சரியும் சரித்திரம்

 

'சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்' என்ற வழக்குச் சொல்லால் வாழக் கற்றுக்கொடுப்பவர்களும், வாழக் கற்றுக்கொண்டவர்களும் உண்டு. சரீரத்தில் வியாதி வந்துவிட்டால் நாம் குணமடைய விறுவிறுப்பாகச் செயல்பட்டு, சரீரத்தை விட்டு அதனைத் துரத்தியடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். எத்தனை மருத்துவமனைகளுக்கும் எத்தனை மருத்துவர்களிடத்திற்கும் செல்லவேண்டியது வந்தாலும், எவ்வளவாய் பணம் செலவழிக்கவேண்டிய நிர்ப்பந்தமான நிலை உருவானாலும் களைத்துவிடாமல் சளைத்துவிடாமல் நம்மால் முடிந்தவரை முயன்றுகொண்டேயிருக்கின்றோம். இது, சரீரத்தில் நுழைந்துவிட்ட வியாதி, உயிருக்கே உலை வைத்துவிடக்கூடாது என்ற பயத்தில் போராடும் போராட்டமே. உடலை விட்டு உயிர் பிரிந்துவிடக்கூடாது என்றும், உடலில் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றும் மனிதன் அனுதினமும் செய்யும் செயல்கள் கொஞ்சமல்ல.

நமது அவிக்குரிய வாழ்க்கையும் இதற்கு ஒத்ததாகவே பாதுகாக்கப்பட்டால், இம்மையில் கர்த்தர் நம்மைப் படைத்ததின் நோக்கத்தை நிறைவேற்றித் தீரும் வரை கறைபடாமல் நம்மைக் காத்துக்கொள்ளமுடியும். கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம் (எபே. 2:8); என்றாலும், இரட்சிப்பைக் காத்துக்கொள்ள விசுவாசத்திற்கேற்ற கிரியைகளைச் தொடர்ந்து செய்யாததினால், அன்று பெற்ற இரட்சிப்பிலிருந்து இன்றோ விலகி நின்றுகொண்டிருக்கின்றார்கள் அநேகர். ஆவிக்குரிய வாழ்க்கையின் ஓட்டத்தைத் தொடங்கியிருக்கும் நாம் நமக்குக் குறிக்கப்பட்டதை நிறைவேற்றி முடிக்கும்வரை, வழியில் இடறிவிடாதிருக்கும்படியாகவும், பாதையில் மரித்துப்போய்விடாதிருக்கும்படியாகவும் விழிகளை விரித்து வாழக் கற்றுக்கொள்வது அவசியம். காலேப் மற்றும் யோசுவா இவ்விருவரைத் தவிற, எகிப்திலிருந்து கானானுக்குப் புறப்பட்டவர்களின் சரீரங்கள் வனாந்தரத்திலேயே காணாமற்போயிற்றே. அடிமைத்தனத்தை விட்டு ஆனந்தமாய் புறப்பட்டார்கள், ஆனால், வழியிலோ கர்த்தரை சங்கடப்படுத்தினதால் சடலங்களானார்கள். விபச்சாரம், விக்கிரக ஆராதனை, தேவனுடைய விருப்பத்திற்கு எதிராக செயல்கள், தேவன் நியமித்த தலைவர்களை எதிர்த்தது, இச்சைகள், பின்னிட்டுத் திரும்பிய சிந்தைகள், வணங்கா கழுத்துடனான வாழ்க்கை மற்றும் கீழ்ப்படியாமை போன்றவைகள் அவர்கள் புதைக்கப்பட காரணங்களாயின. எகிப்திலிருந்து அழைக்கப்பட்டாலும், கர்த்தருக்கு எதிரான வாழ்வு வனாந்தரத்தில் நம்மை வீழ்த்திவிடும். 'நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய் தொடர்கிறேன்' (பிலி. 3:12) என்கிறார் பவுல். பிடித்துக்கொள்ளவேண்டியதைப் பிடிக்கும் வரை நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். பிடித்துக்கொள்ளவேண்டியது இன்னும் கொஞ்ச தூரத்திலிருக்கும்போது ஆவியில் மரித்துப்போய்விட்டால், ஆனந்தமாய் இன்பக் கானானை ஏகுவது என்பது ஏங்கினாலும் இயலாததாகிவிடும். இரட்சிப்பு என்பது ஓர் தொடக்கமே, வாழ்க்கை என்பதோ நித்தியத்தை நோக்கியதோர் தொடர்.

