எதிரியை அறிவிக்கும் உளவாளி

 

ஒவ்வொரு நாளும் ஆபத்தினின்று நாம் தப்பும்படியாகவும், ஆபத்திலிருப்போரைத் தப்புவிக்கும்படியாகவும் தேவன் அனுப்பும் செய்தியினை அறிந்து நடப்போராயும், அறிவித்துக்கொண்டிருப்போராயும் நாம் வாழவேண்டும். எத்தனையோ மக்களை, தீமையில் சிக்கிக்கிடப்போரை, சத்துருவின் தீயில் கருகிக்கொண்டிருப்போரை கர்த்தரிடம் கொண்டுவரும் பெரும் பணி இன்று நம்முடைய கரத்திலே. இதனை உணர்ந்தோர் உள்ளத்திலே அது தொடர்ந்து தொனித்துக்கொண்டேயிருப்பதினால், அவர்கள் செயல்படாமல் இருப்பதில்லை, செயல்வீரர்களாகவே மாறிவிடுகின்றனர்; சத்துருவின் செயல்களை முறியடிக்கும்படி முன்னேறிச் செல்வோராயும் தங்களை மாற்றிக்கொள்கின்றனர். நமது ஆவிக்குரிய பாடம் இன்றும், என்றும், எப்பொழுதும் பரிசுத்த வேதத்திலேயே. அவர் எழுதிக்கொடுத்துள்ளதை கருத்தாய் கவனித்தால், சத்துருவின் கண்ணிகளுக்குத் தப்பிப் பிழைக்கலாம், மற்றோரையும் தப்புவிக்கலாம்; ஆயத்தமாவோம்.

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.(1பேது 5:8) சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.(2இரா 6:8)

சீரியாவின் இராஜாவுக்கும் தேவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்படியே இஸ்ரவேலின் இராஜாவும் தேவனை தேவன் என்று அறிந்திருந்தாலும், தெரிந்திருந்தாலும், அவரையே வணங்கிக்கொண்டிருந்தாலும், அவருக்காக வைராக்கியம் கொண்டிருந்தாலும், தேவனிடத்திலிருந்து நேடியாகச் செய்தியினைப் பெற்றுக்கொள்ளும் திறன் இல்லை. இந்நிலையிலே உருவாகின்ற ஆபத்து, அழித்துவிட வல்லமையுள்ளது. தேவன் தன் ஜனத்தைக் காக்கிறவர், எனவே தேவஜனத்திற்குள்ளே தன்னோடு உறவாடுகிற மனிதர்களைக் கொண்டு அவர்கள் உயிரைக் காக்கின்றார்.

சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ண, எங்கு பாளயமிறங்கலாம் என்று ஆலோசனை பண்ணிக்கொண்டிருந்தான். அந்த ஆலோசனையின்போது தேவன் உளவாளியாக இருந்தார் என்பதை சீரிய ராஜாவும், அவன் உடனிருந்தவர்களும் அறியாதிருந்தார்கள். சத்துருவின் திட்டங்களும், தீர்மானங்களும் தேவனுக்குத் தெரியாதவைகள் அல்லவே. யுத்தத்தின்போது சத்துவத்தைக் கொடுத்து எதிரியை முறியடிப்பது மட்டுமல்ல, சத்துரு நமக்கு விரோதமாக யுத்தத்திற்காக ஆலோசனை பண்ணும்போதே, அதனை நமக்கு அறிவிக்க தேவன் போதுமானவர். ஆனால், அதை அறிந்துகொள்ளும் அறிவு நமக்கு உண்டா? புரிந்துகொள்ளும் புத்தி இருக்கிறதா? தேவன் காண்பிப்பதைக் காணும் பிரகாசமுள்ள மனக்கண்கள் நமக்கு வேண்டும் (எபே 1:19).

இல்லையெனில், நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருவின் பிரயத்தனங்களை, தேவன் அறிந்திருந்தும், நமக்கு அதனை அறிவிக்க முயற்சித்தும், அதனை அறிந்துகொள்ளும் அவரது சமூகத்தினின்று நாம் விலகி நிற்போமெனில், தேவனே அறிந்திருந்தாலும் ஆபத்தில் நாம் அகப்பட்டுக்கொள்ளுவோம். நான்தான் கிறிஸ்தவனாயிற்றே, கிறிஸ்தவ பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவனாயிற்றே, கிறிஸ்தவர்களின் முறைகளைப் பின்பற்றுகிறவனாயிற்றே, கிறிஸ்துவுக்காக கொடுக்கிறவனாயிற்றே என்ற நினைவுடன் இருந்துகொண்டு, அவருடனான உறவினை உதறித்தள்ளிவிடமுடியாது. அவருடனான தனிப்பட்ட உறவு ஒவ்வொருவருக்கும் தேவை.

தேவனுடனான தனிப்பட்ட உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள், அவரை அண்டியுள்ள மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தேவனைக் காட்டிலும், மத்தியஸ்தர்கள் பெரிதானவர்கள் அல்ல.

சத்துருவின் ஆலோசனையைக் கேட்டுச் சொல்ல தேவன் ஆயத்தம், ஆனால் தேவனின் சத்தத்தைக் கேட்க நீ ஆயத்தமா? தேவன் நம்மோடு மாத்திரமல்ல, எதிரியின் கூட்டத்திலும் உளவாளியாக இருக்கிறார். ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார் (மத் 18:20). ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். (2இரா 6:9,10) ஒரு நாள் கூட எலிசா தேவனை நோக்கிப் பார்க்க தவறியிருப்பான் என்றால், இஸ்ரவேலுக்கு விரோதமான சீரியரின் ஆலோசனை தெரியாதிருந்திருக்குமே; அதினால் அவர்கள் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பார்களே.

ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை (பிர 9:14,15) என்று சாலமோன் எழுதிவைத்துள்ளான். (உதாரணம். ஆசாரியனுக்கு அப்பம் கொடுக்கும் தேவன்) நமக்குத் தெரிந்தது அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்குத் தாரும் என்பதே. யாரோ நமக்கு அறிவிக்கவேண்டும் என்ற நிலையில் இருந்தால், அறிவிக்கிறவர் அயர்ந்துவிட்டால் பிடிபட்டுவிடுவோம். அப்படிப்பட்டோர் இருப்பது சந்தோஷமே, எனினும் தேவன் நமக்கு நேரடியாக அறிவிப்பது அதைவிட சந்தோஷமல்லவா!