காகச் செய்யும் சின்னச் சின்ன காரியங்களில் திருப்தியாகி, தங்கள் வாழ்க்கையைக் குறித்து தேவனால் திட்டமிடப்பட்டிருக்கும் பெரியதோர் மகசூலை மனதில் கொள்ளாமல் மரித்துப்போகும் மனிதர்களாக நாம் காணப்படக்கூடாது. நம்முடைய வாழ்க்கையின் முடிவில் நாம் எட்டிப்பிடித்திருக்கவேண்டிய இலக்கு என்ன? 'எல்லாம் முடிந்தது' என்ற வார்த்தையே முழுமையான வெற்றிக்கான தொனியின் அடையாளம். ஆற்றின்; அக்கரைக்குச் செல்லவேண்டும் என்று அனுப்பப்பட்ட ஓர் மனிதன், ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்கி, பாதி தூரம் வரைச் சென்றுவிட்டுத் திரும்பினாலோ, ஆற்றின் பாதி தூரத்திலேயே அவனது வாழ்க்கை முடிந்துவிட்டாலோ அது முயற்சிதானே ஒழிய முடிவு அல்ல. தேர்வில் 30 மதிப்பெண்களைப் பெற்ற மகனிடம் எழுபது மதிப்பெண்களை இழந்ததற்கான காரணத்தை தந்தை கேட்பாரல்லவா? முப்பத்தைந்து மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றுவிட்டேன் என்ற களிப்ப ஒருபுறம் இருந்தாலும், இழந்துபோன அறுபத்தைந்து மதிப்பெண்களை மறந்துவிடக்கூடுமோ.

ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி 26:12).
நீங்கள் கொடுப்பதை மட்டும் வாங்கிக்கொள்ளும் அளவிற்கு அல்ல, தான் எதிர்பார்த்ததை உங்களில் வாங்கிக்கொள்ளும் அளவிற்கு தேவன் உங்களைத் தொடருகிறவர் என்பதை மறந்துவிடவேண்டாம்.

அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான் (மத் 25:14-18). ஐந்துக்கு ஐந்து, இரண்டுக்கு இரண்டு என நூறு மடங்கு பலன் உண்டாயிருந்தது.

நம்முடைய வாழ்க்கையில் தேவன் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்க நம்மை அர்ப்பணிப்போம்; அதுவே அவருக்கு நாம் செய்யும் பதில்.