சகோதரர்கள் யார்?

 

__________________
September 8 [Friday]

 

எனக்காகவே வாழ்கிறேன் என்போரது உலக வாழ்க்கை மணக்காது. யாருக்காக? என்பதை அறிந்துகொண்டு ஆவிக்குரிய போருக்காக ஆயத்தமாவோரையே ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.

மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு... (யாத் 2:11)

சகோதரரிடத்தில் போய் ... :

ஆளுகிறவர்களோடு அல்ல அடிமையான சகோதரர்களுடனேயே தன்னை அடையாளம் காட்டினான் மோசே. சகோதரர்களுக்குத் தன்னை மறைத்துக்கொண்டு, அடுத்தவர்களுக்கு முன் அரசனைப் போல காட்டிக்கொள்ளும் மனநிலைக்கு சத்துரு நம்மைத் தள்ளிவிடக்கூடாது. உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறது அல்லவோ எனக்கு உகந்த உபவாசம் (ஏசா 58:7). தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோவா 4:20).

தேவனை நாம் எப்படி நேசிக்கிறோம் என்பதை சகோதரர்கள் மீது நாம் வைக்கும் நேசம் சொல்லிவிடும். நான் பசியாயிருந்தேன், தாகமாயிருந்தேன், அந்நியனாயிருந்தேன், வஸ்திரமில்லாதிருந்தேன், வியாதியாயிருந்தேன், காவலிலிருந்தேன் (மத். 25:35,36) என்று சொல்லும் சகோதரர்களைக் காணாமல், ஆண்டவர் என்னை ஒரு குறைவின்றி நல்ல வீடு, உணவு, உடையுடன் சுகமாயிருக்கப்பண்ணியிருக்கிறார் என்பது சாட்சியல்ல, அத்தகைய அரண்மனையிலிருந்து அடிமைத்தனத்திலிருக்கும் சகோதரர்களைத் தேடிச் செல்லாவிட்டால், உங்கள் செல்வங்கள் அனைத்தும் காட்சிப்பொருட்களே.

எகிப்திய அரண்மனையில் மோசே வளர்ந்தாலும், எகிப்தியனாக வளரவில்லை. தானே அவனுக்குத் தாய் என்பதையும், அடிமையாயிருப்பவர்கள் நம் சகோதரர்களே என்பதையும் தனக்குக் கிடைக்கும் கொஞ்ச காலத்திலே, பாலூட்டும்போதே தாய் சேர்த்து ஊட்டியிருந்தாள்.

நம்முடைய வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும், இப்படிப்பட்ட போதனை கொடுக்கப்பட்டால், ஆத்தும ஆதாயம் தீவிரமாகும். எகிப்திய கலைகளில் மாத்திரம் பிள்ளைகளைத் தீவிரமாக்கிவிட்டு, அடிமைத்தனத்திலிருப்பவர்களை காணாதபடி பிள்ளைகளின் கண்களைக் குருடாக்கிவிடக்கூடாது. எகிப்திய அரண்மனையில் இருப்பதைப் போன்று, இவ்வுலக வாழ்க்கையில் சுகமாக இருப்பதற்கு அல்ல, சகோதரர்களைத் தேடிச்செல்லவேண்டிய பொறுப்பு பிள்ளைகளின் மனதில் புகுத்தப்படவேண்டும்.

மருத்துவர், எஞ்சினியர் போன்ற பல்வேறு கலைகளைக் கற்றுக்கொடுத்து, எப்படியாகிலும் எகிப்தில் அவர்களை உயர்த்திவிட நினைக்கிறோம்; அடிமைத்தனத்திலிருக்கும் சகோதரர்களைச் சந்திப்பது என்பதும் சொல்லிக்கொடுக்கப்படவேண்டும்.

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் (சங் 127:3). எகிப்திய அரண்மனையை சுதந்தரிக்க அல்ல அடிமைத்தனத்திலிருப்போரை சுதந்தரித்துக்கொள்ளவே கர்த்தரால் வரும் சுதந்தரம் நமது மடிகளில் தரப்படுகின்றது.

பிள்ளைகள் கர்த்தரால் நமக்குக் கிடைக்கும் பலனாக இவ்வுலகில் நமது கண்களுக்குத் தெரிந்தாலும், நமக்குக் கிடைத்த பிள்ளைகளால் பரலோகத்திற்கும் பலன் கிடைக்கவேண்டும். ஆண்டவர் தந்ததைக் கேட்கும்போது, ஒரு தாலந்தை வாங்கினவன் நிலத்தில் புதைத்துவிட்டு நின்றதுபோலத்தான் (மத். 25:18), இந்த உலகத்தில் நமது பிள்ளைகளைப் புதைத்துவிட்டு நின்றுகொண்டிருப்போம்.

சகோதரர்கள் அறியமுடியாதபோதிலும், தேவனால் நடத்தப்பட்ட யோசேப்பு தன் சகோதரர்களை அறிந்துகொண்டான் (ஆதி. 42:7,8). நம்முடைய பிள்ளைகளை இந்த அறிவோடு உலகத்திற்குள் அனுப்புவோம். நாணற்பெட்டியில், நாணலுக்குள் மோசே வைக்கப்பட்டதைப் போல, மணற்பெட்டியில் மணலிலேயே பிள்ளைகளை நாம் வைத்திருக்கிறோம். பார்வோன் எடுத்துக்கொண்டாலும், பாலூட்டும் வாய்ப்போ நமக்குக் கிடைத்திருக்கிறது. இரட்சிக்கப்பட்டவர்களையே 'Brothers' என்று கூப்பிட்டு, மற்றவர்களை 'பிறதர்ஸ்' ஆக்கிவிடவேண்டாம்.
________
+919994303363
KIRUBAGARAN
www.youthline.in