அதிக பலவான், ஆயுதந்தரித்த பலவான்

 

முந்நிலமை, பின்நிலமை இவ்விரண்டும் ஒரு மனதனின் வாழ்க்கையில் அவ்வப்போது அளக்கப்படவேண்டியது மாத்திரமல்ல, அது மற்றோராலும் கூட அளவிடப்படக்கூடியது. நாளுக்கு நாள் பெற்ற குழந்தையின் வளர்ச்சியை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். நாளுக்கு நாள் வாழ்க்கையில் உயர்ந்துகொண்டே செல்லவேண்டும் என்றும் மனிதர்கள் மனம் உந்தித் தள்ளிக்கொண்டேயிருக்கின்றது. தான் இருக்கும் நிலமையிலேயே இருந்துவிட நினைக்கும் நபர்கள் மிகச் சிலரே; அத்தகையோர், எதிர்காலத்தைக் குறித்த கரிசனையற்றவர்களாகவே இருப்பார்கள். கல்வியிலும், பொருளாதராத்திலும், வாழ்வின் பல நிலைகளிலும் உயர்ந்துகொண்டே செல்லவேண்டும் என்று நினைக்கும் மனதர்கள் ஊடே, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டோரின் நிலையினையும் நாம் மறந்துவிடக்கூடாது. பாவத்தில், கஷ்டத்தில், கடன் தொல்லையில், வியாதியில், வேலையில்லாமையில், நிம்மதியற்ற நிலையில், குடும்பப் பிரச்சனைகளில் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு கர்த்தர் விடுதலை கொடுத்தார் என்று சாட்சியாக சபையின் மத்தியில் அறிவிக்கும் விசுவாசிகள் அநேகர் உண்டு; அது கர்த்தரை மகிமைப்படுத்தும் செயலே. என்றபோதிலும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் ஒரு கிறிஸ்தவனின் அனுதின வாழ்க்கையின் நிலை என்ன என்பதை தன்னைச் சூழ்ந்து வாழும் மக்கள் காணும் நிலையிலேயே அவன் வைக்கப்படுகின்றான்.

ஒருபுறம் இயேசுவினால் விடுவிக்கப்பட்ட மக்கள் சாட்சிகளைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மறுபுறும் சபையில் இருக்கும் சிலருக்குள் சவால்கள் எழத்தொடங்குகின்றன. 'சாட்சி சொல்லும் இவர்களின் நிலமை முந்நிலமையைக் காட்டிலும் உயர்வானதாகக் காணப்படுகின்றதே, ஆனால், இதே சபைக்குள் இருக்கும் என் நிலமையோ முன்நிலமையைக் காட்டிலும் கீழ்த்தரமாகிவிட்டதே' என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் கேள்விக்கான பதிலே, இயேசுவின் உபதேசம். அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக் கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார் இயேசு (லூக் 11:24-26). ஊமையாயிருந்த ஒருவனுக்குள் இருந்த பிசாசை இயேசு துரத்தியபின்னர், ஊமையன் பேசினான், ஜனங்கள் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள் (லூக். 11:14). இதனைக் கண்ட ஜனங்கள், இயேசு பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார் என்று சொன்னார்கள் (லூக். 11:15). பரலோகத்தின் பிதாவின் வலிமையையும், பிசாசின் மேல் இயேசுவுக்கு இருந்த அதிகாரத்தையும் சுற்றி நின்ற மக்களால் அடையாளம் காணக்கூடாமற்போயிற்று. தான் தேவனுடைய விரல்களினாலேயே பிசாசுகளைத் துரத்துகிறதை (லூக். 11:20) அவர்களுக்கு இயேசு சுட்டிக்காட்டிய பின்னர், 'ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்' (லூக் 11:21,22) என்று உலகத்தில் உள்ள பிசாசினைக் காட்டிலும், அதிக பலவானாக தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1யோவா 4:4) என்று யோவானும் எழுதுகின்றாரே.

