சத்துரு போதிக்கும் சத்தியம்

 

ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.(மத் 23:3)

கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் நம்முடைய வார்த்தைகளைக் குறித்தும், வாழ்க்கையைக் குறித்தும் கவனமாயிருக்கவேண்டும். வார்த்தையும் வாழ்க்கையும் வேறுபடுமாயின், கர்த்தரின் பார்வைக்கு நாம் மாறுபாடுள்ளவர்களாகவே காணப்படுவோம். வல்லமையாய் பிரசங்கிக்கும் ஊழியர்கள் பலரிடமிருந்து வாழ்க்கையைத் திருடிக்கொள்கிறான் சத்துரு. சத்தியங்களைச் சத்தமாய் பிரசங்கிக்கும் பிரசங்கியார்கள் பலரின் வாழ்க்கையோ சத்துருவுக்கு சாதகமாயிருக்கின்றது. இப்படிப்பட்டோரைக் குறித்தே, இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா? எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:21-24) என்று பவுல் எழுதுகின்றார். ஆலயத்தில் பணிசெய்யும் ஊழியர்கள் ஆலயத்திலேயே திருடுகின்றனர், ஊழியம் செய்வோர் ஊழியப் பணத்தைக் கொள்ளையிடுகின்றனர். சத்துருவினால் அவர்கள் வஞ்சிக்கப்பட்டதே அவர்கள் வாழ்க்கை வீழ்ந்துபோனதற்குக் காரணம். நம்முடைய வார்த்தை பிரசங்க பீடத்தில் மட்டும் காணப்படலாம், ஆனால் வாழ்க்கையோ நாம் நிற்கும், நடக்கும், உட்காரும், பயணம் செய்யும், பணி செய்யும் அனைத்து இடங்களிலும் காணப்படக்கூடியது.

பேருந்து ஒன்றிலே குழந்தையைக் கையில் தூக்கியவாறு பயணித்துக்கொண்டிருந்தார் விசுவாசி ஒருவர். சற்று தூரம் பேருந்து சென்றதும், இருக்கையில் இருந்த ஒரு பயணி இறங்க, அந்த இருக்கையில் சென்று குழந்தையுடன் அமர்ந்தார் அந்த விசுவாசி. அந்த இருக்கையில் இருந்த மனிதரைப் பார்த்து, ஐயா, சற்று ஒதுங்கி இருங்கள், எனது குழந்தையையும் உட்காரவைத்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அதனைக் கேட்டதும், அந்த இருக்கையில் இருந்த அந்த மனிதர், கோபத்துடன் உனது குழந்தையை உன் மடியிலேயே வைத்துக்கொள் என்று பதல் கொடுத்தார். வேறு வழியில்லாமல், தனது குழந்தையை மடியில் வைத்தவாறு பயணித்தார் அந்த விசுவாசி. அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று, அந்த விசுவாசியின் ஆலயத்திற்கு, செய்தி கொடுப்பதற்காக ஒரு ஊழியர் வருகிறார் என்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆராதனை தொடங்கியது, அன்று கோபத்துடன் பேருந்தில் பேசியவர் பிரசங்க பீடத்திற்கு வெள்ளை நிற ஆடையுடன் வந்தார்; செய்தியும் அளித்தார். ஆலய ஆராதனை முடிந்ததும், அந்த விசுவாசி கையில் குழந்தையுடன் செய்திகொடுத்தவரைச் சென்று சந்தித்தார். ஐயா வணக்கம்; என்னை ஞாபகமிருக்கிறதா? என்று கேட்டார்; எங்கோ பார்த்தது போன்று விழித்தார் செய்தியாளர். ஒரு முறை பேருந்தில் உங்களுடன் பயணித்திருக்கிறேன் என்றார் அந்த விசுவாசி. அவ்வளவுதான், அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட செய்தியாளருக்கு நேரம் பிடித்தது.

இப்படித்தான் நாமும் பல நேரங்களில் சிக்கிக்கொள்கிறோம். வேறுபாடாய், மாறுபாடாய் நமது வாழ்க்கை காணப்படுவதால், நமது வார்த்தை மதிக்கப்படாமற் போகின்றது. சத்தியத்தை நாம் பிரசங்கித்தாலும், வாழ்க்கையில் பலருக்கு எதிரியாய் இருப்பதினால், அந்த சத்தியத்தை ஜனங்கள் கேட்டாலும், நம்மிடமே வீசிவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.

ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும் (லூக் 10:5,6) என்று சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார் இயேசு. ஆனால், சில நேரங்களில், ஊழியர்களுடைய வாழ்க்கை அவர்கள் போதகத்திற்கு மாறுபாடாய் இருப்பதினாலும், அவர்கள் போதித்த போதனைகளை திரும்ப ஊழியர்களிடமே கொடுத்துவிடுகின்றனர் ஜனங்கள். அவர்களுடைய வாழ்க்கையினிமித்தம் வசனம் ஏற்றுக்கொள்ளப்படாமற்போகின்றது. ஊழியர்களின் வாழ்க்கையின் மேல் உள்ள எரிச்சலினால், அவர்கள் போதகத்தையும் தள்ளும் நிலை உண்டாகிவிடுகின்றது. சரியாக அவர்கள் போதித்தாலும், எதிரியாகவே ஜனங்கள் பார்க்கத் தொடங்குகின்றனர். சமாதான பாத்திரன் இல்லாதிருந்தால், கூறின சமாதானம் திரும்பி வருவது போல, வசனத்திற்கொத்த வாழ்க்கை இல்லாதிருந்தால் நாம் பிரசங்கிக்கும் பிரசங்கமும் நமது மடிக்கே திரும்பி வரும். கர்த்தருக்கு விரோதமான வாழ்க்கை வாழ்ந்து, கர்த்தருடைய வசனத்தையே போதிக்கும் மாய்மாலக்காரர்களாக நாம் காணப்படக்கூடாது.

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் (1கொரி 9:27) என்றார் பவுல். இன்றைய நாட்களில் ஊழியர் பலர் மற்றவர்கள் தங்கள் சரீரங்களை ஒடுக்குவதைக் குறித்துப் பேசுகின்றனர். ஆனால், தாங்கள் தங்கள் சரீரத்தை ஒடுக்கவோ மறந்துவிடுகின்றனர். எனவே இயேசு, நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள் (மத் 23:4) என்று கூறுகின்றார். மேலும், குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள் (மத் 23:26-28) என்றும் இயேசு எச்சரித்தார். 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்ற பழமொழியின் படி, நாம் பிரசங்கம் செய்வதற்கு முன்பே நம்முடைய வாழ்க்கை ஜனங்களை விழத்தள்ளுமென்றால், நாம் நீதிமான்களாகக் காணப்படுவது எப்படி?