நாம் யார்?

 

அனுதின வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களோடு நாம் பழகுகிறோம், பேசுகிறோம்; உறவினர்களோடு உறவாடுகின்றோம் எனினும், நம்மைக் குறித்ததான அறிவு அவர்களுக்குச் சொர்ப்பமே. நமது திறமைகளைக் குறித்தும், நமது குணங்களைக் குறித்தும், நமக்கு அளிக்கப்பட்ட கிருபைகளைக் குறித்தும் மற்றும் அழைப்பினைக் குறித்தும் அனைவரும் அனைத்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஏதோ ஒரு பக்கத்தில், ஏதோ ஒரு கோணத்தில் நம்மை ஒருமுறை காணும் மக்கள், நம்மைக் குறித்து அவர்களுக்குக் கிடைத்த அந்த அற்பமான அறிவைக் கொண்டே எடைபோடத் தொடங்குகின்றனர். அடுத்த ராஜாவாக கர்த்தர் யாரை அபிஷேகம் பண்ணப்போகிறார் என்பதை அறியாமல், தனது அறிவின் பலத்தினை சாமுவேல் பயன்படுத்திக்கொண்டிருந்தபோது, 'மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்' (1சாமு 16:7) என்று சாமுவேலுக்கு, அவனது பார்வையைக் குறித்தும், தனது பார்வையைக் குறித்தும் தெளிவுபடுத்தினார் தேவன்.

வெளிப்படையாகவோ, அல்லது ஏதோ ஒரு நிகழ்விலோ நம்மைக் காணும் மக்கள், தங்களது சொற்ப அறிவினால் நம்மைக் குறித்து மற்றவர்களுக்குச் சொல்லத்தொடங்கும்போது கவலை கொள்ளுகின்றவர்கள் அநேகர்; அதனால், மனவருத்தத்துடனும், மன உளைச்சலுடனும் மாறிவிடுகின்றவர்கள் அநேகர். 'மனுஷன் முகத்தையே பார்க்கின்றான்' எனவே கவலை வேண்டாம்; அவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்தவர்களே; உள்ளத்தைப் பார்க்கும் தேவனுக்கு உங்களைப் பற்றிய அறிவு உண்டு, அல்லேலூயா! முகத்தைப் பார்த்து, எதை எதையோ பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களின் வார்த்தைகளைக் கேட்டு முடங்கிடக் கூடாது; நம்மைக் குறித்த உண்மையான அறிவு அவர்களுக்குக் கிடைக்கும் போது அவைகள் அனைத்தும் ஆண்டவரால் அடக்கப்படும். ஆனால், பல நேரங்களில், பலதரப்பட்ட மக்கள், நம்மை பலவிதமாகப் பேசும்போது, நம்மால் அதனைத் தாங்கிக்கொள்ளமுடிவதில்லையே. அவர்கள் சொன்ன வார்த்தைகளையே சுற்றி சுற்றி வாழத்தொடங்கிவிடுகின்றோம்; வாழ்க்கையையும் இழந்துவிடுகின்றோம். நமது உண்மையான உருவத்தை அறிந்தவர் தேவன்.