சிக்கியிருந்த சபை

சர்தை சபையின் தூதனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்Nதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து' (வெளி. 3:2) என்று எச்சரிப்பு விடுக்கப்பட்டது. சர்தை சபை தேவனுடையதாயிருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடனான உறவை அது இழந்துகொண்டேயிருந்தது. தேவனுடனான வாழ்க்கையை அழித்துவிடும் சாவுக்கேதுவான காரியங்கள் சபையில் கலந்துகொண்டிருந்தது; அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், தேவனையே அந்தச் சபை இழந்துவிடும் அபாயம் அருகிலிருந்தது. சர்தை சபையின் மக்கள் தேவனிடத்தில் அநேக காரியங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டவர்கள்; எனினும், பெற்றுக்கொண்டதற்கு ஏற்ற கிரியைகளை அவர்கள் நிறைவாகச் செய்யவில்லை. அதன் கிரியைககள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாகக் காணப்படவில்லை (வெளி. 3:2). அத்துடன், 'தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு' (வெளி. 3:4) என்று சொல்லப்படுவதனால், வஸ்திரங்களை அசுசிப்படுத்தியிருந்த ஜனங்கள் சர்தையில் இருந்தார்கள் என்பதும் தெளிவாகிறது. இவைகளே சபையை இறப்பை நோக்கி இழுத்துச் சென்றுகொண்டிருந்தன. வஸ்திரங்களை அழுக்காக்கிக்கொண்டவர்களாக, தேவனுடைய சபை என்ற போர்வைக்குள் வாழந்துகொண்டிருந்த அச்சபையைக் குறித்தே, 'நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்' (வெளி. 3:1) என்ற தரச் சான்றிதழ் கொடுக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இந்த தரச் சான்றுக்குத் தகுதியுள்ளோராகவா வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்? உயிருள்ளவர்கள் என்று பெயர் கொண்டிருக்கும் அவர்களுக்குள் உலாவும் செத்த கிரியைகள், உயிரில்லாத (கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத) உலகத்தார் செய்யும் கிரியைகளுக்கு ஒத்திருக்கின்றதே. எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன் (பிலி 3:7,8) என்றார் பவுல். தகுதியானவைகளைக் கூட தள்ளிவிடுமளவிற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவர் அவர். ஆனால், இன்றோ, தள்ளிவிடப்படவேண்டியவைகளை 'தகுதியுள்ளது' என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கையுடன் வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் உண்டல்லவோ. 'பரவாயில்லை' என்று சொல்லி சத்தியத்திற்கு எதிராக மனதை சாந்தப்படுத்திக்கொள்ளும் காரியங்கள்; பரலோகத்தில் இல்லை.

