மனந்திரும்புதலுக்குப் பின் மனந்திரும்புதல்

 

மனந்திரும்புதல், என்றோ ஒரு நாள் நடந்து முடிந்விடுவதல்ல; அனுதினமும் நம்முடைய வாழ்க்கையில் தொடரவேண்டியது. மனந்திரும்பிவிட்டோம் என்ற நினைவுடனேயே வாழும் பலரது மனங்கள், தொடரும் மனந்திரும்புதலுக்குத் தூரமாயிருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் இடறிய இடத்திலிருந்தும் எழும்பத் தெரியாதவர்கள். தங்கள் கிரியைகள் அத்தனையையும் சரியென்று வாதிடுகிறவர்கள். இப்படிப்பட்டோரையே இயேசு நோக்கி: நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (மத் 7:3) என்றார். இயேசுவைக் கண்டுகொண்ட நாம், கண்டுகொண்ட இடத்திலேயே நின்றுகொண்டிருந்தால் போதாது; அவருடன் தொடர்ந்து பயணம் செய்பவர்களாகவும் மாறவேண்டும். அவருடனான அன்றாட பயணமே நம்மை அவரைப் போலாக்கும். இயேசுவைக் கண்கொண்ட பலர், பாவிகளாகப் பிறரையே பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்; தங்கள் கண்களுக்குக் கலிக்கமிட்டு, தங்களில் அன்றாடக வாழ்வில் படிந்த கறைகளைக் காணக்கூடாதவர்களாக இருக்கின்றனர். தங்களுடைய மனந்திரும்புதல் முடிந்துவிட்டது என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். பிலாத்துவினால் அவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் அவர்களது பாவமே என்றே நினைவு அவர்களை நிறைத்திருந்தது; அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற தண்டைனையே அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் அவர்களுடைய எண்ணம். அப்பொழுது இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் (லூக் 13:-3) என்று சொன்னதுடன், மேலும் ஒரு சம்பவத்தையும் அவர்களுக்கு நினைப்பூட்டினார். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? (லூக் 13:4) அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார் (லூக் 13:5). அவர்கள் மரணத்தைக் குறித்துப் பேசியபோது, இயேசுவோ அவர்கள் மனந்திரும்புதலைக் குறித்துப் பேசுகிறார். அந்த ஊழியருக்கு அப்படி ஏன் நடந்தது? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அந்த சகோதரருக்கு ஏன் இப்படி நடந்தது? அந்த சகோதரியின் வியாதி இன்னும் ஏன் குணமாகவில்லை? அவர்கள் விபத்தில் மரித்ததற்கான காரணம் என்ன? அவர் கர்த்தரை விட்டு விலகினதினால்தான் இப்படி நடந்தது என்று பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கேட்டு, நீதிபதியாக நாம் மாறி மற்றவர்களை நியாயந்தீர்த்துக்கொண்டிருக்கின்றோமா; அப்படியென்றால், இயேசுவின் போதனை நமக்குத்தான்.

விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள் (யோவா 8:3-5). தாங்கள் எவ்வித பாவமும் செய்யாதவர்களைப் போன்றே அவர்களுடைய மனநிலை காணப்பட்டது. அந்த ஸ்திரீக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று நினைத்தார்கள் ஆனால், தங்களுடைய மனந்திரும்புதலை மறந்துபோனார்கள். 'உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்' என்று இயேசு சொன்னபோது, தங்கள் மனதின் நிலை அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. மற்றவர்களுக்கு நேரிடும் காரியங்களைக் குறித்து நாம் என்ன நினைக்கின்றோம். நமது மனந்திரும்புதலைக் குறித்து கவலை கொள்ளாமல், மற்றவர்களுகுக்கு நிகழும் காரியங்களையே பார்த்துப் பார்த்து அவர்களை நியாயந்தீர்த்துக்கொண்டிருந்தால், நம்முடைய மனந்திரும்புதல் மறக்கப்பட்டுப்போம், நாம் மனந்திரும்பாமல் கெட்டுப்போய்விடுவோம். மற்றவர்களுக்குத் தண்டனை கொடுப்பதுடன், நமது மனந்திரும்புதலiயும் தடுத்து நிறுத்தப்பார்க்கிறவன் சத்துரு; கவனமாயிருந்தால் நாம் கெட்டுப்போகமாட்டோம்.

சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டபோது, நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகNவு உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 18:1,3) என்று சொன்னாரே. சீஷர்களாக இருந்தபோதிலும், இன்னும் மனந்திரும்பவேண்டிய நிலையில்தான் இருக்கிறீர்கள் என்பதை இயேசு உணர்த்தினாரே.

இயேசு பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டபோது, சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசுவோ பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் (யோவான் 9:1-3) என்றார். யாரையாவது பாவியாகத் தீர்க்க விரும்பிய சீஷர்களுடைய மனநிலையிலும் மாற்றம் உண்டாகவேண்டியதிருந்தது. இரட்சிக்கப்பட்டுவிட்டோம், மனந்திரும்பிவிட்டோம், இயேசுவை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளுகிற நாம் இன்னும் எத்தனை காரியங்களில் மனந்திரும்பாமலிருக்கின்றோம்; நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.