இந்தப் பாடத்தை இயேசு சீஷர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அவர் பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார் (மத் 16:13). மேசியாவாக இயேசு வந்திருந்தபோதிலும், தேவக் குமாரனாக உலகத்தில் அவதரித்திருந்தபோதிலும், அவர்களை ரட்சிப்பதற்காகவும் அவர்களுக்காக அடிக்கப்படுவதற்காகவுமான ஆட்டுக்குட்டியாயிருந்தபோதிலும் ஜனங்களுக்கு அவரைக் குறித்த அறிவில்லை; எத்தனை பரிதாபம்! ஜனங்களிடமிருந்து வௌ;வேறான பதில்கள் வந்தன. சிலர் யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், சிலர் எரேமியா என்றும் அப்படி குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவர்கள் அவர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொன்னார்கள். இவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம், இயேசுவைக் குறித்ததான சொற்பமான அறிவே. அவர் யாரென்றும், என்ன செய்கிறார் என்றும், எதற்காக அனுப்பப்பட்டவர் என்றும் தெளிவான அறிவுடையவர்களாய் அவர்கள் இருக்கவில்லை. தேவனையும், கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவே நமக்கு கிருபையையும், சமாதானத்தையும் பெருகச்செய்கின்றது (2பேது. 1:2). தேவனைக் குறித்த ;அறிவு நமக்கு எத்தனை உண்டு. தேவனை யாரென்று நாம் அறிந்திருக்கிறோம்? அற்புதம் செய்கிறவராக மாத்திரமா? குணமாக்குகிறவராக மாத்திரமா? பிரச்சனைகளைத் தீர்க்கிறவராக மாத்திரமா? அவரைக் குறித்த அறிவு நம்மில் பெருகட்டும்; அதுவே, அவரை ஜீவநதியாக நம்மிலிருந்து பாய்ந்தோடச் செய்யும். 'மனுஷர்கள் முகத்தைப் பார்க்கிறவர்களே' எனவே, என்னைச் சொன்னதுபோல, உங்களையும் வௌ;வேறு விதமாய் மக்கள் பேசுகிறவர்களாயிருந்தால், அதைக் குறித்து நீங்கள் கவலைகொள்ளவேண்டாம் என்ற பாடத்தையே இயேசு சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஜனங்கள் இயேசுவை வேதத்தின் பெரிய மனிதர்களோடும், தீர்க்கதரிசிகளோடும்தான் ஒப்பிட்டுப் பேசினார்கள்; என்றாலும், இயேசுவின் சந்தோஷம் அதில் இல்லை. 'நீர் ஜீவனுள்ள குமாரனாகிய கிறிஸ்து' (மத். 16:16) என்ற சீமோனின் பதிலே இயேசுவுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவந்தது. இன்றைய ஊழியர்கள் சிலர் 'தீர்க்கதரிசி' 'குணமாக்கும் வரம் பெற்றவர்' 'அப்போஸ்தலர்' 'சுவிசேஷகர்' 'போதகர்' என்று ஜனங்கள் தங்களை வேறு வேறு அடைமொழியின் கீழ் அழைப்பதிலேயே சந்தோஷம் கொள்கின்றர்; இது சத்துருவின் சதி அவ்வளவே.

மேலும், நம்மைக் குறித்து இயேசுவுக்கு இருக்கும் அறிவினையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் மாத்திரமே, நம்முடைய வாழ்க்கையின் களைகளைக் களைந்தெறிந்து அவருக்கு முன், அவர் விரும்பும் வாழ்க்கை வாழமுடியும். இயேசுவுடன் பயணித்துக்கொண்டிருந்த சீஷர்கள், அலையைக் கண்டவுடன் அலறினார்கள், காற்றைக் கண்டு கதறினார்கள், 'ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம்' என்று அவரைக் கூப்பிட்டார்கள் (மத். 8:25). அவர்களுக்கு இயேசு சொன்னது என்ன? 'அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்பட்டீர்கள்?' என்பதே. மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் (மத் 7:5) என்றார்; பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத் 7:11) என்றார்; நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் (மத் 7:23) என்றார்; மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? (மத் 23:19) என்றார்; வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள் என்றார் (மத். 23:27); சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? (மத் 23:33) என்றார்; மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை (மத் 23:13) என்றார். மேலும், பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே (மத் 25:26) என்றும் சிலரை அடையாளப்படுத்திக்காட்டினார்.

இயேசு சொன்ன இந்தப் பெயர்களில், எந்தப் பெயர் நம்முடையது? மனுஷரைப் போல அரைகுறை அறிவுடன் அல்ல, நம்மைப் பற்றி முழு விபரங்களையும் அறிந்தவர் அவர். எனவே சங்கீதக்காரன், கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர், என் உட்காருதலையும் என் எழுந்திருத்தலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர் (சங் 139:1-4) என்றும், உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? (சங் 139:7) என்றும் எழுதுகின்றான்.


நம்மைக் குறித்து குறைவாகப் பேசுபவர்களால் குலைந்துவிட வேண்டாம்
நம்மைக் குறித்து நிறைவான அறிவுடையவர் உண்டு கவலை வேண்டாம்
நாம் யாரென்று அவரிடத்திலேயே கேட்போம்
ஆண்டவரே ஆண்டவரே என்று நாம் அழைக்க
அக்கிரமச் செய்கைக்காரரே என்று அவரழைக்கும் வாழ்வு வேண்டாம்