பிரியமானவர்களே, ஒருபுறம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கும்படியாக பல்வேறு கோணங்களில் சத்துரு அம்புகளை எய்துகொண்டேயிருக்கிறான்; மற்றொருபுறம், பெலனில்லாதவர்கள் சத்துருவின் அம்பின் மேல் தாங்களே விழுந்து உயிரை விட்டுக்கொண்டிருக்கின்றனர். உங்கள் வாழ்க்கை விழுந்துகிடக்கும் இடத்தை ஆராய்ந்து பாருங்கள். விழுந்துபோன சவுலை யுத்தத்தில் பெலிஸ்தியர்கள் நெருக்கியபோது, வில்வீரர்கள் அவனைக் காயப்படுத்தினார்கள் (1சாமு. 31:3). அவர்களை எதிர்த்து நிற்கும் பலத்தை சவுல் இழந்து நின்றான். வேதனையின் மிகுதியினால், பட்டயத்தை நட்டி அதின் மேல் விழுந்து மடிந்தான் (1சாமு. 31:4). லேகியோன் பிடித்திருந்த மனிதனைப் போல ஜனங்களின் கைகளைக் கொண்டே ஜனங்களைக் காயப்படுத்தி கல்லறைக்கு அனுப்புவதுதானே சத்துருவின் திட்டம், ஆவிக்குரிய வாழ்க்கையின் வலுவிழப்பவர்கள் இந்த வலையில் விழுந்து கிடப்பார்கள். தூரத்தில் நிறுத்தப்படவேண்டியதும், துரத்தப்படவேண்டியதும் உங்கள் வாழ்க்கையின் எந்த மூலையிலும் இடம் பிடித்துவிடவேண்டாம், அது உங்கள் ஆத்துமாவுக்கு ஆபத்து. ஆவிக்குரிய பெலத்தை இழந்து நிற்கும் மனிதனே, பாவம் படையெடுத்து வந்தால் அது உன்னை பாடையில் ஏற்றிவிடும். தேவையற்றவைகளைச் செய்து நம்முடைய ஆவிக்குரிய உயிரை நாமே மாய்த்துக்கொள்ளக்கூடாது.

நமது உயிரைக் காத்துக்கொள்ளவும் பெலப்படுத்திக்கொள்ளவும் நாம் அன்றாடம் செய்துகொண்டேயிருக்கவேண்டிய காரியங்களை விட்டு விடுவதால் ஆவிக்குரிய மரணத்தில் அகப்பட்டுவிடுகின்றோம். ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அஸ்திபாரமாயிருக்கிறவைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வாழத் தொடங்கும் மனிதர்களை இந்த ஆலோசனை திசை திருப்பட்டும். வேதவாசிப்பை கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போடுகிறீர்களா? ஜெபிக்கும் நேரத்தை தவறவிடுகிறீர்களா? ஆலயத்திற்குச் செல்லவேண்டியதை விட்டுவிடுகிறீர்களா? மேலும், தொடக்கத்திலிருந்த ஆவிக்குரிய வேகம், உற்சாகம், உண்மை, உழைப்பு, ஊழியம் என்று ஏறிக்கொண்டிருந்த ஏணியிலிருந்து இறங்கியிருக்கிறீர்களா? உலக உல்லாசம், சினிமா, தொலைக்காட்சித் தொடர் இவைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து, ஆவிக்குரிய அஸ்திபாரத்தை நீங்களே அசைத்துக்கொண்டிருக்கிறீர்களா? நண்பர்களுடனான உறவில் தேவனை விட்டுத் தூரம் போய்க்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் சாகிறதற்கேதுவானவைகளை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது ஆவிக்குரிய வாழ்க்கையினை எதிர்க்கும் உயிர்க் கொல்லிகளைக் கண்டுபிடித்து வெளிச்சம் விலகிவிடும், இரவு விடியாமல் வாழ்வே இருளாகிவிடும். ஆவியில் ஆரம்பம்பமான உங்கள் வாழ்க்கை, புத்தியீனமான செயல்களினால் மாம்சத்தில் முடிவு பெறும்.

