ஒன்று நூறாக

 

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.(லூக் 8:8)

கிறிஸ்துவை அறிந்துகொண்ட நாம், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கும் நாம், ஆவிக்குரிய வாழ்க்கையில் பயணிக்கும் நமது வாழ்க்கையிலிருந்து தேவன் முழுமையான பலனை எதிர்பார்க்கிறார். சீஷர்களும், ஊழியத்தில் உதவி செய்வோரும், பிற ஜனங்களும் இயேசுவைச் சூழ்ந்து நிற்கும்போது, இயேசு சொன்ன விதைகளைப் பற்றிய உவமை நாம் அறிந்த ஒன்றே; எனினும், இந்த உவமையின் கருத்து என்னவென்று சீஷர்கள் இயேசுவினிடத்தில் கேட்டதுபோல (லூக் 8:9), நாமும் கேட்கும் நிலையிலேயே வாழ்ந்துவிடக் கூடாது. இயேசு போதிப்பதின் கருத்தினை அறியாதோராய் நாம் இருப்போமெனில், கனிகொடுக்காதவர்களாக நாம் மாறிவிடும் சந்தர்ப்பம் நமது வாழ்க்கையில் உண்டாகிவிடும். இயேசு ஏதோ போதித்தார்; ஆனால், என்ன போதித்தார் என்று விளங்கிக்கொள்ள இயலவில்லை என்று சீஷர்கள் அமைதியாய் இருந்துவிடவில்லை; அதன் கருத்தினை அறிந்துகொள்ள முற்பட்டார்கள்.

இன்றைய நாட்களில், பலர் போதனைகளின் மேலே கவனம் செலுத்துவதில்லை, ஆலயத்தில் கொடுக்கப்படும் செய்திகளின் சாராம்சத்தை அறிந்துகொள்ளவும் அதன்படி செய்ய தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் முன்னேறுவதில்லை. தங்களுக்கு விளங்கினாலும், விளங்காவிட்டாலும்; காதுகளால் கேட்டுவிட்டு செல்வோராகக் காணப்படுகின்றனர். போதனையினையே புரிந்துகொள்ளாத ஜனங்களின் மனதில் விழுந்த விதை முழுமையான பலனைத் தரமுடியாது. நூறாகப் பலன் தர வேண்டுமென்றால், சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதையினிடத்தில் கர்த்தர் எதிர்பார்ப்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. வழியருகே விழுந்த விதைகள் மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகளால் பட்சிக்கப்பட்டது; கற்பாறையின் மேல் விழுந்த விதையோ, ஈரமில்லாமல் உலர்ந்துபோயிற்து; முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகள், முட்களால் நெருக்கப்பட்டது. ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கோ இவ்வித ஆபத்துக்கள் இல்லை, அங்கே முட்கள் இல்லை, பாறை இல்லை, ஆகாயத்துப் பறவைகள் இல்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் கனிகொடுப்பதைத் தடைசெய்வதற்கும், தடுத்து நிறுத்துவதற்கும் அங்கே விரோதமானவைகள் ஒன்றுமில்லை. எனவே நாம் நூறத்தனையான பலனைக் கொடுக்கவேண்டும், முழுமையான பலனைக் கொடுக்கவேண்டும். முற்றிலும் பாதுகாப்பான இடத்தில் விழுந்த அந்த விதை நூறத்தனையான, தேவன் விரும்புகின்ற, முழுமையான பலனைக் கொடுக்கவேண்டும். நல்ல நிலமாக கர்த்தர் நம்மை மாற்றியிருப்பாரென்றால், வசனம் நமது வாழ்க்கையில் விழுந்ததும் அது செயல்படத் தொடங்கும். நல்ல நிலத்தில் இருந்தபோதிலும், ஆவிக்குரியவர்கள் என்று சொல்லிக்கொண்டும், அரைகுறையாகக் கனிகொடுத்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் மக்கள் அநேகர். தாலந்துகள் பலவற்றைப் பெற்றும், திறமையாக அவைகளைப் பயன்படுத்தாமல் தூங்கிக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். நல்ல நிலத்தில் இருக்கின்ற விதை நூறாகப் பலன் தரவேண்டும் என்பதே தேவனின் விருப்பம். நல்ல நிலத்தில் இருக்கின்ற ஒவ்வொரு விதைகளும் நூறு நூறாகப் பலன் தருமென்றால், அதன் பிரதிபலிப்பு பரலோகத்தை மகிழ்விக்கும். ஐந்து பேர் சேர்ந்து ஒருவர் கொடுக்கக் கூடிய பலனைக் கொடுத்துக்கொண்டிருக்கக் கூடாது. வசனம் நிலத்தில் விழுந்தாலும், உன் வாழ்க்கைதான் பலனைக் கொடுக்கவேண்டும்.