விலைமதிப்புள்ள வேலைக்காரன்

 

இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.(மத் 8:5,6)


நம்முடன் வாழ்வோர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளோரைக் குறித்து நாம் எத்தகைய அறிவும் கொண்டோராகவும், அவர்கள் மீது எவ்வளவு அன்பு செலுத்துபவராகவும் வாழ்கிறோம் என்பது நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் தரத்தையும், நமக்குள் வாழும் உன்னதரின் குணத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தும். நமக்கு உதவியாகவும், நமக்குப் பணி செய்யவும், நாம் சொல்வதைச் செய்துமுடிக்கவும் பலர் வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்; ஆனால், அவர்களை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்றும் நம்மை நாமே தற்பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.


தனக்குப் பிரியமான வேலைக்காரன் மரண அவஸ்தையாயிருந்தபோது, அவனை குணமாக்கவேண்டும் என்ற கரிசனை நூற்றுக்கு அதிபதிக்கு உண்டானது (லூக். 7, 2-3). அதற்கான வாய்ப்புகளையும், வழிகளையும் அவன் தேடினான். குணமாக்கக்கூடியவர் இயேசுவே என்பதைக் கண்டறிந்து, அவரிடத்திற்கு மூப்பர்களை அனுப்பினான். அந்த நூற்றுக்கு அதிபதி இயேசுவை அறிந்தவனாயிருந்தது மாத்திரமல்ல, தேவ ஆலயத்தைக் கட்டிக்கொடுத்தவன் மாத்திரமல்ல (லூக். 7:5), தேவகுணத்தையும் தன் வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறவனாயிருந்தான். 'அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான்' (லூக். 7:5) என்று மூப்பர்கள் அவனைக் குறித்து நல்லறிக்கை செய்தார்களே. இந்த நூற்றுக்கு அதிபதியின் குணம் நமக்கு ஓர் நல்ல பாடம். வேலைக்காகவோ அல்லது வேலைக்காரனாகவோ மாத்திரம் அவனைப் பார்க்காமல், எஜமான் என்ற அதிகாரத்தைக் கொண்டிருந்தபோதிலும், நூற்றுக்கு அதிபதியினிடத்தில் இருந்த கிறிஸ்துவின் அன்பின் அஸ்திபாரமே அவனைச் செயல்பட வைத்தது. உடனிருப்போரின் மேல் நமக்கு உண்டாகவேண்டிய கரிசனையைத்தானே இந்தச் சம்பவம் நமக்குக் கற்றுத் தருகின்றது. இன்றும், அருகில் இருப்போரிடத்தில் அன்பைக் காட்ட இயலாத கிறிஸ்தவர்கள் எத்தனை பேர்? ஊரெங்கும் பிரசங்கித்தும், அலுவலகத்தில், வீட்டில் உடனிருக்கும் மனிதர்களிடத்தில், அன்பை சாதித்துக்காட்டத் தெம்பில்லாமல் வாழும் ஊழியர்கள் எத்தனைபேர்? கிறிஸ்துவுக்குள் சகோதரர்களாக சமமாகப் பார்க்க இயலாமல், வேலைக்காரனாகவே பார்த்து அன்பை விலக்கிக்கொள்ளும் எஜமான்கள் அநேகர் உண்டு. எல்லையைத் தாண்டினால் தொல்லை என்ற எண்ணத்தோடு, வரைகோட்டுக்குள்ளே நாம் வாழ்ந்துகொண்டிருந்தால், கிறிஸ்துக்குள் வாழும் மற்றவர்களுக்கும் தூரமாக வாழ்ந்துகொண்டிருப்போம். பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் (எபே 2:16) தேவன். ஆனால், நாமோ, வேலைக்காரன் எஜமான் என்ற பதவியோடு ஒப்புரவாகாமல் வாழ்ந்துகொண்டிருப்போம்.


உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?(லூக் 17:7,8) என்று வேலைக்காரர்களின் மேலான எஜமான்களின் கண்ணோட்டத்தை இயேசுவும் விளங்கப்பண்ணினார். கிறிஸ்தவ உலகத்திலும், அநேக எஜமான்கள் இப்படியே காணப்படுகின்றனர். என்றபோதிலும், உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் (மத் 20:26,27) என்று உண்மையான எஜமான்கள் எப்படி வாழவேண்டும் என்று இயேசு தௌ;ளத் தெளிவாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவும் தனது வாழ்க்கையில் அதனைச் செய்து காண்பித்தார். சீஷர்களின் கால்களையும் கழுவி தனது தாழ்மையை வெளிப்படுத்தினார்.


மேலும், கெத்சமனே தோட்டத்திற்கு இயேசுவை பிடிக்கும்படியாக யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு (யோவா 18:3) வந்தபோது, என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார் (யோவா 18:8) இயேசு. தன்னுடன் இருப்பவர்களை அவர் பாதுகாத்தாரே. மேலும், சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டியபோது, இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடுளூ பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ (யோவா 18:10,11) என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அந்த வேலைக்காரனைச் சொஸ்தப்படுத்தினார் (லூக் 22:51). அப்போஸ்தலனாகிய பவுலும், எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள் (கொலோ 4:1) என்றும், எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள் (எபே 6:9) என்றும் எஜமான்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார். இன்றோ, உடனிருப்பவர்கள் தங்களுக்காக பாடு அனுபவிக்கவேண்டும், தாங்கள் சுகமாக வாழவேண்டும் என்றல்லவா எஜமான்கள் நினைக்கிறார்கள். கிறிஸ்துவின் சிந்தையே நம்மில் உருவாகட்டும். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணினாரே (ரோம 5:8), அதுபோல, நாமும் பாவத்தை வெறுத்து, பாவிகளை நேசித்து, பிதாவின் பிள்ளைகளாக அவர்களை மாற்றினால் மாத்திரமே, ஆத்தும ஆதாயகப் பணியில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற முடியும். நமது கரங்களில் தேவன் கொடுத்த மனிதர்கள் ஒவ்வொருவரும், தேவனின் பார்வையில் விலைமதிப்பானவர்கள்.


தேவைகளுக்காக மாத்திரம் உடன் இருப்போரை பயன்படுத்திக்கொண்டு, அவர்களது தேவையின்போது நாம் தூரமாக விலகிக்கொள்கின்றோமா? நம் உடனிருப்போர் பலரின் வாழ்க்கை, வியாதியிலும், பொருளாதாரத்திலும், பிரச்சினைகளிலும் சிக்கிக் குற்றுயிராய் கிடக்கும்போது, அவர்களைக் கண்டு நாம் பக்கமாய் விலகிச் செல்லும் லேவியனாகவும், ஆசரியனாகவும் நாம் மாறிவிடக்கூடாது (லூக். 10:30-34). நன்மைசெய்ய நமக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் (நீதி 3:27) இருக்கலாமோ! போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று (லூக் 10:25) கேட்ட நியாயசாஸ்திரிக்கு, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூருவது மாத்திரமல்லாமல், உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்ற கற்பனையின்படியே செய் அப்பொழுது பிழைப்பாய் (லூக் 10:27-28) என்று இயேசு அறிவுறுத்தினாரே. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவா 15:13) என்று இயேசு சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தாரே. நமக்காக ஜீவனைக் கொடுத்தவர் உடனிருக்க, பிறரது ஜீவனைக் காப்பாற்றுவதுதானே நமது பிரதான பணி.