பிரியமானவர்களே, ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடங்கும்போது, அவருக்காக செயல்படவேண்டும், எதையாவது செய்துவிடவேண்டும் என்ற வாஞ்சையில் வாழ்க்கையைக் கூட மறந்து வரங்களைக் கேட்கிறோம். பாடுவதற்கு, பிரசங்கிப்பதற்கு, சுவிசேஷம் அறிவிப்பதற்கு என தாலந்துகளைக் கேட்டுப் பெறுகின்றோம். எனினும், அவகளைக் கொண்டு தேவனுடைய பார்வையில் நிறைவாகச் செயலாற்றிக்கொண்டிருக்கிறோமா? நீங்கள் தேவனிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொண்டது எது? இரட்சிப்பின் வஸ்திரங்களை அடிக்கடி அழுக்காக்கிக்கொண்டேயிருந்தால் கேட்டுப் பெற்றுக்கொண்டதுகூட சிந்தையை விட்டு அழிக்கப்பட்டிருக்கும். ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய் (வெளி 3:3) என்ற இறுதி கட்ட எச்சரிப்பு விடுக்கப்படுகின்றது. 'மனந்திரும்பு' என்ற எச்சரிப்புக்குக் கீழ்ப்படிய மறுப்போமென்றால், 'திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்' என்ற தீர்ப்பில் சிக்கிக்கொள்ளுவோம். திருடனைப்போல அவர் வரும்போது, நம்முடைய வாழ்க்கையில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம், நமக்குக் கொடுத்த தாலந்துகளை மற்றும் திறமைகளை அவர் எடுத்துக்கொள்ளலாம்; நமது ஜீவனையே எடுத்துக்கொள்ளலாம், நம்முடைய ஊழியம் பறிக்கப்படலாம், நம்மோடு உடனிருந்தவர்களை அவர் கலைத்துவிடலாம். திருடனைப்போல அவர் வரும்போது உங்களிடம் அவர் கொடுத்து வைத்திருந்த காரியங்களை உரிமையுடன் திரும்ப எடுத்துக்கொள்ளுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும் (சங் 104:28,29) என்ற நிலைதான் நமக்கும் உண்டாகும். ஒரு காலத்தில் பிரபலமானவைகளை கர்த்தருக்காகச் செய்து, தற்போது பிசாசின் கிரியைகளுக்கு உடன்பட்டு பலர் வாழ்வதற்கான காரணம் இதுவே. சாகிறதற்கேதுவானவைகளைக் கண்டுகொள்ளாமலிருந்ததால், அவர்கள் செத்தேவிட்டார்கள்.

சிக்கவைத்த சிநேகிதி

கர்த்தருக்காக பெலசாலியாக உருவாக்கப்பட்டவன் சிம்சோன். எனினும், அவன் தன் வாழ்க்கைப் பயணத்தின்போது காசாவுக்குப் போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான் (நியா. 16:1). தொடர்ந்து, தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே அவன் சிநேகமாயிருந்தான் (நியா. 16:4); அவளுக்கோ, பெலிஸ்தியரோடு கூட தொடர்பு இருந்தது. பெலிஸ்தியர்களோடு தொடர்பில் இருக்கும் ஒரு ஸ்திரீயுடன் சிம்சோன் தொடர்ந்து இருந்ததால், அவள் அவனை பெலிஸ்தியர்களிடத்தில் பிடித்துக்கொடுத்;தாள். பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள் (நியா 16:18). பிரியமானவர்களே, தேவனை அறியாமல், இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், இரட்சிக்கப்படாமல் வாழும் மக்கள், உங்களை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. சினிமாவோடு தொடர்புடைய ஒரு சகோதரனோடு நீ சிநேகமாயிருந்தால், அவன் உன்னையும் சினிமாவுக்கு இழுக்க முற்படுவான்; பெண்களுக்குப் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்கும் வாலிபர்களோடு நீங்கள் சிநேகமாயிருந்தால், உன்னையும் அப்படியே அவன் மாற்றிவிடுவான். வீண் வார்த்தைகள் பேசி அலப்பிக்கொண்டிருப்போருடனும், பிறரைக் குறித்து குறை பேசியே தங்கள் காலத்தைக் கடத்திக்கொண்டிருப்போருடனும் நீங்கள் சிநேகமாயிருந்தால் நீங்களும் பிடிக்கப்படுவீர்கள், போதைக்கு அடிமைப்பட்டிருக்கும் நண்பர்களுடனான சிநேகம் உன்னையும் போதைக்கு அடிமையாக்கிவிடும். ';ழற ஆந லுழரச குசநைனௌ யனெ ஐ'டட வுநடட லுழர றூழ லுழர யுசந' என்ற வாக்கியத்தினை மறந்துவிடவேண்டாம். தேவனின் பக்கத்தில் நிற்பதை நீங்கள் காத்துக்கொண்டால் மாத்திரமே உங்கள் பெலத்தால் உங்களைக் காத்துக்கொள்ள முடியும். உங்களது வாழ்க்கைக்கு விரோதமாக சத்துருவினிடத்திலிருந்து வெள்ளிக் காசை வாங்கி வைத்திருக்கும் நபர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், அவர்களிடமிருந்து அகன்று வாழுங்கள்.

