சத்துருவின் பிரித்தாளும் தந்திரம்

 

__________________
September 11 [Monday]

 

நம்மைக் குறித்த தேவ சித்தத்தை அறிந்துகொள்வதுடன், நம்முடன் இணைந்து நிற்கும் மனிதர்களின் மீதான தேவ சித்தத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிலருக்கு, ஊழியர்களைக் குறித்த அறிவு உண்டு; ஆனால், தங்களைக் குறித்த அறிவு இல்லை; வேறு சிலருக்கோ, தங்களைப் பற்றிய அறிவு மட்டுமே உண்டு; ஆனால், மற்றவர்களைப் பற்றிய அறிவு இல்லை. இதனாலேயே, குழுவாகப் பயணிக்கவேண்டியவர்கள் பலர், ஆங்காங்கே தனித்தனியே சிறு சிறு புழுக்களாக நின்றுகொண்டிருக்கின்றனர். தன்மீதான நோக்கத்தையோ அல்லது பிறர்மீதான தேவ நோக்கத்தையோ புரிந்துகொள்ளாதோர் பிறரைப் பிறனாகவே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கும் திட்டத்துடன் எகிப்துக்குள் அனுப்பப்பட்ட மோசே தன்மீதான திட்டத்தை அறிந்துகொள்ளவில்லை, அவன் மீதான திட்டத்தை இஸ்ரவேல் மக்களும் புரிந்துகொள்ளவில்லை; எனினும் புரிந்துகொண்ட சத்துருவோ இருவரும் பிரிந்துபோவதற்கான வேலையைச் செய்யும்படி அவர்களைத் தூண்டிவிட்டுவிட்டான்.

உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி இஸ்ரவேல் ஜனங்கள் மறுதலித்த மோசேயையே கர்த்தர் தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார் (அப் 7:35). மீட்பிற்காக வந்தவனை மறுதலித்ததால், விடுதலயின் வருடம் தள்ளிப்போனது, அடிமைத்தனத்தின் ஆண்டுகளோ கூடிப்போனது.

இன்றும் பாவத்திலிருக்கும் மனிதர்களிடமிருந்து ஊழியர்களைப் பிரிக்கவும், அவர்களுடனான உறவை முறிக்கவும் சத்துரு கையாளும் இத்தகைய தந்திரங்களை நாம் அடையாளம் கண்டுகொண்டு, அவைகளில் அகப்பட்டுக்கொள்ளாதபடி காத்துக்கொள்ளவேண்டும்.நாம் ஒதுக்கித் தள்ளுகின்ற மனிதர்களால், கர்த்தருடைய திட்டமும் நம்மை விட்டு ஒதுங்கிப் போய்விடக்கூடும்.

மோசேயைத் கொலைசெய்யத் தேடிய பார்வோன் (யாத். 2:15) மரித்துப்போனபோதிலும், உடைந்துபோயிருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கும் மோசேக்கும் இடையிலான உறவை சரிசெய்வதுதான், மீட்பிற்கான முதற்பணியாயிருந்தது.
அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான் மோசே (யாத் 4:1). மோசேயின் கையும், கையிலிருந்த கோலும் (யாத். 4:6,2) முதலாவது எகிப்திற்காக அல்ல, இஸ்ரவேலருக்காகவே அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது.

யோசேப்பின் வாழ்க்கையிலும் இதற்கொத்த நிகழ்வு நடைபெற்றது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் யோசேப்பை தேவன் தெரிந்துகொண்டார், என்றபோதிலும் அவனது சகோதரர்களால் அவனைப் புரிந்துகொள்ளமுடியவில்லை, நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள் (ஆதி 37:8). எந்த யோசேப்பை பகைத்தார்களோ, அவனைத்தான் அவர்களை இரட்சிப்பதற்குப் பயன்படுத்தினார் கர்த்தர். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார் (ஆதி 45:5) என்று உறவை சீர்படுத்திக்கொண்டான் யோசேப்பு.

பாவிகளை இரட்சிப்பதற்காக இந்த உலகத்திற்கு வந்தார் இயேசு. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11). எனினும், வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று (சங் 118:22). சிலுவையில் அறையப்பட்ட இயேசு சிந்திய இரத்தத்தினாலேயே மனுக்குலத்திற்கு இன்றும் பாவத்திலிருந்து இரட்சிப்பு கிடைத்துக்கொண்டிருக்கிறது. இயேசுவை இந்த உலகத்தை விட்டு விரட்டிவிட்டார்கள்; ஆனால், இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள் பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென் (வெளி 1:7).

நாம் ஊழியம் செய்யும் இடங்களில், மக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் சத்துரு உருவாக்கும் பிளவுகளை அடையாளம் கண்டுகொள்வோம். துரத்தப்படலாம், விற்கப்படலாம் அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்டதைப்போல நாமும் பாடுகைளச் சந்திக்க நேரிடலாம் என்றாலும் நமது வாழ்வு ஜனத்தை விடுவிக்கட்டும்.

________
+919994303363
KIRUBAGARAN
www.youthline.in


 


titles