அதிக பலவானால் ஒரு மனிதனுக்குள் இருந்த பிசாசு துரத்தப்பட்டாலும், ஆயுதந்தரித்த பலவானால் அந்த மனிதனின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார் இயேசு. இன்று அநேக மக்களின் நிலை இதுவே. துன்பங்களின் மத்தியில், தொல்லைகள் சூழ்ந்துகொள்ளும் நிலையில், வியாதியின் பிடியில், கடனின் ஆதிக்கத்தில், நிம்மதியற்ற வாழ்க்கையில், என்னுடைய இந்நிலையை மாற்ற வலிமையுடையவர் யார்? என்ற மனநிலையோடு தேடி அலைகின்றனர். ஒரு சகோதரரின் மூலமாக, ஊழியரின் மூலமாக, சபையின் மூலமாக, நற்செய்திக் கூட்டங்களின் மூலமாக, சுவிசேஷப் பிரதியின் மூலமாக அதிக பலவானைக் குறித்து அறிந்துகொண்டு, இயேசுவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, வந்து விடுதலையும் பெறுகின்றனர். எனினும், இந்த விடுதலையினை தொடர்ந்து வாழ்க்கையில் அனுபவிக்க, ஆயுதந்தரித்த பலவானான இயேசு அனுதினமும் தங்கள் வாழ்வாகிய அரண்மனையைக் காக்கவேண்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். உன்னிலுள்ள பிசாசினை, பிரச்சனையினை, பாடுகளை, வியாதிகளை துடைத்து எரிந்துவிட இயேசு போதுமானவர். ஆனால், அதற்குப் பின்னர் உன்னைத் தொடர்ந்து காக்க அவருக்கு அனுமதி உண்ட? விடுதலையைப் பெற்றபின்னர் வேதவாசிப்பு இல்லையே! பிசாசு துறத்தப்பட்ட பின்னர் இயேசுவுக்கும் இடமில்லையே! வியாதி நீங்கியபின்னர் வைத்தியனை (இயேசுவை) தேடவில்லையே! இப்படிப்பட்ட மனிதர்களின் 'பின்நிலமை முன்னிலைமையிலும் அதிக கேடுள்ளதாயிருக்கும்' என்று இயேசு போதித்தார். நீங்கள் எதற்காக இயேசுவைத் தேடுகிறீர்கள் என்பதை அறிந்தவன் பிசாசு.

பெதஸ்தா என்னப்பட்ட குளத்தைச் சுற்றியிருந்த மண்டபங்களிலே, குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்தார்கள். தண்ணீர் கலக்கப்படும் வேளையில், குளத்தில் இறங்கி சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தார்கள். வியாதியுள்ளவர்களாயிருந்த அனைவருக்குள்ளும், எல்லாருக்கு முன்பாக தான் குளத்தில் இறங்கிவிடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்திருக்கும். அவன் இன்று போகட்டுமே, நாம் அடுத்தநாள் கலக்கப்படும்போது போகலாம் என்ற எண்ணம் இருந்திருக்காது. சகோதரர்களைப் போல பேசிப் பழகி, உண்டு உறங்கி குளத்தின் மண்டபங்களில் குடியிருந்தாலும், குளம் கலக்கப்படும்போது உடனிருப்பவனுக்கு அல்ல சுகம் எனக்கு முதலில் வேண்டும் என்ற தீவிரத்தில் முண்டியடிதுக்கொண்டு, மோதியடித்துக்கொண்டு குளத்துக்குள் அவர்கள் குதித்திருப்பார்கள். மற்றவர்களை முந்திச் செல்ல முடியாமல், முப்பத்தெட்டு வருஷமாக வியாதியோடு அங்கே இருந்தான் ஒரு மனிதன். முப்பத்தெட்டு வருடமானாலும், அவன் அந்தக் குளத்தை விட்டுப் போகவில்லை. குளத்திலே சுகம் கிடைக்காவிட்டாலும், குளத்தருகிலேயே நான் மரிப்பேன் என்ற மனநிலையோடு இருந்தவன் அவன். 'தப்புவியாமற்போனாலும், அவரே தேவன்' என்ற தானியேலின் அர்ப்பணிப்பைப் போன்றதுதான் இவனின் அர்ப்பணிப்பும். தானியேலுக்கு சூளை அங்கே இயேசு தேடி வந்தார், இவனுக்கோ வியாதி இங்கேயும் இயேசு தேடி வந்தார். குளத்தில் சுகம்பெறும் அநேகரை முப்பத்தெட்டு வருடமாக அவன் பார்த்துக்கொண்டிருக்கிறானே; அவனது அந்த விசுவாசத்தினைக் கண்டு இயேசுவே அவனைத் தேடி வந்தார். வியாதி சுகமாகாவிட்டாலும், வாழ்க்கையை இயேசுவுக்கு ஊற்றிவிட நீ ஆயத்தமா? இன்றோ, ஆலயத்திற்கு வந்தேன், கூட்டங்களில் பங்குபெற்றேன், போதகர் ஜெபித்தார் என்றாலும் இன்னும் எனக்கு சுமில்லை, விடுதலையில்லை, நிம்மதியில்லை என்று விட்டுவந்த விக்கிரகத்தண்டைக்கே ஓடிவிடும் மக்கள் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம், இந்த மனிதன் ஓர் முன் மாதிரி.உனக்கு சுகம் கிடைக்காவிட்டாலும், அநேகர் அந்த அதிக பலவானால் சுகம் பெற்றுக்கொண்டிருக்கிறார்களே, இதை நீயும் கண்ணாரக் கண்டுகொண்டிருக்கின்றாயே, எனவே கலங்காதே, குளத்திலிருந்து சுகம் வராவிட்டாலும், இயேசுவினிடத்திலிருந்து சுகம் வரும், உன்னால் போகமுடியாவிட்டாலும், அவர் தேடிவருவார். அந்த மனிதனை இயேசு சுகமாக்கிய அந்த நாள் ஒரு ஓய்வு நாள். எனவே யூதர்கள் குணமகர்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள் (யோவான் 5:10). ஆனால்,, அவனோ அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான் (யோவா 5:11). ஆம், மனுஷகுமாரன் (இயேசு) ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார் (மத் 12:8). அவரே அவனை அன்று படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கச் சொல்லியிருக்க, நியாயப்பிரமாணம் தடைசெய்யலாகுமோ? இதனைக் கூட அன்று அறியாதவர்கள் யூதர்கள்; காரணம் இயேசுவைக் குறித்த அறிவின்மையே.