சிக்கவைத்த சிநேகிதன்

இஸ்ரவேலின் ராஜா, யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான் (1இரா 22:4). கர்த்தரை விட்டு விலகி வாழ்ந்துகொண்டிருந்த இஸ்ரவேலின் ராஜாவோடு யுத்தத்திற்கு ஆயத்தமானான் யூதாவின் ராஜா யோசபாத். பொய்யான தீர்க்கதரிசிகள் தவறாகத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள் என்று தெரிந்தபோதிலும், உண்மையைச்; சொன்ன தீர்க்கதரிசியாகிய மிகாயாவை சிறையில் வைத்துவிட்டு, இஸ்ரவேலின் ராஜாவுடன் யுத்தத்திற்குப் புறப்பட்டான் யோசபாத். யுத்தத்திற்கு அழைத்த இஸ்ரவேலின் ராஜா மாறுவேஷமிட்டு, உடன் வந்த யோசபாத்தை மாட்டிக்கொள்ளச் செய்தான். இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்ததம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்துவந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான் (1இரா 22:32). அவன் கூக்குரலிடும் நேரத்தில், ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது (1இராஜா. 22:34). யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான். அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது (2நாளா 19:2) என்று சொன்னான்.

இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்ததும் (1இரா. 22:30), சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடே மாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்ததும் (1இரா. 22:31), யோசபாத்தின் உயிருக்கு உலை வைக்கும் ஒருமித்த சத்துருவின் முயற்சி என்பதை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றதா?

சிநேகிதனின் வஞ்சகத்தினை அறியாமல், வழிமாறிச் சென்றாலும், சத்துரு நெருங்கும்போதாவது அடையாளம் கண்டுகொண்டு கர்த்தரை நோக்கி அபயமிடுங்கள்.அவர் நம்மைக் காப்பது நிச்சயம். சிநேதிதனைப் போல உடன் இருந்துகொண்டு, உன்னைக் கொல்லவிருக்கும் பெரிய கோலியாத்தை கர்த்தர் வீழ்த்துவார்; என்றாலும், அவரையே சார்ந்திருந்தால் மாத்திரமே அதுவும் சாத்தியமாகும். சிக்கும் நேரத்தில் கூக்குரலிட்டால், அம்பு சிக்கவைத்தவனுடைய நெற்றியில் பாயும். உங்களுக்கு கோலியாத் யார்? மரணத்தருவாயில் முடியாத நிலையிலும், சமாளித்துக்கொண்டு எழுந்து அமர்ந்த எனது தந்தை, ஒரு சில ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்; அப்போது, 'நல்லவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்களுக்குள்ளும் கெட்டவர்கள் இருப்பார்கள், பார்த்து நடந்துக்குங்க' என்று தெளிவாக ஓர் ஆலோசனையைச் சொன்னார்; அவரது வாயிலிருந்து நான் கேட்ட கடைசி வார்த்தையும் இதுதான். நம்முடைய சரித்திரம் சரியாதிருக்கட்டும்.