சுகமாக்கப்பட்ட அந்த மனிதனும் இயேசுவை யார் என்று அறியாதிருந்தான். என்றபோதிலும் இயேசு தன்னை யார் என்று அவனுக்கு அறிமுகப்படுத்தினார். அறியாதிருந்தாலும், தேடிவந்து அறிமுகப்படுத்தும் இயேசுவே நம் ரட்சகர் அல்லேலூயா. சொஸ்தமான அந்த மனிதனை தேவாலயத்தில் தேடிக் கண்டுபிடித்த இயேசு அவனை நோக்கி: 'இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே' என்றார் (யோவா 5:14). அறியாமலிருந்த அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான் (யோவா 5:15). அறியாமலிருந்தவனை இயேசுவின் அறிமுகம் அறிவிக்கிறவனாக மாற்றியது. அதிக கேடானது நமக்கு நேரிடக்கூடாது என்றால், இரட்சிக்கப்பட்டதோடு மாத்திரம் நின்றுவிடாமல், இரட்சகர் நம்மைக் காக்கிறதற்கும் அனுதினமும் இடமளிப்போம். வேதவசனங்களை வேலிகளாக்கும்வோம், அவரையே அரணாக்குவோம். யோபுவைச் சுற்றிலும் அவர் வேலியடைத்திருந்தார் என்றே சொல்லி சொல்லி, அவரை நமக்கு வேலியாக மாற்றவேண்டும் என்ற மனநிலையினை மறந்துவிட்டோம். அநேகர் இயேசுவைக் கொண்டு வீட்டை பெருக்கிவிட்டு, பிசாசுக்கு வாடகைக்கு விட்டுவிடுகின்றனர். மனந்திரும்புபோம், நாம் அப்படி மாறினால், நம்முடைய வாழ்க்கை முந்திய நாட்களைக் காட்டிலும் மகிமையுள்ளதாக மாறிவிடும். எத்தனை துன்பங்கள் வந்தாலும், ஆலயத்தின் மகிமையை அசைக்க சத்துருவாலும், ஜனங்களாலும் கூடாது; இது நிச்சயம், நிச்சயம். முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் .(ஆகா 2:9)